Showing posts with label வழக்கறிஞர். Show all posts
Showing posts with label வழக்கறிஞர். Show all posts

Monday, December 15, 2025

அந்த வக்கீல்கள் அனாமதேயங்களா?

 


நேற்றைய ஆங்கில இந்து நாளிதழில் ஒரு செய்தி பார்த்தேன். 

தி.குன்றம் தீர்ப்பாளரை பதவி நீக்கம் செய்தால் ஒட்டு மொத்த நீதித்துறையே நிலை குலைந்து போய்விடும் என்பதால் அவரை பதவி நீக்கம் செய்ய அளித்துள்ள மனுவை நிராகரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் உள்ள வக்கீல்கள் மக்களவை தலைவருக்கு கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியுள்ளார்களாம்.



சரி, இதை அனுப்பியவர்கள் யார் என்று பார்த்தால் இந்த செய்தியில் யாருடைய பெயரும் இல்லை. எந்த வழக்கறிஞர் அமைப்பின் பெயரும் இல்லை. ஜாதி, மத அமைப்புக்களின் பெயர் கூட இல்லை. இந்த மனுவில் எத்தனை வக்கீல்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்ற விபரமமும் இல்லை. ஆனால் ஒரு லட்சத்து இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட தீர்ப்புக்கள் வழங்கியுள்ளார் என்ற சங்கிகளின் கட்டுக்கதை மட்டும் மனுவில் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் சங்கிகள் எப்படி அனாமதேயமாக, போலி ஐடிக்களில் பின்னூட்டம் போடுவார்களோ அது போல சபாநாயகருக்கு அனாமதேயமாக, மொட்டைக் கடிதம் அனுப்பி விட்டார்கள் போல. . .


Thursday, July 19, 2018

வழக்கறிஞர்கள் – முரண்பாடுகள் – சென்னை – காஷ்மீர்




சென்னை அயனாவரத்தில் நடைபெற்றது மிகவும் கொடூரமான நிகழ்வு. மிருகங்கள் என்று அந்த கொடியவர்களைச் சொல்வது மிருகங்களுக்கு இழுக்கு. சக மனிதனை சந்தேகக் கண்ணோடு பார்க்கும் துரதிர்ஷ்டவசமான நிலைமையை இவர்கள் உருவாக்கி விட்டார்கள்.

கிழவன் முதல் இளைஞன் வரை இணைந்து இந்த பட்டியலில் இருப்பது மனித மனம் வக்கிரமாகிக் கொண்டிருப்பதன் அடையாளம். தனக்கு என்ன நேர்கிறது என்பதை சொல்லத் தெரியாத ஒரு குழந்தையை தங்களின் வக்கிரத்திற்கு வடிகாலாய் பயன்படுத்திக் கொண்டிருக்கிற அந்த கொடூரர்கள் மிகக் கடுமையான தண்டனையை பெற வேண்டும்.

இப்பிரச்சினையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் வரை உடன் இருந்து அலைந்து திரிந்தது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தோழர்களே. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளக் கூட தயாராக இல்லாமல் “பீப் சாங்கிற்கு போராடிய மாதர் சங்கம் எங்கே?” என்று வழக்கமான தற்குறிகள் சிலர் பதிவு எழுதி அந்த கொடியவர்களுக்கும்  தங்களுக்கும் வித்தியாசம் இல்லை என்று நிரூபித்துக் கொண்டார்கள்.

இந்த பிரச்சினையில் ஒரு நல்ல அம்சம் சென்னை வழக்கறிஞர்கள் சங்கம் எடுத்த நிலைப்பாடு. இந்த காமுகர்களாக எந்த ஒரு வழக்கறிஞரும்  ஆஜராக மாட்டார்கள் என்ற நிலைப்பாடுதான் அது. பாலியல் வன் கொடுமை வழக்குகளை நடத்த மாட்டோம் என்று ஒவ்வொரு வழக்கறிஞரும் முடிவு செய்தாலே இது போன்ற கொடுமைகளில் ஒரு 25 % ஆவது குறைந்து போகும்.

சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு பாராட்டுக்களை தெரிவிக்கிறேன்.

அதே நேரம்

காஷ்மீரில் குழந்தை ஆசிஃபா சிதைக்கப்பட்ட நிகழ்வில் காவல்துறை குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யச் சென்ற போது நீதிமன்றத்திற்குள் வர விடாமல் ரௌடித்தனம் செய்ததும் வழக்கறிஞர்கள் என்பதும் நினைவுக்கு வருகிறது. அவர்கள் காவிக் கூட்டம் என்பதும் “இது போன்ற சின்ன விஷயத்தை பெரிது செய்தால் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருவது குறைந்து போய் அன்னியச் செலாவணி பாதிக்கப்படும்” என்று சொன்னதும் காவிக் கூட்ட பிரமுகர்கள் என்பதும் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

கொடியவர்களால் தமிழகத்திற்கு தலைகுனிவு என்றாலும் வழக்கறிஞர்கள் ஆறுதல் தருகிறார்கள்.

காஷ்மீரில் குற்றவாளிகளால் மட்டுமல்லாமல் வழக்கறிஞர்களாலும் அசிங்கமே. இருவருமே காவிகள் என்பதுதான் அதற்குக் காரணம். . .



Saturday, June 11, 2016

இந்த அநீதிக்கு எதிராக வக்கீல்கள் போராட்டம் எப்போது?



வழக்கறிஞர்களை ஒழுங்கு படுத்தும் அமைப்பான பார் கவுன்சில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி அந்த அலுவலகத்தில் பணியாற்றும் உதவி செயலாளர் பணிக்கு கீழான  ஊழியர்களோ, துப்புறவு பணியாளர்களோ, இல்லை வேறு எந்த வேலைக்காகவோ அங்கே வரும் சாமானியர்களோ, அங்கே உள்ள லிப்டை பயன்படுத்தக் கூடாதாம். ஊழியர்களாக இருந்தால் ஊதிய வெட்டு, வழக்கறிஞர்கள், நீதிபதிகள் இல்லாத வெளியாட்களாக இருந்தால் ஐம்பது ரூபாய் அபராதம். 

போனா போகிறது என்று ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு விதி விலக்கு தருகிறார்கள். அது கூட துப்புறவு பணியாளர்களுக்கு கிடையாது. 

இது எவ்வளவு பெரிய அராஜகம்!

இந்தியர்களுக்கும் நாய்களுக்கும் அனுமதி கிடையாது என்று பிரிட்டிஷ் விடுதிகளில் விடுதலைக்கு முன்னால் எழுதி வைத்திருப்பார்களாம். அது போன்றதொரு கொடுமை இது. வெட்கக் கேடான விஷயம் இது?

பல்வேறு பிரச்சினைகளுக்காக போராடி வரும் வழக்கறிஞர்கள்,  தங்களின் அமைப்பின் அநீதிக்கு எதிராக எப்போது போராடப் போகிறார்கள்? 

கண்டிப்பாக போராடுவார்கள், இந்த இழிவைப் போக்குவார்கள் என்று நம்புகிறேன். 

Friday, May 15, 2015

பார் கவுன்சிலுக்கு வேற வேலை இல்லையா?



தப்புக் கணக்கு தீர்ப்பை விமர்சித்தால் அவதூறு வழக்கு தொடர்வோம் என்று பார் கவுன்சில் மற்றும் தமிழக வழக்கறிஞர்கள் சங்கம் எச்சரித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பார்த்தேன்.

ஏராளமான வழக்கறிஞர் சங்கங்கள் உள்ளன. அதிலே ஏதாவது ஒரு அம்மா ஆதரவு வக்கீல் சங்கம் அப்படி சொல்லியிருந்தால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் பார் கவுன்சில் என்பது அப்படி இல்லை.

அது கிட்டத்தட்ட ஒரு அரசு அமைப்பினைப் போன்றதுதான். அரசியல் கட்சிகளையோ இல்லை பொது மக்களையோ மிரட்டுவது அதன் வேலை கிடையாது.

வழக்கறிஞர்களை நெறிப்படுத்துவது என்பது அதன் முக்கியமான பணி. வழக்கறிஞர்களுடைய உரிமைகளுக்காக செயல்படுவது என்பது மற்றொரு பணி.

இந்தப் பணிகளை பார் கவுன்சில் சிறப்பாக செய்கிறதா என்பதை வழக்கறிஞர்கள்தான் சொல்ல வேண்டும்.

காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்கள்,
நீதிபதிகள் நியமனத்தில் இல்லாதிருக்கும் வெளிப்படைத் தன்மை,
தேங்கிக் கிடக்கும் வழக்குகள், அலையும் அப்பாவி மக்கள்,
அடிக்கடி நிகழும் நீதிமன்ற புறக்கணிப்புகள்,
அடிப்படை வசதிகளற்ற நீதிமன்றங்கள்

போன்ற பிரச்சினைகளில் பார் கவுன்சில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை தெரிவித்தாலும் மகிழ்ச்சியுறுவேன்.

அது போல மைக்கேல் குன்ஹாவை மிகக் கேவலமான முறையில் தமிழகம் முழுதும் அதிமுக ரத்தங்கள் திட்டி அசிங்கப் படுத்திய போது அதற்கு எதிராக பார் கவுன்சில் இது போன்ற எச்சரிக்கை விடுத்ததா என்பதைக் கூட யாராவது விளக்கினால் நலம்.

அப்படி இல்லாமல் அம்மாவிற்காகத்தான் இந்த சிறப்பு நடவடிக்கை என்றால் பார் கவுன்சிலிடம் இரண்டு செய்திகளை சொல்ல வேண்டியிருக்கும்.

“உங்களுக்கு விதிக்கப்பட்ட வேலைகளை முதலில் பாருங்கள். இந்த அரசியல் உங்களுக்கானது அல்ல”

இதை விட இன்னும் அழுத்தமாக சொல்வோம்.

நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்.
நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே.

அதை கீழேயுள்ள படமும் உணர்த்தும்.


Tuesday, September 23, 2014

விசாரணை – சாட்சி- கோர்ட் அவமதிப்பு – ஜெயில்



அது ஒரு சிறிய ஊர். ஒரு வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது. சாட்சி சொல்ல ஒரு மூதாட்டி அழைக்கப்பட்டுள்ளார். அவரது நினைவுகள் சரியாக உள்ளதா என்று சோதனை செய்ய நினைத்த குற்றவாளி தரப்பு வழக்கறிஞர் அந்த மூதாட்டியைப் பார்த்து

“ நான்  யார் தெரியுமா?”

என்று கேட்கிறார்.

அதற்கு அந்த மூதாட்டி

“உன்னைப் பற்றி தெரியாதா எனக்கு? நீ சுப்ரமணி. உன்னை சின்ன வயசுலேந்தே தெரியும். சின்ன வயசுல உங்க பாட்டி சுருக்குப் பையில இருந்த காசை திருடி அடி வாங்கினவன். ஸ்கூல் படிக்கும் போது பீடி குடிச்சதுக்காக உங்கப்பா உன்னை பின்னி எடுத்தாரு. காலேஜுக்கு கட்டடிச்சு சினிமா போய் மாட்டிக்கிட்டவன். இப்பவும் ஒழுங்கா வீட்டுக்குப் போகாம ஊர் சுத்திக்கிட்டு உன் பெண்டாட்டிக்கிட்ட திட்டு வாங்கற. ஒழுங்கா படிக்காம பிட்டடிச்சி பாஸ் செஞ்சுட்டு வக்கீல்னு ஊரை ஏமாத்திக்கிட்டு இருக்க. எதுக்கும் லாயக்கில்லாதவன்”

அப்படியே நிலை குலைந்த அந்த வழக்கறிஞர்.

அரசுத் தரப்பு வழக்கறிஞரைக் காண்பித்து இவரைத் தெரியுமா என்று கேட்க அந்த மூதாட்டி தொடர்ந்தார்.

“இவனைத் தெரியாதா? இவன் கிச்சு. இவன் சரியான சோம்பேறி. குடிகாரன், இவனும் உன்னை மாதிரியே ஒழுங்கா படிக்காம தட்டுத்தடுமாறி பாஸ் செஞ்சவன். லஞ்சம் கொடுத்து கவர்ண்மென்ட் லாயராகி எல்லா கேஸிலயும் சொதப்பி தோத்திக்கிட்டு இருக்கான். இன்னும் கூட இவனைப் பத்தி தெரியும் கோர்ட்டுங்கறதனால சொல்லாம இருக்கேன்”

அரசு வக்கீல் அப்படியே மயக்கமடையும் நிலைக்கு போய் விட்டார்.

இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே அழைத்த நீதிபதி மெல்லிய குரலில் ஆனால் கடுமையாக சொன்னார்

“என்னைக் காண்பிச்சு இவரைத் தெரியுமானு இரண்டு பேரில யாராவது அந்த பாட்டிக்கிட்ட கேட்டீங்க, நீதிமன்ற அவமதிப்புனு சொல்லி இரண்டு பேரையுமே ஜெயில்ல போட்டுடுவேன்”

(முகநூலில் நான் படித்த அமெரிக்க பின்னணியிலான கதையின் இந்திய வடிவம் இது)

சரி இதை எழுதினதால என் பெயரில நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்திடாதல்லவா?