Saturday, August 30, 2014

இது உங்க ஆசிரியர் தினம் கிடையாதே மோடிஜி?http://bhavanajagat.files.wordpress.com/2009/08/radhakrishnan20sarvepalli.jpg

ஆசிரியர் தினத்தில் மோடி ஆற்றுகிற உரையை மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக கேட்க கறாரான நடவடிக்கைகளை சி.பி.எஸ்.இ எடுத்து வருவது பற்றி நேற்று எழுதியிருந்தேன். சரி இவர்கள் என்று ஆசிரியர்கள் தினம் கொண்டாடுகின்றார் என்று பார்த்தால் எப்பவும் போல செப்டம்பர் ஐந்துதான், மறைந்த குடியரசுத்தலைவர் டாக்டர் சரவபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளில்தான் கொண்டாடுகிறார்கள்.

இதில் என்ன சந்தேகம் என்று கேட்கிறீர்களா?

பாஜக மற்றும் சங் பரிவாரத்திற்கு என்று சில நாட்கள் உள்ளது.

எட்டு மணி நேர உழைப்பிற்காக ரத்தம் சிந்திய சிக்காகோ தோழர்களின் நினைவாக உலகெங்கும் கொண்டாடப்படும் மே முதல் நாள் இவர்களுக்கு தொழிலாளர் தினம் கிடையாது. தேவலோக தச்சர் என்று கற்பனைக் கதைகளில் சொல்லப்படும் விஸ்வகர்மாவின் பிறந்த நாள்தான் இவர்களின் தொழிலாளர் தினம்.

அதே போல மிகப் பெரிய புனைவான மகாபாரதத்தை எழுதியதாகச் சொல்லப்படும் வேத வியாசரின் பிறந்த நாள்தான் இவர்களுக்கு ஆசிரியர் தினம்.

இவர்களின் பிறந்த நாளை எல்லாம் எப்படி அறிவியல்பூர்வமாக கண்டு பிடித்தார்கள் என்பது தெரியவில்லை.

அதனால்தான் சங் பரிவார கோட்பாட்டிற்கு மாறாக செப்டம்பர் ஐந்தே ஆசிரியர் தினத்தை மோடி கொண்டாடுவது சிறப்பானதுதான்.

ஆனால் அன்றைக்கு என்ன சொல்லப் போகிறார் என்பதையும் நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

அமைச்சர்களை நியமிக்க பிரதமருக்கு உச்சநீதி மன்ற அறிவுரை – இவ்வளவு அப்பாவிகளா நம் நீதிபதிகள்?http://supremecourtofindia.nic.in/images/scmid.gif
அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக பிரதமருக்கும் மாநில முதல்வர்களுக்கும் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள அறிவுரையை பார்க்கையில் நிஜத்தில் எனக்கு சிரிப்புதான் வந்தது.

முதலில் இந்த அறிவுரையெல்லாம் மோடிஜிக்கு பொருந்தாது. தீர்ப்பு கொடுத்தாலே அதை ஒதுக்கி வைத்து விட்டு தனது இஷ்டத்திற்கு கவர்னர்களை பந்தாடிக் கொண்டு இருப்பவருக்குப் போய் அறிவுரையா? அதிலும் அமைச்சர்களை நியமிக்கும் உரிமை பிரதமருடையது என்று சொன்ன பின் “எங்களுக்கு எதுக்கு அறிவுரை? நாங்க கறை படிஞ்சவங்களுக்கும் மந்திரி பதவி கொடுப்போம். அமைச்சர் பதவி கொடுத்துட்டு கறை படிஞ்சவங்களா மாத்துவோம்” என்றல்லவா அவர் செயல்படுவார்!

சரி பிரதமர்தான் நிஜமாகவே அமைச்சர்களை முடிவு செய்கிறாரா?

கடந்தகால அனுபவங்கள் அப்படியெல்லாம் கிடையாது என்றெல்லவா சொல்கிறது…

நிதியமைச்சராக யார் இருக்க வேண்டும் என்பதை அமெரிக்க முதலாளிகள்தான் முடிவு செய்வார்கள் என்பதை யஷ்வந்த் சின்ஹா, ப.சிதம்பரம் ஆகியோரின் கடந்த கால நியமனமும் தோற்றுப் போனாலும் அருண் ஜெய்ட்லி இரண்டு முக்கிய துறைகளில் அமைச்சராக இருப்பதும் சொல்கிறது. இவர்கள் அனைவருமே நிதித்துறை சீர்திருத்தம் என்ற பெயரில் பன்னாட்டு கம்பெனிகளின் நலனுக்காக வங்கி, பென்ஷன் மற்றும் காப்பீட்டுத்துறையை திறந்து விடத் துடிப்பவர்கள்.

வர்த்தக அமைச்சராக ஆனந்த் ஷர்மா நமக்கு சரிப்பட்டு வருவாரா என்று ஹில்லாரி கிளிண்டன் கேட்டது விக்கி லீக்கில் அம்பலமானதை மறக்க முடியுமா?

கூட்டணியில் யார் அமைச்சராக வேண்டும் என்பதை அந்த கட்சியின் தலைவர்தான் முடிவு செய்ய முடியுமே தவிர பிரதமர் அல்லவே. டி.ஆர்.பாலுவை நியமிக்க மன்மோகன்சிங்கிற்கு விருப்பமில்லை என்ற தகவலும் நினைவுக்கு வருகிறதே!

ரயில்வே அமைச்சராக இருந்த தினேஷ் திரிவேதியை ராஜினாமா செய்ய வைத்து மறுநாள் வேறு ஒருவரை மம்தா ரயில்வே அமைச்சராக அழகு பார்த்ததும் நினைவிற்கு வந்து தொலைக்கிறதே!

வி.பி.சிங் காலத்தில் கூட அவர் வைகோவை அமைச்சராக்க விரும்பினார் என்றும் கலைஞர் முரசொலி மாறனை முன்னிறுத்திய காரணத்தால் “நகர்ப்புற அபிவிருத்தி” என்ற டம்மி அமைச்சகத்தை அவருக்கு ஒதுக்கினார் என்ற தகவல் பல காலம் உலவி வந்ததே!

பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பாஜக என்றால் கூடுதலாக ஆர்.எஸ்.எஸ் இவர்கள்தான் அமைச்சர் யார் என்பதை முடிவு செய்யக் கூடியவர்களே தவிர பிரதமர் அல்ல என்பது யதார்த்தம், அது வலிமை மிக்கவராக சொல்லப்படும் மோடியாக இருந்தால் கூட.

மேலே சொன்னதை விட இன்னும் முக்கியமானவர்களும் உண்டு. உண்மையில் சொல்லப் போனால் அவர்கள்தான் சக்தி மிக்கவர்கள். ஆம் நீரா ராடியா போன்ற தரகர்கள்தான்.

இப்படிப்பட்ட சூழலில் கறைபடிந்துள்ளவர்களை எல்லாம் அமைச்சராக்கக் கூடாது என்று அறிவுரை சொல்லும் நீதிபதிகள் எவ்வளவு அப்பாவிகள்!!!!!!

மோடி அண்ணாச்சி பேசப்போறாரு, எல்லாரும் கேட்கனுமாம்

இன்றைய  ஹிந்து இதழில் வந்துள்ள செய்தி

ஆசிரியர் தினத்தன்று மோடி நிகழ்த்தவுள்ள உரையை  மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக கேட்க வேண்டுமாம். பள்ளிகள் அதற்கான அனைத்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமாம். என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க வேண்டுமாம்.

சமஸ்கிருத வாரம் கொண்டாடச் சொன்ன சி.பி.எஸ்.இ  வாரியத்தின் அடுத்த அதிரடி நடவடிக்கை இது. 

எல்.கே.ஜி, யு.கே.ஜி  பசங்க எல்லாம் கூட "ஆப் கி சர்க்கார், அச்சா தின்" உரையை கேட்டேயாக வேண்டுமாம். 

தொலைக்காட்சி வசதி இல்லையென்றால் ரேடியோவிலாவது கேட்க வேண்டுமாம்.

இந்த மனிதன் விகாஸ் புருஷ் இல்லை விளம்பர புருஷ்.

இன்னொரு சந்தேகம் இருக்கு. அது நாளைக்கு

Friday, August 29, 2014

மகன்களால் மந்திரிகளுக்கு சிக்கலா?

மோடி அரசு  பதவியேற்றதிலிருந்து உருப்படியாக எதுவும் செய்யவில்லை. எதுவும் செய்யப்போவதில்லை என்பதுதான் யதார்த்தம். ஆனால் முதல் நாள் முதலே சர்ச்சைகளுக்கு மட்டும் பஞ்சமே கிடையாது. 

கறை படிந்தவர்களுக்கு அமைச்சர் பதவி தரவேண்டாமே என்ற உச்சநீதிமன்ற அறிவுரை பற்றி நாளை விரிவாக பார்ப்போம். இப்போது புதிய சர்ச்சையான மகன்கள் பற்றி பார்ப்போம்.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் மகந்த்சிங் பற்றிய செய்திகள் தவறு, வதந்திகள் என்று பாஜக தலைவர் அமித் ஷாவும் பிரதமர் அலுவலகமும் மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளனர். அப்படி என்ன தவறான செய்திகள் வந்துள்ளது என்று தேடி தேடிப் பார்த்தாலும் கிடைக்கவில்லை.

பொதுவெளியில் அப்படி எந்த செய்தியும் பரவாத போது மறுப்பறிக்கை வர வேண்டிய அவசியம் என்ன? அல்லது பிரதமருக்கும் பாஜக தலைவருக்கும் ஏதாவது குற்றச்சாட்டு சென்று அதற்கு மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளார்களா? இல்லை அது  ராஜ்நாத் சிங்கிற்கு "ஒழுங்காக இரு, இல்லையென்றால் உனது மகன் பற்றிய செய்திகள் வெளி வந்து விடும்" என்று ஏதாவது மிரட்டலா?

விஷயம் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்.

அடுத்தது ரயில்வே அமைச்சர் சதானந்த கௌடா மகன் கார்த்திக் கௌடா தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் கொடுமை செய்து ஏமாற்றி விட்டார் என்று நடிகை மைத்ரேயி கொடுத்துள்ள புகார். 

அரசியல் பழிவாங்குதல் நடவடிக்கை என்று அமைச்சர் சொன்னாலும் பாஜக அறிக்கையோ சட்டப்படி எல்லாம் நடக்கட்டும் என்று சொல்கிறது. எனக்கு அந்தப் பெண்ணை தெரியவே தெரியாது என்று மகன் சொன்னாலும் அது முழுச் சோற்றில் மறைக்கப்பட்ட பூசணிக்காய் என்பது புகைப்படங்களைப் பார்க்கும் போது தெரிகிறது.

இந்த விஷயம் எது வரை போகப் போகிறதோ?

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். 

ராஜ்நாத் சிங்கும் சதானந்த கௌடாவும் பதவியில் நீடிப்பது அவர்களது மகன்கள் கையில்தான் இருக்கிறது. 

இனி மற்ற அமைச்சர்களாவது தங்கள் வாரிசுகளை அடக்க ஒடுக்கமாக இருக்கச் சொல்வார்கள் என்று எதிர்பார்க்கலாமா? இல்லை அப்பா அமைச்சராக இருக்கும் போது ஆட்டம் போடாமல் வேறு எப்போது ஆட்டம் போடுவது என்று இருக்கப் போகிறார்களா?

தமிழகத்திற்கு புதிய முதல்வரா ? யார்?

பெங்களூர் சொத்து குவிப்பு வழக்கில்  ஜெ விற்கு தண்டனை கிடைக்குமா? அப்ப்டி கிடைத்தால்  தமிழகத்தின்  அடுத்த முதலமைச்சர் யார்?

இன்னும் இருபத்தி இரண்டு நாட்களில் தமிழகத்தில் பரபரப்பு காட்சிகள் அரங்கேற உள்ளது.

ஜெ தண்டனை பெற்றால் அடுத்த முதல்வர் யார் என்பது தொடங்கி அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கலைஞர் கோரிக்கை முதல் நிறைய காட்சிகள் பார்க்கலாம்.

ஜெ விடுவிக்கப்பட்டால்  தர்மம் வென்றது என்று பிளெக்ஸ் பேனர்களையும் அதிமுக கொண்டாட்டங்களையும்  பார்க்கலாம். குடும்பப் பிரச்சினைகளை மறந்து விட்டு கலைஞரும் இது தொடர்பான அறிக்கைகளில் காலத்தைக் கடத்தலாம்.

வழக்கறிஞர்கள் வாதங்களை படிக்கையில் திமுக அரசு சொதப்பலாகவே வழக்கை பதிவு செய்துள்ளதாக தோன்றுகிறது.

பார்ப்போம் செப்டம்பர் இருபது  என்ன செய்தியோடு  வரப்போகிறது என்று.

ஓ.பி.எஸ் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களின் உள்மனதிற்குள் தமக்கு அதிர்ஷ்டம் அடிக்காதா என்ற ஆசை இருக்குமல்லவா?
 

Thursday, August 28, 2014

குரங்குகளைக் கூட கெடுத்துட்டாங்களே
நேற்றைய ஜூனியர் விகடன் இதழில் உணவு யுத்தம் பகுதியில் திரு எஸ்.ராமகிருஷ்ணன் உருளைக்கிழங்கு சிப்ஸ் பற்றி எழுதியதைப் படித்ததும் சமீபத்தில் நான் பார்த்த ஒரு காட்சி நினைவுக்கு வந்தது.

சமீபத்தில் திருச்சூரில் ஒரு கூட்டத்திற்கு செல்வதற்காக காட்பாடி ரயில் நிலையத்தில் எனது வண்டிக்காக காத்திருந்தேன். அப்போது ஒரு பயணி இரண்டு பாக்கெட் லேஸ் சிப்ஸும் ஒரு பாக்கெட் மேரி பிஸ்கட்டும் வாங்கி ஒரு கேரி பேக்கில் போட்டு உட்கார்ந்திருந்தார்.

காட்பாடி ரயில்வே சந்திப்பு குரங்குகளுக்கு பிரசித்தி பெற்றது. எங்கிருந்தோ வந்த ஒரு குரங்கு அவர் கையில் இருந்த பேக்கை பிடுங்கிக் கொண்டு போனது. கொஞ்ச தூரம் போனதும் அந்த பையில் இருந்த மேரி பிஸ்கெட்டை தூக்கிப் போட்டு விட்டு சிப்ஸ் பாக்கெட்டை மட்டும் எடுத்துக் கொண்டு அதை பிரித்து சாப்பிட ஆரம்பித்து விட்டது

குழந்தைகளைத்தான் இந்த லேஸ் சிப்ஸ் சாப்பிட வைச்சு கெடுக்கறாங்கனு பார்த்த குரங்குகளைக் கூட விட மாட்டேங்கறாங்க!

என்ன கொடுமை சார் இது?
 

Wednesday, August 27, 2014

சிறகுகளில் ஓர் அற்புதம் - தவற விடாதீர்கள்

எனக்கு மின்னஞ்சலில் வந்த புகைப்படங்கள் இவை.

சிறகுகளில் அழகு ஓவியங்களை தீட்டிய அந்த அற்புத ஓவியனுக்கு எனது வாழ்த்துக்கள். நீங்களும் நிச்சயம் ரசிப்பீர்கள். வாழ்த்துவீர்கள். அவ்வளவு அருமையாக உள்ளது.
Tuesday, August 26, 2014

அந்தரத்தில் ஊஞசலாடுது மூவரின் உயிர்
மேலே உள்ள படத்தை முகநூலில்  பார்த்ததும் நான் ரொம்பவே பதறி விட்டேன்.  இவர்கள் உயிர் பிழைத்தார்களோ இல்லையோ என்று மிகவும் கவலையாக இருந்தது. 

என்ன ஆனது இவர்களுக்கு?

எங்கே நடந்தது?

தப்பித்தார்களா? இல்லையா?

அறிந்து கொள்ள கொஞ்சம் கீழே வாருங்கள்

*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

நீங்கள் புத்திசாலி, அப்படியெல்லாம் ஏமாந்திருக்க மாட்டீர்கள்.
அப்படித்தானே?

கோர்ட்டாவது மண்ணாவது, மோடிதான் கோர்ட், நீதிபதிகாங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வாஜ்பாய் நியமித்த கவர்னர்களை மாற்றியது தவறு என்று  உச்சநீதிமன்றம் போய் தீர்ப்பு வாங்கி வந்த கட்சி பாஜக. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பின்பு அந்த தீர்ப்பை உதாசீனம் செய்து விட்டு காங்கிரஸ் போட்ட பல கவர்னர்களை மாற்றி வருகிறது. பதவி விலகுமாறு மிரட்டுகிறது. சங்கராச்சாரியர்களுக்கு எதிராக அப்பீல் செய்ய அனுமதி கொடுத்ததால் புதுவை துணைநிலை ஆளுனர் கட்டாரியாவை கட் செய்து விட்டார்கள்.

ஆளுனராக இருக்கிற என்னை பதவி விலகிச் சொல்லி உள்துறைச் செயலாளர் மிரட்டுகிறார், அரசியல் சாசனப் பதவியில் உள்ள என்னை ஒரு அதிகாரி மிரட்டுவதா என்று ஒரு ஆளுனர் உச்சநீதி மன்றத்தில் முறையிட நீதிமன்றமும் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நோட்டீசை வாங்கிய மறுநாளே மகாராஷ்டிர மாநில கவர்னரை மிசோரத்திற்கு மாற்றி ராஜினாமா செய்ய வைத்து விட்ட்து மோடி அரசு.

கோர்ட்டாவது மண்ணாவது, நாங்கள் என்ன நினைக்கிறோமோ அதைத்தான் செய்வோம், அது ஜன்நாயகமா இல்லை நெறிமுறையா என்பது பற்றியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை என்று மிகவும் அராஜகமாக செயல்படுகிறது மோடி அரசு.

ஐந்தாண்டுகளுக்குள் என்ன கூத்தெல்லாம் நடக்கப் போகிறதோ?