Showing posts with label சோஷலிஸம். Show all posts
Showing posts with label சோஷலிஸம். Show all posts

Wednesday, December 22, 2021

அது போன மாசம். இது . . . .

 


அலெண்டாவும் சிவந்த சிலியும்

லத்தீன் அமெரிக்க நாடான சிலியில் மீண்டும் இடதுசாரி ஆட்சி அமைந்துள்ளது. தோழர் டேனியல் போரிக் புதிய ஜனாதிபதியாகிறார்.

சிலி முதல் முறையாக இடது திசை வழியில் செல்லவில்லை.

இதற்கு முன்பே 1970 ல் சோஷலிஸ்ட் கட்சியின் சால்வடார் ஆலண்டே தேர்தலில் வெற்றி பெற்று சிலியின் ஜனாதிபதியானார்.

அவர் அங்கே சோஷலிச ஆட்சி முறையைக் கொண்டு வந்தார்.  அமெரிக்க கம்பெனிகள் இயற்கை வளங்களை கொள்ளையடித்ததை தடுத்து நிறுத்தினார். மக்கள் சார்ந்த திட்டங்களை அமலாக்கினார். அனைவருக்கு கல்வி என்பதை நோக்கி பயணித்தார்.

இது பொறுக்குமா அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு?

சி.ஐ.ஏ களமிறங்கியது. 1973 ல் கலவரத்தைத் தூண்டியது. ஆட்சியைக் கவிழ்த்தது. ஆலண்டேவை சரணடையச் சொன்னது. அதிபர் இல்லம் சுற்றி வளைக்கப்படுகிறது. ஆலண்டே கொல்லப்படுகிறார். அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்கிறார்கள். அவராக சுட்டுக் கொண்டாரா இல்லை அமெரிக்கா சுட்டுக் கொன்றதா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

தோழர் ஃபிடல் கேஸ்ட்ரோவை கொல்ல நடைபெற்ற பல முயற்சிகள் தோற்றுப் போனாலும் அமெரிக்கா வெற்றிகரமாக நடத்திய முதல் அரசியல் படுகொலை சால்வடார் ஆலண்டேவுடையதுதான்.

அதற்குப் பிறகுதான் அமெரிக்கா

பனாமா கால்வாயைக் கைப்பற்ற பனாமா அதிபர் டோரிஜாஸ்,

இரானின் எண்ணெய் வளத்தை சுரண்ட மொகமது மொசாதக்

என்ற அரசியல் படுகொலை கணக்குகளை தொடர்ந்தது.

 சதாம் ஹூசேன், முகமது கடாபி என்று பட்டியல்கள் நீளும். வெனிசுலாவின் ஹூயூகோ சாவேஸ் மரணத்துக்கான நோய் கூட அமெரிக்கா வைத்த விஷத்தால் ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டு உண்டு.

 சால்வடார் ஆலண்டேவுக்குப் பிறகு தோழர் மிக்கல் பச்லெட் இரண்டு முறை அதிபரானார். இரண்டு முறையும் அவரால் நிம்மதியாக ஆட்சியை நடத்த முடியாமல் அமெரிக்கா சிக்கல்களை அளித்தது.

 டேனியல் போரிக்கிற்கு தேர்தல் வெற்றிக்காக வாழ்த்து சொல்லும் அதே நேரத்தில் அமெரிக்கா செய்யும் சதிகளை முறியடிப்பதற்கான மன உறுதி வேண்டும் என்றும் வாழ்த்த வேண்டும்.

 ஆமாம்.

 போன மாசம் ஹோண்டுராஸ், இந்த மாசம் சிலி என்றால் அமெரிக்கா எவ்வளவு எரிச்சலாகும் என்பது நமக்கு தெரியாதா என்ன?

 அதானால் சிலி அரசைக் கலைக்க எல்லா முயற்சிகளையும் செய்யும்.

 பிகு: . சால்வடார் ஆலண்டே கொல்லப்பட்ட செப்டம்பர் 11 அன்றே இரட்டைக் கோபுரத் தாக்குதல் நிகழ்ந்த்து ஒரு வரலாற்று நகைமுரண்.

Tuesday, October 20, 2020

அங்கே மீண்டும் சிவப்பு . . .

 



இருண்ட காலத்தில் ஒளிக்கீற்றாய் கிடைத்த செய்தி. தண்ணீர் தனியார் மயத்திற்கு எதிரான போராட்டத்தால் மக்களின் நம்பிக்கையை பெற்று நாட்டின் ஜனாதிபதி அளவிற்கு உயர்ந்தவர் இவா மொரேல்ஸ்.  கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான அவரது அரசை வீழ்த்த அமெரிக்க ஏகாதிபத்தியம் கடுமையாக முயன்றது. கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் இவா மொரேல்ஸ் வெற்றி பெற்ற போதும் முறைகேடுகள் என்று குற்றம் சுமத்தி, ராணுவத்தை வைத்து அவரை பொலிவியாவை விட்டு வெளியேற வைத்தது. வலது சாரிகள் கையில் ஆட்சி சென்றது. 

இதோ இப்போது நடைபெற்ற தேர்தலில் இவா மொரேல்ஸின் சோசலிசத்துக்கான இயக்கம் மகத்தான வெற்றி பெற்றது.

இவா மொரேல்ஸ் ஆட்சிக்காலத்தில் அவருடைய நிதியமைச்சராக இருந்த லூயிஸ் ஆர்க் புதிய ஜனாதிபதியாகிறார்.

உண்மையாகவே மக்களுக்கு உழைப்பவர்களை மக்கள் என்றும் கைவிட மாட்டார்கள் என்பது நிரூபணமாகியுள்ளது. 

பொலிவிய மக்களுக்கு பாராட்டுக்கள். 

Wednesday, April 5, 2017

மீண்டும் ஒரு லெனின்

ரபேலைத் தொடர்கிறார் லெனின் ஈக்வடாரில் மீண்டும் இடதுசாரி ஜனாதிபதி




மக்கள் மனதைக் கொள்ளை கொண்ட மாற்றுத் திறனாளி

குயிட்டோ, ஏப் 4-
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடாரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரும், இடதுசாரிக் கொள்கைகளைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்போவதாக வாக்குறுதி அளித்தவருமான லெனின் மொரினோ வெற்றி பெற்றுள்ளார்.மக்களிடம் செல்வாக்குப் பெற்ற ஈக்வடார் ஜனாதிபதி ரபேல் கோரியா மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது என்றவுடன் அங்கு ஜனநாயகத்தைச் சீர்குலைத்து விடலாம் என்று அமெரிக்காவின் ஆதரவுடன் எதிர்க்கட்சிகள் களமிறங்கின. 

பிப்.19 ஆம் தேதியன்று முதல் சுற்றுத் தேர்தல் நடைபெற்றது. வெற்றி பெறுவதற்கு 51 சதவிகித வாக்குகளைப் பெற வேண்டும் அல்லது இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் வேட்பாளரை விட 10 சதவிகித வாக்குகளும், மொத்தத்தில் 40 சதவிகித வாக்குகளும் பெற வேண்டும். இந்தச் சுற்றில் இடதுசாரி வேட்பாளர் லெனின் மொரினோ 39,36 சதவிகித வாக்குகளும், அவருக்கு அடுத்தபடியாக எதிர்க்கட்சி வேட்பாளர் கில்லர்மோ லஸ்ஸோ 28.09 சதவிகித வாக்குகளும் பெற்றனர். இருவருக்கு மிடையில் பத்து சதவிகித வாக்குகள் இருந்தாலும், மொரினோவுக்கு 40 சதவிகித வாக்குகள் கிடைக்காததால் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு நடைபெற்றது.

ஏப்ரல் 2 ஆம் தேதியன்று இரண்டாவது சுற்று வாக்குப்பதிவு நடந்தது. முதலிரண்டு இடங்களைப் பெற்ற மொரினோவும், லஸ்ஸோவும் களத்தில் இருந்தனர். கடந்த பத்து ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தை பெரும் அளவில் உயர்த்திய ரபேல் கோரியாவின் கொள்கைகளைத் தொடர்வேன் என்று மொரினோ உறுதியளித்தார். அவருடைய கொள்கைகளைக் கைவிட்டு வலதுசாரி சீர்குலைவுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவேன் என்று லஸ்ஸோ பிரச்சாரம் செய்தார். அவருக்கு வரி ஏய்ப்பு செய்து மாட்டிக் கொண்ட பெரு நிறுவனங்கள் ஆதரவுக் கரம் நீட்டின. 

அமெரிக்க ஆதரவுடன் நடைபெற்ற பொய்ப்பிரச்சாரங்களை மீறி இடதுசாரி வேட்பாளர் லெனின் மொரினோ 51.16 சதவிகித வாக்குகளைப் பெற்றார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் என்று கருதப்பட்ட லஸ்ஸோ 48.84 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறார். தேர்தலில் பார்வையாளர்களை நிறுத்தியிருந்த அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு, நியாயமான முறையில் தேர்தல் நடைபெற்றது என்று கருத்து தெரிவித்துள்ளது. ஆனால், முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வழக்கம்போலவே எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.

நாடாளுமன்றத் தேர்தல்

ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான முதல் சுற்று வாக்கெடுப்போடு தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தலும் நடைபெற்றது. மொத்தமுள்ள 137 இடங்களில் ஆளும் இடதுசாரிக்கட்சிக்கு 74 இடங்கள் கிடைத்தன. நாடாளுமன்றத்திலும் ஆளும் இடதுசாரிக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளதால் தங்கள் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் எந்தத்தடையும் இருக்காது என்று ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள லெனின் மொரினோ தெரிவித்துள்ளார். தனது வெற்றி பற்றிக் கருத்து தெரிவித்த அவர், இடதுசாரிக் கொள்கைகள்தான் நாட்டிற்கு நல்லது என்று மக்கள் முடிவெடுத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

1998 ஆம் ஆண்டில் நடைபெற்ற தாக்குதல் ஒன்றில் லெனின் மொரினோ படுகாயம் அடைந்தார். தற்போது சக்கர நாற்காலி உதவியுடன்தான் அவர் தனது பணிகளைச் செய்து வருகிறார். இப்படி உடலில் குறைபாடுகளோடு நாட்டின் தலைமைப் பொறுப்புகளுக்கு வெகு சிலர்தான் இதுவரையில் வந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி - தீக்கதிர் 05.04.2017

Wednesday, October 15, 2014

தண்ணீர் விற்பனையை தடுத்தவர் இன்று?



முதலாளித்துவத்திற்கு மாற்றில்லை
என்று முழங்குபவர் காதில்
நாராசமாய் ஒலித்தது
அந்த வெற்றிச் செய்தி.

படை கொண்டு செல்லாமல்
பன்னாட்டுக் கம்பெனிகள் மூலமாய்
ஆதிக்கமும் ஆக்கிரமிப்பும் செய்யும்
அமெரிக்க கனவான்களின்
உறக்கத்தை கெடுக்கும் வெற்றி அது.

மக்களுக்காக உழைப்பவரை
மக்கள் என்றும் ஆதரிப்பார்கள்
எனும் நம்பிக்கையும்
தந்த வெற்றி இது.

எல்லாரும் எல்லாமும்
பெறுவதை சாத்தியமாக்கியதால்
கிடைத்திட்ட வெற்றி இது.
சரித்திரத்திற்கோர் செய்தி இது.

பொலிவியா எனும் நாடு,
அங்கே கொசாம்பா   எனும் நதி,
இயற்கை அளித்த கொடையை
பேராசை கொண்ட “பெக் டெல்
கம்பெனியிடம் அடகு வைத்தார்கள்,
அந்நாட்டு ஆட்சியாளர்கள்.
நாய் விற்ற காசும் குறைக்காதென்றால்
தண்ணீர் விற்ற காசு மட்டுமென்ன
கசக்கவா செய்யும்?

அழுக்குத் துணி தோய்க்க,
ஆடு மாடு குளிப்பாட்ட,
தாகத்தில் தவித்த வாய்க்கு
ஒரு கை அள்ளிப் பருக,
அனைத்துக்கும் தடை போட்டது,
ஆற்றை விலைக்கு வாங்கிய
ஆள் முழுங்கி ‘பெக் டெல்”

பொங்கிய மக்களை ஒருங்கிணைத்து
போராட்ட களத்திற்கு கூட்டி வந்து
தடையணைகளை நொறுக்கிய
தலைவன் ஒருவன்.

போராட்டத் தலைவனவனை
நாட்டின் தலைவனாகவே
தரம் உயர்த்தினார்கள்
அம்மக்கள்.

வாக்குகளால் உருவான புரட்சி
ஓளி மயமான பொலிவியாவை
உண்மையிலேயே உதிக்கச் செய்தது.

இயற்கை வளத்தை கொள்ளையடித்த
பன்னாட்டு கம்பெனிகளின் கஜானாவிற்குப்
போன பணம் மடை மாற்றப்பட்டு
மக்கள் நலத் திட்டங்களுக்குப் போனது.

பொய் முழக்கங்கள் இல்லை,
போட்டோ ஷாப் ஜோடனைகள் இல்லை.
அலங்கார வார்த்தைகள் இல்லை,
செய்வதும் சொல்வதும் மாறாக இல்லை.

தங்களின் நேசத்தை
மக்கள் மீண்டும் உணர்த்தினார்கள்
தங்களின் வாக்குச்சீட்டுக்களில்.

மூன்றாம் முறையாகவும்
அவனையே தேர்ந்தெடுத்தார்கள்
தங்களின் தலைவனாய்
தங்களுக்கு பணி செய்ய.

அன்று தண்ணீர் விற்பனையை தடுத்தவன்
இன்று தரணி போற்றும் தலைவன்.
ஆட்சியாளர் என்றால் இவனன்றோ
என்று போற்ற வைக்கும்
நமக்கு பொறாமையும் அளிக்கும்
 “இவா மொரேல்ஸ்

தொடரட்டும் உன் பயணம்
சிவப்பின் பெருமையை
அழுத்தமாய்ச் சொல்லி.

Tuesday, July 23, 2013

சொல்பவர்கள் சொல்லட்டும், நாளை பார்ப்போம்

தீக்கதிர் பொறுப்பாசிரியர் தோழர் அ.குமரேசன் தனது
முகநூல் சுவரில் பதிவு செய்த அற்புதமான கருத்து
இது.



“தொலைபேசி ஒரு அற்புதமான கண்டுபிடிப்புதான். ஆனால் இதைப் பயன்படுத்த வேண்டும் என்று யார் விரும்பப்போகிறார்கள்?”
-அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ருதர்ஃபோர்ட் ஹேய்ஸ் (1876)

“தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்திருக்கிற மின்சார விளக்கு அட்லான்டிக் கடல் கடந்த நமது நண்பர்களுக்கு நல்லதுதான். ஆனால் இது நடைமுறைக்கு ஏற்றதோ, அறிவியல்பூர்வமானதோ, நடைமுறை சார்ந்த மனிதர்களுக்கானதோ அல்ல.”
-பிரிட்டன் நாட்டில் மின்சார விளக்குகள் அமைப்பது குறித்து ஆராய அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் குழு (1878)

“எக்ஸ்ரே படங்கள் போலித்தனமானவை.”
-லண்டன் அறிவியல் மையமான ராயல் சொசைட்டி (1900)

“முதலாளித்துவத்திற்கும் சுரண்டல்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் பாகுபாடுகளுக்கும் முடிவு கட்டக்கூடியது சோசலிசமே என்பது நல்ல சிந்தனைதான். ஆனால் ஒருபோதும் அது நடைமுறைக்கு ஏற்றதல்ல.”
-பலப்பல தலைவர்களும் பொருளாதார நிபுணர்களும் (2013)

Wednesday, October 10, 2012

மக்களுக்காக உழைப்பவர்களை மக்கள் கைவிட மாட்டார்கள்









Photo: UP UP SOCIALISM,DOWN DOWN CAPITALISM !! LOOK THIS RED HUMAN GATHERINGS WHO ARE ADVANCING FOR SCIENTIFIC SOCIALISM.Comrade Hugo Chavez will be victorious because of his work for Venezuelans..The communist parties of India must take lesson from this giant humane- being..Red salute to comrade Hugo Chavez ...!!



உலகெங்கிலும் உள்ள உழைப்பாளி மக்களுக்கு உற்சாகமும் உத்வேகமும் அளிப்பதாக வெனிசுலா நாட்டு தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. நான்காவது முறையாக ஹூயுகோ சாவேஸ் வெனிசுலா நாட்டு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிடல் காஸ்ட்ரோவிற்குப் பிறகு அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் மிக அதிகமாக வெறுக்கப்படும் நபராக சாவேஸ்தான் இருப்பார். எண்ணெய் வளம் அதிகம் கொண்ட நாடு வெனிசுலா. அந்த வளத்தை அமெரிக்க பன்னாட்டுக் கம்பெனிகள் சூறையாடிக் கொண்டிருந்ததை தடுத்து நிறுத்தியவர் சாவேஸ். அதனால் வெறுப்புற்ற அமெரிக்கா உள்நாட்டுக் கலவரத்தை தூண்டி சாவேஸை பதவியிலிருந்து அகற்ற முயற்சித்தது. ஆனால் மக்கள் சாவேஸ் பக்கம் இருந்ததால் அந்த முயற்சி பரிதாபகரமாக தோற்றுப் போனது.

அதன் பின்பு சாவேஸின் நடவடிக்கைகளில் வேகம் அதிகரித்தது. சில பணக்காரர்களின் பைக்களுக்கு சென்ற பணம் நாட்டு கஜானாவிற்கு திரும்பியது. உலகமயமாக்கல் கொள்கைகளுக்கு எதிராக சோஷலிஸம்தான் மாற்று என்று உறுதியாக நடைபோட்டார்.

லத்தீன் அமெரிக்கா முழுதும் இன்று செம்மயமாகிக் கொண்டிருப்பதற்கு சாவேஸ் ஒரு முக்கியக் காரணம். அவரால் உருவாக்கப்பட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு இன்று அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மிகப் பெரிய சவாலாக திகழ்கிறது.
 
மக்கள் நலனுக்காக பாடுபடும் ஆட்சியாளராக சாவேஸ் இருப்பதால்தான் வெனிசுலா மக்கள் அவரை மீண்டும் தேர்ந்தெடுத்து உள்ளனர். முதலாளித்துவ ஊடகங்கள் சாவேஸிற்கு எதிராக மிகப்பெரிய பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்ட போதிலும் வெனிசுலா மக்கள் அதனை பொருட்படுத்தவில்லை. உலகமயமாக்கல் கொள்கைகளுக்கு எதிராக சோஷலிஸக் கொள்கைகளையே தான் தொடர்ந்து அமுல்படுத்துவேன் என அவர் வெனிசுலா நாட்டு மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

மக்களுக்கு ஆதரவானவர்களை மக்கள் கைவிட மாட்டார்கள் என்பதை வெனிசுலா மக்கள் நிரூபித்துள்ளனர். மக்களுக்கு எதிரானவர்களை மக்கள் வீழ்த்துவார்கள் என்ற பாடத்தை இந்திய மக்களும் கற்றுக் கொடுப்பார்கள். அந்த நாளை நோக்கி முன்னேறுவோம்