Saturday, June 30, 2018

அதிகமில்லை, 63 லட்சம் ரூபாய்தான்


சொகுசுக் கப்பலில் உலகத்தை சுற்றி வரலாம்.





லண்டனில் தொடங்கி லண்டனில் முடியும் அந்த உல்லாசப் பயணத்தில் நீங்கள் இணைந்து கொண்டால் 59  நாடுகளை பார்க்கலாம். 245 நாட்கள் நீடிக்கும் இந்த பயணத்துக்கான கட்டணம் 93,000 டாலர்கள். அதாவது இன்றைய தேதியில் அறுபத்தி மூன்று லட்சத்து பத்தாயிரம் ரூபாய்தான். முன் பதிவு தொடங்கி விட்டதாம்.

ம்ம்ம்ம்ம்ம். மோடியாலோ அல்லது அவரது புரவலர்களாலோ மட்டுமே  போக முடிகிற ஒரு  பயணத்தைப் பற்றிப் பற்றி எழுதி எதற்கய்யா, எங்களை வெறுப்பேற்றுகிறாய் என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்டு விட்டது.


சரி, சரி போகா விட்டாலும் போக முடியா விட்டாலும் இந்த காணொளியைப் பார்த்தாவது திருப்தி அடைந்து கொள்வோம்.




திருந்தவே மாட்டீங்களா?

என்னதான் சீன் போட்டாலும்
ஓவரா பில்ட் அப் செஞ்சாலும்
வெளியில உள்ளவங்க 
நீங்க ஏதோ பெரிய ஆளுன்னு
நினைக்கிற மாதிரி
வீரம் காட்டினாலும்

படிக்காத தற்குறி,
வெத்து வேட்டு

என்பதை இப்படி
அடிக்கடி நிரூபித்து
அசிங்கப்படனுமா?

ஒன்னு ஒழுங்கா படிங்க,
இல்லைன்னா
வாயையாவது மூடுங்க.

ஆனா எவ்வளவு கேவலப்பட்டாலும்
திருந்தவே மாட்டீங்க!

நாய் வால் நிமிராது என்ற
பழமொழியே உங்களால்தான்
வந்ததோ?

இதெல்லாம் ஒரு
பிழைப்பு . . . .

என்ன புரியலையா?

எல்லாம் மோடியார்தான்,
வழக்கமா மாட்டிக்கிட்ட கதைதான்.

படமாவே போட்டுட்டேன்,
பாருங்க !!!!


Friday, June 29, 2018

அச்சா தின் தானே மோடி?????




ஒரே நாளில் இரண்டு செய்திகள் 

டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய்  அறுபத்தி ஒன்பது என உயர்ந்துள்ளது.

ஸ்விஸ் வங்கியில் பதுக்கப்படும் இந்திய கருப்புப் பணம் கடந்த ஆண்டில் வழக்கத்தை விட ஐம்பது சதவிகிதம் அதிகரித்துள்ளது.

அப்பப்பா என்ன வளர்ச்சி! என்ன வளர்ச்சி !!

டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பை ஐம்பது ரூபாய் என்று கொண்டு வருவோம் என்று  தேர்தல் வாக்குறுதியும் கூட இவ்வளவு மோசமாக பல்லிளித்து விட்டது.

கருப்புப் பணத்தை ஒழிப்போம் என்று மோடி சொல்வதெல்லாம் சும்மா ஜூம்லா என்று சின்னக்குழுந்தைகளுக்குக் கூட தெரியும். கருப்புப் பணக்காரர்களின் அரசல்லா மோடி அரசு! அதுவாவது கருப்புப் பணத்தை ஒழிப்பதாவது!! அதனால்தான் ஸ்விட்சர்லாந்தில் குவிக்கப்படுகிற இந்தியக் கருப்புப் பணம் உயர்ந்துள்ளது.

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி இல்லையென்றால் எப்படி கருப்புப் பணம் அதிகரிக்கும்? இது மோடி அரசின் சாதனை அல்லவா?? என்று கூட ஜெமோ, மாரிதாஸ் போன்ற  மோடி பக்தர்கள் வாதிட்டாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது என்பதையே கூட அப்படியே உல்டாவாக்கி ரூபாயின் மதிப்பு  அறுபத்தி ஒன்பது ரூபாயாகி உள்ளது என்று கூட இவர்கள் கூறலாம். அதைக் கூட  சில அப்பாவிகள் உண்மையென நம்பலாம்.

இன்னும் ஒரு வருடத்திற்குள் எத்தனை அச்சா தின் வரப் போகிறதோ ?




இந்தக் குழந்தையைத்தான் சுட்டுக் கொன்றார்கள் . . .




கார்ப்பரேட் – மோடி – எடப்பாடி கூட்டுக் களவாணிகளின் லாப வெறியால் காவல்துறை கயவர்களின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவி ஸ்னோலின். பின் மண்டையில் சுட்டு குண்டு  தலைக்குள் புகுந்து  வாய் வழியாக வெளியேறி மரணித்த அந்த மாணவி எழுதிய நாட்குறிப்புக்களை ஒரு சிறு நூலாக பாரதி புத்தகாலயம், புதுச்சேரியில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநில மாநாட்டை ஒட்டி வெளியிட்டுள்ளனர்.

அந்த நூலின் பிரதி ஒன்றை வாங்கி வருமாறு எங்கள் கோட்டச்சங்கத்தின் இணைச்செயலாளரும் தமுஎகச அமைப்பின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளருமான தோழர் கே.வேலாயுதம் அவர்களிடம் கூறியிருந்தேன். அவரும் நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்ற கோட்டச் சங்கப் பொறுப்பாளர்கள் கூட்டத்தின் போது அந்த நூலை கொடுத்தார்.

அந்த நூலை படிக்கையில் மனம் மிகவும் கனத்துப் போனது. தன் அன்னைக்கு எழுதிய கடிதத்தில்

“எல்லோரும் சொல்வாங்க, அம்மா இல்லாதப்பதான் அம்மா உடைய வருத்தம் தெரியும்னு . . அவங்களுக்கு கொடுத்த குறைய எனக்கு இந்த கடவுள் தரல்ல . . .கடவுளே உமக்கு நன்றி! அம்மா நீதான் என் உலகமே, நீ இல்லாமல் எனக்கு ஒரு உலகமே இல்லை”

அந்தப் பெண் இல்லாமல் அந்த அன்னைக்கு இனி ஏது உலகம்?

தன் தந்தைக்கு எழுதிய குறிப்பில் அந்தப் பெண் சொல்கிறாள்

“உங்களுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும்னு தெரியும். Pls .. pa.. உங்களை ஒன்னே ஒன்னு மட்டும் கெஞ்சி கேட்கிறேன். Pls . .pa. குடிக்காதீங்க. . நீங்க இந்த உலகில் நிறைய நாள் வாழணும். நீங்களும் அம்மாவும் என்ன நல்லா படிக்க வச்சி ஒரு வேலைக்கு போன பிந்தி உங்களையும் அம்மாவையும் நாதான் பாத்துக்குவேன் . . Pls . .pa.. குடிக்க மட்டும் செய்யாதீங்க . . .Pls . .pa ..

படித்து முடிக்கும் முன்பே பாவிகள் கொன்று விட்டார்கள்.

மரணத்தை ஊகித்ததோ அந்த குழந்தை???

அந்த நூலில் அக்குழந்தை எழுதிய மூன்று குறிப்புகள் சொல்லவொண்ணா வலியைத் தருகிறது.

“எப்பொழுதுஜ்ம்
சிரித்துக் கொண்டிருந்த
என் நண்பன்
ஒருமுறை அழுது கொண்டிருந்தான்.
நான் எழுந்து துடைக்க நினைத்தேன்
நான் இறந்து கிடந்ததை மறந்து”

“ஆயிரம் பூக்களைக் கொண்டு
அலங்கரித்தாலும்
நீ சிந்தும்
ஒரு துளி
கண்ணீர் போதும்
என் கல்லறையை அலங்கரிக்க”

“இன்னமும் தூங்கி எழுந்தவுடன்
என் அம்மாவின் முகத்தில்
நான் கண்விழிக்க ஆசைப்படுகிறேன்
ஏனெனில்
இப்போதெல்லாம் தூங்குவதற்கு முன்
கொஞ்ச நேரம்
என் அம்மாவை
இமைக்காமல் பார்த்துவிட்டுத்தான்
கண் மூடுகிறேன்
ஒரு வேளை தூக்கத்திலேயே
என் உயிர் பிரிந்தாலும்
நான் கடைசியாகப் பார்த்தது
என்
அம்மாவின் முகமாகத்தான்
இருக்க வேண்டும்”

தூக்கத்தில் பிரியவில்லை அவள் உயிர். துப்பாக்கிக் குண்டுகளால் பிரிந்தது.

“உயிர் கொடுத்த
தந்தையை நினைப்பேன்
உதிரம் கொடுத்த தாயினை நினைப்பேன்
என்னால் முடியும்
என்ற மனநிலை கொள்வேன்
உயர்வாய் உலகில் வாழ்வேன்
முடியும்
என்னால் முடியும்
என்னால் மட்டுமே முடியும்
தேர்வை நன்றாக எழுத முடியும்”

தேர்வு முடிவுகள் வெளிவரும் முன்னரே அந்தக்குழந்தையின் கனவுகளை கருக்கிய கொடூரர்களை என்ன செய்வது?

நூலின் முன்னுரையில் தமுஎகசவின் இப்போதைய கௌரவத்  தலைவர் தோழர் ச.தமிழ்ச்செல்வனும் தலைவர் தோழர் சு.வெங்கடேசனும் குறிப்பிட்டுள்ளது போல

“அவளைப் போய் இப்படிக் கொன்று சிதைத்திருக்கிறீர்களே, நீங்கள் நாசமாய்ப் போவீர்கள் என்று அறம் பாடுகிறோம்”

அவர்கள் நாசமாய்ப் போகட்டும் . . .


மழையில் அழகாய் மும்பையில்

மழை நீீர் கூட சில சமயம் அழகை அள்ளித் தருகிறது.
தேங்கிய நீரில் எதிரொலிக்கும் பிம்பம்
நிஜத்தை விட இன்னும் அழகாய் காட்சியளிக்கிறது.

மும்பை ஸ்டேட் வங்கி கட்டிடம் இது.
வாட்ஸப்பில் வந்த படம் 


Thursday, June 28, 2018

என்னதான் விளம்பரமென்றாலும் இப்படியா?



வாட்ஸப்பில் வந்தது.

யப்பா! விளம்பர இயக்குனர்களா,
உங்கள் கற்பனைக்கு அளவே கிடையாதா?
முடியலைப்பா!






Wednesday, June 27, 2018

மோடி ஏன் கேடி?


பொய்கள் மட்டுமே பேசி ஒரு பிரச்சினையை திசை திருப்பவோ,  ஒரே சமயத்தில் இரட்டை வேடம் அல்ல, அதற்கும் மேல் வேடங்கள் போடும் சாமர்த்தியசாலிகள் இந்திய அரசியலில் சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்தே இருந்தாலும் அதிலே  நரேந்திர மோடியை அடித்துக் கொள்ள இதற்கு முன்பும் யாரும் பிறந்ததில்லை. இனியும் பிறக்க வாய்ப்பில்லை.

அவசர நிலைக் காலத்தைப் பற்றியெல்லாம் விமர்சிக்க காவிகளுக்கு எந்த அருகதையும் கிடையாது. அந்த காலத்தில் அன்றைய ஜனசங்கத் தலைவர்கள் சிலர் சிறையில் இருந்தாலும் அவர்கள் குருபீடம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அன்றைய சர்சங்சாலக் தேவரஸ் இந்திரா காந்தியோடு சமரசம் செய்து கொண்டு ஜாலியாகத்தான் இருந்தார் என்பது வரலாறு.

அறிவிக்க்ப்படாத அவசரநிலைக் கால அராஜகத்தை நிகழ்த்தி வரும் மோடி,  அதற்கான ஒரு கூட்டத்தில் ஜனநாயகம் பறி போனது பற்றியெல்லாம் நீலிக்கண்ணீர் வடித்துள்ளார். 

அக்கூட்டத்தில் தீபக் மிஸ்ரா மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த பதவி நீக்கத் தீர்மானம் பற்றி ஆவேசமாக பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு தீபக்கு நோட்டீஸ் அனுப்பினாராம். அதனால் அவரை நீக்க புறப்பட்டு விட்டார்களாம் என்று பேசியுள்ளார். 

தீபக்கு மீதான பதவி நீக்க தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி மட்டும் கொண்டு வரவில்லை.

காங்கிரஸ்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,
தேசியவாதக் காங்கிரஸ்,
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்,
சமஜ்வாடி கட்சி
பகுஜன் சமாஜ் கட்சி

ஆகிய ஏழு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கொண்டு வந்தார்கள்.

காங்கிரஸ் கட்சிக்கான பிரச்சினை என்றால் அதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைய வேண்டிய தேவை வரப் போவதில்லை.

நில மோசடி,
கல்வி நிறுவன ஊழல் வழக்கு
அமித் ஷா போலி எண்கவுண்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மர்ம மரண வழக்கை கையாண்ட விதம்,
வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு

போன்ற காரணங்களுக்காகத்தான் அவர் மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

மூத்த நீதிபதிகளின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பும் அது பற்றிய தீபக் மற்றும் பாஜக வின் கள்ள மௌனமுமே அவரது பதவி பறிப்பு நியாயம் என்பதை நிரூபிக்கிறது.

இத்தனை விஷயங்களை மூடி மறைத்து பிரச்சினையை திசை திருப்புவதன் மூலம் தீபக்கிடமும் நல்ல பெயர் வாங்க முயற்சிக்கிறார் மோடி.

அதனால்தான் சொல்கிறேன்.

மோடி ஒரு கேடி. 

அக்யூஸ்ட் நீதான் டி.எஸ்.பி



பசுமைவழிச் சாலை என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு தரகர் வேலை செய்யும் மோடி - எடப்பாடி கூட்டணி வகையறாக்கள் தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியாக அராஜகத்தில் ஈடுபட்டு ஜனநாயகத்தின் கழுத்தை கொலைவாளால் அறுக்கிறது.

அந்த அராஜகத்தின் ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பத்தாண்டு காலம் பணியாற்றியவரும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான தோழர் பி.டெல்லிபாபு அவர்களை திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் கைது செய்துள்ளார்கள்.

எட்டு வழிச்சாலைக்கான போராட்டத்தில் பங்கேற்ற அவரை மோசமான முறையில் நடத்தியுள்ளார்கள். 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பத்தாண்டு காலம் சிறப்பாக பணி செய்த ஒருவரிடம் செங்கம் டி.எஸ்.பி எப்படி பேசியுள்ளான்(ர்)  என்பதை பாருங்கள்.



டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி:

"இவன் செல்போன பிடுங்கு... இவன் அக்கியூஸ்ட். இவனுக்கு எவன்டா எம்.எல்.ஏ பதவி கொடுத்தது?

உன்னை எவன்டா அரூரிலிருந்து செங்கத்திற்கு வரச்சொன்னது?

தருமபுரி மாவட்ட எல்லையைவிட்டு தான்டி வரக்கூடாது.
பெரிய புடுங்கியா நீ?

உன்னை அரஸ்ட் பன்னச் சொல்லி SP (திருவண்ணாமலை மாவட்டம்), DIG என் உயிர எடுக்கிறாங்கடா...

உன்ன அரஸ்ட் பன்னலனா, ARக்கு போகச் சொல்லிட்டாங்கடா..."


தோழர் டில்லிபாபு :

"நான் 10 ஆண்டுகாலம் சட்டமன்றஉறுப்பினர். 
கைதுக்கு நான் பயந்தவன் அல்ல... எதற்காக கைது செய்யறீங்க?"


டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி:

"பேசாதடா. நீ அக்யூஸ்ட்."



"நான் போலீஸ் இல்லை, பொறுக்கி" 

என்ற திரைப்பட வசனத்தை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு காவல்துறை அதிகாரியும் நிரூபித்து விடுவார்கள் போல.

அரசியல் சாசனம் அளித்துள்ள போராட்ட உரிமைக்கு எதிராக செயல்பட்ட டி.எஸ்.பி தான் உண்மையான அக்யூஸ்ட். 

காக்கிச்சட்டை அளிக்கும் திமிரில் ஆணவமாக நடந்து கொள்ளும் இது போன்ற அதிகாரிகளை துரத்தி அடிப்பது காலத்தின் கட்டாயம். 






கேடி, கில்லாடி, மோடி

நேரமில்லாத காரணத்தால் இப்போதைக்கு ட்ரெய்லர் போல படம் மட்டும்.

விரிவாக மாலையில்


Tuesday, June 26, 2018

மாம்பழ சீசன் முடியும் முன் முயற்சியுங்கள் . . .


மேங்கோ ட்ரியோ – மாம்பழத்தின் அதி உன்னத சுவைக்கு



இந்த வருடம் தரமான மாம்பழங்கள் நன்றாகவே கிடைக்கிறது. அப்படியே சாப்பிடுவது, மில்க் ஷேக் செய்து சாப்பிடுவது என்று ஓடிக் கொண்டிருக்கும் மாம்பழ சுவையனுபவத்தில் செய்த ஒரு முயற்சி இங்கே.

மாம்பழ மில்க் ஷேக் செய்து கொண்டேன். எப்படி செய்வது என்பதற்கு முன்னர் பதிவு செய்ததின் இணைப்பை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

மாம்பழ ஃப்ளேவர் ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டேன்.

ஒரு பெரிய கண்ணாடி டம்ப்ளரில் முதலில் இரண்டு ஸ்பூன் ஐஸ்கிரீம். பிறகு மாம்பழத் துண்டுகள், அதன் பின்பு மில்க் ஷேக், அதன் மீது மீண்டும் ஐஸ் கிரீம், அதன் மீது மாம்பழத்துண்டுகள். அதன் தலையில் பொடி செய்த பாதாம், முந்திரி பொடி தூவி, ஒரு செர்ரியை தலையில் வைத்து சாப்பிடுங்கள்.

அதி உன்னத சுவைக்கு நான் கியாரண்டி.

இந்த கண்டுபிடிப்புக்கு ராயல்டி எல்லாம் வேண்டாம்.

வி.பி.சிங் களைந்த முரண்பாடு

இது ஒரு மீள் பதிவு

திரு வி.பி.சிங் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மீண்டும் பகிர்ந்து கொண்டுள்ளேன். 

கீழே இரண்டாவது உள்ள படத்தில் உள்ள திரு வி.பி,சிங், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அன்றைய தலைவராக இருந்த தோழர் ஆர்.பி,மான்சந்தா, பொதுச்செயலாளர் தோழர் என்.எம்.சுந்தரம், இணைச்செயலாளர் தோழர் ஆர்.கோவிந்தராஜன் ஆகிய நால்வருமே இப்போது இல்லை என்பது துயரமளிக்கிறது. 







இந்தியப் பிரதமர்களிலேயே சிறிது காலமே பதவியில் இருந்தாலும் அழுத்தமான தடத்தை பதித்தவர் நிச்சயமாக திரு வி.பி.சிங் மட்டுமே.

ஊழலுக்கு எதிராக உண்மையான நடவடிக்கைகள் எடுத்தவர் அவர் மட்டுமே. சமூக நீதியையும் மதச் சார்பின்மையையும் நேர்மையாக கடைபிடித்தவர். அந்த இரு காரணங்களுக்காகவே பதவி இழந்தவர்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை இழிவு படுத்தாதே என்று தேர்தல் நேரத்தில் மாய்மாலம் செய்த மோடியின் கட்சியினர்தான், மண்டல் கமிஷன் பரிந்துரையை அமலாக்கியதால் போராட்டம் நடத்தி வட இந்தியா முழுதும் கலவரம் செய்தார்கள். அத்வானியின் ரத்த யாத்திரையை உறுதியாக தடுத்தவரும் அவர்தான்.

இரண்டு முறை அவரது பேச்சை கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. ஒரு முறை தேர்தல் பிரச்சாரத்திற்கு நெய்வேலி வந்துள்ளார். 

2003 ல் சத்திஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் எங்கள் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டை அவர்தான் துவக்கி வைத்தார். மக்கள் மீதான அக்கறையும் இந்தியா அன்னிய நாடுகளின் அடிமையாகி விடக்கூடாது என்ற உணர்வும் அந்த இரு உரைகளின்போதும் காண முடிந்தது.

பிரச்சினைகளை சரியாக புரிந்து கொள்கிறவராகவும் உடனடியாக முடிவு எடுக்கிறவராகவும் அவர் இருந்தார் என்பது எல்.ஐ.சி ஊழியர்களின் சொந்த அனுபவம்.

எங்களுடைய ஊதியத்தில் மிகப் பெரிய முரண்பாடு இருந்தது. விலைவாசிப் புள்ளிகளின் அடிப்படையில் பஞ்சப் படி வழங்கப்படும். அதில் நான்காம் பிரிவு ஊழியர்களுக்கு 100 % பஞ்சப்படியும் மூன்றாம் பிரிவு ஊழியர்களுக்கு 75 % பஞ்சப்படியும் வழங்கப்பட்டது. 

இதனால் ஒரு நான்காம் பிரிவு ஊழியர் மூன்றாம் பிரிவு பணியான பதிவு எழுத்தராக பதவி உயர்வு பெறும்போது அவரது பஞ்சப்படி விகிதம் 75 % ஆக குறைந்து ஊதியமும் குறைந்து விடும். பதவி உயர்வு பெற்றால் ஊதியம் குறைந்து போகும் விசித்திரம் இங்கேதான் நிகழ்ந்தது.

இந்த முரண்பாட்டை களைய எல்.ஐ.சி நிர்வாகம் தயாராக இல்லை. வி.பி.சிங்கிற்கு முந்தைய எந்த ஒரு நிதியமைச்சரும் கூட தயாராக இல்லை. எங்கள் சங்கத் தலைவர்கள் வி.பி.சிங்கை சென்று சந்தித்து இப்பிரச்சினையை விவரித்தவுடன் அதற்கான தீர்வு என்னவென்று கேட்டார்.மூன்றாம் பிரிவு ஊழியர்களுக்கும் 100 % பஞ்சப்படி வழங்க வேண்டும் என்று கோரினார்கள்.

பதிவு எழுத்தர் பதவியின் அதிகப்பட்ச அடிப்படை ஊதியமான 790 ரூபாய் (இது 1987 நிலவரம்) வரை 100 %  பஞ்சப்படி வழங்குவதற்கான அரசாணையை முதலில் பிறப்பித்தார். பதிவு எழுத்தர் தொடங்கி உயர்நிலை உதவியாளர் வரை அனைத்து மூன்றாம் பிரிவு ஊழியர்களுக்கும் 790 ரூபாய் வரை 100 % பஞ்சப்படி கிடைத்தது.

காலப்போக்கில் அனைவருக்குமே 100 % பஞ்சப்படி என்பது கிடைத்தது. இந்த பஞ்சப்படி உயர்வின் மூலமாக ஒரு ஆறு மாத அரியர்ஸாக 500 ரூபாய் கிடைத்தது. அந்தப் பணம் கொண்டுதான் என்னுடைய முதல் கைக்கடிகாரத்தை வாங்கினேன். அந்த ஆல்வின் கைக்கடிகாரம் ஒரு எட்டு வருடங்கள் வரை நன்றாகவே உழைத்தது. 

Monday, June 25, 2018

சுஷ்மான்னாலும் காவிங்க அடிப்பாங்களாம் . . ..

அநேகமாக இந்த நான்காண்டுகளில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் செய்த ஒரே நல்ல காரியம்

உ.பி மாநிலத்தில் மத வெறி பிடித்த ஒரு பாஸ்போர்ட் அலுவலக அதிகாரியால் மறுக்கப்பட்ட பாஸ்போர்ட்டை கலப்பு மனம் செய்த தம்பதிகளுக்கு அளித்ததும் அந்த அதிகாரிக்கு மாற்றல் வழங்கியதும்தான்.

ஆனால் இந்த சின்ன விஷயம் கூட காவிகளுக்கு பிடிக்கவில்லை. அவர்களின் கூடாரத்தின் முக்கிய தலைவராக இருந்தும் எவ்வளவு கேவலமாக தாக்க முடியுமோ, அவ்வளவு கேவலமாக தாக்கியுள்ளனர்.

மாதிரிக்கு சில

இரவல் கிட்னியில் வாழும் அந்தப் பெண்மணி கிட்டத்தட்ட செத்துப் போனவர்.

பாகிஸ்தானை இதயத்தில் வைத்துள்ள அவர் எப்போது வெளியே வந்தாலும் அவரை கொல்ல வேண்டும்.

உங்களுடையது இப்போது இஸ்லாமிய கிட்னி என்பதால் இப்படியா? 






காவிகள் எவ்வளவு வெறி பிடித்தவர்கள் என்பது நமக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.

சுஷ்மாவிற்கும் இப்போது புரிந்திருக்கும்.




கால்களும் இப்போது உறுதியாக



 கொல்கத்தா பயணம் குறித்த பதிவுகளின் நிறைவுப் பகுதி இது.



கொல்கத்தா  நகரத்திற்குள்ளாக ஆட்டோ சேவை என்பது கிடையாது. மெட்ரோ  அல்லது  டாக்ஸி அல்லது டவுன் பஸ் ஆகிய சேவைகளை மட்டுமே  நம்பிட வேண்டும். எல்லா இடங்களுக்கும்  மெட்ரோ சேவை கிடையாது. டவுன் பஸ்ஸில் பெங்காலியில் மட்டுமே எழுதியிருப்பதால்  அதிலும் சிரமம் உண்டு.  டாக்ஸியிலும் ஒரு பிரச்சினை இருந்தது. வழக்கமான மஞ்சள் கலர் டாக்ஸியாக இருந்தாலும் சரி, ஊபர் போன்ற டாக்ஸியாக இருந்தாலும் சரி ஒரு கிலோ மீட்டருக்கு குறைவான தூரத்திற்கு வர மறுத்து விடுகிறார்கள். நடையை மட்டுமே நம்ப வேண்டிய கட்டாயம் உள்ளது.

நடப்பது நல்லதுதானே என்று நீங்கள் கேட்கலாம்.

நல்லதுதான்.

ஆனால் சரியாக எட்டு வருடங்களுக்கு முன்பு 2010 மாதம் ஏப்ரல் மாதத்தில் ஒரு விபத்து. நாங்கள் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது இன்னொரு இரு சக்கர வாகனம் இருட்டில் மோதி நானும் மனைவியும் கீழே விழுந்து விட்டோம். கால் துண்டாகி விட்டதோ என்ற அச்சம் சாலையிலிருந்து எழுந்து கொள்ள முடியாமல் தவித்த போது ஏற்பட்டது. ஆனால் முழங்கால் ஜவ்வு கிழிந்திருந்தது.

அதற்கான சிகிச்சை என்று எதுவும் கிடையாது என்றும் கிரேப் பேண்டேஜ் அணிந்து கொள்ளுமாறு சொல்லி விட்டார்கள்.  இரண்டு மாதம் ஓய்வெடுத்துக் கொள்ளுமாறும் சொல்லி இருந்தார்கள். ஒரு மாதத்திற்கு மேல் வீட்டில் இருக்க முடியாமல்   கிரேப் பேண்டேஜோடு வேட்டி  கட்டிக் கொண்டு  கையில் ஒரு வாக்கரோடு  அலுவலகம் வந்து விட்டேன்.

ஒரு ஆறு மாதம் வரை இந்த நிலை தொடர்ந்தது.  வழக்கமான எந்த பணியோ பயணமோ பாதிக்கவில்லை என்றாலும் நீண்ட நேரம் நிற்பதையும் நடப்பதையும் தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுரை கூறினார்கள்.  விபத்துக்குள்ளான ஒரு வருடம் வரை எங்கள் கோட்டத்தில் நடக்கும் கிளைக் கூட்டங்களில் மட்டும் உட்கார்ந்து கொண்டு  பேசுவேன்.  நின்று கொண்டு பேசுவதில் இருக்கும் வேகம் உட்கார்ந்து கொண்டு பேசுவதில் கிடையாது என்பதால் அதை நிறுத்தி விட்டு வழக்கம் போல நின்று கொண்டே பேசத் தொடங்கி விட்டேன்.

விபத்து நடந்த நான்கு மாதங்களுக்குள்ளேயே  கோழிக்கோடு நகரில் நடைபெற்ற தென் மண்டல மாநாடு நடைபெற்றது. வேட்டி, கிரேப் பேண்டேஜ் சகிதமாகத்தான் அம்மாநாட்டில் கலந்து கொண்டேன். மாநாட்டுப் பேரணியில் மட்டும்தான் நடந்து செல்லவில்லை.  பேரணி தொடங்கியவுடன் மாநாட்டு அரங்கிற்கு  ஆட்டோவில் சென்று விட்டேன். 

அதன் பிறகு புதுடெல்லியில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டின் போது பேரணி முக்கால்வாசி தூரம் கடந்த பின்பு கடுமையாக கால் வலி வந்து பிறகு ராம் லீலா மைதானத்திற்கு ஆட்டோவில் சென்று விட்டேன். அதே போல எங்கள் கோட்ட மாநாடுகளின் போதெல்லாம் பேரணியில் முழுமையாக நடந்து சென்றாலும் விருத்தாச்சலம் மாநாட்டின் போதுதான் பேரணியின் போது நரம்பு இழுத்துக் கொண்டு கொஞ்சம் சிக்கலானது.  அறிக்கையை சமர்ப்பித்து பேசும் போதும் பின்னர் தொகுப்புரை வழங்கும் போதும் வலியோடுதான் பேச வேண்டியிருந்தது.

வலது காலில் பிரச்சினை என்பதால் இடது காலுக்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பதால் அந்த காலில் அவ்வப்போது நரம்பு இழுத்துக் கொண்டு ஓரிரு நிமிடங்களுக்கு உயிர் போகிற அளவிற்கு வலி வரும். இந்த வலியால் நாம் முடங்கக்கூடாது என்பதில் மட்டும் எப்போதும் உறுதியாக இருப்பேன்.

அதனாலோ என்னவோ இந்த நரம்பு இழுக்கிற பிரச்சினை எதுவும் நீண்ட காலமாக வரவில்லை. என்ன நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தால் கொஞ்சமாக வலி வந்து எட்டிப்பார்த்து விட்டு போகும்.

விபத்தின் காரணமாக ஆரம்ப கட்டத்தில் கொஞ்சம் விந்தி நடக்க வேண்டியிருந்தது. அந்த உடல் ஊனத்தை “சகுனி நடை” என்று ஒரு நல்லவர் வர்ணித்தார்.  ஆறு வருடங்களுக்கு முன்பு அமர்ந்து பேசியதை இப்போதும் அமர்ந்து பேசுவதாக முதுகுக்குப் பின்னே இன்னொரு நல்லவர் நக்கலடிப்பதாகவும் காதில் தகவல்கள் வந்தது. இதிலே எனக்கு மகிழ்ச்சிதான். அந்த நல்லவர்கள் பற்றிய என் நிர்ணயிப்பு சரி என்ற மகிழ்ச்சிதான். அந்த நல்லவர்களின் முகமுடிகள் கழண்டு விழுந்து உண்மை முகத்தின் விகாரம் மற்றவர்களுக்கும்  தெரியாமலா போய் விடும்?

எங்கேயோ துவங்கி எங்கேயோ போய் விட்டேன்.

கொல்கத்தா சென்ற முதல் நாளே எங்கள் மண்டல அலுவலகத்திற்கு விருந்தினர் இல்லத்திலிருந்து நடந்துதான் செல்ல வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கும். அன்று இரவு கால்களில் கொஞ்சமாக வலி இருந்தது.

மறு நாள் முந்தைய நாளை விட அதிகமாகவே நடக்க வேண்டியிருந்தது.  எஸ்பிளனேட் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். ஆனால் உள்ளே நுழைந்த கூட்டம் பின்னுக்கு தள்ளி விட அடுத்த ஸ்டேஷனில்தான் இறங்க முடிந்தது. அங்கிருந்து ஒரு நீண்ட நடை.

மறுநாளும் நல்ல அலைச்சல்.  எஸ்பிளனேட் பகுதியை சுற்றி சுற்றி வந்தேன். கிளம்புவதற்கு முதல் நாள் விக்டோரியா மெமோரியல் சென்றேன். நான் டாக்ஸியில் சென்று இறங்கிய நுழை வாயிலுக்கு மறு பக்கத்திலிருந்த நுழைவாயில் சென்றால்தான் கட்டிடத்திற்குள் செல்ல முடியும். அதுவே நல்ல தூரம்தான். பின்பு அந்த அருங்காட்சியகத்திலும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் இருந்திருப்பேன். மாடிக்குச் செல்லும் படிகள் எல்லாம் செங்குத்தாக இருக்கும்.

அங்கிருந்து வெளியே வந்த நான் வந்த நுழைவாயிலை நோக்கி செல்லும் போது மணியைப் பார்க்கையில் பனிரெண்டு மணி. ஒரு அரை மணி நேரம் அங்கேயே பொழுதைக் கழித்தால் ஹோட்டலுக்கு போய் மதிய உணவை முடித்து விட்டு விருந்தினர் இல்லம் செல்ல சரியாக இருக்கும் என்று ஒரு பெஞ்சைத்தேடி அமர்ந்த போதுதான் ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.

“நான்கு நாட்களாக நடந்து கொண்டே இருக்கிறோம். இப்போதும் நீண்ட தூரம் நடந்தோம். நீண்ட நேரம் நின்று கொண்டே இருந்தோம், ஆனாலும் கால்களில் கொஞ்சம் கூட வலியே இல்லை “

இது  மனதிற்குள் உற்சாகத்தையும் உறுதியையும் அளித்தது.

கொல்கத்தா சென்று திரும்பிய பிறகு இந்த வருடத்து ஆண்டுப் பேரவைக் கூட்டங்கள் தொடங்கி விட்டது. விழுப்புரம், திருக்கோயிலூர், புதுச்சேரி, திண்டிவனம், குடியாத்தம், நெய்வேலி என்று இதுவரை ஆறு கூட்டங்கள் முடிந்து விட்டது.  ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் நாற்பத்தி ஐந்து நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரம் வரை பேசியுள்ளேன். வழக்கமாக லைட்டாக எட்டிப்பார்க்கும் கால் வலி இந்த முறை பயந்து பதுங்கி விட்டது.

மன உறுதி என்பது எப்போதும் உண்டு. அதனை யாரும் என்ன செய்தாலும் அசைக்க முடியாது. இப்போது கால்களும் உறுதியாகி விட்டது.

கொல்கத்தா பயணம் என்றென்றும் மனதில் நிற்க இதுவும் ஒரு காரணம்.

எதிர்கால வாழ்க்கைப் பயணம் மேலும் மகிழ்ச்சியாய், தெம்பாய் தொடர வேறென்ன வேண்டும்?

பி.கு : என் கால்களின் வலிமையை எனக்கு உணர்த்தி நம்பிக்கையூட்டிய விக்டோரியா மெமோரியலில் எடுத்த படம் மேலே உள்ளது. 




எட்டு என்று சொல்ல ஆசிரியருக்கும் அச்சம் ??????


தமுஎகச மாநில மாநாட்டில் பேராசியர் அருணன் ஆற்றிய முக்கியமான உரையை நேற்று 24.06.2018 இதழில் வெளியிட்ட தீக்கதிர் நாளிதழுக்கு நன்றி சொல்லி பகிர்ந்து கொண்டுள்ளேன்.






உண்டியல்கள் இல்லாத கோவில்கள் உண்டா?
பேரா. அருணன்

புதுச்சேரி, ஜூன். 23-புதுச்சேரியில் நடைபெற்று வரும் தமுஎகச மாநில மாநாட்டையொட்டி நடை பெற்ற கருத்துரிமைக் கருத்தரங்கத்திற்கு தலைமையேற்று பேராசிரியர் அருணன் பேசியதன் சுருக்கம் வருமாறு:-

கருத்துச் சுதந்திரத்திற்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஆபத்து வந்துள்ளது. ஆனால் சிலருக்கு அந்த கருத்துரிமை பரிபூரணமாக கிடைக்கிறது. ஒரு சிரிப்பு நடிகர் பத்திரிகை துறை பெண்கள் குறித்து கேவலப்படுத்தி பேசினாலோ, கருத்துபோட்டாலோ அவருக்கு பரிபூரண கருத்துரிமை இருக்கிறது. 60 நாட்கள் ஆனாலும் அவரை கைது செய்ய முடிய வில்லை இந்த சிரிப்பு போலீசாரால். ஆனால், பெருமாள் முருகனுக்கு அந்த கருத்துரிமை இல்லை. நாம் கதை எழுதுவ தாக நினைக்கிறோம். சிலர் அதை படு சீரியசாக எடுத்துக் கொள்கின்றனர். 

ஆயுதங்களையோ, ஆயுத உப யோகத்தையோ தடை செய்வார்களோ தெரியவில்லை. புத்தகப் படிப்பை தடை செய்கிறார்கள் என்றால் புத்தகத்தின் முக்கியத்துவத்தை நம்மைவிட நமது எதிரிகள் உணர்ந்து இருக்கிறார்கள். தமுஎகச நீதிமன்றத்தை நாடி கருத்துரிமை யை மீட்டுள்ளது. ஆண்டாளை பாடியதற்காக கவிஞரின் தலைக்கு குறி வைத்தார்கள். தமிழ் நாட்டில்ஒருமை சிந்தனைதான் ஆள வேண்டும் பன்மைச் சிந்தனை ஆளக்கூடாது என்றுமிரட்டல் விடுகின்றனர்.

புதுப்புது யுக்திகளோடு ஆபத்துகள் வந்து கொண்டு உள்ளன. மாற்றுக் கருத்து கொண்டிருந்த பாவத்தினால் சமூகவிரோதி, பயங்கரவாதி, தேசவிரோதி என முத்திரை குத்தப்படுகின்றனர். பாஜகமாநிலத் தலைவர் கூறுகிறார் சமூக ஆர்வலர் போர்வையில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும் என்று. தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பாஜகவினர் சமூக ஆர்வலர் பெயரிலேயே வருகின்றனர். அவர் யாரை மனதில் வைத்துகூறுகிறார் என்று தெரியவில்லை. ஊடகங்களுக்குள் பயங்கரவாதிகள் புகுந்துள்ளனர் என்று மத்திய அமைச்சரே கூறுகிறார்.

எங்களை உண்டியல் குலுக்கிகள் என்றுபாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சொல்கிறார். முதலில் உண்டியல் குலுக்கியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் இல்லை. இந்துக் கடவுள்கள்தான். பூசாரி இல்லாத கோயில்கள் கூட உண்டு. உண்டியல் இல்லாத கோயில் உண்டா. கோயில் என்பதுஇல்லாதவர்களுக்கானது, கஷ்டப்படு வர்களுக்கானது. அந்த கோயிலில் உண்டியல் வசூல் செய்து அந்த கோயிலை நடத்துகிறார்கள். அதே பாணியில்தான் ஏழைகளின் இன்னொரு கோயிலாகிய கம்யூனிஸ்ட் கட்சியும் உண்டியல் ஏந்துகிறது. கம்யூனிஸ்ட்டுகளை இழிவு படுத்துவதாக நினைத்துக்கொண்டு இந்து கோயில் களை இழிவுபடுத்தியுள்ளார் தமிழிசை. அந்த அம்மையார் மீது வழக்குபோடப்பட்டிருக்க வேண்டும் தொலைக் காட்சி நிறுவனத்தின் மீது வழக்கு போட்டு கைது செய்யப்போகிறார்கள் என்றால் தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை நடக்கிறதா, இல்லையா?

என்னுடைய நிலத்தை நான் தர மாட்டேன் என்ற சொன்ன பாவத்திற்காக விவசாயி கைது செய்யப்படுகிறார். சேலம் மாவட்டத்தில் 8 என்ற எண்ணை கணக்குவாத்தியார் கூட உச்சரிக்கப் பயப்படு கிறார்கள் என தகவல் வந்துள்ளது. எங்களை பொறுத்தவரை கலைகளும், இலக்கியங்களும் மக்களுக்கு ஆனந்தத்தையும் தரவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். அதே நேரத்தில் அதோடு ஒரு முற்போக்குக் கருத்தையும் எடுத்து செல்லவேண்டும் என்று துடிக்கிறோம். 

தொலைவில் குறிபார்த்து சுட்டுத் தள்ளும் ஸ்னைபர் துப்பாக்கி உள்ளது என சுட்டுத்தள்ளுகிறார்கள். எங்களிடத்தில் தொலைதூரத்தில் அல்ல; தலைமுறைகளை கடந்து பாயும்ஏவுகணைகளாக படைப்புகள் உள்ளன.அதை உங்களால் தடுக்க முடியுமா?. கருத்துரிமை பிச்சை அல்ல; சுதந்திரப்போராட்ட வேள்வியில் எங்கள் முன்னோர்கள் போராடிப் பெற்றுத்த உரிமை. அந்த உரிமையை விட்டுத்தர மாட்டோம். எங்கள் உயிரே போனாலும் எங்கள் சவம் பேசும்.இவ்வாறு அருணன் பேசினார்.

கம்பன் கலையரங்கத்தில் முற்போக்கு எழுத்தாளர்கள் கவுரி லங்கேஷ், கல்புர்கி ஆகியோரின் நினைவு வளாகத்தில் கவிஞர் எச்.ஜி. ரசூல் நினைவரங்கில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு பேரா. அருணன் தலைமை வகித்தார். புதுச்சேரி முதலமைச்சர் வி.நாராயணசாமி வாழ்த்துரை வழங்கினார். கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஹேமா நன்றி கூறினார். மாநில துணைத் தலைவர் அ.குமரேசன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். முன்னதாக பல்வேறு கலைக்குழுக்களின் சார்பில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

தமுஎகசவின் புதிய பொறுப்பாளர்கள்



கௌரவத்தலைவர் தோழர் ச.தமிழ்ச்செல்வன்,
தலைவர் தோழர் சு.வெங்கடேசன்,
பொதுச்செயலாளர் தோழர் ஆதவன் தீட்சண்யா,
பொருளாளர் தோழர் சு.ராமச்சந்திரன் 

ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்


Sunday, June 24, 2018

இந்த அதிரடியும் அவர்கள் அளித்ததே . . .



மெல்லிசை மன்னருக்கும் கவியரசருக்கும் இன்று பிறந்த நாள். அதனை நினைவு கூறும் பலரும் அவர்களின் மெலடி பாடல்களை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஒரு மாறுதலாக அவர்களின் படைப்பில் வெளிவந்த இரண்டு அதிரடிப் பாடல்களின் இணைப்பை இங்கே அளித்துள்ளேன்.



கவியரசு சொன்னது போல

அவர்கள் நிரந்தரமானவர்கள்.
எந்த நிலையிலும் அவர்களுக்கு அழிவில்லை.

அந்த வீடியோக்காரருக்கும் துணிச்சல்தான் . . .

வாட்ஸப்பில் வந்த ஒரு வீடியோவை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன். 



புலிகளுக்கு மத்தியில் சர்வசாதாரணமாக உலாவுகிற, ஏன் சில சமயங்களில் புலிகளையே மிரள வைக்கிற அந்த பெண்ணின் துணிச்சல் அபாரமானது. 



இதனை அப்படியே பதிவு செய்த அந்த வீடியோக்காரருக்கும் துணிச்சல் அதிகம்தான்.

அவர் இல்லையென்றால் இந்த வீடியோ ஏது?


Saturday, June 23, 2018

ஏராளமான எஸ்,ஜே,சூர்யாக்கள் !!!!!


எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடித்த "குஷி" படம் நினைவில் உள்ளதா?

அதிலே கொல்கத்தாவில் டிராபிக் சிக்னலில் நிற்கும் எஸ்.ஜே.சூர்யா ஏதோ படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்து கொண்டு சிக்னலை கவனிக்காமல் முன் பின் ஓட விஜய் வந்த கார் விபத்துக்குள்ளாகும்.

இந்த முறை கொல்கத்தா பயணத்தில் கவனித்த ஒரு விஷயம்.

சாலையைக் கடக்க சிக்னலில் காத்துக் கொண்டு இருக்கையில் பலரும் சிக்னலைக் கவனிக்காமல் கையிலிருந்த மொபைலைக் கவனித்துக் கொண்டே இருந்து பச்சை விளக்கு எரிந்து மற்றவர்கள் சாலையைக் கடக்கத் தொடங்கியதும் பிறகு வேகம் வேகமாக இணைந்து கொள்கிறார்கள். 

ஸ்மார்ட் போன் காலத்தில் இது சகஜமப்பா என்கிறீர்களா?

இது சகஜம் என்றால் விபத்துக்களும் சகஜமாகி விடுமே!!!

சிக்னலில் நிற்கும் நேரத்திலாவது அலைபேசிக்கு ஓய்வு கொடுக்கலாமே!

நான் சொல்றது சரிதானே?


Friday, June 22, 2018

அர்ஜெண்டினா பிரேசிலை வென்ற அந்த இரவில் . . .

கதவை உடை, கால்பந்து பார்ப்போம்



தொண்ணூறாம்   ஆண்டு  உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்ற நேரம் நான் எல்.ஐ.சி நெய்வேலி கிளையில் பணியாற்றி வந்தேன். அப்போது எல்.ஐ.சி ஊழியர் குடியிருப்பில் நான்கு பேர் வீட்டில் மட்டுமே தொலைக்காட்சிப் பெட்டிகள் இருந்தது. ஒருவர் கிளை மேலாளர்.  அவர் வீட்டிற்குச் சென்று டி.வி   பார்ப்பதில்   சில சங்கடங்கள் உண்டு. என்னதான் நல்ல அதிகாரியாக இருந்தால் கூட அவர்களோடு பழகுவதில் ஒரு வரையறையும் கட்டுப்பாடும் தேவை என்ற பாரம்பரியம் எங்கள் நெய்வேலிக் கிளைக்கு உண்டு.  

அடுத்து ஒரு மூத்த பெண் தோழர் வீடு. அவர்களை தொந்தரவு செய்வது சரியாக இருக்காது. இன்னொரு தோழர் அப்போதுதான் திருமணமானவர். அங்கே செல்வது அவ்வளவு நாகரிகமாக இருக்காது.

எஞ்சியது என் வீடு மட்டும்தான். அப்போது என் பெற்றோரும் டெல்லி, ஹரித்வார், காசி என வெளியூர் சென்றிருந்தால் விளையாட்டு  ரசிகர்களுக்கு என் வீடுதான் சரணாலயம். தோழர்களோடு   நேரத்தை செலவிடுவதை விட ஒரு கிளைச்செயலாளருக்கும் வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்!

அன்று பிரேசிலுக்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையே இரண்டாம் சுற்றுப்போட்டி. அனைவருக்குமே மாரடோனாதான் நாயகன். ஒன்பது மணிக்குப் போட்டி. அனைவரும் வேகவேகமாக சாப்பிட்டு போட்டியைப் பார்க்க தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

அந்த ஊழியர் குடியிருப்புக்களுக்கு ஆட்டோமேடிக் பூட்டுக்களை அமைத்திருந்தார்கள். சாவியை கையில் வைத்துக் கொள்ளாமல் கதவு மூடிக்கொன்டால் உள்ளே ஆட்கள் இருந்தால் தப்பிக்கலாம். இல்லையென்றால் சிக்கல்தான். காற்று வேகமாக அடித்தால் கதவு மூடிக்கொள்ளும் அபாயம் எப்போதும் உண்டு.

எட்டரை மணிக்கு அந்த விபரீதம் என் வீட்டிலும் நிகழ்ந்தே விட்டது. கதவை திறந்து வைத்து விட்டு யாருடனோ வெளியே நின்று பேசிக் கொண்டிருக்கையில் காற்று அடிக்க கதவு மூடிக்கொண்டது. ஒரு பெரிய குச்சி கொண்டு ஜன்னல் வழியாக சாவியை எடுக்க முயல அது இன்னும் அதிக தூரத்திற்குச்சென்று விட்டது.

பூட்டு ரிப்பேர் செய்பவரை அழைத்து வரலாமா என்ற என் குரல்
எனக்கே கேட்பதற்கு முன்பு எங்கிருந்தோ சுத்தியலும் மற்ற உபகரணங்களும் வந்து சேர்ந்தது.பூட்டு உடைக்கப்பட்டது, கதவும் கூட கொஞ்சம் உடைந்து போனது. எல்லாம் நாளைக்கு சரி செய்து கொள்ளலாம் என்று உள்ளே நுழைந்தார்கள். தொலைக்காட்சியைப் போட்டார்கள். மாரடோனா முகம் திரையில் தோன்றியது. விசில் அடிக்காத குறை மட்டும்தான். மற்றபடி எந்த  ஆரவாரத்திற்கும் குறைவில்லை.

அந்தப்போட்டி விறுவிறுப்பாக இருந்ததும் அர்ஜென்டினா ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றதும் ஒரு சின்ன ஆறுதல். 

( கடைசியில் அந்தக் கதவை சரி செய்ய மூன்று நாட்கள் ஆனது.)

இது ஒரு மீள் பதிவு. தற்போதைய உலகக் கோப்பையில் அர்ஜெண்டினா சொதப்புவதைப் பார்த்து நொந்து போன போது நினைவுக்கு வந்தது . . .