Wednesday, May 13, 2026

பயம் பிடிச்சிருக்கு விஜய்

 


நீங்கள் கட்சி ஆரம்பித்த பிறகு இந்த டெம்ப்ளேட்டை எந்த பதிவிற்கும் பயன்படுத்தவேயில்லை. உங்களுக்கே அது பயன்படும் என்றும் எதிர்பார்க்கவில்லை.

உங்கள் ஆட்சியின் அபத்தமான ஜோசியர் பணி நியமன முடிவை நீங்கள் வெற்றிகரமாக திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளீர்கள்.

எதிர்க்கட்சிகளின், மக்களின் கடுமையாக எதிர்ப்பிற்கு நீங்கள் பயப்பட்டது நிஜமாகவே பிடித்துள்ளது.

எதிர்காலத்திலும் இந்த பயம் உங்களுடனேயே இருக்கட்டும். 

அவர்கள் பக்தர்கள், சங்கிகள் அல்ல

 


கீழே உள்ள ஒரு சங்கியின் பதிவுற்கான பதில்தான் மேலே உள்ள படம்.


அநேகமாக அவர்கள் கீழேயுள்ள புகைப்படத்தைப் பார்த்துத்தான் பதற்றமாகியிருப்பார்கள்.


இந்த கூட்டத்திற்கு பக்தியறிவு, அரசியலறிவு, ஆன்மீக அறிவு என அத்தனையும் மிக அதிகமாகவே உள்ளது.

அதனால்தான் அவர்களுக்கு "அழகர் ஆற்றில் இறங்குவது" பாரம்பரிய விழா என்று கொண்டாடவும் முடிகிறது.

தீர்ப்பாளர் துணை கொண்டு திருப்பரங்குன்றத்தில் புதிதாக ஒரு இடத்தில் தீபம் ஏற்ற முயற்சிப்பது அரசியல் ஆதாயத்திற்காக என்று புரிந்து அதனை ஒதுக்கித் தள்ளவும் முடிகிறது.

பிகு:  வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே எழுதி நீண்ட நாட்களாக ட்ராப்டிலேயே உள்ள பதிவு. 

Tuesday, May 12, 2026

உண்ணி கிருஷ்ண பணிக்கரும் ஜெ வும் உயிருடன் இருந்திருந்தால்?

 


இன்று விஜய் செய்துள்ள ஒரு பணி நியமனம் ஒரு கேலிக்கூத்து.  கேவலமானது.  தேவையில்லாத ஆணி.


ஏ1 ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் "எனக்கு ஏன் இப்படி ஒரு அரசுப் பணி தரவில்லை?" என்று உண்ணிகிருஷ்ண பணிக்கர் கேட்டிருப்பார் இல்லையா! எனக்கு இது தோன்றாமல் போய் விட்டதே என்று ஜெயலலிதா கூட யோசித்திருப்பார் அல்லவா!

நல்லா நடக்குது மதச்சார்பற்ற அரசு!

மூன்றாவது நாளிலேயே இப்படி என்றால் போகப் போக ????

அச்சமாய் இருக்கிறது. 

அதிமுக சண்டை புரியலை

 


எடப்பாடி கோஷ்டியும் சரி, வேலுமணி சரி ரெண்டு பேருமே கொள்கைக் குன்றுகள் கிடையாது. மோடியின் கட்டளைகளை நிறைவேற்ற தயங்காதவர்கள். பிறகு ஏன் அவர்களுக்குள் மோதல்?

மோடிக்கு எடப்பாடியையோ அல்லது வேலுமணியை பிடிக்காமல் போயிருக்கிறது. 

அதனால் அவர்கள் சண்டை செய்கிறார்கள்.

மோடியின் செல்லப்பிள்ளை யார் என்பது விரைவிலேயே தெரிந்து விடும்.


Monday, May 11, 2026

மோடியின் உபதேசம் ஊருக்குத்தான், எப்போதும் போல

 


மோடி நேற்று நாட்டு மக்களுக்கு சில உபதேசங்களை அருளியுள்ளார்.

அவை


"வீட்டிலிருந்து வேலை" என்பதற்கு முன்னுரிமை கொடுங்கள்

ஒரு வருட காலத்திற்கு தங்கம் வாங்குவதை தவிருங்கள்,

பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைப்பீர், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவீர்,

சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைத்திடுவீர்,

ரசாயன உரங்கள் பயன்பாட்டை குறைத்து இயற்கை உரங்களை நோக்கிச் செல்வீர்,

அன்னிய பிராண்டட் பொருட்களை வாங்குவதை குறைத்து சுதேசிப் பொருட்களுக்கு மாறுங்கள்.

இன்னும் ஒரு வருட காலத்திற்கு வெளிநாட்டுப் பயணத்தை தவிர்ப்பீர்.

இந்த உபதேசங்கள் எல்லாம் ஒரு கடுமையான தாக்குதலுக்கு நம்மை தயார்ப்படுத்தும் உத்தி. கொரோனா காலத்தில் செய்யப்பட்டது போல லாக் டவுன் கொண்டு வரலாம். 

பெட்ரோல், டீசல்,சமையல் எண்ணெய், ரசாயன உரங்கள்  ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்த்தப்படலாம்.

அன்னிய பிராண்டட் பொருட்கள் மீது கை வைக்கும் தைரியம் 56 இஞ்ச் மாவீரனுக்குக் கிடையாது என்பது நமக்கெல்லாம் நன்றாகவே தெரியும்.

இந்திய மக்களை ஒரு வருட காலத்திற்கு வெளி நாட்டுப்பயணம் மேற்கொள்ளக்கூடாது என்று சொல்லியுள்ள மோடி வரும் மே 15 அன்று ஒரு வார கால சுற்றுப் பயணம், அமீரகம், ஸ்வீடன், நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு புறப்படுகிறார்.  

தன்னுடைய உபதேசம் மற்றவர்களுக்குத்தான், மக்களுக்குத்தான், தனக்குக் கிடையாது என்பதில் தெளிவாக உள்ளவர் மோடி. தான் சொன்னதை தானே மீறுகிறோமே என்ற கூச்சமும் கொஞ்சமும் இல்லாதவர்.

இந்த ஐந்து மாநிலத் தேர்தல்கள் இருந்ததால் இரண்டு மாதம் கட்டுப்பாடாக இருந்தார். மேலும் அவர் இந்தியாவிலேயே இருந்தால் என்ன ஆகும்?

மேலே உள்ள படத்தை மீண்டும் பார்க்கவும். 

கோஷ்டிச்சண்டை நல்லது ராகுல்

 


என்ன ராகுல் காந்தி, எங்கே இருக்கிறீர்கள்?

நேற்று சென்னையில் உங்கள் புதிய கூட்டாளி ஜோசப் விஜய்யின் பதவியேற்பு விழாவிற்கு வந்தீர்கள். ஒவ்வொரு அமைச்சரும் பதவியேற்ற பின் விஜய்யை பார்க்க வந்த போது நீங்கள் எழுந்து நின்றீர்கள். ஆனால் யாருமே உங்களை கண்டு கொள்ளவில்லை.

முழுமையான பெரும்பான்மை பெறாத விஜய் கூட முதலமைச்சராக பதவி ஏற்று விட்டார். ஆனால் பெரும்பான்மையை விட அதிகமான இடங்கள் பெற்றும் உங்களால் இன்னும் கேரள முதல்வர் யார் என்பதை முடிவு செய்ய முடியவில்லை.

மூன்று கொள்ளிகளில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று உங்களால் இன்னும் முடிவு செய்ய முடியவில்லை.

எந்த கொள்ளி கேரளா சி.எம்?

நான்காவதாக புரியாத ஆங்கிலம் பேசும் சசி தாரூரையும் கணக்கில் எடுங்களேன். இரண்டாவது மனைவி சுனந்தா மர்மமாக இறந்த வழக்கில் இருந்து விடுபட, சசி தாரூர்தான் தன் அம்மாவை கொலை செய்ததாக சுனந்தாவின் முதல் கணவர் மூலம் பிறந்த மகனின் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க மோடி புகழ் பாடிய, உங்களுக்கும் உங்கள் கட்சித்தலைவர் என்ற பதவியில் மட்டும் இருக்கும் மல்லிகார்ஜுன் கார்கேவிற்கும் அழைப்பு இல்லாத போதும் மோடி வைத்த விருந்தில் கலந்து கொண்ட சசி தாரூரும் முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவர்தானே!

எப்படியானாலும் உங்கள் கட்சியில் நடைபெறும் கோஷ்டி மோதல், குடுமி பிடி சண்டை மிகவும் நல்லது. பத்தாண்டுகள் நல்லாட்சி புரிந்த தோழர் பினராயி விஜயன் அவர்களின் தலைமையிலான இடது முன்னணி ஆட்சியை தோற்கடித்த கேரள மக்களுக்கும் நல்லது.

அமரேந்திர பாகுபலியை கொலை செய்தது மிகப் பெரிய தவறு என்று கட்டப்பா, சிவகாமி தேவியிடம் சொன்னது போல  கேரள மக்களும் இடது முன்னணியை தோற்கடித்தது தவறு என்று தங்கள் மனசாட்சியிடம் சொல்வார்கள்.

மகேந்திர பாகுபலி மகிழ்மதி அரியணையில் அமர்ந்தது போல, இந்த பின்னடைவிற்குப் பிறகு மீண்டும் இடது முன்னணி கேரளத்தை வெல்லும். அதற்கு உங்கள் கட்சியின் இன்றைய, நாளைய, எதிர்கால கோஷ்டி மோதலும் ஒரு காரணமாக இருக்கும்.

அதனால் உங்கள் கட்சியின் கோஷ்டி மோதல் நல்லது, கேரளத்திற்கு, கேரள மக்களுக்கு . . .

Sunday, May 10, 2026

ரெவியின் சிரிப்புச்சத்தம் கேட்கிறதா?

 

ஆரெஸெஸ் ரெவி ஆட்டுத்தாடியாக இருந்த போது சட்டப்பேரவையில் முதலில் தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும், பிறகுதான் தமிழ்த்தாய் வாழ்த்து என்று அடம் பிடிக்க, நிகழ்வின் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, நிறைவில்தான் தேசிய கீதம் என்ற தமிழ்நாட்டின் மரபைத்தான் பின்பற்றுவோம் என திமுக அரசு உறுதியாக நிற்க, அது கடுமையான சர்ச்சையாக மாறியது.

இன்று புதிய முதல்வர் பதவியேற்பில் 

முதலில் வந்தே மாதரம்,
இரண்டாவதாக தேசிய கீதம்
கடைசியாக தமிழ்த்தாய் வாழ்த்து.

மேற்கு வங்க தேர்தலுக்காக வங்க மக்களை உசுப்பேற்ற மோடி கையில் எடுத்ததுதான் வந்தே மாதரம்.

அந்த அரசியலை அப்போதே மக்களவையில் தோழர் சு.வெங்கடேசன் பேசினார். அந்த அற்புதமான உரையை 


எந்த மேற்கு வங்க மக்களை ஏமாற்ற வந்தே மாதரப் பாடலை தூசி தட்டி எடுத்தார்களோ, அதே மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடப்படவில்லை. இத்தனைக்கும் அங்கே ரெவிதான் ஆளுனர்.

ஆனால் தமிழ்நாட்டிலோ நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே வந்தே மாதரமும் தேசிய கீதமும் பாடப்படுகிறது.

ஆரெஸெஸ் ரெவி தமிழ்நாட்டைப் பார்த்து நக்கலாக சிரிக்கும் சத்தம் உங்களுக்கும் கேட்கிறதா? 

பாஜகவின் அஜெண்டா, பாஜக ஆதரவு தெரிவிக்காத அரசால் அமலாக்கப் படுகிறது. இது தொடக்கம்தான். இன்னும் தொடரும் மோசமாக.