Wednesday, May 13, 2026

பயம் பிடிச்சிருக்கு விஜய்

 


நீங்கள் கட்சி ஆரம்பித்த பிறகு இந்த டெம்ப்ளேட்டை எந்த பதிவிற்கும் பயன்படுத்தவேயில்லை. உங்களுக்கே அது பயன்படும் என்றும் எதிர்பார்க்கவில்லை.

உங்கள் ஆட்சியின் அபத்தமான ஜோசியர் பணி நியமன முடிவை நீங்கள் வெற்றிகரமாக திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளீர்கள்.

எதிர்க்கட்சிகளின், மக்களின் கடுமையாக எதிர்ப்பிற்கு நீங்கள் பயப்பட்டது நிஜமாகவே பிடித்துள்ளது.

எதிர்காலத்திலும் இந்த பயம் உங்களுடனேயே இருக்கட்டும். 

அவர்கள் பக்தர்கள், சங்கிகள் அல்ல

 


கீழே உள்ள ஒரு சங்கியின் பதிவுற்கான பதில்தான் மேலே உள்ள படம்.


அநேகமாக அவர்கள் கீழேயுள்ள புகைப்படத்தைப் பார்த்துத்தான் பதற்றமாகியிருப்பார்கள்.


இந்த கூட்டத்திற்கு பக்தியறிவு, அரசியலறிவு, ஆன்மீக அறிவு என அத்தனையும் மிக அதிகமாகவே உள்ளது.

அதனால்தான் அவர்களுக்கு "அழகர் ஆற்றில் இறங்குவது" பாரம்பரிய விழா என்று கொண்டாடவும் முடிகிறது.

தீர்ப்பாளர் துணை கொண்டு திருப்பரங்குன்றத்தில் புதிதாக ஒரு இடத்தில் தீபம் ஏற்ற முயற்சிப்பது அரசியல் ஆதாயத்திற்காக என்று புரிந்து அதனை ஒதுக்கித் தள்ளவும் முடிகிறது.

பிகு:  வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே எழுதி நீண்ட நாட்களாக ட்ராப்டிலேயே உள்ள பதிவு. 

Tuesday, May 12, 2026

உண்ணி கிருஷ்ண பணிக்கரும் ஜெ வும் உயிருடன் இருந்திருந்தால்?

 


இன்று விஜய் செய்துள்ள ஒரு பணி நியமனம் ஒரு கேலிக்கூத்து.  கேவலமானது.  தேவையில்லாத ஆணி.


ஏ1 ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் "எனக்கு ஏன் இப்படி ஒரு அரசுப் பணி தரவில்லை?" என்று உண்ணிகிருஷ்ண பணிக்கர் கேட்டிருப்பார் இல்லையா! எனக்கு இது தோன்றாமல் போய் விட்டதே என்று ஜெயலலிதா கூட யோசித்திருப்பார் அல்லவா!

நல்லா நடக்குது மதச்சார்பற்ற அரசு!

மூன்றாவது நாளிலேயே இப்படி என்றால் போகப் போக ????

அச்சமாய் இருக்கிறது. 

அதிமுக சண்டை புரியலை

 


எடப்பாடி கோஷ்டியும் சரி, வேலுமணி சரி ரெண்டு பேருமே கொள்கைக் குன்றுகள் கிடையாது. மோடியின் கட்டளைகளை நிறைவேற்ற தயங்காதவர்கள். பிறகு ஏன் அவர்களுக்குள் மோதல்?

மோடிக்கு எடப்பாடியையோ அல்லது வேலுமணியை பிடிக்காமல் போயிருக்கிறது. 

அதனால் அவர்கள் சண்டை செய்கிறார்கள்.

மோடியின் செல்லப்பிள்ளை யார் என்பது விரைவிலேயே தெரிந்து விடும்.


Monday, May 11, 2026

மோடியின் உபதேசம் ஊருக்குத்தான், எப்போதும் போல

 


மோடி நேற்று நாட்டு மக்களுக்கு சில உபதேசங்களை அருளியுள்ளார்.

அவை


"வீட்டிலிருந்து வேலை" என்பதற்கு முன்னுரிமை கொடுங்கள்

ஒரு வருட காலத்திற்கு தங்கம் வாங்குவதை தவிருங்கள்,

பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைப்பீர், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவீர்,

சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைத்திடுவீர்,

ரசாயன உரங்கள் பயன்பாட்டை குறைத்து இயற்கை உரங்களை நோக்கிச் செல்வீர்,

அன்னிய பிராண்டட் பொருட்களை வாங்குவதை குறைத்து சுதேசிப் பொருட்களுக்கு மாறுங்கள்.

இன்னும் ஒரு வருட காலத்திற்கு வெளிநாட்டுப் பயணத்தை தவிர்ப்பீர்.

இந்த உபதேசங்கள் எல்லாம் ஒரு கடுமையான தாக்குதலுக்கு நம்மை தயார்ப்படுத்தும் உத்தி. கொரோனா காலத்தில் செய்யப்பட்டது போல லாக் டவுன் கொண்டு வரலாம். 

பெட்ரோல், டீசல்,சமையல் எண்ணெய், ரசாயன உரங்கள்  ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்த்தப்படலாம்.

அன்னிய பிராண்டட் பொருட்கள் மீது கை வைக்கும் தைரியம் 56 இஞ்ச் மாவீரனுக்குக் கிடையாது என்பது நமக்கெல்லாம் நன்றாகவே தெரியும்.

இந்திய மக்களை ஒரு வருட காலத்திற்கு வெளி நாட்டுப்பயணம் மேற்கொள்ளக்கூடாது என்று சொல்லியுள்ள மோடி வரும் மே 15 அன்று ஒரு வார கால சுற்றுப் பயணம், அமீரகம், ஸ்வீடன், நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு புறப்படுகிறார்.  

தன்னுடைய உபதேசம் மற்றவர்களுக்குத்தான், மக்களுக்குத்தான், தனக்குக் கிடையாது என்பதில் தெளிவாக உள்ளவர் மோடி. தான் சொன்னதை தானே மீறுகிறோமே என்ற கூச்சமும் கொஞ்சமும் இல்லாதவர்.

இந்த ஐந்து மாநிலத் தேர்தல்கள் இருந்ததால் இரண்டு மாதம் கட்டுப்பாடாக இருந்தார். மேலும் அவர் இந்தியாவிலேயே இருந்தால் என்ன ஆகும்?

மேலே உள்ள படத்தை மீண்டும் பார்க்கவும். 

கோஷ்டிச்சண்டை நல்லது ராகுல்

 


என்ன ராகுல் காந்தி, எங்கே இருக்கிறீர்கள்?

நேற்று சென்னையில் உங்கள் புதிய கூட்டாளி ஜோசப் விஜய்யின் பதவியேற்பு விழாவிற்கு வந்தீர்கள். ஒவ்வொரு அமைச்சரும் பதவியேற்ற பின் விஜய்யை பார்க்க வந்த போது நீங்கள் எழுந்து நின்றீர்கள். ஆனால் யாருமே உங்களை கண்டு கொள்ளவில்லை.

முழுமையான பெரும்பான்மை பெறாத விஜய் கூட முதலமைச்சராக பதவி ஏற்று விட்டார். ஆனால் பெரும்பான்மையை விட அதிகமான இடங்கள் பெற்றும் உங்களால் இன்னும் கேரள முதல்வர் யார் என்பதை முடிவு செய்ய முடியவில்லை.

மூன்று கொள்ளிகளில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று உங்களால் இன்னும் முடிவு செய்ய முடியவில்லை.

எந்த கொள்ளி கேரளா சி.எம்?

நான்காவதாக புரியாத ஆங்கிலம் பேசும் சசி தாரூரையும் கணக்கில் எடுங்களேன். இரண்டாவது மனைவி சுனந்தா மர்மமாக இறந்த வழக்கில் இருந்து விடுபட, சசி தாரூர்தான் தன் அம்மாவை கொலை செய்ததாக சுனந்தாவின் முதல் கணவர் மூலம் பிறந்த மகனின் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க மோடி புகழ் பாடிய, உங்களுக்கும் உங்கள் கட்சித்தலைவர் என்ற பதவியில் மட்டும் இருக்கும் மல்லிகார்ஜுன் கார்கேவிற்கும் அழைப்பு இல்லாத போதும் மோடி வைத்த விருந்தில் கலந்து கொண்ட சசி தாரூரும் முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவர்தானே!

எப்படியானாலும் உங்கள் கட்சியில் நடைபெறும் கோஷ்டி மோதல், குடுமி பிடி சண்டை மிகவும் நல்லது. பத்தாண்டுகள் நல்லாட்சி புரிந்த தோழர் பினராயி விஜயன் அவர்களின் தலைமையிலான இடது முன்னணி ஆட்சியை தோற்கடித்த கேரள மக்களுக்கும் நல்லது.

அமரேந்திர பாகுபலியை கொலை செய்தது மிகப் பெரிய தவறு என்று கட்டப்பா, சிவகாமி தேவியிடம் சொன்னது போல  கேரள மக்களும் இடது முன்னணியை தோற்கடித்தது தவறு என்று தங்கள் மனசாட்சியிடம் சொல்வார்கள்.

மகேந்திர பாகுபலி மகிழ்மதி அரியணையில் அமர்ந்தது போல, இந்த பின்னடைவிற்குப் பிறகு மீண்டும் இடது முன்னணி கேரளத்தை வெல்லும். அதற்கு உங்கள் கட்சியின் இன்றைய, நாளைய, எதிர்கால கோஷ்டி மோதலும் ஒரு காரணமாக இருக்கும்.

அதனால் உங்கள் கட்சியின் கோஷ்டி மோதல் நல்லது, கேரளத்திற்கு, கேரள மக்களுக்கு . . .

Sunday, May 10, 2026

ரெவியின் சிரிப்புச்சத்தம் கேட்கிறதா?

 

ஆரெஸெஸ் ரெவி ஆட்டுத்தாடியாக இருந்த போது சட்டப்பேரவையில் முதலில் தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும், பிறகுதான் தமிழ்த்தாய் வாழ்த்து என்று அடம் பிடிக்க, நிகழ்வின் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, நிறைவில்தான் தேசிய கீதம் என்ற தமிழ்நாட்டின் மரபைத்தான் பின்பற்றுவோம் என திமுக அரசு உறுதியாக நிற்க, அது கடுமையான சர்ச்சையாக மாறியது.

இன்று புதிய முதல்வர் பதவியேற்பில் 

முதலில் வந்தே மாதரம்,
இரண்டாவதாக தேசிய கீதம்
கடைசியாக தமிழ்த்தாய் வாழ்த்து.

மேற்கு வங்க தேர்தலுக்காக வங்க மக்களை உசுப்பேற்ற மோடி கையில் எடுத்ததுதான் வந்தே மாதரம்.

அந்த அரசியலை அப்போதே மக்களவையில் தோழர் சு.வெங்கடேசன் பேசினார். அந்த அற்புதமான உரையை 


எந்த மேற்கு வங்க மக்களை ஏமாற்ற வந்தே மாதரப் பாடலை தூசி தட்டி எடுத்தார்களோ, அதே மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடப்படவில்லை. இத்தனைக்கும் அங்கே ரெவிதான் ஆளுனர்.

ஆனால் தமிழ்நாட்டிலோ நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே வந்தே மாதரமும் தேசிய கீதமும் பாடப்படுகிறது.

ஆரெஸெஸ் ரெவி தமிழ்நாட்டைப் பார்த்து நக்கலாக சிரிக்கும் சத்தம் உங்களுக்கும் கேட்கிறதா? 

பாஜகவின் அஜெண்டா, பாஜக ஆதரவு தெரிவிக்காத அரசால் அமலாக்கப் படுகிறது. இது தொடக்கம்தான். இன்னும் தொடரும் மோசமாக. 

Friday, May 8, 2026

கூவாத்தூர் புராணத்தின் துவக்கப்புள்ளி

 


தங்கள் கட்சி மக்கள் பிரதிநிதிகள் எங்கே தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு மாற்றுக் கட்சிக்கு தாவி விடுவார்களோ என்ற அச்சம் நம்பிக்கை தீர்மானம் அல்லது நம்பிக்கையில்லா  தீர்மானம் சமயத்தில் வந்தால் அந்த எம்.எல்.ஏ, எம்.பி க்களை பாதுகாப்பாக வைத்திருக்க இப்போதெல்லாம் ஏதாவது சொகுசு ரிசார்ட்டுக்கு மாற்றி விடுவார்கள். இதிலே மிகவும் பிரசித்தி பெற்றது ஏ2 அதிமுக எம்.எல்.ஏ க்களை கூவாத்தூரில் வைத்திருந்ததுதான்.

இந்த நடைமுறை எப்போது துவங்கியது?

ஆந்திராவின் முதலமைச்சர்களை காங்கிரஸ் தலைமை தொடர்ந்து அவமதித்த நிலையில் என்.டி.ராமாராவ், தெலுங்கு தேசம் கட்சியை 1982 ல் துவக்குகிறார். அவருக்கு உதவியாக இருந்தவர் காங்கிரஸ் கட்சியில் அமைச்சர் பதவியிலிருந்து கழட்டி விடப்பட்ட பாஸ்கர் ராவ்.

ஜனவரி 1983 ல் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. பிரம்மாண்டமான வெற்றி பெற்று முதலமைச்சராகிறார். அப்படி ஒன்றும் பெரிய சூப்பர் ஆட்சியெல்லாம் கொடுக்கவில்லை.

இதய அறுவை சிகிச்சைக்கு 1984 ல் அவர் அமெரிக்கா போகிறார். என்.டி.ஆர் ஆட்சியில் பெரிதாக எந்த பலனும் கிடைக்கவில்லை என்று பாஸ்கர் ராவிற்கும் சில எம்.எல்.ஏ க்களுக்கும் வருத்தம். அந்த வருத்தம் ஆட்சியை கலைக்கும் அளவிற்கு சென்றது. அவர்கள் ஆளுனரிடம் கடிதம் கொடுக்க ஆளுனர் என்.டி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டு பாஸ்கர் ராவை முதல்வர் பதவி ஏற்க அழைத்து பதவி பிரமாணமும் செய்து வைக்கிறார்.

என்.டி.ஆருக்கு ஆதரவாக நாடெங்கிலும் குரல் எழுகிறது. ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற முழக்கத்தோடு ஒரு நாள் பாரத் பந்த் வேறு நடக்கிறது.

இந்த காலகட்டத்தில்தான் என்.டி.ஆர் ஆதரவு எம்.எல்.ஏ க்களை  காங்கிரஸ் கட்சிக்கோ அல்லது பாஸ்கர் ராவிடமோ செல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்ற அவசியம் வருகிறது. அவர்கள் அத்தனை பேரையும் வேறு மாநிலத்தில் ஒரே இடத்தில் தங்க வைக்க வேண்டும் என்று துக்ளக் சோ ஆலோசனை சொல்ல, எங்கள் மாநிலத்துக்கு வாருங்கள் என்று அப்போதைய கர்னாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே உத்தரவாதம் கொடுக்க மைசூர் நந்தி ஹில்ஸில் இருந்த ஒரு விடுதியில் தெலுங்கு தேச எம்.எல்.ஏ க்கள் பாதுகாப்பாக அடைக்கப்பட்டார்கள்.

கவர்னர் மாற்றப்படுகிறார். புதிய கவர்னர் பாஸ்கர் ராவை பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லி அது முடியாத காரணத்தால் அவரை டிஸ்மிஸ் செய்து விட்டு என்.டி,ராமராவை மீண்டும் ஆட்சி அமைக்க அழைத்து அவரும் மீண்டும் முதல்வராகிறார்.

ஆக ரிசார்ட் கலாச்சாரத்தை இந்திய ஜனநாயகத்திற்கு அளித்த கொடையாளர்கள் சோ, ஹெக்டே மற்றும் என்.டி.ஆர்



இந்த பதிவை இத்தோடு முடித்து விட முடியாது.

தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக என்.டி.ராமராவ் வீதிக்கு வந்தார். அவரே பல மாநிலங்களுக்குச் சென்று ஆதரவைத் திரட்டினார். மக்கள் மத்தியில் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். நான் வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பேன். எனக்காக மற்ற கட்சிகள், அதிலும் என்னோடு கூட்டணியில் இல்லாத, நான் தீய சக்தி என்று வர்ணித்த கட்சியோடு கூட்டணியில் இருந்த கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் இல்லை. 

பெரும்பான்மை என்.டி.ஆரிடமிம் இருந்தது. அதனால் அவர் போராடினார்.  அவர் தன்னுடைய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் ஆதரவை கோரவில்லை. ஒரு வேளை அப்படி அவர் கேட்டிருந்தால் "இவர் என்ன பைத்தியக்காரரா?" என்று மக்கள் கேட்டிருப்பார்கள். இன்றைக்கு சில அதி மேதாவிகள் விஜய்க்கு ஆதரவு தர வேண்டும் என்று சி.பி.ஐ(எம்), சி.பி.ஐ, விசிக ஆகியோரை மிரட்டி, அந்த இயக்கங்களுக்குள்ளேயே இரண்டு கருத்துக்கள் வருவது போல செய்திருக்க மாட்டார்கள்.

காங்கிரஸ் கட்சியின் ஆதரவு பெற்ற பாஸ்கர்ராவ் நடத்திய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை முறியடிக்க முடிந்த என்.டி.ராமராவ், இறுதியில் வீழ்ந்தது அவரது மருமகனான, அவர் மகளை மணந்த சந்திரபாபு நாயுடு செய்த கலகத்தினால்தான். 



Thursday, May 7, 2026

புதுவைக்கு மாறிய கூவாத்தூர்

 







மேலே உள்ள படங்களைப் பார்த்தீர்களா?

அழகாக இருக்கிறதா?

இவை புதுச்சேரியில் உள்ள ஹோட்டல் ஷோர் ட்ரிவிஷ்யம், ரிசார்ட்.

எதற்கு இப்போது இந்த ரிசார்ட் பற்றி?

அதிமுக கட்சியின் 25 எம்.எல்.ஏ க்களை இந்த ரிசார்ட்டில்தான் பத்திரமாக வைத்துள்ளார்களாம்.

விஜய் கட்சிக்கு அவர்கள் போய் விடக்கூடாது என்று எடப்பாடியார் எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கை இது.

பார்ப்போம் என்ன ஆகிறதென்று . . .

பிகு: இந்தியாவில் இந்த ரிசார்ட் கலாச்சாரம் எப்போது வந்தது? யார் கொண்டு வந்தது என்று தெரியுமா?

நாளை எழுதுகிறேன். 

எந்த கொள்ளி கேரளா சிஎம்?

 


கேரளா முதல்வர் என்று தலைப்பில் எழுதி விட்டு படத்தில் ஏன் ரகுவரனையும் சத்யராஜையும் சூர்யாவையும் போட்டுள்ளேன் என்று யோசிக்கிறீர்களா?

சமீப காலத்தில் தமிழ்த் திரைப்படத்தில் கொடூர வில்லன்களாக  யாரை சொல்வீர்கள்?

பாட்சா படத்து மார்க் ஆண்டனி,

அமைதிப்படையின் அமாவாசை,

விக்ரம் 2 படத்தின் ரோலெக்ஸ்.

இப்போது கேரள முதல்வருக்கான கோஷ்டிப்பிரச்சினையில் முன்னணியில் இருப்பவர்கள் மூவர்.

கே.சி.வேணுகோபால் - பொதுச்செயலாளர்,  காங்கிரஸில் இருக்கும் தீவிர சங்கி. தொகுதி மறுவரையறை பிரச்சினையில் கூட தடுமாற்றத்தை காண்பித்த  மோடி ஆதரவாளர்.

வி.டி.சதீசன் - எதிர்க்கட்சித் தலைவர். தங்கக் கடத்தல் வழக்கின் முக்கியக் குற்றவாளி. வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாள் சார்ட்டர்ட் விமானத்தில் இன்னொரு குற்றவாளியோடு மங்களூர் சென்று யாரையோ சந்தித்தார். யாரை சந்தித்தார்? ப்ளேனுக்கு காசு யார் கொடுத்தது என்ற கேள்விகளுக்கு பதில் இன்னும் வரவில்லை.

ரமேஷ் சென்னித்தலா : அந்த காலத்து ரௌடி.

மூன்று பேருமே எரிகிற கொள்ளிகள்.

அதிலே எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று முடிவு செய்துதான் கேரளா ஒரு முதல்வரை பார்க்கப் போகிறது.

தோழர் ஈ.எம்.எஸ், ஈ.கே.நயனார், வி.எஸ்.அச்சுதானந்தன், பினராயி விஜயன் ஆகியோர் இருந்த இடத்தில் மூன்றில் ஒரு தறுதலை உட்காரப் போகிறது.


Wednesday, May 6, 2026

அப்போதே ஒழிந்து போயிருக்கலாமே ராகுல்

 


இந்திய அரசியல் எத்தனையோ கேவலமான காட்சிகளை பார்த்துள்ளது. புதிதாக பார்த்த கேவலம் காங்கிரஸ் கட்சி, தவெக கூட்டணிக்கு தாவியது.

திமுக கூட்டணியில் பல வருடங்கள் இடம் பெற்று, அக்கூட்டணியின் பலத்தால் மக்களவையில் எம்.பி, க்களை பெற்றீர்கள். உங்கள் கட்சித் தலைவர்களே உங்களை பிரதமர் வேட்பாளர் என்று கருத தயாராக இல்லாத போது மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.

இந்த சட்டசபைத் தேர்தலில் இந்த கூட்டணியில் இடம் பெற உங்களுக்கு ஏனோ விருப்பமில்லை.  குரங்கு குட்டியை வைத்து ஆழம் பார்த்தது போல உங்கள் நண்பர் மாணிக்கம் தாகூரை  கலகம் செய்ய வைத்தீர்கள். மேலிடச் சில்லறைகள் பிரவீண் மற்றும் கோவா டுபாக்கூரை வைத்து சீன் போட்டீர்கள்.

ஆட்சியதிகாரத்தில் பங்கு தருவதாக விஜய் சொன்னதால் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைந்தீர்கள். 

கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலிருந்தும் உங்கள் கட்சி துடைக்கப்பட்டு விட்டது. கர்னாடகத்தில் நடக்கும் கோஷ்டி மோதலால் அடுத்த தேர்தலில் ஆட்சியை பறி கொடுப்பீர்கள்.

பாஜகவுடன் வைத்துக் கொண்டுள்ள கள்ள உறவால் கேரளாவில் ஜெயித்துள்ளீர்கள். முதலமைச்சர் போட்டியே உங்களை வீழ்த்தும்.

இப்படிப்பட்ட நிலைமை உள்ள போது உங்கள் வலிமைக்கு மீறி சீட்டுக்களை கேட்டீர்கள், அதிலே வெற்றியும் பெற்றும் 28 சீட்டுக்களை பெற்றீர்கள். கூட்டணி இல்லாமல் உங்கள் கட்சியால் அந்த ஐந்து எம்.எல்.ஏ க்களை பெற்றிருக்க மாட்டீர்கள். 

கூட்டணியின் தயவால் பெற்ற அந்த ஐந்து எம்.எல்.ஏ க்களை இப்போது விஜய்க்கு கை மாற்றிக் கொடுப்பது மிகவும் கேவலம். கொஞ்சம் கூட நெறிமுறையற்ற செயல்.

தேர்தலில் வாக்காளர்களின் விரல்களில் வைத்த மையை அவர்களின் முகத்தில் பூசியுள்ளீர்கள். அவர்கள் அளித்த வாக்குக்கு எதிராக செயல்பட்டுள்ளீர்கள். 

ஒன்றும் தெரியாத பப்பு என்று உங்களை சொல்வார்கள். நீங்கள் பப்பு அல்ல, அமித்ஷா போல ஆபத்தான கிரிமினல்.

தேர்தலில் வெற்றி பெற்றவர்களை இப்போது விஜய்யிடம் விற்பதற்கு பதிலாக அப்போதே கூட்டணியை விட்டு வெளியேறி விஜய் கட்சியோடு கூட்டணி வைத்திருக்கலாம். 

அப்படி செய்திருந்தால் முடிவுகளே கூட மாறி இருக்கலாம்.

உங்களை தமிழ்நாடு இனி துரோகி என்றே பார்க்கும்.

இந்த ஆடம்பரத்துக்கெல்லாம் ஜெ பாணி நடவடிக்கைதான் சரி


 என்னைப் போன்ற வயதானவர்களுக்கு ஒரு விஷயம் நினைவிருக்கலாம். ஏதோ ஒரு பல்கலைக்கழகத்தில் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்தமைக்காக திரையுலகம் ஒரு பாராட்டு விழா நடந்தது. அதிலே கமலஹாசன், ரஜினிகாந்த், பாரதிராஜா, பாக்யராஜ் ஆகிய நான்கு  பேர் சேர்ந்து எம்.ஜி.ஆருக்கு ஒரு பெரிய ரோஜா மாலையை அணிவிப்பார்கள். ஆளுயுர மாலை எப்படி இருக்கும் என்பதை தமிழ்நாடு அப்போதுதான் முதல் முறையாக பார்த்தது.

நேற்று வேலூரில் ஒரு காட்சியை பார்த்தேன். வேலூர் க்ரீன் சர்க்கிள் அருகிள் தவெகவினர் நின்று விசில் ஊதிக் கொண்டிருந்தனர். தாரை தப்பட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். புல்டோசரில் ஒரு பிரம்மாண்ட மாலையை தூக்கி வைத்திருந்தார்கள்.

யாருக்கு போடுவதற்காக அந்த மாலையோ?

வேலூரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ விற்காகக் கூட இருக்கலாம். 

வழக்கமாக ஆளுயுர மாலை எப்படி இருக்குமோ, அது போல நான்கைந்து மடங்கு பெரிதாக இருக்கும். அந்த மாலையை  யானைக்கு போட்டால்  அதன் கழுத்து எலும்பே உடைந்து விடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். 

யானையே தாங்காது எனும் போது மனிதனால் ஒரு நொடி கூட அந்த மாலையை போட்டுக் கொள்ள முடியாது. எம்.எல்.ஏ ஆக இருந்தால் அந்த தொகுதியில் இடைத் தேர்தல்தானா?

யாருக்கும் பயனில்லாத அந்த பிரம்மாண்டமான மாலை எல்லாம் அவசியமா?

வெட்டி ஆடம்பரம் மட்டுமே!

இது போன்ற ஆடம்பரங்கள் செய்பவர்களை டீல் செய்ய ஜெயலலிதா பாணிதான் சரியாக இருக்கும்.

அது என்ன என்று கேட்கிறீர்களா?

அய்யாறு வாண்டையார் என்ற தஞ்சாவூர் நிலப்பிரபுத்துவ குடும்ப வாரிசு. பாரம்பரிய காங்கிரஸ்காரர் அதிமுகவிற்கு தாவுகிறார். திருவையாறு தொகுதியில் போட்டியிட்டு ஜெயிக்கிறார்.  ஜெயலலிதா அவரை இந்து அறநிலையத்துறை அமைச்சராக்குகிறார். அந்த பதவி ஒரு வாரம் கூட தாங்கவில்லை. 

தூக்கப்பட்டார்.

ஏன்?

அமைச்சராக பதவியேற்ற பின் அவர் சொந்த ஊருக்குச் செல்கிறார். தஞ்சை ரயிலடியிலிருந்து அவரது கிராமத்துக்கு செல்லும் வழியில் பண்ணையார்த்தனமான வரவேற்பு. குதிரைகள் பூட்டிய தேரில் அவர் உட்கார, அனைத்து வகை ஆட்டக் கலைகளோடு ஊர்வலம் நிதானமாக ஊர்ந்து செல்கிறது. தகவல் ஏ1 காதிற்கு செல்ல, அய்யாறு வாண்டையார் வீட்டிற்குச் செல்லும் முன்னே அவரது பதவி பறிக்கப்பட்டு விட்டது.

அப்படியென்றால் ஜெ ஆடம்பரத்தை விரும்பாதவர் என்று சொல்கிறீர்களா என்று கேட்கிறீர்களா?

நோ, நெவர்.

வளர்ப்பு மகன் திருமணத்தை மறக்க முடியுமா?

ஜெயலலிதா பயங்கர ஈகோ பிடித்தவர். தன் கட்சியில் தன்னைத் தவிர வேறு யாரும் ஆடம்பர சீன் போடுவதை அவர் விரும்ப மாட்டார்.

அவ்வளவுதான் . . .

Tuesday, May 5, 2026

என்னய்யா செய்யப்போறே ஆரென்.ரெவி?

 


மேற்கு வங்கத்தில் நடந்தது தேர்தல் அல்ல. பேய்க்கும் பேய்க்கும் சண்டை. 

"பரிபர்த்தன் (மாற்றம்) என்ற சொல்லுக்கு மயங்கி திரிணாமுல் காங்கிரஸ் என்றொரு பேயை நாற்காலியில் உட்கார வைத்த மேற்கு வங்க மக்கள் மீண்டும் இன்னொரு முறை "பரிபர்த்தன் (மாற்றம்) என்ற பெயரில் இன்னொரு பேயான பாஜகவை  ஆட்சியில் அமர வைத்துள்ளார்கள்.

நான் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்று மம்தா அம்மையார் அறிவித்துள்ளார்.


மேற்கு வங்கத்துக்கு ஆட்டுத்தாடியாகப் போன ஆரென்.ரெவிக்குத்தான் இப்போது சிக்கல்.

அவர் என்ன செய்யப் போகிறார்?

மம்தாவை டிஸ்மிஸ் செய்யலாம். அது மட்டும்தான் முடியும்.

அதற்குப் பிறகு?

மேற்கு வங்கத்தின் வீதிகளில் இரண்டு கட்சிகளின் குண்டர்களும் மோதுவார்கள். ரத்த ஆறு ஓடும்.

அதற்குப் பின்?

சட்ட சபை????

தேசிய கீதத்தை முதலில் ஒலிக்கவில்லை என்று தமிழ்நாட்டில் சீன் போட்டது போல அங்கே சீன் போட மாட்டார். பாஜக அரசும் அவருக்கு சிக்கலை உண்டாக்காது.

சட்ட சபை வந்த ரெவியை தமிழ்நாட்டில் கண்ணியமாக திருப்பி அனுப்பினார்கள். 

மம்தா கட்சியினர் அப்படிப்பட்ட கண்ணியமான ஆட்கள் கிடையாது. ஏற்கனவே மேற்கு வங்க சட்ட சபையில் ரௌடித்தனம் செய்து எல்லாவற்றையும் உடைத்துத் தகர்த்தவர்கள்.

மேற்கு வங்கம் மட்டுமல்ல இந்தியாவே விந்தையான காட்சிகளை பார்க்கப் போகிறது. 

கீட்ஸிற்கு நிகரானவர் கண்ணதாசன்

கொஞ்சம் மாறுதலான ஒரு பதிவு. கல்வியாளர் தோழர் இரா.எட்வின் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து சுட்டது.  


Ode on a grecian urn” கொண்டாடப்பட்ட அளவு ஏன் ”சிலை எடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்கு” கொண்டாடப்படவில்லை

*************************************************************
1980 இல் எனக்கு கல்லூரிப் பாடத்தின் வழியாக கீட்ஸின் ”Ode on a grecian urn" அறிமுகமாகிறது
அப்போது எனக்கு 17 வயது
நாம் இப்படியாகக் கொள்வதில் யாருக்கும் வழக்கெதுவும் இருக்கப் போவதில்லை
அப்படி யாருக்கேனும் பிராது இருக்கும் பட்சத்தில்
முடிந்த இடத்தில் அந்தப் பிராதை அவர்கள் கொடுப்பதில் நமக்கும் வழக்கெதுவும் இல்லை
எந்த இடம் என்று தெரியவில்லை
ஏதோ ஒரு பாரிலோ தேநீர்க்கடையிலோ அல்லது வேறு எங்கோவோ இருக்கலாம்
எங்கோவோ இருந்துவிட்டும் போகட்டும்
ஒரு ஜாடியை கீட்ஸ் பார்க்கிறான்
அல்லது பார்த்த யாரோ அது குறித்து அவனிடம் சொல்லியும் இருக்கலாம்
மிக மிகப் பழங்காலத்து ஜாடி
அதன் கலைநயம் ஈர்க்கிறது
Thou still unravish'd bride of quietness,
Thou foster-child of silence and slow time,
என்று கவிதையை ஆரம்பிக்கிறான்
அந்த ஜாடியில் உள்ள ஓவியத்தில் மரங்கள் இருக்கின்றன
கீட்ஸ் அந்த மரத்தைப் பார்க்கிறான்
அந்த ஜாடிக்கு 200 வயது இருக்கலாம்
என்றால் அந்த மரத்தின் வயது 200
இதுவரைக்கும் அவன் அடைந்த ஆச்சரியம் அவனுக்கானது
200 வயது மரம் சாத்தியம்
ஆனால் 200 வயது இலை, அவன் வியப்பின் உச்சிக்கே போகிறான்
மரத்தின் ஜனனத்தோடு பிறந்த இலைகள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக பழுக்காமல் சருகாகாமல் உதிராமல்
அப்பப்பா
கலை நிலையானது
சொக்கிப்போகிறான் கீட்ஸ்
எழுதுகிறான்,
Ah, happy, happy boughs! that cannot shed
Your leaves, nor ever bid the Spring adieu;
அந்த ஜாடியில் உள்ள படத்தில் ஒரு காதலன் தனது காதலிக்கு முத்தம் கொடுக்க முயல்கிறான்
அவள் தப்பித்து ஓட முயற்சி செய்கிறாள்
கீட்ஸ் எழுதுகிறான்,
பயப்படாதே அவளால் அந்த இடத்தைவிட்டு நகர முடியாது. அவளது வனப்பும் எத்தனை ஆண்டு காலமானாலும் சிதையாது
நமக்கும் புரிகிறது
ஒருபோதும் அவளை அவன் முத்தமிட முடியாது
Bold Lover, never, never canst thou kiss,
Though winning near the goal yet, do not grieve;
She cannot fade, though thou hast not thy bliss,
For ever wilt thou love, and she be fair!
சர்வர் சுந்தரம் படத்தில் ஒரு பாடலுக்கான சூழலை கண்ணதாசனிடம் விளக்குகிறார்கள்
மகாபலிபுரம்
அங்குள்ள சிலைகளைப் பார்த்து அதிலும் அங்குள்ள ஒரு யுவதியின் சிலையைக் கண்டு வியந்து பாடுவதாக பாடல் வேண்டும்
வேட்டியை சன்னமாக தூக்கிப் பிடித்தபடி கண்ணதாசன் சொல்லச் சொல்ல எழுதுகிறார்கள்
“சிலை எடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ணக் கண்ணுக்கு
ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே
ஆட விட்டான் இந்தக் கடலினிலே”
ஆகா ஆகா
“கட்டழகு வாலிபர் தொட்டுப் பார்க்க
கவிஞர்கள் தமிழால் தொட்டுப் பார்க்க
பொட்டு வைத்தப் பூங்கொடி போட்டி போட
பொல்லாத பருவத்தை கல்லாக்கினேன்”
என்று நகருவார்
அந்த சிலையை பார்த்த வாலிபர்களுக்கு அதைத் தொட்டுப் பார்க்கத் தோன்றுமாம்
கவிஞர்களிடம் கவிதை துள்ளுமாம்
பெண்களுக்கு போட்டியான அழகாம்
இதெல்லாம் விடுங்கள்
இதுவரை ஒரு பெண்ணை கல்லில் சிலையாக வடித்ததாகத்தான் வரும்
அது பெண் மட்டும் இல்லையாம்
பொல்லாத பருவத்தை கல்லாக்கி நிலைக்கச் செய்தானாம் சிற்பி
பருவத்தை சிலையாக்கி
அய்யோ அய்யோ
கண்ணதாசா
அடுத்த சரணத்தில் ஒரு வரி வரும்
“பருவத்தின் சாரத்தை தேக்கி வைத்தான்”
பருவத்தின் சாறை கல்லில் கலையாக்கும் வித்தையை பாடலில் பந்தி வைப்பார் கண்ணாதாசன்
அநேகமாக இறுதி சரணம் என்று பார்க்கிறேன்
“அன்னமிவள் வயதோ பதினாறு
ஆண்டுகள் போயின ஆறு நூறு
இன்னும் இவள் முதுமை எய்தவில்லை
என்னதான் ரகசியம் தெரியவில்லை”
கீட்ஸ் ஜாடியில் உள்ள ஓவியத்தைப் பார்த்து கவிதை எழுதுகிறான்
கண்ணதாசன் மகாபலிபுரத்து சிலைகளைப் பார்த்து ஒரு திரைப்படத்திற்கு பாடல் எழுதுகிறார்
இசை சூப்பர்
நடனம் சிறப்பு
எல்லாம் கடந்து பிரச்சினை என்னவெனில்
Ode on a grecian urn கொண்டாடப்பட்ட அளவு ஏன் ”சிலை எடுத்தான்” கொண்டாடப்படவில்லை
ஒரு திரைப்படப் பாடல் உலகம் கொண்டாடிய ஒரு கவிதைக்கு கொஞ்சமும் சளைத்ததாக இல்லாமல்
நிமிர்ந்து நிற்கிறது
ஆனாலும் அது கொண்டாடப்பட வேண்டிய அளவிற்கு கொண்டாடப் படவில்லை
நம்மிடம் ஏதோ தவறு இருக்கிறது
மொழிபெயர்க்காத தவறாகவும் அது இருக்கக் கூடும்

கொண்டாட வேண்டிய சிலவற்றை காலத்தே கொண்டாட தவறினால் பின்னாளில் நொந்து கொள்ள வேண்டிய நிலைமை வரும். அரசியல் பதிவில்லை என்று முதலில் சொன்னீர்களே என்று கேட்கிறீர்களா? என்ன செய்ய? அரசியல் இல்லாமல் வாழ்க்கை இருக்கிறதா என்ன?

Monday, May 4, 2026

தேர்தல் முடிவுகள் - என்ன சொல்ல?

 


இப்போதைக்கு சொல்ல வேறெதுவுமில்லை, எதிர்பார்க்காத ஏமாற்றம் என்பதைத் தவிர.  

கவுண்டிங் செண்டரில் ஒரு நாள்.

 


2009 மக்களவைத் தேர்தலின் போது வாக்கு எண்ணிக்கையில் மைக்ரோ அப்சர்வராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அனுபவத்தைப் பற்றி, வாக்கு எண்ணிக்கையில் மோசடி செய்ய வாய்ப்பு இருப்பது பற்றி மார்ச் 2011 ல் பதிவு எழுதினேன். கூடுதல் விபரங்களோடு அந்த பதிவை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

வாக்கு எண்ணிக்கைக்கு மைக்ரோ அப்சர்வர்களாக எல்.ஐ.சி ஊழியர்கள் வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரகம் கேட்டுக் கொண்ட அடிப்படையில் நிர்வாகம் சங்கத்தோடு பேசியது. விருப்பமுள்ளவர்கள் செல்லட்டும். மற்றவர்களை நிர்ப்பந்திக்கக் கூடாது என்று நாங்கள் சொன்னதை நிர்வாகமும் ஒப்புக் கொண்டது. கணிசமான ஊழியர்கள் மைக்ரோ அப்சர்வர் பணியாற்ற ஒப்புக் கொண்டனர்.  ஒரு ஐ.டி கார்ட் கொடுத்தார்கள். அதில் போட்டோ இருந்ததா  என்று நினைவில்லை. வேலூர் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரிதான் வாக்கு எண்ணும் மையம்.

காலை ஆறு முப்பதிற்கெல்லாம் அங்கே சென்றாகி விட்டது. அலைபேசிக்கு அனுமதி கிடையாது என்பதால் வாகனத்தின் பெட்டியில் வைத்து விட்டு வந்தோம். நல்ல வேளை தொலைந்து போகவில்லை. சுமாரான பொங்கலும் அதை விட சுமாரான சட்னியும் கொடுத்தார்கள்.  இரும்புக் கோட்டைக்குள்ளே நுழைந்தோம்.

இனி பழைய பதிவு.

வாக்கு எண்ணிக்கையில் மோசடி சாத்தியமே

மின் அணு இயந்திரத்தில்  வாக்கு பதிவு  கூடாது  என்ற  பல்லவியை  தமிழக அரசியல் கட்சிகள் இன்னும்  பாடத்தொடங்கவில்லை. வாக்குப்பதிவில் மோசடி  செய்வது சாத்தியமா  என்று  தெரியாது.  ஆனால்  வாக்கு எண்ணிக்கையில்  மோசடி  செய்வது  என்பதற்கான சாத்தியங்கள்  நிச்சயமாகவே  உள்ளது. எப்படி  என்று பார்ப்போம்.

கடந்த நாடாளுமன்றத்தேர்தலில்  நுண் பார்வையாளராக (Micro Observer)    பணியாற்றும்  வாய்ப்பு  கிடைத்தது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டும்அனுமதிக்கப்பட்ட  இரும்புக்கோட்டையின் கதவுகள் திறக்கப்பட்ட சந்தர்ப்பத்தை   ஒரு அனுபவத்திற்காக பயன்படுத்திக்கொண்டேன். அந்த   அனுபவத்தின்  அடிப்படையில்  எழுதுகின்ற பதிவு இது. 

வாக்கு  எண்ணும்  இடத்தில்  பதினைந்து  மேஜைகள்ஒவ்வொரு  மேஜையிலும்  மூன்று  இருக்கைகள்.  வாக்கு எண்ணும் அலுவலர், ஒரு   உதவியாளர்ஒரு நுண் பார்வையாளர்  என மூவர்.  அந்த மேஜைகள்   ஒரு ப வரிசையில்  அமைக்கப்பட்டிருக்கும்.  மேஜைகளுக்கு  வெளியே  சவுக்குக் கம்புகள், கம்பிகளால் ஆனா தடுப்புக்கள். தடுப்புக்களுக்கு  வெளியே  வேட்பாளர்களின்  முகவர்கள்  நின்று கொண்டிருப்பார்கள். 

ஒவ்வொரு வாக்கு  எண்ணும் இயந்திரமாக  ஒவ்வொரு மேசைக்கும்  கொண்டு வரப்படும்.  கவனிக்க வேண்டிய  விஷயம்  என்னவென்றால்  வாக்குப் பதிவு மட்டுமே  இயந்திரமயமாக்கபபட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை  அல்ல.  ஒவ்வொரு மேசைக்கும்  வேட்பாளர்கள்  பெயர்  அடங்கிய பட்டியல்  தரப்பட்டிருக்கும்.  வாக்குப்பதிவு  இயந்திரத்தில்  என்ன  வரிசையில்  பெயர்கள்  இருந்தனவோ, அதே வரிசையில்தான்  பட்டியலும்  அமைந்திருக்கும்.

வாக்குப்பதிவு  இயந்திரம்  மேஜைக்கு வந்ததும், சீல் நீக்கி, ஒவ்வொரு   வேட்பாளருக்கும்  எவ்வளவு  வாக்கு பதிவானது  என்பதை  அதற்குரிய  பட்டனை அழுத்தி  தெரிந்து கொள்ள வேண்டும்.  அதனை  கொடுக்கப்பட்ட  பட்டியலில்  குறித்துக் கொள்ள வேண்டும். வாக்கு எவ்வளவு  என்ற  தகவலை  இயந்திரத்தை  பார்ப்பதன் மூலம்  முகவர்களும்  அறிந்து  கொள்ள முடியும். ஆனால்  அதற்கான  அவகாசம்  என்பது  மிக மிக குறைவு. திருப்பதி ஜருகண்டி போல, மேஜிக் நிபுணர் சாகசம்  போல  வேகம் வேகமாகத்தான்  காரியங்கள்  நடக்கும். நுண் பார்வையாளரும்

தனியாக  ஒரு பட்டியலில் வாக்கு எண்ணிக்கை  பற்றி தனியாக  பதிவு
செய்து  பார்வையாளரிடம்  அளிக்க வேண்டும். ஜருகண்டி வேகத்தில் சில 
சமயங்களில்  இது சாத்தியமில்லாமல்  போய் தேர்தல்  அலுவலரின் 
விபரத்தை  அப்படியே  நகலெடுத்து  அளிப்பது  என்பதும்  நடந்தது. 

பட்டியலில்  குறித்துக்கொள்வது  என்பதில்தான்  மோசடிக்கான  சாத்தியம்  அடங்கியுள்ளது.  கட்சிகளின் முகவர்களோ  அல்லது நுண்  பார்வையாளர்களோ  விழிப்பாக  இல்லையென்றால்  ஒரு வேட்பாளர்  வாங்கிய வாக்குகளை  வேறு  வேட்பாளரின்  பெயரில்  எழுதி விடுவது  மிகவும் சுலபம். மின்னல் வேகத்தில்  நடைபெறும்  விஷயம்  இது. முகவரோ  அல்லது  நுண் பார்வையாளரோ  விழிப்பாக  இருந்தால் இதை தவிர்க்க முடியும்.  மேற்பார்வையிடும்  அதிகாரிகளுக்கு  இது பற்றி  தெரிய வராது.  அவர்களைப் பொறுத்தவரை  அந்த  இயந்திரத்தில்  பதிவான வாக்குகளும்  அனைத்து  வேட்பாளர்களும்  பெற்ற  வாக்குகளின் கூட்டுத்தொகையும்  ஒன்றாக  இருக்க வேண்டும். அவ்வளவுதான். 

வாக்கு எண்ணிக்கைக்கு இடையிடையே வேட்பாளர்களும் வருவார்கள். அவர்களைப் பார்த்ததும்  அந்தந்த கட்சி முகவர்கள் விழிப்போடு இருப்பது போல நடிப்பார்கள். ஒரு வேட்பாளர், கூட்டணிக்கட்சித் தலைவரோடு கைகளை பிணைத்துக் கொண்டு வந்த போது பக்கத்து மேஜை அலுவலர்கள் என்ன இவனுங்க லவ்வர்ஸ் மாதிரி வராங்க என்று கமெண்ட் அடித்த அசிங்கமும் நடந்தது.  ஆனால் பாவம் அவர் தோற்று விட்டார். எத்தனை பணத்தை இழந்தாரோ?

ஒருவர் பெறும் வாக்கை மாற்றி  எழுதுவது  என்பது  நான் அமர்ந்திருந்த  மேஜையிலேயே   நடந்தது. முதல் சுற்று  எல்லாம்  சரியாகவே  நடந்தது.  அடுத்த சுற்றில்  பதிவான  வாக்குகள்  எவ்வளவு  என்ற எண்ணிக்கையை   அதற்குரிய இடத்தில்  எழுதாமல்   அதற்கடுத்த  இடத்தில்  இருந்த A கட்சி  வேட்பாளர்  இடத்தில்  எழுதினர். நான் சுட்டிக்காட்டியதும், சாரி என்று  சொல்லி  திருத்திக்கொண்டார்.  நான்காவது  சுற்றில்  B கட்சி    வேட்பாளர்  பெற்ற வாக்குகளை  அவரிடத்தில்  எழுதாமல்  வேறு  வேட்பாளரிடம்  எழுதினர். இம்முறை  சற்று  கடுமையாகவே  சொன்னதும் திருத்திக்கொண்டார்.  இதில்  என்ன கொடுமை என்றால்  அந்த சுற்றில்  A கட்சி  300 வாக்கு, B 700 வாக்கு  வேறு கட்சி 100  வாக்கு  பெற்றிருந்தார்கள்  என்று  வைத்துக்கொள்வோம்.  400 வாக்குகள்  அந்தப் பெட்டி மூலமாக  பெற்றிருக்க வேண்டியவருக்கு  100  வாக்கு மட்டுமே கிடைக்கும். தன் முயற்சியில்  சற்றும் தளராத விக்கிரமாதித்தன்  ஏழாவது சுற்றில் மீண்டும்  தன்  வேலையைக் காண்பிக்க  வேதாளம்  கடுமையாகவே  மிரட்ட வேண்டியிருந்தது.  அப்சர்வரிடம் சொல்வேன் என்றதுதான் அந்த மிரட்டல்.  அதன் பின்பு  சுமுகமாகவே நடந்து முடிந்தது.  இந்த வேலைகளையெல்லாம்  எந்த கட்சியின் முகவரும்  உன்னிப்பாக கவனிக்கவேயில்லை. எங்கள் மேஜைக்கு  வாய்ந்த அடிமைகள்  அப்படி!  

இப்படி  எல்லா மேசைகளிலும்  செய்வதற்கான  வாய்ப்பு  உண்டா  என்றால் நிச்சயம்  கிடையாது.  ஆனால்  மொத்தமுள்ள  15 மேசைகளில்  ஏதேனும் மூன்று  மேசைகளில் மட்டும்  செய்கின்றார்கள்  என்று  வைத்துக்கொள்வோம். மொத்தமுள்ள  15 சுற்றுக்களில்  மூன்றே  மூன்று  சுற்றுக்களில்  செய்கின்றனர்  என்று கூட வைத்துக்கொள்ளலாம். மோசடியே கிடைக்கிற வாக்குகள்  வெறும்  இருநூறு என்று மட்டுமே வைத்துக்கொண்டால்  என்ன  ஆகும் என்று பார்ப்போம்.

  3 *3 *200  =  1800 .  

 1800  வாக்குகள்  அதிகமாக  கிடைக்கும்படி செய்துவிட்டால்  போதுமா  என்று கேட்காதீர்கள்.  

 கடந்த  சட்டப்பேரவைத் தேர்தலில்  சிங்காநல்லூர் தொகுதியில் தோழர்  அ.சவுந்தரராஜன்  வெற்றி வாய்ப்பை இழந்தது  வெறும் 14  வாக்குகளில்தான்.  பண்ருட்டியில்  பாமகவின் வேல்முருகன்  வெற்றி  பெற்றது  நூற்றைம்பது  வாக்கு வித்தியாசத்திற்குள்தான். பேராசியர்  வெற்றி பெற்றது 400  வாக்கு வித்தியாசத்தில். மு.க.ஸ்டாலின் கரை சேர்ந்தது  2400  வாக்குகளில்தான். 

 ஆகவே  ஒரே ஒரு மேஜையில்  ஒரு சுற்றில் மோசடி நடந்தாலும்  அது வெற்றி வாய்ப்பை  பாதிக்கும். சிவகங்கை  தொகுதியில் நடைபெற்ற குழப்பங்கள்  நினைவிற்கு  வருகின்றதாநூற்றுக்கு நூறு சரியானது  என்று  இந்த முறையை  சொல்ல முடியாது.  பிரிண்ட்  ஆப்ஷன் இணைக்க  முடியுமாவாக்கு என்னிக்கையன்று  அந்த பிரிண்டை  வெளியே  எடுக்க முடியுமா  என்றெல்லாம் தேர்தல் ஆணையம்  யோசித்தால்  நல்லது. 

 அதுவரை கட்சிகளின் முகவர்கள்  மற்றும் நுண் பார்வையாளர்கள்  கடைசிவரை   விழிப்பாக   இருப்பதுதான்  ஒரே வழி! 

வாக்கு எண்ணிக்கை முடிந்த கையோடு ஐநூறு ரூபாய் பணமும் கொடுத்தார்கள். முடிவை அறிவித்ததும் வீட்டிற்கு போகச் சொல்லி விட்டார்கள். ஆறு முப்பதிற்கு உள்ளே  நுழைந்தவர்கள் 12.30 க்கு வெளியே வந்து விட்டோம். வெற்றி பெற்ற கட்சியினர் வெடித்த பட்டாசுகள் மத்தியில் சாலையில் செல்வதுதான் சிரமமாக இருந்தது.

 இப்போது எழுதப் போவது புதிது.

 வாக்கு எண்ணிக்கையில் கூடுதல் அம்சமாக  Voter verifiable paper audit trail (VVPAT என்பது சேர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவர் பெறும் வாக்குகளை இயந்திரத்திலிருந்தே பிரிண்ட் அவுட் ஆக எடுப்பது. அனைத்து இயந்திரங்களிலும் இது உண்டு.

 ஆனால்

 எல்லா இயந்திரங்களிலும் உள்ள பிரிண்ட் அவுட் வெளியே எடுக்கப்படுவதில்லை. தொகுதிக்கு ஒரு மேஜை மட்டும் VVPAT முறையிலான வாக்கு எண்ணிக்கைக்கு ஒதுக்கப்படுகிறது.

 ஏதேனும் குழப்பங்கள் வந்தால் மட்டும் மற்ற பெட்டிகளில் இந்த முறை பயன்படுத்தப்படும் என்ற நிலைதான் உள்ளது.

 மோடி-ஞானேஷ் குமார் கூட்டணி வந்த பின்பு பல குற்றச்சாட்டுக்கள் வருகிறது. வாக்கு எண்ணிக்கை சதவிகிதம் முதல் அறிவிப்புக்கும் இறுதி அறிவிப்புக்கும் இடையிலும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கு இடையிலும் மாறுகிறது. இப்படிப்பட்ட ஃப்ராடு வேலையைத்தான் பீகாரிலும் மராட்டியத்திலும் தேர்தல் ஆணையம் செய்தது. 

 எனவே VVPAT முறையை அனைத்து இயந்திரங்களுக்கும் அமலாக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் முடிவுகள் துல்லியமாக இருக்கும். மோசடிக்கான வாய்ப்புகள் குறையும், மோடிக்கான வாய்ப்பும் கூட.