Tuesday, July 30, 2013

தெலுங்கானா அறிவிச்சாச்சு, இனிமே பாலும் தேனும்தான் ஓடப் போகுது!

ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க காங்கிரஸ்
கட்சி முடிவு அறிவித்து விட்டது.

சமச்சீரற்ற வளர்ச்சிதான் இந்த கோரிக்கைக்கான காரணம் என்று பலரும்
சொல்லிக் கொள்கிறார்கள். புதிய மாநிலம் வருவதால் வளர்ச்சி வரும்
என்றால் அது வெறும் மாயை மட்டுமே.

வளர்ச்சி வரும். அது மக்களுக்கான வளர்ச்சி இல்லை. ஊழல் தாகம்
கொண்ட அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்குமான வளர்ச்சி.
மொழிவாரி மாநிலங்கள் என்ற அடிப்படையைத் தகர்த்து நிர்வாக
வசதிக்காக என்று பாஜக பிரித்த உத்தர்கண்ட், ஜார்கண்ட், சத்திஸ்கர்
மாநிலங்களின் நிலைமை என்ன?

பழைய ஊழல் பெருச்சாளிகளுக்குப் பதிலாக புதிய ஊழல் முதலைகள்
உருவானது. மது கோடா போன்ற சுயேட்சை எம்.எல்.ஏ க்கள் முதல்வராய்
மாறி ஒரு வருடத்திற்குள் நான்காயிரம் கோடி துட்டு சம்பாதிக்க
முடிந்தது.

சிபு சோரேன் போன்ற ஆட்கள் கூட்டணி மாறி மாறி முதல்வர் 
நாற்காலியை விளையாட்டுப் பொருட்களாக்க முடிந்தது. மற்றபடி
இந்த மாநிலங்கள் துரும்பளவு வளர்ச்சி கூட அடையவில்லை.

இப்போது தெலுங்கானா அமைவதால் யாருக்கு லாபம்?

நாங்கள்தான் முடிவெடுத்தோம் என்று காங்கிரஸ் கட்சியும்
எங்கள் போராட்டம்தான் காரணம் என்று தெலுங்கானா ராஷ்டிர
சமிதியின் சந்திரசேகர் ராவும் மோதிக்கொள்ளப் போகிறார்கள்.
தெலுங்கானா வந்தால் நல்லது என்று அப்பாவித்தனமாக 
நினைத்து போராடிய மக்களுக்கு நல்லது எதுவும் கிடைக்கப்
போவதில்லை.

அடுத்து ஹைதராபாத் பிரச்சினை.

பத்தாண்டுகள் ஹைதராபாத்  இரு மாநிலங்களுக்கும் தலைநகராய்
இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 

பஞ்சாப் மாநிலத்திலிருந்து ஹரியானா மாநிலம் 1966 ல் பிரிக்கப்
பட்டது. சண்டிகர் பஞ்சாபின் தலைநகராக இருக்கும் என்றும்
ஹரியானா மாநிலத்திற்கு புதிய தலைநகர் உருவாகும் வரை
அதற்கும் சண்டிகரே தலைநகராக இருக்கும் என்று முடிவு
செய்யப்பட்டது.

எங்களுக்கே சண்டிகர் வேண்டும் என்று இரண்டு மாநிலங்களும்
சண்டையிட்டதால் அப்பிரச்சினை தீர்க்கப்படவேயில்லை. மாறாக
சண்டிகர் ஒரு தனி யூனியன் பிரதேசமாகி விட்டது. ஹைதராபாத்
நிலைமையும் அப்படியாகக் கூடிய வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

விதர்பா, போடோலேண்ட், கூர்க்காலாண்ட், புந்தல்கண்ட் ஆகிய
மாநிலங்களுக்கான கோரிக்கைகளும் மீண்டும் தூசி தட்டி
எழுப்பப்படுகிறது.  இனி புதிய புதிய மாநிலங்களுக்கான
கோரிக்கைகள் வந்து கொண்டே இருக்கப் போகிறது.

பார்ப்போம் இனி தெலுங்கானா பகுதியில் பாலும் தேனும்
பெருக்கெடுத்து ஓடப் போகிறதா என்று....

ஒரு கொள்ளிக்கட்டையின் மூலம் தேன் கூட்டைக் கலைத்து,
அந்தக் கொள்ளிக்கட்டையை தன் தலை மீதும் சோனியா காந்தி
வைத்துக் கொள்வதாய் ஒரு நான்கு வருடங்களுக்கு முன்பு
ஹிந்து இதழ் ஒரு கார்ட்டூன் வெளியிட்டது. 

இப்போது நடந்துள்ளது அதுதான்
 

 

உயிரோடு இருப்பவரை மேலே அனுப்பும் பொறுப்பற்ற ஜென்மங்கள்

இன்று மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட, பரப்பப்பட்டது
நடிகை கனகா பற்றிய செய்தியே.
டெத் சர்டிபிகேட்  பார்த்து விட்டுத்தான் ஹிந்து பத்திரிக்கையில்
செய்தி போடுவார்கள் என்று விமர்சனம் வந்ததுண்டு. அந்த
பொறுப்புணர்வு அவசியம் என்பதை இன்றைய நிகழ்வு
நிரூபித்து விட்டது.

முகநூலிலும் எவ்வளவு வேகமாக எத்தனையோ பேர்
செயல்பட்டார்கள்.
 
யப்பா! எத்தனை அஞ்சலி செய்திகள்!
எத்தனை இரங்கல்கள்!
 
அத்தனையும் இப்போது பொய்யாகிப் போனது
மகிழ்ச்சியாக உள்ளது.

சில நாட்கள் முன்பு நெல்சன் மாண்டேலே,
இப்போது கனகா
 

கனகா விரைவில் நலம் பெறட்டும்.
ஊடகங்கள் பொறுப்போடு செயல்படட்டும்.

ஒரே ஒரு ஆறுதல் : விஜயகாந்த் நன்றி சொல்லும் முன்
உண்மை தெரிந்து விட்டது.

Monday, July 29, 2013

நல்ல சிதம்பரமும் கெட்ட ப.சிதம்பரமும்
ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் போது
" இந்திய சுதந்திரத்திற்காக போராடிய வ.உ.சி யையும்
பாரதியையும் தந்த தமிழகத்திலிருந்து இந்தியாவை விற்க
துடிக்கும் ப.சிதம்பரமும் பிறந்துள்ளது தமிழகத்திற்கு ஒரு
களங்கம் " என்று பேசிக்கொண்டிருக்கும்போதுதான்
பல முரண்பாடுகள் இரு சிதம்பரங்களுக்குள் இருப்பது 
தோன்றியது.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரும் சரி,
சிவகங்கைச் சீமான் ப.சிதம்பரமும் சரி தமிழகத்தில் 
பிறந்தவர்கள்தான். 

ஆனால் வ.உ.சி யால் தமிழகத்திற்கு பெருமை
ப.சி யால் தமிழகத்திற்கு இழுக்கு.

இருவருமே வழக்கறிஞர்கள்தான்

ஆனால் வ.உ.சி தொழிலாளர்கள் உரிமைக்காக வாதாடியவர்.
ப.சி தொழிலாளர்களுக்கு எதிராக முதலாளிகளுக்கு ஆதரவாக
வாதாடியவர். அரசியலில் தோற்றுப் போனால் எதிர்காலத்தில்
பன்னாட்டுக் கம்பெனிகளின் வழக்கறிஞராக மாறுவார்.

வ.உ.சி வெள்ளைக்காரனுக்கு எதிராக கம்பெனி தொடங்கி
கப்பல் விட்டவர்.
ப.சி பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு ஆதரவாக இந்தியக் 
கம்பெனிகளை மூடத் துடிப்பவர்.

வ.உ.சி வாய் திறந்தால் வெள்ளையன் அஞ்சுவான்.
பன்னாட்டுக் கம்பெனிகளோடு கொஞ்சு மொழி பேசுவது ப.சி

வெள்ளையனை எதிர்த்தால் சிறைக்கு சென்றவர் வ.உ.சி.
பன்னாட்டுக் கம்பெனிகளை எதிர்ப்பவர்களை சிறைக்கு
அனுப்ப விரும்புபவர் ப.சி

ஏழை மக்களுக்கு உணவளிக்க சொத்துக்களை விற்றவர் வ.உ.சி.
ஏழை மக்களின் உணவைப் பறிப்பவர் ப.சி

சுதந்திரப் போராட்டத்தால் அனைத்தையும் இழந்தவர் வ.உ.சி.
உலகமயம் என்ற பெயரில் கொழுத்தவர் ப.சி.

தன் தமிழை சுதந்திரக்கனலை மூட்ட பயன்படுத்தியவர் வ.உ.சி,
தமிழால் தன் அராஜகத்தை மூடி மறைக்க முயல்பவர் ப.சி

வ.உ.சிதம்பரனார் தேசத் தியாகி.
ப.சிதம்பரம் தேசத் துரோகி.

சிதம்பரம் என்ற பெயருக்கு வ.உ.சி பெருமை சேர்த்தார்.
ப.சி அதற்கு இழிவை தேடித்தந்துள்ளார்.
 

Sunday, July 28, 2013

துரத்துகிறது, துரத்திக் கொண்டே இருக்கிறது

விடாது கறுப்பு என்பதைப் போல்  
என்னை "விடாது முள்ளங்கி" போலும்.

பொதுவாகவே எனக்கு முள்ளங்கி பிடிக்காது.
ஒரு காலகட்டத்தில் தினமும் முள்ளங்கி சாப்பிட
வேண்டிய கட்டாயத்தால் அதன் மீது வெறுப்பே
வந்து விட்டது.

நான் எந்த அளவு முள்ளங்கியை வெறுக்கிறேன்
என்று புரிய வைக்க ஒரு சம்பவத்தை சொல்வது
சரியாக இருக்கும்.

நான் முள்ளங்கியிடம் சிக்கித் தவித்த அந்தக்காலத்தில்
அலுவலக வேலையாக நெய்வேலியில் இருந்து 
வேலூருக்கு வந்திருந்தேன். மதியமே வந்த பணி
முடிந்து விட்டது. ஆபீசர்ஸ் லைனில் இருந்த கோட்ட
அலுவலகத்திலிருந்து கொஞ்சம் தூரம் நடந்து வந்து
ஆரிய பவன் ஹோட்டலுக்குள் நுழைவதற்கு முன்பு
போர்டைப் பார்த்தால் முள்ளங்கி சாம்பார் என்று 
எழுதி வைத்திருந்தார்கள்.

அப்படியே மீண்டும் நடந்து வந்து கோட்ட அலுவலகத்திற்கு
அப்பால் இருந்த கண்ணா ஹோட்டலுக்குச் சென்று அங்கே
முள்ளங்கி அன்றைய சமையலில் கிடையாது என்பதை
ஒரு தடவைக்கு இரு தடவை உறுதிப் படுத்திக் கொண்டே
உள்ளே சென்றேன்.

நீங்கள் கூட கேட்கலாம், ஆரிய பவன் ஹோட்டலிலேயே
வேறு ஏதாவது சாப்பிட்டிருக்கலாமே, சாம்பார் சாப்பிடாமல்
இருந்திருக்கலாமே.

முள்ளங்கி சாம்பார் என்பதை போர்டில் பார்த்ததும், 
அந்த எழுத்துக்கள் ஏதோ என்னை கிண்டல் செய்வது போலவே
இருந்ததால் கோபம் வந்து வேறு ஹோட்டல் சென்று
விட்டேன்.

அந்த அளவிற்கு முள்ளங்கி மேல் வெறுப்பு.

தொடர்ந்து நான்கு நாட்கள் இப்போது பிரச்சாரப் பயணத்தில்
தினசரி ஹோட்டலில்தான் சாப்பிட வேண்டியிருந்தது.

வியாழக் கிழமை- ராணிப்பேட்டை
வெள்ளிக்கிழமை -காஞ்சிபுரம்
சனிக்கிழமை - சென்னை.

அது என்னமோ மூன்று நாட்களிலும் மூன்று ஹோட்டல்களிலும்
சொல்லி வைத்தது போல முள்ள்ங்கி சாம்பாரே போட்டார்கள்.

சாம்பாரைத் தொடாமல் காரக்குழம்பு, ரசம், மோர் ஆகியவற்றை
வைத்து சமாளித்து விட்டாலும்

ஒரே ஒரு கேள்விதான்

ஏன்?

முள்ளங்கி ஏன் என்னைதுரத்திக்   
கொண்டே இருக்கிறது?

இன்னும் ஒரு கேள்வி

இந்த மூன்று நாட்களும் இரவில் ஏன்
ஆனியன் ரவா தோசை மட்டும் 
விரும்பி சாப்பிட்டேன்?
                                                                                                                                       

500 கோடி ரூபாய் சொத்துள்ள கலைஞரைப் பற்றிப் பேச உனக்கென்ன அருகதை உள்ளது?

எங்கள் சங்கத்தின் தென் மண்டல மாநாடு வரும் 03.08.2013
முதல் 06.08.2013 வரை சென்னையில் நடைபெறவுள்ளது.
மாநாட்டையொட்டி கேரள மாநிலம் கையூரில் 05.07.2013
அன்று தொடங்கிய " எல்.ஐ.சி காப்போம், தேசம் காப்போம்"
என்ற வேன் பிரச்சாரப் பயணம், கேரள மாநிலம் மற்றும்
தமிழகத்தில்  விரிவாக பிரச்சாரம் செய்து நேற்று
சென்னையில் நிறைவடைந்தது.

எங்களது வேலூர் கோட்டத்தில் இரண்டு நாள், சென்னைக்
கோட்டத்தில் இரண்டு நாள் என நான்கு  நாட்கள் இந்த
பிரச்சாரத்தில் பங்கேற்று இன்று அதிகாலையில்தான்
திரும்பினேன்.

ஆட்சியாளர்களின் மோசமான கொள்கைகளைப் பற்றி
மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடந்த
இந்த பிரச்சாரப் பயணத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களை
மக்கள் உன்னிப்பாக கவனித்தனர் என்பது மனதிற்கு
நிறைவாக இருந்தது.

கண்டது, கேட்டது, காதில் விழுந்தது என்று பதிவுகளாய்
பகிர்ந்து கொள்ள ஏராளமாய் உள்ளது. நேரம் கிடைக்கும்
போதெல்லாம் அவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.

முதல் பதிவு இப்போது

மதுராங்கம் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தேன்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்கள் பற்றி
விமர்சித்துக் கொண்டிருந்தேன். யாருடைய பெயரையும்
குறிப்பிடாவிட்டாலும் இரண்டு கண்கள் பிரச்சாரக் குழுவில்
இருந்தவர்களையே முறைத்துக் கொண்டிருந்ததையும்
கவனித்துக் கொண்டிருந்தேன்.

பேசி முடிந்ததும் அந்த கண்களுக்குரிய உருவம்
அருகில் வந்தது.

மிகவும் அழுக்கேறிய வெள்ளை வேட்டி, வாங்கியபோது
வெள்ளைக் கலரில்தான் அந்த சட்டை இருந்தது என்பதை
சூடமேற்றி சத்தியம் செய்தாலும் நம்ப முடியாது, பரட்டைத்
தலை, வெள்ளைத் தாடி, டாஸ்மாக் வாசம் இத்தனையோடும்
அருகே வந்த அந்த முதியவர் சத்தம் போட ஆரம்பித்தார்.

" எங்க தலைவர் கலைஞருக்கு ஐநூறு கோடி ரூபாய் சொத்து
இருக்கு.. உனக்கு என்ன இருக்கு?  ஒன்னுமே இல்லாத 
உனக்கு அவரப் பத்திப் பேச என்ன அருகதை இருக்கு?"

என்று சண்டைக்கு வந்து விட்டார். யார் என்ன சொன்னாலும்
அதைக் கேட்கும் நிலையில் அவர் உள்ளே போன சரக்கு
அவரை அனுமதிக்கவில்லை.

ஐநூறு கோடி ரூபாய் சொத்துள்ள தனது தலைவரை யாரும்
எதுவும் பேசக்கூடாது என்பது மட்டும்தான் அவர் மீண்டும்
மீண்டும் வலியுறுத்திய ஒரே விஷயம்.

ஐநூறு கோடி ரூபாய்க்கு மேலும் அவரது தலைவருக்கு
சொத்து உண்டு என்று பாவம் அவருக்கு தெரியவில்லை.

அவ்வளவு சொத்து சேர்க்க முடிந்த அவரது தலைவர்
எத்தனையோ வருடம் ஆட்சியில் இருந்தாலும் தனது
நிலைமை கிட்டத்தட்ட பிச்சைக்கார நிலைமையில்தான்
உள்ளது என்பதை அந்த மனிதன் யோசிக்காமலேயே
தலைமை மீது விசுவாசமாக இருப்பதுதான் கலைஞர், ஜெ
உள்ளிட்ட தலைவர்களுக்கு பலம்.

அவர்கள் யோசிக்க தொடங்கினால் இவர்களின் பிழைப்புதான்
திண்டாட்டமாகி விடும்.
 

நதிக்கு ஓர் நினைவுச் சின்னம்

பாலாற்றுப்  பாலங்கள்
என்றோ  ஓர்  நாள்
இங்கே  ஓர்  நதி
ஓடி  ஓய்ந்ததன்
அடையாளமாய்
அமைக்கப்பட்ட 
நினைவுச் சின்னங்கள்

Tuesday, July 23, 2013

சொல்பவர்கள் சொல்லட்டும், நாளை பார்ப்போம்

தீக்கதிர் பொறுப்பாசிரியர் தோழர் அ.குமரேசன் தனது
முகநூல் சுவரில் பதிவு செய்த அற்புதமான கருத்து
இது.“தொலைபேசி ஒரு அற்புதமான கண்டுபிடிப்புதான். ஆனால் இதைப் பயன்படுத்த வேண்டும் என்று யார் விரும்பப்போகிறார்கள்?”
-அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ருதர்ஃபோர்ட் ஹேய்ஸ் (1876)

“தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்திருக்கிற மின்சார விளக்கு அட்லான்டிக் கடல் கடந்த நமது நண்பர்களுக்கு நல்லதுதான். ஆனால் இது நடைமுறைக்கு ஏற்றதோ, அறிவியல்பூர்வமானதோ, நடைமுறை சார்ந்த மனிதர்களுக்கானதோ அல்ல.”
-பிரிட்டன் நாட்டில் மின்சார விளக்குகள் அமைப்பது குறித்து ஆராய அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் குழு (1878)

“எக்ஸ்ரே படங்கள் போலித்தனமானவை.”
-லண்டன் அறிவியல் மையமான ராயல் சொசைட்டி (1900)

“முதலாளித்துவத்திற்கும் சுரண்டல்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் பாகுபாடுகளுக்கும் முடிவு கட்டக்கூடியது சோசலிசமே என்பது நல்ல சிந்தனைதான். ஆனால் ஒருபோதும் அது நடைமுறைக்கு ஏற்றதல்ல.”
-பலப்பல தலைவர்களும் பொருளாதார நிபுணர்களும் (2013)

Monday, July 22, 2013

யாரென்று தெரிகின்றதா, வேஷங்கள் கலைகிறதா? ஒரு கவிஞரின் கலைந்த வேடம்


முக நூலில் தோழர் ப.கவிதா குமார் பதிவு செய்த செய்தி இது.
உண்மையிலேயே மிகவும் அதிர்ச்சி தந்தது. தான் எழுதும்
கவிதைகள், பாடல்கள், கதைகளுக்கு நேர்மாறாக இவ்வளவு
அராஜகமாக ஒரு மனிதர் நடந்து கொள்ள முடியுமா?

யார் இந்த பெரிய மனிதர் என்பதை இதை படித்து முடிக்கும்
முன்பே தெரிந்து விடும்.

வியர்வையின் பெருமையைப் பற்றி எண்ணற்ற பாடல்கள்
எழுதிய இந்த மனிதருக்கு ஒரு உழைப்பாளியின் ஒரு துளி
வியர்வை அருவெறுப்பு தருகிறது என்றால் என்ன மனிதர்
இவர்?

ஒரு வேளை ரஜனிகாந்தின் வியர்வை மட்டும் இவருக்கு
ஒஸ்தி போல, அதற்குத் தானே ஒரு பவுன் தங்கக்காசு
மதிப்பு என்று பாட்டெழுதினார்.... 

வெளிச்சத்திற்கு  வந்த  பொய்முகம்

தமிழகத்தின் பிரபலமான கவிஞர் அவர்.குடும்பமே கவிதைக்குடும்பம். இவருடைய எழுத்துக்கள் இளைஞர்களைச் சுண்டி இழுக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட ஒரு ளைஞர் ஒருவருடன் கவிதை குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன். இன்றைய இளையதலைமுறைக்கு ஏற்றவாறு சுமால் டைகர் படத்தில் கவிஞர் பாட்டு எழுதியுள்ளதைச் சொல்லிக்கொண்டிருந்தேன்.

அப்போது அந்த நண்பர், அந்த கவிஞரைப் பற்றி இனிமேல் பேசாதீங்கண்ணே என்றார். ஏன் அந்த கவிஞர் மீது இவருக்கு இவ்வளவு வெறுப்பு என்று எனக்கு முதலில் புரியவில்லை. பல நேரங்களில் பாடல்வரிகள் குறித்து பேசிக்கொண்டிருக்கும் போது, அந்த கவிஞரின் பாடலைச் சொல்லாமல் பேச்சை முடிக்க மாட்டார் அந்த நண்பர். அப்படிப்பட்டவரையே கோபப்பட வைத்த சம்பவம் என்ன என நான் யோசித்துக்கொண்டிருந்த போது, அவரே தன் கோபத்திற்கான காரணத்தையும் சொன்னார்.

பேண்ட பிள்ளையப்போல என கிராமத்து வார்த்தைகளைப் போட்டு பாட்டு எழுதும் அந்த கவிஞரை தான் வேலைபார்க்கும் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் பேட்டி காணச்சென்றதாகவும், ஒளிப்பதிவாளரான இவர், கவிஞரின் சட்டையில் மைக்கை செட் செய்து கொண்டிருந்த போது இவரின் நெற்றிப்பொட்டில் சொட்டிய வேர்வைத்துளி ஒன்று கவிஞரின் கையில் பட்டுள்ளது. உடனடியாக அவர்ஏண்டாஎனச்சத்தம் போட்டுள்ளார். உடனடியாக இரண்டு பணியாட்கள் ஓடிவந்துள்ளனர். அவரின் முகத்தில் இருந்த கோபத்தைப் பார்த்து பயந்து போன பணியாட்கள், அய் . . .யா. . .யா என அரண்டுள்ளனர். உடனடியாக சோப்பை எடுத்து வா எனக்கூறி வேர்வைத்துளி விழுந்த இடத்தை சோப்பு போட்டு கழுவியதோடு மட்டுமின்றி துண்டைக்கொண்டு பல முறைத் துடைத்துள்ளார். வேர்வைத்துளி விழுந்ததற்காக தான் மன்னிப்பு கோரியதாகவும், அதை அவர் கண்டு கொள்ளவேயில்லை என்றும், அந்த ஒளிப்பதிவு முடியும் வரை தான் பெரும் மனஅழுத்தத்தோடு இருந்ததாகவும் அந்த நண்பர் சொன்னார்.

கவிஞரின் பல பாடல் வரிகளை தனது அலைபேசியில் பதிவு செய்து கேட்டுக்கொண்டிருக்கும் அந்த நண்பர் கொண்ட பெருங்கோபம் போலித்தனமில்லாதது.   உசிலம்பட்டி பூமியில் இருந்து படித்து முடித்து பட்டம் பெற்று ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணிபுரியும் அந்த நண்பர் என்னிடம் கேட்ட கேள்வி, “எப்படி இந்த ஆள் வாழ்க்கை முழுவதும் நடித்துக் கொண்டிருக்கிறார்?“

வாழ்க்கைக்கும், வார்த்தைக்கும் வித்தியாசமில்லாமல் வாழ்ந்தவர் கவியரசர் கண்ணதாசன். ஆனால், அந்தப்பட்டத்திற்கு மேல் வேறு ஒரு பட்டத்தையும் சேர்த்துக்கொண்டு வானம், போதிமரம், காற்று, என் பூமி, என் மக்கள் என பேசிக்கொண்டிருக்கும் அந்த கவிஞர், தன் தவறை அந்த நிமிடமல்ல இப்போதாவது உணர்ந்தாரா என்ற கேள்வி தான் இப்போது வரை எனக்குள் கேட்டுக்கொண்டேயிருக்கிறது.