Showing posts with label சிப்பாய் புரட்சி. Show all posts
Showing posts with label சிப்பாய் புரட்சி. Show all posts

Wednesday, July 10, 2024

மலர் வளையத்துடன் வீர வணக்கம்

 





அடிமைத்தளையை அறுத்தெரிய,

சுதந்திரக்காற்றை சுவாசிக்க
மத ஒற்றுமையின் அடையாளமாய்
குருதி சிந்தி  இன்னுயிர் நீத்த
வேலூர் சிப்பாய் புரட்சி வீரர்களுக்கு
சுதந்திரப் போர் தியாகிகளுக்கு
216 வது வருட நினைவு தினமான இன்று
சிப்பாய் புரட்சி தியாகிகள் நினைவுச்சின்னத்தில்
எங்கள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் சார்பில்
மலர் வளையம் வைத்து
வீர வணக்க முழக்கமிட்டு

அஞ்சலி செலுத்தினோம்.

Monday, July 11, 2022

மத அடையாளம் மறந்தால் மத்யமருக்கு ????

 


அடிமைத்தளையை அறுத்தெறிய   என்று நேற்று எழுதிய பதிவை மத்யமர் முக நூல் குழுவிலும் பதிவு செய்தேன். 

ஆனால் அந்த பதிவு நிராகரிக்கப்பட்டது.

காரணம் என்னவென்று பாருங்கள்.

அடப்பாவிகளா! இதிலென்னய்யா மத சார்பு இருக்கிறது என்று பார்த்தால் "மத அடையாளம் மறந்து" என்ற வார்த்தை மத்யமர் மேதைகளுக்கு மத சார்புள்ளதாக தெரிந்தது வினோதமாகவே உள்ளது.

சரி, வேலூர் புரட்சி பற்றிய செய்தி செல்லட்டும் என்பதால் அந்த ஒரு வார்த்தையை நீக்கி மறுபடியும் பதிவு செய்தேன். 

இப்போது காரணம் எதுவும் சொல்லாமலேயே நிராகரிக்கப்பட்டது.


இப்போதுதான் எனக்கு உண்மையான காரணம் புரிந்தது. 

சுதந்திரப்போராட்டத்தை காட்டிக் கொடுத்த கூட்டத்தின் வாரிசுகள் பெரும்பான்மையாவர்கள் உள்ள குழுவில் விடுதலைப் போராட்டம் பற்றி எழுதினால் எப்படி அனுமதிப்பார்கள் !!!!

"மத அடையாளம் மறந்து" என்ற வார்த்தையை மத சார்புள்ளதாக கருதி சர்ச்சை உருவாகும் என்று கதைக்கும் குழுவில்தான்




இதோ, இந்த ஜாதி அடையாளம் தெரியும் படத்தைப் போட்டு பதிவு எழுதுமாறு கேட்கிறார்கள். . .

என்ன கொடுமை சார் இது?????

பிகு: இப்பதிவை அக்குழுவின் அட்மினுக்கு அனுப்பவுள்ளேன். என்ன எதிர்வினை வருகிறது என்று அறிய  ஐ யம் வெயிட்டிங். 


Sunday, July 10, 2022

அடிமைத்தளையை அறுத்தெரிய

அடிமைத்தளையை அறுத்தெரிய
சுதந்திரக் காற்றை சுவாசிக்க
மத அடையாளம் மறந்து
செங்குருதி சிந்தி 
இன்னுயிர் நீத்த
வேலூர் சிப்பாய் புரட்சி வீரர்களுக்கு
வீர வணக்கம் செலுத்திய  நாள்
இன்று.




விடுதலைக்கான முதல் குரல் ஒலித்த நாளில்
இன்சூரன்ஸ் ஊழியர்களின் அஞ்சலி.

Friday, July 10, 2020

கொரோனா காலமாக இருந்தாலும் . . .




வேலூர்காரர்களுக்கு  எப்போதுமே ஒரு பெருமிதம் உண்டு.

இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கான முதல் குரல் ஒலித்த மண் என்பதால் வரும் பெருமிதம் அது.

வேலூர் சிப்பாய்ப் புரட்சி தோற்டிக்கப்பட்டு அதிலே பங்கேற்றவர்கள் மூர்க்கத்தனமாக கொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் பிரிட்டிஷ் ராணுவம் ஒன்றும் முறியடிக்கப்பட முடியாத ஒன்றல்ல என்பதை சாதித்துக் காட்டியவர்கள் வேலூர் சிப்பாய்கள்.

வேலூர் கோட்டையில் பறந்து கொண்டிருந்த இங்கிலாந்தின் யூனியன் ஜாக் கொடியை கீழிறக்கி திப்பு சுல்தானின் புலிக் கொடியை பறக்க விட்ட பெருமையும் வேலூர் சிப்பாய்களுக்கே உண்டு.

வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மத வேறுபாடு இல்லாமல் ஒன்றிணைந்து போராடி மத நல்லிணக்கத்தின், மத ஒற்றுமையின் அடையாளமாக திகழ்கின்ற பெருமையும் கூட அவர்களுக்கே சொந்தம்.

வேலூர் சிப்பாய்ப் புரட்சி பற்றி இது வரை அறியாதவர்கள் அது பற்றி அறிந்து கொள்ள கீழே உள்ள இணைப்பைப் பார்க்கவும்.


கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் ஐம்பதுக்கும் குறையாத எண்ணிக்கையில் தோழர்களோடு வேலூர் மக்கான் கார்னரில் உள்ள சிப்பாய் புரட்சி தியாகிகள் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தி வருகிறோம்.

இந்த கொரோனா காலத்தில் என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது. ஐந்து பேருக்கு மேல் கூடக் கூடாது என்று 144 தடைச்சட்டம் அமலில் இருப்பதால் அதை புறக்கணித்து தோழர்களை திரட்டவும் தயக்கமாக இருந்தது. என்னதான் நல்ல விஷயம் என்றாலும் காவல்துறை என்ன வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் அல்லவா? அதே நேரம் நம் மண்ணுக்காக போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தாமல் இருக்கவும் மனமில்லை.

அதனால் ஐந்து சங்கப் பொறுப்பாளர்கள் மட்டும் சென்று நினைவுச் சின்னத்தில் மலர் தூவி விட்டு வரலாம் என்று முடிவு செய்து சென்றோம்.

மாவட்ட நிர்வாகம் கொரோனா காலம் என்பதால் எந்த குறையும் வைக்கவில்லை. நினைவுச் சின்னத்தில் வழக்கமான மலர் அலங்காரம் சிறப்பாகவே இருந்தது.



நினைவுச் சின்னத்தின் உள்ளே செல்ல முடியாத படி வாசலிலேயே தடை ஏற்படுத்தி இருந்தார்கள். ஐவரில் இருவர் முதலில் சென்றவுடன் ஒரு  உதவி ஆய்வாளர் உட்பட மூவர் உடனடியாக வந்து விட்டார்கள். மலர் தூவி அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பி விட்டோம்.




நாங்கள் மட்டும் புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை.

காவல்துறையும் எங்களை புகைப்படம் எடுத்தது, அவர்கள் பதிவுகளுக்காக.

கொரோனா காலமாக இருந்தாலும் தியாகிகளுக்கு உரிய முறையில் வீர வணக்கம் செய்தோம் என்பது மனதிற்கு நிறைவளித்தது.

Wednesday, July 10, 2019

இந்தியாவுக்கு முக்கியமான நாள் இன்று . . .

சில வருடங்களுக்கு முன்பு எழுதிய பதிவையே மீண்டும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அடிமைத்தளையை அறுத்தெரிய
சுதந்திரக் காற்றை சுவாசிக்க
மத அடையாளம் மறந்து
செங்குருதி சிந்தி 
இன்னுயிர் நீத்த
வேலூர் சிப்பாய் புரட்சி வீரர்களுக்கு
வீர வணக்கம் செலுத்து நாள்
இன்று.

விடுதலைக்கான முதல் குரல் ஒலித்த நாள் இன்று.



இந்திய வரலாற்றில் இன்று மிக முக்கியமான நாள். இருநூற்று ஒன்பது ஆண்டுகள் முன்பு இந்த நாளில்தான் வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவில் முதல் சுதந்திரப் போர் நடந்தது. வெயிலூர் என இன்று சிலர் கிண்டல் செய்கின்றனரே, அந்த வேலூர்தான் இந்திய சுதந்திரத்தின் முதல் முழக்கம் எழுப்பப்பட்டது என்பதை எத்தனை பேர் அறிவார்?

இந்த நாளில் ஆம் ஜூலை மாதம் பத்தாம் தேதி,

இருநூற்று ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆம் 1806 ம் வருடம்,

நடந்த சம்பவம் அது. இந்தியராய்ப் பிறந்தவர், தமிழராய் வாழ்பவர் கண்டிப்பாய் அறிந்து கொள்ள வேண்டிய உணர்வூட்டும் நிகழ்வு அது.

வாருங்கள், கொஞ்சம் வேலூர் கோட்டை வரை சென்று வரலாம்.

பிரிட்டிஷ் ராணுவத்தின் நான்கு படைப் பிரிவுகள் வேலூரில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இந்திய வீரர்களும் பிரிட்டிஷ் வீரர்களும் இணைந்த படை அது. சம வேலைக்கு சம ஊதியம் என்பது இப்போதே இல்லாத போது அந்தக் காலத்தில் எப்படி இருக்கும்! பிரிட்டிஷ் வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே ஊதியத்தில், சலுகைகளில், உரிமைகளில் என எல்லாவற்றிலும் ஏராளமான வேறுபாடுகள் இருந்தன. இழிவாக நடத்தப்பட்டார்கள். காரணங்கள் தேடித் தேடி தண்டனை கொடுக்கப்பட்டார்கள்.

எத்தனை நாட்கள் குமுறல்கள் மனதிற்குள்ளேயே அடங்கிக் கிடக்கும்? உணர்வுள்ள வீரர்கள் அடிமைத்தளையை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்? பிரிட்டிஷ் படையிலிருந்த இந்திய வீரர்கள் இந்து முஸ்லீம் என்ற வேறுபாடு இல்லாமல் ஒன்றுபட்டார்கள். நம்மை அடக்கியாளும் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு பாடம் கற்றுக் கொடுப்பது என்று முடிவு செய்தார்கள். வேலூர் கோட்டையில் ராணுவமும் இருந்தது. ஒரு மாளிகையும் சிறையாக மாற்றப்பட்டு அங்கேதான் பிரிட்டிஷாரை அச்சுறுத்திய மாவீரன்  திப்பு சுல்தானின் வாரிசுகளும் சிறை வைக்கப்பட்டிருந்தார்கள்.

சிறைக்குள்ளேயே திப்பு சுல்தானின் மகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தனர். நாள் குறிக்கப்பட்டது. தாக்குதலுக்கு தயாராக இருந்தார்கள். ஒற்றனோ இல்லை உள்ளேயே இருந்து காட்டிக் கொடுத்த துரோகியோ, யார் மூலமாகவோ செய்தி பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குச் சென்று விட்டது.

அதனால் திட்டமிட்ட நாளுக்கு முதல் நாளே இந்திய வீரர்கள் பிரிட்டிஷ் வீரர்களையும் தாக்கத் தொடங்கினர். யாருக்கு இத்தனை நாள் சல்யூட் அடித்துக் கொண்டிருந்தார்களோ, யாருடைய உத்தரவுக்கு அடிபணிந்து அடிமைச் சேவகம் செய்து கொண்டிருந்தார்களோ, அவர்களை அந்த பிரிட்டிஷ் அதிகாரிகளை தாக்கினார்கள். முதலாளித்துவம் தனக்கான சவக்குழியை தானே வெட்டிக்கொள்ளும் என்று சொன்னார் மாமேதை காரல் மார்க்ஸ். பிரிட்டிஷ் படையின் துப்பாக்கிகளும் பீரங்கிகளும் அவர்களையே குறி பார்த்து சுட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட வெள்ளை அதிகாரிகளும் சிப்பாய்களும் இறந்து போயினர். வேலூர் கோட்டை இந்திய வீரர்களின் கைகளுக்கு, கட்டுப்பாட்டிற்கு வந்தது.

இங்கிலாந்து சாம்ராஜ்யத்தின் யூனியன் ஜாக் கொடி வேலூர் கோட்டையின் கொத்தளத்திலிருந்து கீழே இறக்கப்பட்டது. இந்திய சிப்பாய்கள் அடைந்த வெற்றியின் அடையாளமாக திப்பு சுல்தானின் புலிக் கொடி அங்கே ஏற்றப் பட்டது. நினைவில் கொள்ளுங்கள். சூரிய அஸ்தமனமே கண்டிராத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்று வர்ணிக்கப்பட்ட இங்கிலாந்து ஏகாதிபத்தியத்தின் கொடி முதலில் கீழிறக்கப்பட்டது வேலூரில்தான். காலனியாதிக்கத்தின் அஸ்தமனத்திற்கு தொடக்கவுரை எழுதப்பட்டது வேலூர் கோட்டையில்தான்.

துரதிர்ஷடவசமாக இந்த வெற்றியும் மகிழ்ச்சியும் நீடித்தது ஒன்பது மணி நேரம்தான். அருகிலிருந்த ஆற்காட்டிலே குவிக்கப்பட்டிருந்த பெரும்படை வேலூர் நோக்கி விரைந்தது. கர்னல் கில்லஸ்பி என்ற தளபதியின் தலைமையில் வந்த படையின் முன்னே இந்திய சிப்பாய்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை. நானூறுக்கும் மேற்பட்ட இந்திய சிப்பாய்கள் கொல்லப்பட்டார்கள். பிடிபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய சிப்பாய்களை பீரங்கிகளின் வாயில் கட்டி வெடிக்கச் செய்து சிதறடித்துக் கொன்றான் கில்லஸ்பி. வேலூர் கோட்டையைச் சுற்றி ஓடும் அகழி முழுதும் இந்திய வீரர்களின் குருதியால் சிவப்பானது. ரத்த ஆறுதான் ஓடியது.

பிரிட்டிஷ் அரசு எழுதிய வரலாறு இத்தியாகத்தை “வேலூர் சிப்பாய் கலகம்” என்றுதான் பதிவு செய்திருந்தது. சுதந்திர இந்தியாவின் அரசும் தனது ஆவணங்களில் கலகம் என்றே குறிப்பிட்டு வந்தது. “வேலூர் சிப்பாய் புரட்சி” என்றே அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்ததே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான்.2006 ம் ஆண்டு வேலூர் சிப்பாய்கள் புரட்சியின் இருநூறாவது ஆண்டின் போதுதான் தமிழக அரசு அக்கோரிக்கையை ஏற்றுக் கொண்டது.

வேலூர் சிப்பாய்ப் புரட்சி இரண்டு முக்கியமான படிப்பினைகளைத் தருகிறது.

இந்திய வீரர்களின் முயற்சி தோற்றுப் போயிருக்கலாம். ஆனால் பின்னாளில் உருவான எழுச்சிக்கு இவர்கள்தான் உரமாய் இருந்தார்கள். எவராலும் தோற்கடிக்க முடியாதவர்கள் என்று கருதப்பட்ட இங்கிலாந்து ராணுவத்தையும் வெல்ல முடியும் என்று நிரூபித்தவர்கள் வேலூர் சிப்பாய்கள். இந்து சிப்பாய்களும் முஸ்லீம் சிப்பாய்களும் ஒற்றுமையாய் போராடி மத நல்லிணக்கத்திற்கு உதாரணம் படைத்தார்கள்.

இன்றுள்ள சூழலில் இந்திய சுதந்திரமும் கேள்விக்குறியாக மாற்றப்பட்டு வருகிறது. ஒரு கிழக்கிந்திய கம்பெனியின் இடத்தில் பல பன்னாட்டுக் கொள்ளைக் கம்பெனிகள். விளைவுகள் என்னவென்று தெரியாமல் கிழக்கிந்திய கம்பெனியை வணிகம் செய்ய முகலாய அரசர் ஜஹாங்கீர் அனுமதித்தார். கடைசியில் அவரது வம்சத்தின் இறுதி வாரிசு “பகதூர் ஷா” வை வெள்ளையர்கள் ரங்கூனுக்கு நாடு கடத்தினார்கள்.

ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் தெரிந்தே செய்கிறார்கள். ஆனால் அவர்கள் நாடு கடத்தப்பட மாட்டார்கள். சொந்த நாட்டிலேயே அடிமைகளாக நாம்தான் மாற்றப்படுவோம்.

மத நல்லிணக்கத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலும் இப்போது உருவாகி உள்ளது. ஒற்றுமையை சிதைப்பதற்கென்றே பல விரியன் பாம்புகள் அங்கங்கே விஷம் கக்கி வருகின்றன.

சுதந்திரத்தையும் மத நல்லிணக்கத்தையும் பாதுகாப்போம். அதற்கு எதிரான சக்திகள் யாராக இருந்தாலும் அவர்களை முறியடிப்போம் என்று நாம் ஒவ்வொருவரும் சபதமெடுப்பதே இந்திய சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த வேலூர் சிப்பாய்களுக்கு நாம் செய்யும் மரியாதை.

வேலூர் சிப்பாய்ப் புரட்சி வீரர்களுக்கு வீர வணக்கம்

Saturday, July 11, 2015

வேலூர் மக்களுக்கோர் நற்செய்தி

இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் இந்திய முதல் சுதந்திரப் போரான  வேலூர் சிப்பாய் புரட்சியின் இருநூற்றி ஒன்பதாவது ஆண்டை முன்னிட்டு வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் மண்டி வீதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஒரு நிகழ்ச்சி நடத்தறாங்க.

அதில சாரல் கலைக்குழுவோட தப்பாட்டம், ஒயிலாட்டம் எல்லாம் உண்டு.

புதுகை பூபாளம் கலைக்குழு பாடப் போறாங்க. 

திருவண்ணாமலை கருணாவும் சாத்தூர் லட்சுமணப் பெருமாளும் பேசப் போறாங்க.

சாயங்காலம் ஐந்தரை மணிக்கு அவசியமா வாங்க. சிரிங்க, ரசிங்க்,
சிந்திக்கவும் செய்யலாம்.

வேலூர்க்காரங்க மட்டுமல்ல பக்கத்துல இருக்கிற ஆற்காடு, ராணிப்பேட்டை, ஆரணி, கண்ணமங்கலம், கணியம்பாடி, குடியாத்தம் இவங்க எல்லாம் கூட கண்டிப்பா வாங்க.