Friday, January 31, 2014

எங்களின் ஆயுதம் இதுதான்.எங்களது அகில இந்திய மாநாட்டு அறிக்கையில் இடம் பெற்றுள்ள சில முக்கியமான தகவல்களை எங்கள் தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் கே.சுவாமிநாதன் தமிழாக்கம் செய்துள்ளார். அதனை கீழே அளித்துள்ளேன். மஞ்சள் நிறத்தில் அடிக் கோடிட்டுள்ளது அவரது கமெண்டுகள்.

அவசியம் இதைப் படியுங்கள், மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.

மக்களிடம் செல்லுங்கள்... சொல்லுங்கள்...

* பெரும் பெரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இந்தியப் பெரும் தொழிலகங்களுக்கும் தரப்படும் வரிச் சலுகைகள் ரூ 573760 கோடிகள் என்பதை பல மேடைகளில் கேட்கிறோம். அது உண்மையில் வசூலாக வேண்டிய வரிகளில் எவ்வளவு சதவீதம் தெரியுமா! 40 சதவீதம். கடோத்கஜன் விழுங்கல் இதுதான் போல.
* 2009 ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு II பதவியேற்றபோது நுகர்வோர் விலை குறியீட்டெண் 3454 ஆக இருந்தது. தற்போது 5400 தாண்டிவிட்டது. 5 ஆண்டுகளில் 2000 புள்ளிகள். இது 1960 அடிப்படை ஆண்டாக கொண்ட கணக்கு. முதல் 2000 புள்ளிகளை தொட 1960 லிருந்து 1998 வரை 38 ஆண்டுகள் எடுத்தன என்பது பழைய கதை. ஜிவ் என்று பறப்பது இதுதான் போலிருக்கிறது.
* இறக்குமதி விலைச் சமன்பாடு என்ற பெயரில் இறக்குமதியாகாத பெட்ரோலுக்கும் இறக்குமதி வரிகள், இன்சூரன்ஸ், துறைமுக இறக்கு கட்டணம் எல்லாம் கற்பனையில் போட்டு விலையை கணக்கிடுகிறார்கள். பிறகு குறை வசூல் என்று சொல்லி விலையை கூட்டுகிறார்கள். ஆனால் சர்வதேச சந்தையில் பருத்தி ஒரு டன் ரூ 12000 விற்றபோது இந்திய விவசாயிகளுக்கு இங்கு ரூ 3000 தான் கிடைத்தது. இதில் இறக்குமதி விலைச் சமன்பாடு கிடையாது. வல்லான் வகுத்த நீதி இதுதானோ!
* கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் (2010-13) பொதுத்துறை பங்கு விற்பனை ரூ 84208 கோடிகளுக்கு அமோகமாக நடந்தேறியுள்ளது. இது இடதுசாரிகளின் கடிவாளம் இல்லாத .மு.கூ அரசின் இரண்டாவது ஆட்சி காலம். கடிவாளம் இருந்த முதல் ஆட்சி காலத்தில் (2004-2009) ரூ 8516 கோடிகள்தான் விற்கப்பட்டன. அதற்கு முன்பு பி.ஜே.பி ஆட்சி இருந்த 2000-2004 ல் ரூ 23034 கோடி பொதுத்துறை பங்குகள் விற்பனை ஆகியுள்ளன. காவல்காரன் இல்லாவிட்டால் களவு போகாதா!
* 1991 லிருந்து இதுவரை 23 ஆண்டுகளில் விற்கப்பட்டுள்ள ரூ 136930 கோடி பெறுமான பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்கப்பட்டுள்ளன. இதில் .மு.கூ அரசின் இரண்டாவது ஆட்சி காலத்தில் மட்டும் (2009-13) விற்கப்பட்டிருப்பது 61 சதவீதம். இந்திய பெரும் தொழிலதிபர்கள் புத்திசாலிகள். நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள். காற்று உள்ள போதே தூற்றிக் கொள் என்பது இதுதான் போல!
* இந்தியாவின் வர்த்தக தலைநகரம் மும்பை உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் கிராமங்களில் தினம் தோறும் சராசரியாக 9 தற்கொலைகள் 2013ல் நடந்தேறியுள்ளன. 1995 ல் ஆண்டு தற்கொலை சராசரி 250 ஆக இருந்தன. 2013 ல் இது 3750 ஆக அதிகரித்துள்ளது. 2011-12 ல் மொத்தம் வழங்கப்பட்ட ரூ 509000 விவசாயக் கடனில் சிறு விவசாயிகளுக்கு போய்ச் சேர்ந்தது 5.71 சதவீதம்தான். பெரும்பகுதி விவசாயத் தொழிலகங்கள், பணக்கார விவசாயிகள் ஆகிய உச்சாணிக் கோப்பில் உட்கார்ந்துள்ளவர்களுக்கே சென்றுள்ளது. உயிரின் விலை இதுதானோ!
* இந்திய வங்கித் துறைக்குள் மீண்டும் டாட்டா, பிர்லா உள்ளிட்ட பெரும் தொழிலதிபர்கள் நுழையப் போகிறார்கள். 1947-69 க்கு இடையில் 550 தனியார் வங்கிகள் திவால் ஆகின. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட 1969 க்குப் பின்னாலும் நீடித்த 25 தனியார் வங்கிகள் அதற்கு பிந்தைய காலத்தில் திவால் ஆகியுள்ளன. இவ்வங்கிகள் வீழ்ந்தபோது அவை பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்பட்டன. இதை அன்றைய யூனியன் வங்கி சேர்மன் லீலாதர் " தனியார் நட்டங்களையும் தேசியமாக்கியதாக இதைச் சொல்லலாம் என்று வர்ணித்தார். கடைத் தேங்காய் வழிப் பிள்ளையாருக்கு...
* "வால்ட் டிஸ்னி" நிறுவனத்தின் சீப் எக்சிகியூடிவ் மைக்கேல் எய்ஸ்னர் " எங்களுக்கு கலையை சமூகப் பொறுப்போடு உருவாக்குகிற அவசியம் இல்லை. பணம் பண்ணுவதுதான் எங்களின் ஒரே நோக்கம்". ( feministdisney.tumblr.com) என்கிறார். லாபத்திற்கு வெட்கம், கூச்சம் ஏது!
* 2007 ல் பெண்கள் மீது வன்முறைகள் 185312 இடங்களில் நடந்தேறியதாக பதிவானது எனில் 2012 ல் 244270 ஆக உயர்ந்துள்ளது. நவீன தாராளமய பாதிக்கும் அதிகரிக்கும் பாலின வன்முறைக்கும் வலுவான தொடர்புகள் உள்ளன. விதை வேறு, செடி வேறாகவா இருக்கும்!
* " ரஷ்யாவில் தொடங்கிய புரட்சியை விஸ்தரிக்கத் தவறிய ஐரோப்பிய தொழிலாளர் வர்க்கத்திற்கு கிடைத்த தண்டனையே பாசிசம்"- ஜெர்மன் புரட்சியாளரும், முதல் சர்வதேச மகளிர் தின அனுசரிப்பை துவக்கி வைத்தவருமான கிளாரா ஜெட்கின். செய்தியை எடுத்துக் கொள்ளுமா இன்றைய சமுகம்!
(நாக்பூரில் நடைபெற்ற அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க 23 வது மாநாட்டின் அறிக்கையில் இருந்து)