Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Wednesday, December 9, 2020

சீக்கிய தலைப்பாகையும் நம்பிக்கையும்

 ஒடிஷா மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் திரு ஆர்.பாலகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ் அவர்களின் திகிலும் நெகிழ்ச்சியும் கொண்ட உணர்ச்சி பூர்வமுமான ஓர் அனுபவப் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன். 

இந்தியாவின் பன்முகத்தன்மையை பாதுகாக்க விரும்புபவர்கள் அவசியம் அறிய வேண்டிய செய்தி. 



எனது பழைய ஆல்பத்திலிருந்து.



1984 ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி அவரது சீக்கிய மெய்க்காப்பாளரால் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து டெல்லியிலும் வட மாநிலங்களிலும் வன்முறை வெடித்தது.‌ சீக்கிய மக்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அன்று நான் என்னுடன் ஐ.ஏ.எஸ் பயிற்சியிலிருந்த நண்பர்களுடன் டில்லியிலிருந்து உத்திரப்பிரதேசத்தில் உள்ள பாந்தா என்ற மாவட்டத்திற்கு பயணம் செய்து கொண்டிருந்தேன். அன்று சில வன்முறைகளை கண்ணெதிரே பார்க்க நேர்ந்தது.

அப்பாவி மக்களுக்கு எதிரான வன்முறை என்னை மிகவும் வருத்தியது. உத்திரப்பிரதேச கிராமப்புற பயிற்சி முடிந்து மசூரி வந்து சேர்ந்தோம். ஆனால் டில்லியிலும் பிற இடங்களிலும் நிகழ்ந்த கட்டற்ற வன்முறைச் சம்பவங்கள் உறுத்திக் கொண்டே இருந்தது.

எனது சீக்கிய நண்பர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இணக்க உணர்வின் வெளிப்பாடாக நான் சீக்கியர்களின் தலைப்பாகையை சில நாட்கள் அணிந்து வகுப்பிற்கு சென்று வந்தேன். கடைத்தெருவிற்கும் தலைப்பாகை அணிந்து சென்றேன்.
இந்தியா ஒரு மழைக்காடு.
பன்மியமே அதன் அடித்தளம்.



முந்தைய பதிவின் தொடர்ச்சி.
----------------------------------------------------
பிரதமர் இந்திராகாந்தி கொல்லப்பட்டார் என்ற தகவல் கசிந்தபோது எங்களது பேருந்து பழைய டில்லி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தது. டேராடூனிலிருந்து இரவு ரயிலில் வந்து சேர்ந்து ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தினர் அறைகளில் குளித்து ரெடியானோம். உத்திரப்பிரதேசத்தில் உள்ள பாந்தா என்ற இடத்திற்கு செல்வது எங்களது பயணத்திட்டம்.

பிரதமர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வானொலி செய்தி கூறினாலும் "அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்" என்ற தகவல் கசிந்து விட்டது போலவே தோன்றியது. ரயில்நிலையம் பகுதியில் ஏற்கனவே பதட்டம் தொற்றிக்கொண்டது.

இந்தச் சூழ்நிலையில் தான் டில்லியை விட்டுக் கிளம்பினோம். சிறிது நேரத்தில் பிரதமரின் மரணச் செய்தி பரவிவிட்டது.

மறக்கமுடியாத பஸ் பயணம் அது. டில்லியில் இருந்து பாண்டா என்ற இடம் 600 கி.மீ. கான்பூர் வழியாக போக வேண்டும். கான்பூர் வரைக்கும் அனைவருக்கும் ரயில் டிக்கெட் கிடைக்கவில்லை என்று தான் நினைவு. டில்லியிலிருந்தே பஸ்ஸில் செல்ல ஏற்பாடு செய்திருந்தார்கள். வழியெல்லாம் சிறு சிறு நகரங்களிலும் பதட்டமாக கூட்டம் கூட்டமாக மக்கள் காணப்பட்டார்கள். "கட்டாயம் கலாட்டா இருக்கும் கல்வீச்சு இருக்கும்" என்று டிரைவர் வேறு இடையிடையே பீதியை கிளப்பிவிட்டுக் கொண்டிருந்தார். எங்கள் குழுவில் சீக்கியர்கள் இரண்டு பேர் இருந்தனர் என்பது எங்களுக்கு கவலையாக இருந்தது.

கான்பூர் சென்ற போதே எங்கும் பதட்டம் உச்சத்தில் இருந்தது. அங்கு ஒரு கடையில் சாப்பிடும் போதே பதட்டம் உச்சகட்டத்தில் இருந்தது. சீக்கியர்களின் கடைகள் தாக்கப்பட்டதாக கேள்விப்பட்டோம்.

அவசரம் அவசரமாக பாந்தா சென்று அங்கிருந்து சிறுசிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஜீப்களில் பல்வேறு கிராமங்களுக்கு அனுப்பப்பட்டோம். கிட்டத்தட்ட 12 முதல் 14 மணி நேரம் வரை பயணம் செய்ததாக நினைவு.

எங்களுக்கு உரிய கிராமத்தை அடைந்து நாங்கள் ஐந்து பேர் அந்த கூட்டுறவு சங்க அலுவலகத்தை ( அங்கு தான் தங்க வேண்டும்) அடைந்தபோது நள்ளிரவாகி விட்டது. எங்களுடைய இந்த ஐவர் குழுவில் ஒரு சீக்கியர் இருந்தார்.

குடிமைப் பணிகளில் சேரும் பயிற்சி அதிகாரிகளுக்கு இந்திய கிராமங்களை அங்குள்ள வாழ்க்கையை அறிமுகம் செய்வது தான் இந்த பயணத்தின் நோக்கம். கிடைத்த இடத்தில் தங்குவதிலிருந்து கழிப்பறை அற்ற தங்குமிடம் போன்ற சூழல்களையும் சமாளிக்க வேண்டும் என்பது நோக்கம். பெருநகரங்களில் இருந்து வந்த கான்வென்ட்காரர்களுக்கு இது புதுமையாக இருக்கும். கிராமப்புறங்களில் இருந்து வந்தவர்களுக்கு பழகியதாக இருக்கும்.

மறுநாள் விடிந்து வெளியே வந்த போது தான் அந்த ஊர் "எப்படியாப்பட்ட இடம்" என்பது தெரிந்தது. காலைக்கடன் கழிக்கச் செல்பவர்கள் கையில் செம்பில் தண்ணீர் கொண்டு செல்வதோடு அவர்களில் சிலர் இன்னொரு கையில் பெரிய துப்பாக்கியை கொண்டு செல்வதைப் பார்த்து ஆடிப்போய் விட்டோம். அது ஒரு "ஏழரையான இடம்" என்பது உடனே புரிந்து விட்டது. அந்தப் பகுதியில் எப்போதும் வன்முறை நடக்கும் என்றும் எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ள துப்பாக்கியோடு அலைவது சர்வசாதாரணம் என்றும் சொன்னார்கள்.

அன்று‌ மாலை அந்த ஊரிலுள்ள ராதாகிஷன் ( ராதாகிருஷ்ணன் தான்) கோயிலுக்கு போகலாம் என்று உள்ளூர் வருவாய்த்துறை ஊழியர் ( ஆர்.ஐ) ஐடியா கொடுத்தார். ஏற்கனவே ஊர்த்தலைவரை சந்தித்துவிட்டோம். அவருக்கு பக்கத்தில் இரண்டு பேர் துப்பாக்கியோடு நின்றார்கள். ஊர்க்காரர்களையும் சந்திக்கலாம் என்று நினைத்து கோயிலுக்குப் போனோம். ஆரத்தி காண்பித்தார்கள். அப்போது எங்களுடன் இருந்த சீக்கிய நண்பரும் இன்னொருவரும் கோயிலில் விற்கப்பட்ட "பேடா" எனப்படும் ( பால் கோவா துண்டு மாதிரி) பிரசாதத்தை வாங்கி சாமிக்கு படைத்துவிட்டு அங்கிருந்தவர்களுக்கு வழங்கினார்கள். நானும் ஒரு துண்டு சாப்பிட்டேன்.

பிறகு அனைவரும் நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்துவிட்டோம். இரவு பதினொரு மணிக்கு மேல் திடீரென்று யாரோ கதவை தட்டும் சப்தம். திறந்து பார்த்தால் உள்ளூர் பள்ளி ஆசிரியர்.அவர் ஏற்கனவே எங்களுக்கு அறிமுகம் ஆகியிருந்தார். அவர் கொண்டு வந்தது செய்தி அல்ல குண்டு!

எங்களுடன் இருந்த சீக்கியரை எப்படியாவது வேறு இடத்திற்கு அனுப்ப வேண்டும் என்றார். ஏன் என்று கேட்டோம். ஊர்க்காரர்கள் நள்ளிரவில் வந்து அவரை தாக்கப்போகிறார்கள். இன்று கோயிலில் அவர் இந்திராகாந்தி கொலை செய்யப்பட்டதை இனிப்பு வழங்கி கொண்டாடினாராம். அதனால் ஊர்க்காரர்கள் கோபமாக இருக்கிறார்கள் என்றார் அவர். எங்களுக்கு தூக்கிவாரிப் போட்டது. பெரிய ஆபத்து வருகிறது என்று அந்த ஆசிரியர் பீதியை கிளப்பினார். நாங்கள் உடனே என்ன செய்வது என்று யோசித்தோம்.

அவர்கள் இங்கு வருவதற்கு முன்பு நம்மில் சிலர் ஊருக்குள் போய் அவர்களைச் சந்திக்கலாம் என்று முடிவு செய்தோம். சீக்கிய நண்பரை‌ யார் கண்ணிலும் காட்டக்கூடாது என்று அவருக்கு காவலாக ஒருவரை வைத்து விட்டு அந்த ஆசிரியருடன் நானும் எனது நண்பர்கள் இருவரும் கிளம்பினோம்.

கும்மிருட்டாக இருந்தது. எனக்கு இந்தியில் நாலு வார்த்தை கூட பேசத் தெரியாது. ஆனால் பேச்சுவார்த்தை நடத்த நான் சென்றேன்! என்னுடன் வந்தவர்கள் நன்றாக இந்தி பேசுவார்கள்.

நேராக ஊர்த்தலைவரையே பார்த்து விடுவது என்று முடிவுசெய்து அந்த ஆசிரியருடன் அவர் வீட்டுக்கு போனோம். அவர் தூங்கவில்லை. வெளியே கட்டிலில் உட்கார்ந்து இருந்தார். அப்போதும் இரண்டு பேர் துப்பாக்கியுடன் நின்றார்கள். நாங்கள் நேரடியாக விஷயத்திற்கு வந்தோம்.

அந்த ஆசிரியர் ஊரில் நடக்கும் பேச்சு பற்றி சொன்னார். ஆனால் அது அந்த ஊர்த்தலைவருக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம் போலத் தோன்றியது. "அந்த சர்தார் ஏன் இனிப்பு வினியோகம் செய்தார்" என்று அவர் கேட்டார். அதனால் தான் இளைஞர்கள் கோபமாக இருப்பதாக கூறினார்.

என் கூட வந்தவர்களுக்கு இந்தி தெரியும் என்றாலும் அவர்கள் இறங்கிப் பேசாமல் இருந்ததால் அவர்களை மொழிபெயர்க்கும்படி கேட்டுக்கொண்டு படபடவென்று பேச ஆரம்பித்தேன். எப்படியாவது அவர்களை சமாதானப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்துடன் அடுத்து அடுத்து மனதிற்கு வந்ததை எல்லாம் சொன்னேன். பொய்களும் கூட. பொய்மையும் வாய்மை தானே நன்மை பயக்கும் எனில்.

அந்த சீக்கிய பயிற்சி அதிகாரியின் அப்பா பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ என்று ஆரம்பித்தேன். திடீரென்று மனதிற்குள் தோன்றிய இந்தக் கற்பனையை வார்த்தைகளாக்கினேன். நீங்கள் அவரை தப்பாக புரிந்து கொண்டீர்கள். பஸ்ஸில் வரும்போது இந்திராகாந்தியின் மரணம் குறித்து அதிகம் வருந்தியவர் அவர் தான். அந்த இனிப்பு பேடாவுக்கு காசு கொடுத்தது நாங்கள் தான் அவர் சும்மா வழங்கியிருக்கிறார் என்று ஏதேதோ சொன்னேன். எனது நண்பர்கள் அதை இந்தியில் சொன்னார்கள்.

அந்த ஊர்த்தலைவர் ஏதோ இந்தியில் சொன்னார் எனக்கு விளங்கவில்லை. துப்பாக்கியோடு அவர்கள் நிற்பதை பார்த்தால் எனக்கு "ஷோலே" படம் தான் ஞாபகத்திற்கு வந்தது. பேசிக்கொண்டு இருக்கும்போதே அவருடைய ஊர்க்காரர்கள் போய் தாக்கி விடுவார்களோ என்று பயமாக இருந்தது. எனது நண்பர்களிடம் ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு திடீரென்று அந்த ஊர்த்தலைவரின் காலைத் தொட்டு வேண்டுகோள் விடுத்தேன். எனது நண்பர்களும் அவரின் காலைத் தொட்டு ஆசீர்வாதம் கேட்டார்கள். அது "ஒர்க் அவுட்" ஆனது போலத் தோன்றியது.

அந்த ஆசிரியர் மிகவும் நல்லவர். தைரியமாக பேசினார். "அதிகாரிகள் சம்பந்தப்பட்டது பெரிய பிரச்சினை ஆகிவிடும்" என்று எடுத்துச் சொன்னார். ( இந்த ஆசிரியர் அதன் பிறகு கொஞ்ச நாள் என்னோடு லெட்டர் தொடர்பில் இருந்தார்)

காதை திருகிக்கொண்டே யோசித்த ஊர்த்தலைவர் "அப்படியானால் அந்த சர்தாரை இந்த ஊரில் இருந்து உடனே அனுப்பிவிடுங்கள். இங்கே இருப்பவர்கள் ஒரு மாதிரியானவர்கள்" என்று அனுமதி கொடுத்தார்.

உடனே அந்த ஆசிரியர் தனது மோட்டார் சைக்கிளில் அவரை கொண்டு போவதாக அனுமதி கேட்டார். ஊர்த்தலைவர் "சரி" என்றார். நாங்கள் தலைதெறிக்க அறைக்கு ஓடி வந்தோம். அந்த சீக்கியர் பயத்தில் உறைந்து போய் இருந்தார்.

அந்தப் பகுதி தாசில்தார் உள்ள சிறு நகருக்கு அந்த ஆசிரியர் அவரை அந்த நள்ளிரவில் அழைத்துச் சென்றார். அவருக்கும் பயமாக இருந்தது.எங்களுக்கும் பயமாக இருந்தது. ஆனாலும் அனுப்பிவைத்தோம். அப்போதெல்லாம் மொபைல் போன் ஏது. அவர் தாசில்தாரை பார்த்து அங்கிருந்து மாவட்டத் தலைநகருக்கு ஜீப்பில் சென்று கலெக்டரிடம் தஞ்சம் புகுந்தது எல்லாம் மறுநாள் தான் தெரியவந்தது. இரவெல்லாம் தூக்கம் இல்லை.

இந்த நிகழ்ச்சி எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. நாங்கள் மசூரி அகாடெமிக்கு திரும்பிய போது மற்ற குழுக்களில் வெவ்வேறு மாநிலங்களுக்கு/ மாவட்டங்களுக்குச் சென்ற பயிற்சி அதிகாரிகள் இதுபோன்ற பல அதிர்ச்சிகரமான அனுபவங்களுடன் வந்து சேர்ந்தனர்.

சில இடங்களில் சீக்கிய பயிற்சி அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பயணம் செய்த பஸ்கள், ஜீப்கள் தாக்கப்பட்டுள்ளன. சிலர் துரத்தியவர்களிடமிருந்து ஓடித் தப்பியிருந்தனர். அவர்கள் அனைவரின் முகத்திலும் அச்சமும் அதை விட கோபமும் அள்ளிப் பூசியிருந்தது.

அப்போது தான் சீக்கியர் தலைப்பாகை அணிந்து வகுப்பிற்கு செல்வது தெருவில் நடப்பது என்ற யோசனை எனக்குத் தோன்றியது. எனது இன்னொரு நண்பரும் இதில் சேர்ந்து கொண்டார்.

சீக்கியர் தலைப்பாகையுடன் நான் இருக்கும் இந்தப் புகைப்படத்தை பார்க்கும் போது எனக்குள் ஏதேதோ எண்ணங்கள்.
அதனால் தான் இந்தப் பதிவு.

Monday, November 30, 2020

அத்தந்தை எழுதிய கடிதம் சிறப்பு

 


எங்கள் கோட்டத்தின் மூத்த தலைவர்கள் தோழர் ஆர்.ஜகதீசன், தோழர் என்.ஏகாம்பரம் ஆகியோர் பல சமயங்களில் பரவசமாக பகிர்ந்து கொண்ட ஒரு பெயர் தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன். அஞ்சல் துறை தொழிற்சங்கத்தலைவராக மட்டுமல்லாமல் தொழிற்சங்கக் கூட்டமைப்பை உருவாக்குவதிலும் மார்க்சிய தத்துவங்களை பயிற்றுவிக்கும் ஆசானாக செயல்பட்ட அவர்தான் வேலூர் நகரத்தில் உள்ள பல தொழிற்சங்கப் பொறுப்பாளர்களுக்கும் வழி காட்டியாக இருந்தவர் என்று அவர்கள் கூறுவார்கள்.

தான் 18 வயதை எட்டிய போது அவர் தனக்கு எழுதிய கடிதத்தை தோழர் சி.எஸ்.பி அவர்களின் மகனும் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தலைவர்களில் ஒருவருமான தோழர் சி.பி.கிருஷ்ணன் அவர்கள் பகிர்ந்து கொண்டிருந்தார். 

எப்பேற்பட்ட கடிதம் அது!

தோழர் சி.பி.கே அவர்களின் அனுமதியோடு அக்கடிதத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

தந்தை மகனுக்கு எழுதிய கடிதம்
”உனக்கென்று ஒரு மறுக்க மறக்க முடியாத இடத்தை பிடிக்க வேண்டுமென்று விழைகிறேன்”
-சி எஸ் பஞ்சாபகேசன்
”எனது தாயார் நினைவு நாளை ஒட்டி நாங்கள் ஒன்று கூடி பழைய கடிதங்களை எடுத்து படிக்கும்போது எனது தந்தையின் இக்கடிதம் எதேச்சையாக கிடைத்தது. 42 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுதான் இக்கடிதத்தை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இக்கடிதம் எழுதப்பட்ட 1977ஆம் ஆண்டு எனது தந்தை திரு.சி எஸ் பஞ்சாபகேசன் வேலுரில் தபால் அலுவலகத்தில் பணி புரிந்து வந்தார். நான் காரைக்குடியில் பொறியியல் படிப்பு படித்து வந்தேன். மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கடிதம் என்பதால் இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்”
சி பி கிருஷ்ணன்
கடிதத்தின் பிரதி
வேலூர் (வட ஆற்காடு)
4.2.1977
அன்புமிக்க கிருஷ்ணனுக்கு,
அநேக ஆசிகள். நாளையோடு உனக்கு பதினெட்டு ஆண்டுகள் பூர்த்தி ஆகிறது. நீ ‘major’ ஆகிறாய். சட்ட ரீதியில் உனக்கு இனி பாதுகாப்பு தேவையில்லை. பிரச்சனைகள் அனைத்திலும் நீயாகவே சிந்தித்து சரியான முடிவெடுக்கக்கூடிய பருவம் எய்திவிட்டாய் என்பது பொருள். இன்று இரவு படுத்து உறங்கும்போது நள்ளிரவு 12 மணி 1 நிமிடத்திற்கு அந்த தகுதி உன்னை வந்து அடைந்து விடுகிறதா? இல்லை. கடந்த 10 ஆண்டு காலத்தில் அதிலும் குறிப்பாக கடந்த 3 - 4 ஆண்டு காலத்தில் பெற்ற அனுபவப் பாடம் உன்னை அத்தகுதி உள்ளவனாக ஆக்குகிறதா? பின்னதுதான் உண்மை என்று கூற தேவையில்லை.

உன்னை ஒத்த வயதுடைய தோழர்களுக்கு உலகத்தைப் பற்றி, நாம் வாழும் சமுதாயத்தை பற்றி அதில் உள்ள ஏற்றதாழ்வுகளைப் பற்றி தெரிந்திருப்பதைவிட உனக்கு மிகக் கூடுதலாக தெரியும் என்பது என் நம்பிக்கை. ஆக 18 வயது மேஜர் எதையும் தன்னிச்சையாக தீர்மானிக்க திறமையுண்டு என்று கூறுவதின் பொருள் வெறும் 365X18 என்ற நாட்களின் எண்ணிக்கையை பொறுத்ததல்ல. அவைகள் வெறும் எண்கள். சட்டத்திற்கு அவை போதுமானது. ஆனால் எதார்த்தத்திற்கு அது மட்டும் போதாது. முன் குறிப்பிட்டது போன்று சமுதாயத்தைப் பற்றிய சரியான கண்ணோட்டம்தான் உனக்கு இன்று கிடைத்திருக்கும் majority தகுதிக்கு ஏற்றவனாக்குகிறது.

இன்று கடந்தகால நிகழ்வுகளை சற்று சிந்தித்து, அசை போட்டு பார். அது இன்றைய நிலைகளை புரிந்து கொள்ளவும், (தனிப்பட்ட முறையிலும், குடும்ப அளவிலும், சமுதாய அளவிலும்) ஒரு சரியான கணிப்பு செய்யவும் பயன்படும். தவறுகள் இருப்பின் அவற்றை திருத்திக் கொள்ளலாம். குழப்பம் ஏற்பட்டால் அதுபற்றி மீண்டும் படித்து, கேட்டு, விளக்கம் பெறமுடியும். இனி எதிர்காலத்தில் நமது கடமை எது என்றும், அதை செய்ய தேவையான மனஉறுதியையும் நமக்கு அளிக்கும்.

இன்றைய அரசியல் போக்குகளை பேப்பர் மூலம் விபரம் தெரிந்து வைத்திருப்பாய் என எண்ணுகிறேன். ’நமது’ கணிப்புகள் எவ்வளவு சரியானது, துல்லியமாக தீர்மானிக்கப்பட்டு விளக்கப்பட்டது என்பது புரியும். ‘பாபூஜி’யின் (ஜகஜீவன்ராம்) statement ஒன்றே போதுமானது.

வரவிருக்கும் 3 ஆண்டுகள் உனக்கு மிக முக்கியம். படிப்பிற்கு மட்டுமல்ல, மற்றொரு தகுதியை பெறவும்தான். அதாவது இன்றைய பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஒரு ‘ஓட்டர்’ ஆகும் தகுதியை பெற 21 ஆண்டு நிரம்ப வேண்டும். ஆக இந்த 3 ஆண்டுகளில் உன் படிப்பில் முழு கவனம் செலுத்துவதுடன் அரசியல், சமுதாய, பொருளாதார விஷயங்களிலும் கவனம் செலுத்தி பாடம் பெற வேண்டும். அதற்கு தேவையான வழிகாட்டல் உன் விடுமுறை நாட்களில் நீ பெற வழி செய்து கொள்வது கடினமல்ல.

உலகில் கோடானுகோடி பேர் தோன்றி மறைந்துள்ளார்கள். ஆனால் ஒரு சிலரை உலகம் இன்றளவும் மறக்கவில்லை. அவர்களை மட்டும் ஏன் உலகம் மறக்க முடியவில்லை? அவர்கள் வாழ்ந்த சமுதாயத்தினின்று அவரக்ள் வேறுபட்டு நின்றார்கள் என்பது மட்டுமல்ல, அந்தந்த காலகட்டத்தில் இருந்த மேடு பள்ளங்களை கண்டு, இனம் கண்டு, அவற்றை போக்க சிறிதளவாவது, அவர்களுக்கு சரி என்று பட்ட வகையில் பாடுபட்டார்கள். அப்பணியில் தங்களையே அர்ப்பணித்துக் கொண்டார்கள். அந்த பாதை சரியா தப்பா என்று இன்று விமர்சிக்கிறோம். ஆனால் இன்று விஞ்ஞானம் மிக அற்புதமாக வளர்ந்துள்ள நிலையில், அந்த சமுதாய மேடு பள்ளங்களை பற்றிய அறிவு- அதற்கான காரணம், அவைகளை போக்கும் மருந்து மிக தெளிவாக கிடைத்துள்ளது. இந்த நிலை அன்று கிடையாது. ஆகவே இன்று நமக்கு ஒரு தெளிவான பார்வை இருக்க முடிகிறது. அதை அமுல் நடத்துவதில் எத்தனையோ இடர்பாடுகள், எதிர்ப்புகள், தாக்குதல்கள். ஆனாலும் இவை அனைத்தையம் சமாளித்து முன்னேற முடிகிறது. இந்த தடங்கல்களை கண்டு சோர்ந்து விடாமல், துவண்டு விடாமல் அவைகளை எதிர்போராடி, வெற்றி கொண்டு மேலும் முன்னேற உத்வேதகத்தோடு செயல்பட வேண்டியுள்ளது. அப்பணியில் நாம் தனித்து நிற்கவில்லை.

நம்மோடு தோளோடு தோள் சேர்ந்து அணிதிரள கோடானுகோடி மக்கள் உள்ளனர். அவர்களை தயார் செய்ய வேண்டிய பெரும் பணியே இன்று நம் முன் உள்ள கடமை. ஓர் இடத்தில் மாமேதை லெனின் கூறுகிறார்:

“ஒரு தனி மனிதன் எந்த அளவுக்கு முக்கியமானவன்?”
“சமுதாயத்தில் உள்ள ஏற்றதாழ்வுகளை (சுரண்டுவதையும் சுரண்டப்படுவதையும்) கணித்து, அதனால் பாதிக்கப்பட்ட மக்களை அணுகி, அந்த அநீதியை எதிர்த்து போராட தயார் செய்து, அந்த போராட்டத்தில் அவர்களை ஈடுபடுத்துவதில் எந்த அளவுக்கு ஒரு மனிதன் வெற்றி பெறுகிறானோ அந்த அளவுக்குதான் அவன் முக்கியமானவன்.”
அதாவது சமுதாய மாற்றம் என்பது ஒரு தனி அவதார புருஷனால் மட்டுமே- அவன் தனிப்பட்ட செயல்கள் மூலமே (உண்ணாவிரதம் etc.) சாதித்துவிட முடியுமென்பது அபத்தமானது.

நமது நாட்டு சுதந்திர போராட்ட வரலாறே அதற்கு ஒரு தெளிவான சான்று.

இந்த நாட்டுக்கு சுதந்திரம் கேட்டது தவறா? ஆனால் இந்த கோரிக்கையை ஆதரித்து பேரியக்கங்கள் நடத்தாதவரை இதை நாம் பெற முடியவில்லை. 1942-1946 நிகழ்ச்சிகள் இதைத்தான் எடுத்துக்காட்டுகின்றன. 1946 - எத்தனை வேலைநிறுத்தங்கள்- எவ்வளவு பேர் பங்கு கொண்டனர். “சுதந்திரம் தா” என்று கேட்பதைவிட்டு “வெள்ளையனே வெளியேறு” என்று அறைகூவலையும் விட்டு, இந்நாட்டு உழைப்பாளி மக்களின் பெரும் பகுதி நேரடி போராட்டத்தில் இறங்கி, மற்றொரு பகுதி ஆயுத படையினர் - கப்பற் படையினர் ஆங்கிலேயரின் Union Jack கொடியை ஒவ்வொரு கப்பலின் கொடி மரத்திலிருந்து இறக்கி, மூவர்ண காங்கிரஸ் கொடி, அரிவாள் சுத்தி தாங்கிய பொதுவுடைமை கட்சி கொடி, முஸ்லீம் லீகின் கொடி ஆகியவற்றை ஒவ்வொரு கப்பலிலும் ஏற்றிய மறுநாள்தான் 21.2.46 (from memory – it must be correct) இந்தியாவுக்கு சுதந்திரம் என்ற முடிவை லண்டனில் இருந்த ஆங்கில ஆட்சி முடிவெடுத்தது.

பின்னர் நடந்தது வேறு கதை. ஆனால் ஒரு பிரச்சனையால், சீர்கேட்டால், அடக்குமுறையால், சுரண்டலால் பாதிக்கப்பட்ட மக்கள் தான் அதை போக்கிக்கொள்ள பாடுபட வேண்டும். தியாகம் செய்ய வேண்டும். எந்த அளவுக்கு Quantity வளருகிறதோ அந்த அளவுக்குதான் கிடைக்கும் பலனின் quality இருக்கும். “அளவு மாற மாற குணம் மாறும்” இந்த குணமாற்றம் மீண்டும் அளவு மாற்றத்தை உண்டாக்கும்.

இவையெல்லாம் நீ முன்பே கூட கேட்டு இருப்பாய். ஆனாலும் இவைகளை இன்று உனது 18 வயது நிறைவு நாளில் கவனப்படுத்த வேண்டியது அவசியம் என நினைத்து எழுதுகிறேன். மேலும் நிறைய எழுத ஆசை. ஆனால் மூன்று நாட்களாக அலுவலகத்தில் மிக அதிகமான எழுத்து வேலை. ஆக கை குடைச்சல். அதிகம் எழுத முடியவில்லை.

முடிவாக பாதகம் செய்வோரை மோதி மிதிக்கும் சமுதாயத்தை உருவாக்குவதில் உனக்கும் ஒரு சிறப்பான பங்கு இருக்க வேண்டும். புறக்கணிக்கப்பட்ட மக்களை ஒன்றுதிரட்டி ஒரு மாபெரும் போராட்டத்தை, புதிய பாரத யுத்தத்தை நடத்த பாடுபடும் இயக்கத்தில் நீயும் ஒருவனாக இருந்து சிறப்புற செயலாற்றி உனக்கென்று ஒரு மறுக்க மறக்க முடியாத இடத்தை பிடிக்க வேண்டுமென்று விழைகிறேன். இப்பெரும் பணியை நிறைவேற்றவல்ல உடல் வலுவும், மனோதிடமும், நீண்டு வாழும் நிலையும் பெறுவாயாக! எனது நல்லாசிகள் உனக்கு உரித்தாகுக.
அன்புள்ள
அப்பா
பி.கு. எங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் உனக்கு உறுதுணையாக நிற்குமென மல்லிகா* கூறுகிறாள்.
*சி பி கிருஷ்ணனின் மூத்த சகோதரி"

இக்கடிதத்தை படிக்கும் போது எனக்கு பதினோரு வயது இருக்கும் போதே அனைத்து அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கும் அழைத்துச் சென்று அரசியல் நிலைமைகள் மீது ஆர்வத்தை வரவழைத்த என் அப்பாவின் நினைவுகள் வராமல் இல்லை.

அது போலவே பல இந்திய, உலக வரலாறுகளைப் பற்றி என் மகனுக்கு விவரித்து, சமூகம் மீதான பார்வை எப்படி இருக்க வேண்டும் என்ற சுய சிந்தனையை அவனுக்கு உருவாக்கியுள்ளேன் என்பதையும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது.

Saturday, September 1, 2018

தாமதம்தான். ஆனாலும் தப்பில்லை . . .

சுதந்திர தினத்தை முன்னிட்டு எங்கள் அகில இந்தியத் தலைவர் தோழர் அமானுல்லாகான் எழுதிய கட்டுரையை தஞ்சைக் கோட்டச்சங்கம் தமிழாக்கம் செய்து அச்சிட்டு அனுப்பினர்.



அதனை நான் இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

தாமதமாக இங்கே பதிவு செய்தாலும் அதனை முழுமையாக படிப்பதில் தவறில்லை.

இரண்டாவது பக்கத்தில் இரண்டாவது பத்தியில் அடிக்கோடு இடப்பட்டுள்ளதை படியுங்கள். 

நான் சொல்வதும் புரியும். அர்பன் நக்ஸல்கள் என்று வர்ணிக்கப்படுவது யாரென்றும் தெரியும்.







Saturday, June 9, 2018

பொறுப்பான "குடிமகனை" பாராட்டுங்கள்

நேற்று சென்னை சென்று திரும்பி வருகையில் இரவு பத்தரை  மணி அளவில்  ஸ்ரீபெரும்புதூர் டோல் கேட்டில் பார்த்த காட்சி கீழே உள்ளது.



குடித்த பாட்டிலை வாகனத்திலிருந்து அப்படியே தூக்கி எறிந்தால்  அது உடைந்து கண்ணாடி துண்டுகள் யார் காலிலாவது குத்தி விடுமே என்ற அக்கறையில்


பாட்டிலை அப்படியே நடு ரோட்டில் நிறுத்தி வைத்துள்ள

அந்த குடி மகனின் பொறுப்புணர்வை பாராட்டுவோம்.

மிக முக்கியமான பின் குறிப்பு :

ஸ்ரீபெரும்புதூர் டோல்கேட்டில் அந்த காட்சியை பார்க்கையில் முதலில் காமெடியாகத்தான் தோன்றியது. அடுத்து ஒரு மணி நேரம் கழிந்து வாலாஜா டோல்கேட் வந்த போதுதான் கவலை வந்தது. 

அந்த நள்ளிரவில் அந்த டோல் கேட் கவுண்ட்டர்களில் பணியாற்றிக் கொண்டிருந்தது பெண் ஊழியர்கள்தான். குடி மகன்கள்  உலாவும் அந்த நடுநிசி நேரத்தில்  அவர்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? 

இந்த பணியில் பெண்களுக்கு  இரவு ஷிப்ட் அவசியமா?


Tuesday, June 5, 2018

அனிதாவோடு நிற்காத "நீட்" துயரம்



பனிரெண்டாம் வகுப்பில் 1125 மதிப்பெண்கள் வாங்கியும் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் மருத்துவராகும் கனவு கருகி தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் பிரதீபா என்றொரு மாணவி.

தற்கொலை தீர்வில்லை என்று உபதேசம் சொல்வது எளிது. அந்த மாணவியின் வலி நமக்கு புரியாது. 

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் கடுமையான முயற்சிகளால் பொதுத்தேர்வுகளில் சாதிக்க முடிபவர்களால் நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்றால் நீட் தேர்வில் ஏதோ மிகப் பெரிய மோசடி இருக்கிறது.

லட்சக்கணக்கில் செலவு செய்பவர்களால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றால் அப்படிப்பட்ட தேர்வு அவசியமா?

பணம் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவராக முடியும் என்ற நிலை நாட்டை உண்மையிலேயே சுடுகாடாக்கி விடும்.

"நீட்' டை ரத்து செய் என்ற குரல் முன்னெப்போதையும் விட வேகமாக ஒலிக்க வேண்டிய தருணம் இதுதான். 

Monday, March 5, 2018

ஆபாசப் படமில்லை. வலியின் வெளிப்பாடு



ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம் பற்றி காலையில் எழுதிய பதிவிற்கு இரண்டு எதிர்வினைகள் வந்திருந்தன.

நீயும் ஆபாசப்படம் போட்டுள்ளாயே என்று ஒரு அனானி.

இப்படி ஆடைகள் இல்லாமல் அவர்களை போராடத் தூண்டியது எது என்று விளக்கம் கேட்டார் இன்னொரு அனானி.

இது ஆபாசமா என்பதை கடைசியில் சொல்கிறேன். 

இப்படி ஒரு போராட்டம் நடத்த அந்தப் பெண்கள் ஏன் தள்ளப்பட்டார்கள் என்ற கேள்விக்கு விளக்கம் சொல்ல வேண்டியது அதை விட மிகவும் முக்கியம். அவருக்கு மட்டுமல்ல, அந்த சம்பவம் பற்றி தெரியாதவர்களுக்கும் கூட.

முதலில் ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம் பற்றி தெரிந்து கொள்வோம்.

“வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தை ஒடுக்க முதன் முதலாக பிரிட்டிஷ் அரசு 1942 ல் கொண்டு வந்த சட்டம் இது. இச்சட்டத்தின் படி எந்த ஒரு போராட்டத்தையும் ஒடுக்குவதற்கு ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கப் படும். அவர்களின் எந்த செயல் மீதும்  சட்டரீதியான விசாரணை செய்வதில் இருந்து ராணுவத்திற்கு பாதுகாப்பு அளிப்பதே இச்சட்டத்தின் நோக்கம். “எந்த செயல்” செய்தாலும் பாதுகாப்பு என்பதால் அந்த பாதுகாப்பு பயன்பட்டது ராணுவத்தின் அத்து மீறல்களுக்கே. பாலியல் வன் கொடுமைகள் என்பதே பிரதான அத்து மீறலாகவும் இருந்தது.

இந்தியா விடுதலை பெற்றதும் பதினோரு ஆண்டுகளுக்குப் பின்பு இச்சட்டம் 1958 ல் முதன் முதலில் ஒரு அவசரச்சட்டம் வாயிலாகவே நாகாலாந்து மாநிலத்தில் பிரயோகிக்கப்பட்டது. எந்த ஒரு பகுதியாவது “தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதி (Disturbed Province)  என்று அறிவிக்கப்பட்டால் அப்பகுதிகளுக்கு  இச்சட்டம் விரிவுபடுத்தப்படும் என்று  கொண்டு வந்தார்கள்.

நாகாலாந்தில் தொடங்கியது மணிப்பூருக்கு பரவி பிறகு ஒட்டு மொத்த வட கிழக்கு மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. 1970 ல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் அமலாக்கப்பட்டது.

இச்சட்டம் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு உதவுவதற்குப் பதிலாக சாமானிய மக்களை ஒடுக்குவதற்கும் போலி எண்கவுண்டர்களை செய்வதற்கும் பாலியல் வன் கொடுமைகளை நிகழ்த்துவதற்கும் மட்டுமே அதிகமாக பயன்பட்டது. தங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற தைரியத்தை ராணுவத்தை தங்கள் மோசமான செயல்களுக்கு கேடயமாக பயன்படுத்திய தீயவர்களுக்கு அளித்தது.

ராணுவத்திற்கும் மக்களுக்குமான இடைவெளி அதிகரித்ததுதான் இச்சட்டத்தின் சாதனை. அதனால்தான் இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வட கிழக்கு மாநில மக்களும் காஷ்மீர் மாநில மக்களும் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

நிர்பயா சம்பவத்திற்குப் பிறகு பாலியல் வன் கொடுமைகளைக் குறைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் வர்மா குழு அளித்த பரிந்துரைகளில் ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற பரிந்துரையும் அடங்கும். அதனை மன்மோகன்சிங் அரசு ஏற்கவில்லை.

காஷ்மீர் பிரச்சினையில் அம்மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்க செய்ய வேண்டிய முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாக பல நிபுணர்கள் சொல்வதும் இச்சட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் என்பதுதான். ஆனால் அதைச் செய்வது பற்றி யோசிக்கக்கூட மோடி அரசு தயாராக இல்லை.

இப்போது மணிப்பூர் பிரச்சினை பற்றி பார்ப்போம்.

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் 2010 ம் வருடம் ஜூலை மாதம் பத்தாம் நாள் தங்க்ஜம் மனோரமா என்ற  32 வயது பெண்மணி 22 அஸ்ஸாம் ரைபிள்ஸ் என்ற ராணுவப் பிரிவால் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்படுகிறார்.

அவர் மீண்டும் உயிருடன் வீடு திரும்பவில்லை. அவரது சடலம்தான் கிடைக்கிறது.

 மிகக் கொடூரமான முறையில் அவர் கொல்லப்பட்டிருந்தார். 

இளகிய இதயம் உள்ளவர்கள் கீழேயுள்ள பத்தியை மட்டும் படிக்க வேண்டாம்.

அவரது பிறப்புறுப்பில் மட்டும் பதினாறு துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருந்தன. உடல் முழுதிலும் கொடூரமாக கடித்து குதறி இருந்தார்கள். பலர் கூட்டு பாலியல் வன் புணர்ச்சி செய்த பிறகே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மனோரமாவின் கொடூர மரணம், அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமை, மணிப்பூர் மக்களின் மனசாட்சியை உலுக்கியது. "Meira Baibi" (மணிப்பூரின் தாய்மார்கள்)  என்று அழைக்கப்பட்ட  பெண்களின் அமைப்பு மனோரமாவின் கொடுமைக்கு நியாயம் கேட்க யாருமே எதிர்பார்க்காத அந்த போராட்ட வழிமுறையை கையாண்டது. 

ராணுவத்திடமிருந்து பெண்களை பாதுகாக்க இரவு நேரங்களில் கையில் விளக்கோடு ரோந்து செல்வதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு அது. 1977 லிருந்து செயல்படுகிற அமைப்பைச் சேர்ந்த சில பெண்கள் அஸ்ஸாம் ரைபிள்ஸ் அலுவலகம் முன்பாக திரண்டார்கள்.  ஆடைகளைக் களைந்து கையில் ஒரு பேனரோடு முழக்கமிட்டார்கள்.

மொத்தம் பனிரெண்டு பெண்கள், அனைவரும் இளம் பிராயத்தைக் கடந்த நடுத்தர வயதுப் பெண்கள். இந்த சூழல் நடந்தால் நாளை மனோரமாவிற்கு நடந்ததுதான் நமக்கும் நடக்கும். அதற்கு இந்த நிலை எவ்வளவோ மேல் என்று போராட வந்ததாக அவர்கள் கூறினார்கள். 

போராட்டம் நடத்திய அவர்கள் மூன்று மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்களே தவிர மனோரமாவை சித்திரவதை செய்து கொன்றவர்கள் யார் என்பது இன்று வரை தெரியவில்லை. அதனால் அவர்கள் எந்த தண்டனையும் இன்றி சுகமாகவே உள்ளனர்.

அவர்களின் போராட்டப் படத்தை பகிர்ந்து கொள்வது ஆபாசப் படத்தை வெளியிட்டதாக கருதுவது எந்த விதத்திலும் நியாயம் கிடையாது.

உலக வரலாற்றில் மக்களின் மனசாட்சியை உலுக்கிய சில புகைப்படங்கள் உண்டு.

வியட்னாமில் இரசாயன ஆயுதத்தின் வெப்பம் தாங்காமல் ஓடி வந்த பெண்,

போபாலில் சவக்குழியில் புதைக்கப்பட குழந்தை.

பட்டினியில் வாடும் குழந்தை உயிர் துறக்க காத்திருக்கும் கழுகு 

போல இந்த படமும் 

வலியும் வேதனையும் நிரம்பியது. 



அதனை ஆபாசம் என்று சொல்வது பார்ப்பவர்களின் கண்களும் மனதும் பழுது பட்டது என்றுதான் சொல்ல முடியும்.



Wednesday, February 28, 2018

ஸ்ரீதேவி - கோபுரத்திலிருந்து ???????



ஒரு சில மணி நேரங்களுக்குள் ஒருவரை கோபுரத்திலிருந்து குப்பைத் தொட்டிக்கு தள்ள முடியும் என்றால் அதற்கு சமீபத்திய உதாரணம் ஸ்ரீதேவிதான்.

அவர் இறந்த செய்தி வந்ததும் வருத்தப்பட்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பலர், அவர் வயிற்றில் மது இருந்தது என்ற தகவல் வந்ததும் அப்படியே பல்டி அடித்து நக்கலடிக்க துவங்கி விட்டனர்.

மட்டையான மயில்
குடி நாட்டிற்கும் மட்டுமல்ல, மயிலுக்கும் கேடு,
குளியல் தொட்டிக்கு பாதுகாப்பு,
துபாய் போகலாமா என்று மனைவியைக் கேட்ட கணவன்

என்று சமூக வலைத்தளம் மீண்டும் மீம்சூழ் உலகாக மாறி விட்டது.

எத்தனையோ தலைவர்கள், கலைஞர்கள், பிரபலங்கள் மதுப் பழக்கத்திற்கு ஆட்பட்டவர்கள். அவர்களின் இறப்பிற்கு மதுப் பழக்கமே காரணமாகவும் இருந்திருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் யாருமே அவர்களின் மதுப்பழக்கத்தை நக்கல் அடித்து பேசியது கிடையாது. அது பற்றியெல்லாம் உபதேசம் செய்ததும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் தண்ணியடிப்பது பற்றி பெருமையாக எழுதுபவர்களும் கூட இருக்கத்தான் செய்கிறார்கள். 

மதுப்பழக்கமோ அல்லது வேறு எந்த கெட்ட பழக்கமோ அது ஆண், பெண் இருவருக்குமே பாதிப்பை உருவாக்கக் கூடியது. நிறுத்தப்பட வேண்டியதுதான்.

எந்த ஒரு ஒழுக்கமும் இரு பாலருக்கும் பொதுவானதுதான். ஆனால் அதை பெண்களுக்கு மட்டும் போதிப்பது 

அப்பட்டமான ஆணாதிக்க மனோபாவம்தான்.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அது பலருடைய மனதிலிருந்து வெளிப்படத்தான் செய்கிறது என்பதைத்தான் இச்சம்பவமும் உணர்த்துகிறது. 





Saturday, February 24, 2018

ஜகத்தினை அழிக்கும் நேரமிது!




தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடப்பட்ட தேசத்தில்தான்

ஒரு கிலோ அரிசியை களவாடியதாக குற்றம் சுமத்தப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன் அடித்தே கொல்லப்பட்டிருக்கிறான்.

கொன்றவர்களை விலங்குகள் என்று சொல்லி தூற்றியுள்ளார்கள். அது விலங்குகளுக்கு செய்யப்படுகிற இழிவு.

ஏனென்றால் எந்த விலங்குகளும் தாங்கள் வேட்டையாடுவதை கொண்டாடி செல்பி எடுத்து மகிழ்ந்ததில்லை.

உண்மையில் அந்த கொலைகாரர்கள்தான் மன நிலை தவறியவர்கள். நாகரீகம் வளர்ச்சியடைந்து விட்டது என்பதை பொய்யாக்கியவர்கள். உச்சபட்ச தண்டனையான மரண தண்டனைக்கு தகுதியானவர்கள்.

பதினோராயிரம் கோடி ரூபாயை கொள்ளையடித்தவன் ஆணவத்தோடு பேட்டி கொடுக்கையில்தான் மதுவிற்கு மரணம் நிகழ்ந்துள்ளது.

உணவுக்கு வழி இல்லாத தனி ஒரு மனிதன் கொல்லப்படும் வேளையில் எதற்கு ஒரு உலகம்?

மனசாட்சி மறத்துப் போய், மனித நேயம் மறந்து போய், மனித உணர்வுகள் மறைந்து போன நிலையில் இனியும் இந்த உலகம் தேவையா என்ன?

நாளை ஒருவரை ஒருவர் அடித்துக் கொல்வதும் அதை புகைப்படம் எடுத்து பெருமை பேசும் நடைமுறைதான் உருவாகும் என்றால் இந்த உலகத்தை இன்றே அழித்து விடலாமே?



Sunday, November 26, 2017

இன்னமும் கயிறுதானா?




“இந்தியா வல்லரசானதும் தயார் செஞ்ச முதல் மிஷின்”

“இவங்க கிட்ட கயிறைத் தவிர வேற எதுவுமே இல்லைடா”

அறம் படத்தின் கூர்மையான வசனங்கள் இவை.

ஆழ்துளை கிணற்றில் விழுந்தவர்களை மீட்க உண்மையிலேயே நம்மிடம் வேறு ஏற்பாடுகள் எதுவுமே கிடையாதா?

ஒரு மாணவர் ரோபோ ஒன்றைத் தயாரித்ததாக முன்பு ஒரு செய்தி வந்தது. திரைப்படத்திலும் அது பற்றி பேசப்படும்.

அந்த ரோபோ வெற்றிகரமாக இயங்குகிறதா என்று பரிசோதிக்கப்பட்டதா? 

அப்படி அது வெற்றிகரமாக செயல்படுகிறது என்றால் அதனை தயாரித்து ஒவ்வொரு  தீயணைப்பு நிலையத்திற்கும் அனுப்பலாமே, அதற்கான பயிற்சியையும் அளிக்கலாமே?

தமிழக அரசு இது குறித்து பரிசீலிக்குமா?