Monday, August 10, 2020

மாமனிதர்கள் 1

எங்கள் ஓய்வு பெற்ற அதிகாரி தோழர் ரமணன் எழுதிய கவிதை. நான் நெகிழ்ந்ததால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். கேரளாவை தாக்கிய இன்னொரு துயரத்திலும் மனிதம் வெளிப்பட்டது. அது பற்றிய பகிர்வு மாமனிதர்கள் 2 ஆக இன்னும் கொஞ்ச நேரத்தில் . . .


மாமனிதர்கள்

அடித்துக் கொட்டும்
அடை மழை.
அவர்கள் அசரவில்லை.

காவல்,ஆம்புலன்ஸ் வர
அவர்கள் காத்திருக்கவில்லை.

கொட்டிய குருதியால்
நனைந்த சொகுசு இருக்கைகள்
கவலை இல்லை என்றனர்.

யார் பெற்ற பிள்ளைகளோ
மார்போடணைத்து
தெரிந்த மொழியில்
தேற்றினர்.

தலைக் குல்லா
நெற்றி நீறு
எதுவும் பேதமில்லாமல்
எடுத்து சென்றனர்.

தெரிந்த மருத்துவ மனைகளுக்கு
தெறித்தோடும் வேகத்தில்
தீயாய் கொண்டு சேர்த்தனர்.

கொட்டும் மழை
அடர் திரையாய்
மறைப்பினும்
வழுக்கும் சாலை
கரணம் தப்பினால் மரணம்
என்றாலும்
தம்முயிர் மதியாது
மன்னுயிர் காத்த
மலப்புரம் மாமனிதர்களுக்கு
சிரம் தாழ்த்தி
செவ்வணக்கம்.

திறமையாய் தரையிறக்கி
தன்னுயிர் ஈந்து
பல்லுயிர் காத்த
விமானிகளுக்கும்
வீர வணக்கம்.

No comments:

Post a Comment