Sunday, August 16, 2020

அன்னலட்சுமிகளை அழிக்கவே . . .


தலைமையாசிரியர் தோழர் இரா.எட்வின் அவர்களின் முக நூல் பதிவு. இந்தியா முழுதும் இது போல ஆயிரக்கணக்கான அன்னலட்சுமிகள் இந்தியா முழுதும் இருக்கிறார்கள். ஐந்தாம் வகுப்பிலிருந்து பொதுத்தேர்வு நடத்தி இது போன்ற அன்னலட்சுமிகளின் கல்வியை பறிப்பதுதான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம். 

அதனை எதிர்க்க வேண்டியது நம் கடமை


 அன்னலட்சுமி 191

**************************

சென்ற ஆண்டு இதேபோல பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்த நேரம்

பள்ளிக்குப் புறப்படும் முன் அலைபேசியில் நிவாசை அழைத்தேன்

அவன்தான் பள்ளியின் தேர்வு முடிவுகளை தரவிரக்கம் செய்து நகலெடுத்துக் கொண்டிருந்தான்

”அன்ன” என்று நான் தொடங்கிய அதே நேரத்தில் நிவாசும் “அன்ன” என்று சொல்லவே நிறுத்திவிட்டோம்

மீண்டும் நான் ”அன்ன” என்று சொன்ன அதே நேரத்தில் அவனும் “:அன்ன “ சொல்ல மீண்டும் நிறுத்தினோம்

இப்படியாகவே இன்னும் இரண்டு மூன்றுமுறை நிகழ்ந்தபிறகு

நான் பேசாமல் கேட்பது என்று முடிவெடுத்து விட்டேன்

சொன்னான்,

“அன்னலட்சுமி பாஸ் சார்”

நான் கேட்க நினைத்தது

“அன்னலட்சுமி பாசா நிவாஸ்?”

அவன் தொடர்ந்து சொல்ல நினைத்ததும்,

”அன்னலட்சுமி பாஸ்” என்பதைத்தான்

மார்க் எவ்வளவு?

191

“ஆகா”

ஐநூறுக்கு நானூற்றி சொச்சம் எடுத்த குழந்தைகள் நிறைய இருக்கிறார்கள்.

அன்னலட்சுமி 191 எடுத்திருக்கிறாள்

பள்ளிக்குப் போகிறேன்

அன்னலட்சுமியும் அவளது அம்மாவும் நிற்கிறார்கள்

வழக்கமாக அழுக்குச் சீருடையோடு வரும் அவள் புதுப் பாவடை சட்டையோடும், நன்கு வாரப்பட்ட உலர் தலையோடும் தேவதை மாதிரி வந்திருக்கிறாள்

அவளது அம்மாவும் புதுப் புடவையோடு

கைகளில் ஒரு கிலோ கேக்

என்ன இதெல்லாம்?

பாசாயிட்டேன்

அய்ய்ய்யோ

வெட்கத்தோடு சிரிக்கிறாள்

கையை நீட்டுகிறேன். வந்து அணைந்து கொள்கிறாள்

கேக்கெல்லாம் எதுக்கு புள்ள

வெட்டத்தான்

சரி வெட்டு

இருங்க கணக்கு சார் வரட்டும்

கனகு சார் இடைமறித்து சொல்கிறார்,

நிவாஸ் கேட்டப்ப பெரிய சார் வரட்டும்னா சார். நிவாஸ் கடைக்கு போயிருக்காப்ள.

நிவாஸ் வருகிறான்

வெட்டிய கேக்கின் முதல் துண்டை தேடிச் சென்று நிவாசிடம் தருகிறாள்

எல்லாம் முடிந்ததும்

என்ன க்ரூப் தருவீங்க?

என்ன க்ரூப் வேண்டும்?

பர்ஸ்ட் க்ரூப்

நிவாசைப் பார்க்கிறேன்

சிரித்துக் கொண்டே சொல்கிறான்

குடுங்க சார் பார்த்துக்கலாம்

இப்படியாக சென்ற ஆண்டின் பதினோராம் வகுப்பிற்கான முதல் சேர்க்கை துவங்கியது

நானூற்றி சொச்சம் மதிப்பெண் எடுத்துள்ள குழந்தைகளைப் பற்றி பேசாமல் 191 எடுத்த அன்னலட்சுமியைப் பற்றி ஏன் பேசிக்கொண்டிருக்கிறோம்?

முதல் க்ரூப் கேட்டதும் நான் ஏன் நிவாசைப் பார்த்தேன்

கொஞ்சம் பின்னோக்கிப் போக வேண்டும்

பத்தாம் வகுப்பு படிக்கும்போது அன்னலட்சுமி ஒழுங்காகப் பள்ளிக்கு வரமாடாள். எப்படியும் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டம் போட்டு விடுவாள்

எங்கள் பள்ளியில் ஒரு வழக்கம் உண்டு

பள்ளிக்கு வராத பத்தாம் வகுப்புக் குழந்தைகளின் பட்டியல் பள்ளி தொடங்கியதும் கண்ணன் மற்றும் நிவாசிடம் வந்து விடும்

கண்ணன் பத்தாம் வகுப்பின் ஒரு பிரிவிற்கான கணக்கு ஆசிரியர்

நிவாஸ் மற்றொரு பிரிவிற்கான கணக்கு ஆசிரியர்

அவர்கள் அந்தப் பிரிவேளை தங்களுக்கு வகுப்பு இருப்பின் மாற்று ஏற்பாடு செய்துவிட்டு தேடிப் போய் பிள்ளைகளை கொண்டுவந்து விடுவார்கள்

சனி ஞாயிறு சிறப்பு வகுப்புகளின்போதும் அப்படியே

இதில் அன்னலட்சுமி நிவாஸ் வகுப்பு

ஒருநாள் அன்னலட்சுமியின் அம்மா வகுப்பிற்கு வந்து நிவாசை கெட்ட வார்த்தைகளால் வறுத்தெடுத்துக் கொண்டிருப்பதாகத் தகவல் வருகிறது

கிளம்புவதற்குள் அவர்களே தலைமை ஆசிரியர் அறைக்கு வருகிறார்கள்

நிவாசும் கோவத்தின் உச்சியில் இருக்கிறான்

அன்னலட்சுமியின் அம்மாவும் அப்படியே

சர்டிபிகேட்ட கொடுங்க. பெரிய பள்ளிக்கூடம், பெரிய கணக்கு, பெரிய கணக்கு சார்

இப்படியாகத் தொடங்குகிறது அன்னலட்சுமியின் அம்மாவின் கோவத் தெறிப்பு

அவரும் என்னிடம் படித்தவர்தான்

சிரிப்பு வருகிறது எனக்கு. அடக்குகிறேன். சிரித்தால் நிவாஸ் கொன்றே போடுவான் என்பது தெரியும்

என்ன நடந்தது?

வழக்கம்போல அன்னலட்சுமி அன்றும் பள்ளிக்கு வரவில்லை

வழக்கம்போல நிவாஸ் வீட்டிற்கு சென்று அவளை அழைத்து வந்து விட்டான்

இதுவரை பிரச்சினை இல்லை. அவளது அம்மாவைப் பார்த்த்தும் கொஞ்சம் கோவப்பட்டு “என்னம்மா புள்ளய வளர்க்கறீங்க?” என்று கத்தியிருக்கிறான்.

அவ்வளவுதான்

அவர் எப்படி அப்படி சொல்ல்லாம். எங்க புள்ளய எங்களுக்கு வளர்க்கத் தெரியாதா?

சரி அதுக்கு என்னாங்கற இப்ப?

டீசி குடுங்க. போறோம்.

எங்க போவ?

எங்கயோ போறோம். கண்ட கண்ட ஆளுங்ககிட்டல்லாம் பேச்சு வாங்கத் தேவை இல்ல

“கண்ட கண்ட” என்கிற வார்த்தை நிவாசை உசுப்பிவிட்டது

அடக்குகிறேன்

ஏய், எழுந்தன்னா அரஞ்சே கொன்னுடுவேன். வீட்டுக்குப் போ புள்ள

”ம், என்னையே திட்டுங்க. ஒங்க சார ஒன்னும் சொல்லாதீங்க.”

சிணுங்கியவாறே நகர்கிறாள்

உனக்கு தனியா சொல்லனுமா. போ புள்ள க்ளாசுக்கு

அன்னலட்சுமியும் போய்விடுகிறாள்

நிவாசைப் பார்க்கிறேன்

கண்கள் கலங்கி இருக்கிறது. கைகளைப் பற்ரிக் கொள்கிறேன்.

“க்ளாசுக்கு போ நிவாஸ்”

நிற்கிறான்

போப்பா

படிக்கத்தான சார் கூப்டேன். அந்தக் கத்துக் கத்துது. வேணா எல்லாரையும் கேட்டுப் பாருங்க சார்

நீ சொன்னாப் பத்தாதா நிவாஸ். போப்பா

பெத்தவங்களுக்கே அக்கறை இல்ல

யாரு நிவாஸ் பெத்தவங்க. அவங்களுக்கு என்ன தெரியும். இல்ல தெரிஞ்சா இப்படி பேசுவாங்களா? நீதான்பா பெத்தவன்

போகிறான்

அதே அன்னலட்சுமிதான்

அதே நிவாசைத் தேடிச் சென்று கேக்கை ஊட்டுகிறாள்

அம்மாவும் பிள்ளையுமாய் அவன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார்கள்

அதே நிவாஸ்தான் முதல் பிரிவு தாங்க சார் பார்த்துக்கலாம் என்கிறான்

பள்ளி துவங்கி ஒரு வாரம் போயிருக்கும்

வருகிறாள்

என்ன அன்னலட்சுமி க்ரூப் மாத்தனுமா

ஆமாம், எப்படி சார் தெரியும்

க்ரூப் கொடுக்கறப்பவே தெரியும். சரி என்ன க்ரூப் வேணும்

வொகேசனல்

சரி தமிழ்ச்செல்வி டீச்சர்ட்ட புத்தகங்கள மாத்திக்கோ

பத்தாம் வகுப்பில் வாரம் இரண்டு நாள் மட்டம் போடும் அன்னலட்சுமி பதினோராம் வகுப்பில் ஒருநாள்கூட விடுப்பெடுக்கவில்லை

பதினோராம் வகுப்பில் 275 மதிப்பெண் எடுத்திருக்கிறாள்

அதாவது

பத்தாம் வகுப்பில் 38 சதவிகிதம்

பதினோராம் வகுப்பில் 46 சதவிகிதம்

ஒருநாள் அன்னலட்சுமி குறித்த பேச்சு வந்தபோது நிவாசிடம் கேட்கிறேன்,

அன்றைக்கு அன்னலட்சுமிக்கு டிசி கொடுத்திருந்தா?

அய்யோ நெனச்சே பார்க்க முடியல சார். இனி யாருக்கும் டிசி தரச் சொல்லவே மாட்டேன்.

அன்னலட்சுமி நமக்கான பாடப் புத்தகம்.

பிகு:
இது மிகவும் முக்கியமான, நெகிழ்ச்சியான, சீரியஸான பதிவு. 

ஆனாலும் பதிவின் தொடக்கத்தில் வரும் தொலைபேசி உரையாடலை படிக்கையில் "கட்சிக்காரருக்கு போன் செய்து உரையாட முடியாமல் வடிவேலு தடுமாறிய காட்சி" மனதில் தோன்றியது என்பதை மனசாட்சியோடு ஒப்புக் கொள்கிறேன்.



No comments:

Post a Comment