Thursday, November 29, 2012

தர்மபுரி அராஜகப் புகைப்படங்கள்

தர்மபுரி கலவரத்தில் நடைபெற்ற தாக்குதல்கள்
மிகைப்படுத்தப் பட்டதாகவும்
ஓரிரு வீடுகள்  மட்டுமே  தாக்கப்பட்டதாகவும்
சில அறிவுஜீவிகள் இணையத்தில்
அபத்தமாக உளறிக் கொண்டுள்ளார்கள்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு  எங்களது
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்
சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

அப்போது எங்கள் சேலம் கோட்ட தோழர்கள்
பாதிப்புக்களை படம் எடுத்துள்ளனர்.

அதிலிருந்து மாதிரிக்காக சில படங்கள்
மட்டும் இங்கே.

அதைப் பார்த்தால் தெரியும். உண்மை என்னவென்று.

கொள்ளையடிக்கப்பட்ட பீரோக்களின் படமும்
எரிக்கப்பட்ட வாகனங்கள் படமும் மட்டுமே
இங்கே உள்ளது. இன்னும் ஏராளமாய் உள்ளது.

 

Wednesday, November 28, 2012

இந்தியா மொடாக்குடியர்களின் தேசமா?

இல்லை என்று  ஒரு புள்ளி விபரம் சொல்கிறது.ஏதோ ஒரு புள்ளி விபரத்தை இணையத்தில் 
தேடும் போது இந்த இந்த விபரம் கிடைத்தது.

உலகிலேயே மிக அதிகமாக மது அருந்தும்
முதல் பத்து தேசங்களின் பட்டியலைப் 
பார்த்தேன். ஒரு வருடத்திற்கு அந்த நாடுகளில்
உள்ள மக்கள் அருந்தும் மதுவின் சராசரி
அளவை அந்த புள்ளி விபரம் தருகிறது.

இதோ அந்த பட்டியல்

எண்         நாடு                              சராசரி மது நுகர்வு ( லிட்டர்களில்)
 1            மால்டோவா                                  18.22
 2           செக் குடியரசு                                  16.45
 3           ஹங்கேரி                                          16.27
 4           ரஷ்யா                                                 15.76
 5           உக்ரைன்                                            15.60
 6          எஸ்தோனியா                                 15.57
 7          அன்டோரா                                         15.48
 8         ரொமானியா                                      15.30
 9         ஸ்லோவிகியா                                 15.19
10        பேலோரஸ்                                         15.13

இந்த புள்ளி விபரத்தில் இந்தியா இல்லை. இவை எல்லாமே
குளிர் பிரதேசமான ஐரோப்பிய நாடுகள். 

இந்த புள்ளி விபரத்தில் ஒரு கோளாறு உள்ளது. மொத்த
மது விற்பனையை மக்கட்தொகையால் வகுத்து
சராசரியை போட்டுள்ளார்கள்.

குடிமக்கள் எண்ணிக்கையை மட்டும் கணக்கில்
எடுத்துக் கொண்டு சராசரியை கண்டுபிடித்தால்
ஒரு வேளை இந்தியா  அதிலும் தமிழகம்
 முதன்மை  இடத்திற்கு வருமோ?

ஆனாலும் இந்த புள்ளி விபரத்தை அம்மா
பார்க்காமல் இருக்க வேண்டும்.

பார்த்தால் தமிழகத்தை உலகின் முதல்
இடத்திற்கு கொண்டு வர டாஸ்மாக்
விற்பனை இலக்கை பல மடங்கு
உயர்த்தி விடுவார்களே!

 

Tuesday, November 27, 2012

கலைஞரே,உங்கள் முடிவிற்கு உள் நோக்கம் கிடையாதா ?

 

ஓட்டெடுப்பு கோருவதில் உள் நோக்கம் உள்ளதால்
சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை
ஆதரிக்கப் போவதாக தமிழினத் தலைவர் கலைஞர்
சொல்லி விட்டார்.

உள் நோக்கம் இல்லையென்றால் அவர் எதிர்த்திருப்பாரோ?

ஓட்டெடுப்பின் உள் நோக்கம் உள்ளதால் அவர் எதிர்ப்பு
ஆதரவாக மாறி விட்டதோ?

எதிர்கட்சிகள் ஓட்டெடுப்பு கேட்பதால் அன்னிய மூலதனம்
இப்போது நல்ல முடிவாகி விட்டது போலும்...

என்ன ஒரு சந்தர்ப்பவாதம்.

குலாம் நபி ஆசாத் வந்தார், செய்ய வேண்டியதை செய்வதாக
சொல்லி விட்டுப்ப்போனார். மாயாவதி போல கனிமொழியையும்
காப்பாற்றுவதாக உறுதியளித்து விட்டுப்போனார் என்று
உண்மையை சொல்லி விட்டுப் போங்களேன்....

உங்களது தள்ளாட்டத்திற்கும் தடுமாற்றத்திற்கும் 
சுய நலத்திற்கும் ஏன் எதிர்க்கட்சிகளை காரணம்
காண்பிக்கிறீர்கள்...

இன்னும் எத்தனை நாள் இப்படி பல்டி அடித்துக் கொண்டே
இருக்கப் போகிறீர்கள்?

 

Monday, November 26, 2012

அழகானது, அறிவின் இடமானது

கீழே உள்ள புகைப்படங்கள் 
போர்சுகள் நாட்டில் உள்ள
லெல்லோ என்ற
புத்தகக் கடையின் 
புகைப்படங்கள்.
1906 ம் ஆண்டில் இருந்து
செயல்பட்டு வரும் இந்த
கடை மிகவும்
அழகாக உள்ளதல்லவா....

அழகான இந்த கட்டிடத்தை
பார்க்கும்போதே
புத்தகங்களை வாங்கி
படிக்க வேண்டும் என்று
தோன்றுகிறதல்லவா....


 

Sunday, November 25, 2012

எனக்கு அச்சமாக இருக்கிறது..... உங்களுக்கு?

 


இரு சக்கர வாகனத்தில்  அதி வேகமாய் விரைவதை
ஒரு சாகசம் என கருதி தங்களுடைய வாழ்வோடும்
மற்றவர்களின் வாழ்வோடும் விளையாடும்  சில
இளைஞர்களுக்கு  அன்பான ஒரு திறந்த மடல்.

அன்பான நண்பனே,

மோசமான சாலைகள், குறுகிய சாலைகள்,
அதிலே மேடும் பள்ளங்களும் அடிக்கடி
வந்தால்தான் அவை சாலைகள் என்று
இன்றைய இலக்கணங்கள் சொல்கின்றன.

சாலையின் அளவை விட, தரத்தை விட
அதிகமான வாகனங்கள்,
நத்தையாய் ஊர்ந்து போகும் சில
தருணங்கள், அப்போது காற்று 
மண்டலத்தையே புகைதான் ஆக்கிரமிக்கும்.

இந்த நிலையிலும் கூட உன்னால்  மட்டும்
எப்படி இவ்வளவு வேகமாக வண்டி
ஓட்ட முடிகிறது?

முன் செல்லும் வண்டிகளை முந்திச்
சென்று கொண்டே இருப்பதற்காக 
ஏதேனும் விருது அளிக்கப் போகிறார்களா என்ன?

வளைவில் முந்தாதே என்று ஒவ்வொரு
ஆட்டோவிலும் எழுதி வைத்துள்ளார்கள்.
நீயோ அந்த ஆட்டோக்களையெல்லாம் கூட
வளைந்து வளைந்து முந்துகிறாய்..

இவ்வளவு வேகமாக சென்று என்னதான்
சாதிக்கப் போகிறாய்?

இல்லை இது என்ன பந்தயத்திற்கான
மைதானமா?

அவ்வளவு அவசரமென்றால் சற்று
முன்பாக புறப்பட்டிருக்கலாமே!

கூடுதல் விலை கொடுத்து வண்டி
வாங்கி உனக்கு மகிழ்ச்சி அளித்தனர்
உன் பெற்றோர்.

கூடுதல் வேகத்தால் அவர்களின் 
மகிழ்ச்சியை நீ பறித்திட வேண்டுமா?

உந்தன் வேகம் உன்னை மட்டுமா
பாதிக்கப் போகிறது?

நீ வேறு ஒருவன் மீது மோதினால்
அவனும்தானே அடிபடப் போகிறான்?

உனது தவறுக்கு அவனுக்கு 
தண்டனையா?

இப்போது நீ மிச்சப்படுத்தும் நேரத்தை
விட உனக்கு விபத்து நேர்ந்தால்
விரயமாகும் நேரம் பல மடங்கு
அதிகம்.

உன் வேகத்தைப் பார்த்தால்
எனக்கு  அச்சமாக இருக்கிறது.

பணிவோடு சொல்கிறேன்.
வேகம் தவிர்,

உன் மீது உள்ள 
உண்மையான அக்கறையோடு.

( வேகமாய் விரையும் சில இளைஞர்களைக்
கண்ட கவலையோடு எழுதியது)Saturday, November 24, 2012

நாய்களே எவ்வளவோ மேல்

இது கண்டிப்பாக அரசியல் பதிவு அல்ல.
ஒரு அனுபவம் தந்த வெறுப்பின் வெளிப்பாடு.

இன்று அரக்கோணம் போய் விட்டு
காரில் திரும்பி வந்து கொண்டிருந்தோம்.
பாதி தூரம் கிராமத்து சாலைகள் வழியாக
பயணம்.

மாலை வேளை, டாஸ்மாக் கடைகளில்
மும்முர விற்பனை.


வழி நடுவில்
அங்கங்கே
சாலைக்கு நடுவில் நாய்களும் நின்றன.
டாஸ்மாக் குடிமகங்களும் நின்றிருந்தார்கள்.

ஹாரன் அடித்தால் 
நாய்கள் ஒதுங்கிப் போனது.

ஆனால் குடி மக்களோ 
" இது என்ன உங்கப்பன் வீட்டு ரோடா?"
என்பது போல முறைத்துப் பார்த்தார்களே தவிர
அவ்வளவு சீக்கிரமாக ஓரத்திற்குப் போகவில்லை.

அந்த வெறுப்பில்தான் சொன்னேன்

 நாய்களே எவ்வளவோ மேல்

Friday, November 23, 2012

வீரபாண்டியார் இறப்பிற்கு காரணம் ஜெயலலிதாவா?

திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மறைந்து
விட்டார். திமுக விற்கு ஒரு இழப்புதான். வெளிப்படையாக
பேசக் கூடியவர் இல்லாதது  உட்கட்சி ஜனநாயகத்திற்கு
இழப்பு.

 அவர் மறைந்தது அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து
அலைக்கழித்ததனால்தான் என்று கலைஞரும் ஸ்டாலினும்
சொன்னது மீண்டும் மீண்டும் தொலைக்காட்சிகளில்
காண்பிக்கப் படுகிறது.

கலைஞரின் அழுகையும் முக நூலில் பலரால் கிண்டல்
செய்யப்பட்டு வருகின்றது.

அந்த அழுகை பொய்யானதாக தோன்றவில்லை. ஆனால்
அந்தபேட்டியில் கேள்விகள் இந்த பதிலுக்காக தூண்டப்
பட்டதாக அமைந்துள்ளதும் நன்றாகவே தெரிகிறது.
சிறை அவரது உடல் நலனை கண்டிப்பாக பாதித்திருக்கும்.
ஆனால் விடுதலை ஆகி பல வாரங்களுக்குப் பிறகு
இப்போது பழி போடுவது அவ்வளவு பொருத்தமாக
தெரியவில்லை.

இந்த மரணம் சிறையில் இருக்கும்போதே நிகழ்ந்திருந்தால்
 ஜெ மீதான தாக்குதல் இன்னும் கடுமையாக 
இருந்திருக்கும்.

இப்போது பேசுவது

இன்னொரு " ஐயோ கொல்றாங்களே " பிரச்சாரத்திற்கான
ஒத்திகையா என்று தோன்றுகிறது.

ஏனென்றால் மரணத்திலும் அரசியல் ஆதாயம் தேடும்
மரபு இரு கழகங்களுக்கும் உண்டு.
 

 

இதுதான் இந்திய நீதியா????????

இது முக நூலிலிருந்து  என் மகன்
எடுத்துக் கொடுத்த படம்.

அஜ்மல்  கசாபை தூக்கிலிட்ட
இந்திய அரசு ரத்த வெறி பிடித்த
ராஜபக்சேவிற்கு 
ரத்தினக் கம்பள வரவேற்பு
அளித்ததை 
கேள்வி கேட்கிறது.

கசாப்பை தூக்கிலிட்டது சரி.
என்ற புரிதலோடு

ராஜபக்சேவை இந்திய அரசு
தாங்கிப் பிடிப்பது 
நியாயமா என்று 
நானும் கேட்கிறேன்.

இதுதான் இந்திய நீதியா?

இந்தக் கேள்வியை
மன்மோகன்சிங்கை கேட்பதை
விட அவரை ஆட்டி வைக்கும்
சோனியா காந்தியையும்,

சோனியாவை சொக்கத்தங்கம்
என்று வர்ணித்தவரையும்
கேட்பது இன்னும்
பொருத்தமாக இருக்கும்...
Thursday, November 22, 2012

யார் அழகு? பதில் சொல்லுங்கள் பார்ப்போம்....

மலர் அழகா?
மலர் மீது அமர்ந்து
மது அருந்தும்
வண்ணத்துப் பூச்சி
அழகா?

பதில் சொல்லுங்கள்
பார்ப்போம்