Showing posts with label திருமணம். Show all posts
Showing posts with label திருமணம். Show all posts

Wednesday, June 14, 2017

தமிழில் ஒரு திருமணம் –நிறைவாக . . .





கடந்த வாரம் ஒரு பி.எஸ்.என்.எல் தோழரின் மகனின் திருமணத்தில் கலந்து கொண்டேன். வித்தியாசமான அனுபவமாக இருந்ததால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

சமஸ்கிருத மந்திரங்கள் முற்றிலும் விலக்கப்பட்டு முழுமையாக தமிழிலேயே நடைபெற்ற திருமணம் அது. திருமணத்தை நடத்தி வைத்தவர் காவி வேட்டி கட்டி ருத்ராட்சர மாலை எல்லாம் அணிந்திருந்தாலும்

அத்திருமணத்தில்

மூத்தோர் வழிபாடு,
பெற்றோர் வழிபாடு

ஆகிய இரண்டு அம்சங்களே பிரதானமாக இருந்தன.

அவைகளுக்குப் பின் மங்கல நாண் அணிவித்தல் என்பதோடு திருமண விழா நிறைவுற்றது.

புரியாத மொழியில் யாரோ செல்வதை மணமக்கள் ஒன்றும் தெரியாமல் அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்பிக்கும் சடங்குகள் இல்லாதது மனதுக்கு நிறைவாக இருந்தது.

இத்திருமணத்தை முழுமையாக நல்ல தமிழில் நடத்தி வைத்தவர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஒரு மேலதிகாரி என்று அறிந்த போது கொஞ்சம் ஆச்சர்யமாகவே இருந்தது.

பின் குறிப்பு : சமஸ்கிருத மந்திரங்களின் பொருள் தெரிந்தால் அவற்றைச் சொல்லி யாருமே திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள். இது பற்றி நான் எழுதிய ஒரு கட்டுரை “மகளிர் சிந்தனை” இதழில் பிரசுரமானது. அதை தேடிக் கண்டுபிடித்து விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்.

Thursday, April 28, 2016

திருமணத்திற்கு ஏனப்பா தேவையற்ற சபதம்?





வேட்பாளர்களை அறிவிப்பதும் மாற்றுவதும் அந்தந்தக் கட்சியின் உரிமை. ஆனால் அது ஒருவரின் திருமணத்தை பாதிக்கக் கூடிய அளவிற்குப் போனதுதான் கொடுமை. அந்தக் கொடுமையை அவரே வரவழைத்துக் கொண்டார் என்பதுதான் பரிதாபம் அல்லது நகைச்சுவை.

ஜெ கட்சியில் 1991 ல் கும்பகோணம் எம்.எல்.ஏ வாக இருந்தவர் ராம.ராமநாதன்.

1996 ம் சட்டமன்றத் தேர்தலின் போது தானும் மீண்டும் எம்.எல்.ஏ வாகி அம்மாவும் மீண்டும் முதல்வரான பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று சபதம் எடுத்துக் கொண்டிருக்கிறார். பாவம் இரண்டு பேருமே சட்டமன்ற உறுப்பினராகக் கூட முடியாமல் தோற்றுப் போய் விட்டார்கள்.

அதற்கடுத்த தேர்தலிலும் அதே சபதம். ஜெ முதல்வரானார். ஆனால் இவர் தோற்றுப் போய் விட்டார். ஆகவே சபதம் காரணமாக திருமணத்தை தள்ளிப் போட்டு விட்டார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் இவருக்கு மீண்டும் சீட் கிடைத்தது. அப்போதாவது வாயை மூடிக் கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் வாய்க்கொழுப்பு யாரை விட்டது? மீண்டும் சபதமெடுத்தார். ஜெ மீண்டும் முதல்வரானாலும் இவர் தோற்றுப் போய் விட்டார்.

இந்த தேர்தலிலும் முதலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. உடனடியாக பழைய சபதத்தை தூசு தட்டி எடுத்து அறிவித்தார். ஐம்பத்தி இரண்டு வயதிலாவது அவர் சபதம் நிறைவேறி அவருக்கு திருமணம் நடக்குமா என்று தொகுதிக்காரர்கள் ஆவலோடு எதிர்பார்த்தார்கள்.

ஆனால் பாவம், அம்மாவின் வேட்பாளர் மாற்று விளையாட்டில் மனிதரை முன்னாள் வேட்பாளாராக்கி விட்டார்கள்.

சபதத்தை திரும்பப் பெற்றுக் கொள்வாரா இல்லை வாஜ்பாய், என்.ரங்கசாமி பட்டியலில் இணைவாரா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

முக்கியமான பின் குறிப்பு : முப்பது வருடங்களுக்கு முன்பு எல்.ஐ.சி யில் உதவியாளராக பணியில் சேர்ந்த போது முதல் நிலை அதிகாரியான பின்பே திருமணம் செய்து கொள்வது என எனக்குள்ளேயே ஒரு சபதம் எடுத்துக் கொண்டேன். அதற்கான துறைத்தேர்வுகளுக்காக முதலாண்டிலேயே தீவிரமாக படிக்கவும் ஆரம்பித்தேன். பின்பு தொழிற்சங்க ஈடுபாடு அதிகரிக்க, அதுதான் வாழ்க்கைப் பாதை என்று முடிவு செய்ததும் முந்தைய சபதத்தை நான் எனக்குள்ளேயே சப்தமில்லாமல் வாபஸ் வாங்கிக் கொண்டேன்.

இவரும் வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்திருந்தால் இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது.