Showing posts with label மார்க்ஸியம். Show all posts
Showing posts with label மார்க்ஸியம். Show all posts

Thursday, February 5, 2026

ஆஹா! அருமை!! அற்புதம் !!!

 


முக நூலில் பார்த்த ஒரு காணொளியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 


அழுத்தம் திருத்தமாக உணர்வுபூர்வமாக பாடும் அந்த மழலையை பாராட்ட பொருத்தமான வார்த்தைகள் என்னிடம் இல்லை.

எதிர்காலத்தில் சிறப்பாக வளரட்டும்.

மார்க்சியமே வெல்லும் . . .

Tuesday, April 22, 2025

புரட்சித்தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 



புவியை புரட்டிப் போட்ட தலைவர்,
உழைப்பாளி மக்களுக்கு அதிகாரத்தை
வென்றெடுத்துக் கொடுத்தவர்,
மன்னராட்சிக்கு முடிவு கட்டி
மார்க்சிய வழியில் அரசை உருவாக்கியவர்.
 
எல்லாரும் எல்லாமும் பெறலாம்
என்பது சாத்தியமானது.
 
வறுமை ஒழிந்தது,
நோய்மையும் ஓய்ந்தது.
மண் வளம் பெருகியது,
மனித வளமும் கூட . . .
 
கலையும் அறிவியலும்
வானளவு உயர்ந்தது,
விண்வெளியும் வசமானது.
 
அடிமைச்சங்கிலியைத் தவிர
இழப்பதற்கு ஏதுமில்லை,
வெல்வதற்கோ பொன்னுலகமே
உள்ளதென்பது உண்மையென்பதை
செயலில் காட்டி
புதியதொரு உலகைப் படைத்தவர்.
 
பிற நாடுகளின்
விடுதலை வேள்விக்கு
வேகம் கொடுத்தவர்.
 
உலகின் உண்மையான
முதல் புரட்சித் தலைவருக்கு

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Saturday, November 11, 2023

ஓயாத உருட்டுக்கள்.

 மூன்று வருடம் முன்பு எழுதிய பதிவையே மீண்டும் பகிர்கிறேன். ஏனென்றால் ராஜராஜனிடமிருந்து தோழர் ஹோசிமின் வீரத்தை கற்றுக் கொண்டதென்ற கட்டுக்கதை மீண்டும் சுற்றுக்கு வந்துள்ளது. அதனால் அப்போது எழுதிய பதிவை மீண்டும் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் வந்துள்ளது.

 பொய்யை மீண்டும் மீண்டும் பரப்பி அதை உண்மை என நம்ப வைக்கும் முயற்சியை சங்கிகள் கைவிடவே மாட்டார்கள் போல. 

 இதுதான் ஹோசிமின் சமாதியில் ராஜராஜ சோழன் பற்றி எழுதியது என்று ஏன் இன்னும் போட்டோஷாப் செய்யவில்லை என்றுதான் தெரியவில்லை.

 

முன்னே சிவாஜி, இப்போ ராஜராஜன்



கீழே உள்ள செய்தியை  முதலில் படியுங்கள் . . .

20 வருட கடும் போராட்டத்துக்கு பின் வியட்நாம் அமெரிக்காவை வென்றது..(1955-1975)

போர் முடிந்ததும் ஒரு செய்தியாளர் வியட்நாம் அதிபரை பார்த்து கேட்டார்...

இது எப்படி சாத்தியம்..???
ஒரு சிறிய தெற்காசிய நாடு..வல்லரசு அமெரிக்காவை தோற்கடித்தது எப்படி???

அதற்கு அந்த அதிபர் அமெரிக்க போன்ற வல்லரசை தோற்கடிப்பது மிகவும் கடினம்..

ஆனால் ஒரு சரித்திர புகழ்பெற்ற மாவீரனின் வீரமும் தீரமும் செறிந்த கதையை படித்தேன்.....அது எனக்குள் எழுப்பிய கனலால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியது...அவரின் போர் தந்திரங்கள்.. யுக்திகளை எங்கள் போரில் கடைபிடித்தோம்..வெற்றி கிடைத்தது என்றார்...

யாரந்த மாவீரன்... பேரரசன்..என பத்திரிகையாளர் வினவ...

வேறு யாருமில்லை.. 

கிழக்காசியாவை வென்ற ராஜராஜ சோழன் தான்... 

வியட்நாமில் மட்டும் இப்படி ஒரு மாவீரன் அவதரித்திருந்தால் இந்நேரம் உலகம் எங்கள் கைகளில் இருந்திருக்கும்..என்றார்.

சில வருடங்கள் கழித்து அந்த அதிபர் இறந்து போனார்...

அவரது கல்லறையில் அவரது விருப்பப்படி பொறிக்கப்பட்ட வாசகம்...

""ராஜராஜனின் பணிவான பணியாள் இங்கே ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார்...""

இப்பொழுதும் அங்கே சென்றால் அதை நீங்கள் காணலாம்...

சில வருடங்கள் கழித்து வியட்நாம் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வர நேரிட்டது..

நம்மாட்களும் வழக்கம் போல இந்த காந்தி சமாதி..சக்தி ஸ்தல்..செங்கோட்டை... அது இதுனு சுத்தி காட்ட....

அலுத்து போன அமைச்சர்..ராஜராஜன் பிறந்த ஊர், அரண்மனை,சிலை எங்கே உள்ளது என அதிகாரிகளை கேட்க
அவர்கள் ஆச்சரியத்துடன் அது தமிழ் நாடு தஞ்சாவூர்ல இருக்கு என்றனர்...

உடனே தஞ்சாவூர் போக வேண்டும் என  வியட்நாம் அமைச்சர் கூற ...படைதஞ்சாவூருக்கு பறந்தது..

அங்கு சென்று தஞ்சை பெரிய கோவிலில் அவர்கள் சிலைக்கு அஞ்சலி செலுத்திய பிறகு...கையளவு மண்ணை அள்ளி மரியாதையுடனும்...வாஞ்சையுடனும்...தன் பையில் சேமித்து கொண்டார்...

 இதைக்கண்ட பத்திரிகைகள் வழக்கம் போல வினா எழுப்பின...

இந்த மண்..வீரமும்.. வெற்றியும்..நிறைந்த ராஜராஜன் பிறந்து வளர்ந்த மண்..
வியட்நாம் சென்றடைந்ததும் என் தேச மண்ணில் இந்த மண்ணை கலந்து விடுவேன்...

இனி வியட்நாம் மண்ணில் பல்லாயிரம் ராஜராஜ சோழன் பிறக்கட்டும் என்றார் உணர்ச்சி வசப்பட்டவராக..

 இது போன்ற நிகழ்வுகள் நீங்கள் எங்கும் படிக்க நேர்ந்திருக்காது .இப்படி பாடபுத்தகத்தில் படித்து வீரம் மிக்க தலைமுறை ஏற்பட்டுவிட்டால்...

என்னாவது...???

ஆனாலும் மறைக்கப்பட்ட வரலாற்றை நாம் கூறுவோம்.. 
நம் சந்ததிக்கு.... .... 

படித்ததில் பிடித்தது

இது போன்ற செய்தியை இதற்கு முன்பாக படித்தது போன்ற நினைவு இருக்கிறதா?

இந்த செய்தியை படித்துள்ளேன். ஆனால் ராஜ ராஜ சோழனுக்குப் பதிலாக சத்ரபதி சிவாஜியின் கொரில்லா போர் தந்திரம்தான் என் வெற்றிக்கு காரணம் என்றல்லவா படித்திருக்கிறேன் என்றுதானே சொல்கிறீர்கள்!

ஆமாம். மூன்று வருடத்திற்கு முன்பாக இதே கதை சத்ரபதி சிவாஜி பெயரில் உலாவிக் கொண்டிருந்த்து. அதில் எக்ஸ்ட்ரா பிட்டாக அந்த வெளியுறவு அமைச்சர் ஒரு பெண் என்றும் சேர்த்திருந்தார்கள். இதெல்லாம் டுபாக்கூர் செய்தி என்றும் தோழர் ஹோ சி மின் சமாதியில் அப்படி சத்ரபதி சிவாஜி பற்றியெல்லாம் எதுவும் எழுதப்படவில்லை, வியட்னாம் வெளியுறவு அமைச்சராக எந்த காலத்திலும் ஒரு பெண் இருந்ததில்லை என்றும் வியட்னாம் அரசு தெளிவு படுத்தி விட்டது.

இப்போது அதே கதை ராஜ ராஜ சோழனைப் பற்றி உலவத் தொடங்கி உள்ளது. 

ஹோ சி மின் மார்க்ஸையும் லெனினையும் மாவோவையும் படித்துள்ளார் என்று தகவல் இருக்கிறது. சிவாஜி பற்றியோ ராஜராஜன் பற்றியோ அவர் அறிந்திருந்தாரா என்று தெரியாது. தெரியாவிட்டாலும் அது பெரிய விஷயமில்லை. 

எனக்கு ஒரே ஒரு கேள்விதான்.

சத்ரபதி சிவாஜிக்கோ, ராஜ ராஜ சோழனுக்கோ இப்படிப்பட்ட கட்டுக்கதைகள் மூலம் பெருமை சேர்க்க அவர்கள் என்ன மோடியா? 

அவர்கள் ஏற்கனவே வரலாற்று நாயகர்கள்தானே! 

பிகு ; வரலாற்று நாயகர்களை தத்ரூபமாக நம் கண் முன்னே நிறுத்தியவர் நடிகர் திலகம் அல்லவா! அதனால்தான் அந்த கதாபாத்திரங்களாக அவர் தோன்றியதை பயன்படுத்திக் கொண்டேன்.

பிகு 2 

தோழர் ஹோசிமின் உடல் புதைக்கப்படவில்லை, எரிக்கப்படவில்லை. மாறாக தோழர் லெனின் உடல் போல ஹனாய் நகரில் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. 

ஹனாய் நகரத்தில் உள்ள அவர் சிலையும் நினைவகமும் பாதுகாக்கப்பட்டுள்ள அவர் உடலும்  கீழே உள்ள புகைப்படங்களில் ...




Tuesday, June 30, 2020

யார் நம்பிக்கை . . .


அவரின் நினைவாக



கடந்த ஆண்டு இதே நாளில் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் துணைத்தலைவரும் பொருளாதார விற்பன்னருமான தோழர் ஈ.எம்.ஜோசப் அவர்கள் மறைந்தார்.

அவரது நினைவைப் போற்றுகிற வகையில் ஒரு வாட்ஸப் குழுவில் பகிர்ந்து கொள்ளப்பட்ட அவரது கட்டுரையை அவரது நினைவாக பகிர்ந்து கொள்கிறேன்.

செவ்வணக்கம்  தோழர் ஈ.எம்.ஜோசப்


*நாளொரு கேள்வி: 30.06.2020*
**********************************

இன்று தோழர் *இ.எம்.ஜோசப்* முதல் ஆண்டு நினைவு நாள். நம்மோடு அவர் அன்று பகிர்ந்தவை இன்றும் பொருத்தமானதாக...
________________________________

*இடதுசாரி மாற்றே இருளை போக்கும்*
************************************

*கேள்வி:* 

உலகம் முழுக்க மக்களின் அவலங்களை, குமுறல்களை வலதுசாரிகள் பயன்படுத்திக் கொள்கிறார்களே! உழைப்பாளி மக்களை அவர்களால் திசை திருப்ப முடிவதை எவ்வாறு எதிர்கொள்வது?

*இ.எம்.ஜோசப்:*

நெருக்கடியும் வேலையின்மையும் நிறைந்த சூழலில்தான் உலகம் முழுவதும் வலதுசாரித் திருப்பம் நடைபெற்று வருகிறது.

*மூன்று தரப்பாரின்* அணுகுமுறைகள் இதற்கு பங்களிக்கின்றன. ஒன்று முதலாளித்துவ தாராளமய வாதிகள். இரண்டாவது வலதுசாரிகள். மூன்றாவது இடதுசாரிகள். 

*முதலாளித்துவ தாராளவாதிகள்,* இந்த நெருக்கடி, அது உருவாக்கியிருக்கும் வேலையின்மை இரண்டும் இருப்பதாகவே ஏற்றுக் கொள்வதில்லை.

*வலதுசாரிகள்,* வேலையின்மை ஏற்படுத்தி இருக்கும் இன்னல்களையாவது குறைந்த பட்சம் ஏற்றுக் கொள்பவர்களாக  இருக்கின்றனர். ஆனால், அவர்கள் அந்தக் கேடுகளுக்கு சமூக பொருளாதார அமைப்புதான் காரணம் என்பதை ஏற்பதில்லை. குடியேறிய வெளி நாட்டினர்தான் காரணம் என்று சொல்லி குடியேற்றத்தினைத் தடுக்க வேண்டும் என குரல் கொடுக்கின்றனர்.   ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் மக்கள் எந்த நாட்டிற்கும் போய் வர முடியும் என்ற நிலையில், சிலர் ஐரோப்பிய ஒன்றியத்தினையே எதிர்க்கின்றனர்.

*இடதுசாரிகள்,* மக்கள் முன்பு மாற்றுத்திட்டத்தை வைப்பதில்  இடைவெளிகள் உள்ளன. 

இச் சூழலை வலதுசாரிகள் பயன்படுத்துகிறார்கள். வெளி நாட்டவர்களை எதிரிகளாக அவர்கள் முன்னிறுத்துகிறார்கள்.  உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள வலதுசாரிகளின் வளர்ச்சி இந்த அடிப்படையிலானதே ஆகும். நவீன தாராளமய தாக்குதலோடு, இவர்கள் உழைப்பாளி மக்கள் மத்தியில் உருவாக்குகிற பேதங்களும் கூடுதல் சவால்களாக நம் முன் நிற்கின்றன.

வலதுசாரிகள் நெருக்கடிக்கு தீர்வு தர இயலுமென்ற *பிரமையை உருவாக்குவதில் வெற்றி பெறுகிறார்கள்.*  அமெரிக்காவில் வேலையின்மை குறைந்து விட்டது என்று முதலாளித்துவ ஆதரவு இதழ்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதினார்கள். எப்படி? புள்ளி விவரங்களை மட்டும் பார்த்தால் உண்மை போல தோன்றும். 

ஆனால் உண்மையை ஊடுருவி பார்க்க *மூன்று பதங்களைப்* புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று உழைப்பாளர் படை, இரண்டு வேலை பங்கேற்பு. மூன்று வேலையின்மை விகிதம். 

ஒரு நாட்டில், வேலையில் இருப்பவர்கள், உழைக்கும் வயதிலுள்ள வேலை தேடுவோர்  என அனைவரும் சேர்ந்ததே  *உழைப்பாளர் படை* (Work Force or Labour Force) எனப்படும். 

உழைக்கும் வயதில் உள்ள அனைவரையும் உள்ளடக்கிய இந்த ஒட்டுமொத்த  உழைப்பாளர் படையில்  இருப்பவரின் மொத்த எண்ணிக்கையே *வேலைப் பங்கேற்பு* (Work Participation Rate or Labour Force Participation Rate) விகிதம் எனப்படும்.

மீதியுள்ளோர் எண்ணிக்கை *வேலையின்மை விகிதம்* (Unemployment Rate) கீழ் வரும்.

பொருளாதார மந்த காலத்தில், வேலையின்மை விகிதம் சாதாரணமாக அதிகரிக்கும். அதே வேளையில், வேலைதேடும் பலர் விரக்தியின் விளைவாக வேலை தேடும் முயற்சியிலிருந்து வெளியேறி விடுவார்கள். அமெரிக்காவில் அதுதான் நடக்கிறது. அப்படி அவர்கள் வெளியேறி
விடுவதால், வேலையற்றோர் என்ற அரசின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களுக்குள் அவர்கள் வர மாட்டார்கள். இதன்காரணமாக, ஒரு புறத்தில் வேலைப் பங்கேற்பு விகிதம் குறைந்தாலும், மறுபுறத்தில் வேலையின்மையும் குறைந்தது போன்றதொரு *தோற்றப்பிழை* அமெரிக்கா பற்றி உலகப் பார்வைக்கு உருவாக்கப்பட்டது.  

இது ஓர் உதாரணம். ஆகவே வலதுசாரிகள் எப்போதுமே நெருக்கடிக்கு தீர்வு தர இயலாது. 

*பற்றி எரியும் மக்கள் பிரச்சனைகளுக்கு  இடதுசாரிகள் மட்டுமே நவீன தாராளவாத முதலாளித்துவத்தினைக் கடந்து சென்று தீர்வு காண முடியும். அதுவே நெருக்கடியிலிருந்து மீளவும் வழி வகுக்கும். அந்தப் பாதை இறுதியில் முதலாளித்துவத்தையும் கடந்து செல்வதாக இருக்கும்.*

இது இந்தியாவிற்கு மட்டும் அல்ல, உலகின் அனைத்து நாடுகளுக்கும் பொருந்துகின்ற ஒன்று. சுருங்கக் கூறின், நாம் வரலாற்று ரீதியான நிகழ்ச்சிகளின் இணைவினைப் பார்க்கிறோம்.  *பொய்யான மற்றும் பிளவுபடுத்தும் உத்திகளின் மூலம் மக்களை வசப்படுத்துவதில் வெற்றி பெறும் வலதுசாரி சக்திகள், ஒரு குறுகிய காலத்திற்கு வலுவாகத் தோன்றக் கூடும். ஆனால், வேலையின்மை மற்றும் பிற அவலங்களிலிருந்து மக்களை அவர்களால் மீட்க முடியாது.* இருக்கும் அமைப்பு நிலைத்தும் நீடித்தும் இருப்பது போல வரலாற்றில் பல தருணங்கள் இருந்திருக்கின்றன. ஆனால், புதிய தருணங்கள் வரும் போது இவை அனைத்தும் பழைய நிலையில் நீடிக்க முடியாது. வலதுசாரிகள் இந்தியாவிலும், வேறு நாடுகளிலும் தேர்தலில் வெற்றி பெற்று நிற்கின்றனர். ஆனால், *தேர்தல் வெற்றிகள் அடிப்படை உண்மைகளை மாற்றி அமைத்து விட முடியாது.* அவர்களால் தீர்வுகளையும் தந்து விட இயலாது.

ஒரு ஜப்பானிய ஹைக்கூ கவிதை :  *"Fear knocked the door; Confidence opened the door. There was none outside"* (பயம் கதவைத் தட்டியது; நம்பிக்கை கதவைத் திறந்தது. வெளியில் ஆளைக் காணோம்".) 

ஆம்! நம்பிக்கைதான் வாழ்க்கை. *Where there is life, there is hope.*

அந்த நம்பிக்கையே இடதுசாரி மாற்று


*தோழர் இ.எம்.ஜோசப் அவர் மறைவிற்கு சற்று முன் எழுதிய கட்டுரையின் & முக நூல் பதிவின் வரிகள் இவை. நம்பிக்கையை துளிர்க்கச் செய்கிற, இருளை நீக்கி வெளிச்சம் பாய்ச்சுகிற வார்த்தைகள். ஜூலை 3 -தொழிலாளர் கூட்டு இயக்கம், இந்த திசை வழி நோக்கிய பயணம்*

- செவ்வானம்-


Monday, October 24, 2016

சற்றே நீண்ட, ஆனால் முக்கியமான . . . .



முக்கியமான இந்த நேர்காணலை மின்னஞ்சலில் அனுப்பிய பத்திரிக்கையாளர் தோழர் விமலவித்யா அவர்களுக்கு நன்றி.  கொஞ்சம் பொறுமையோடு முழுமையாக படித்து விடுங்கள்.





தமிழகத்தின் மூத்த எழுத்தாளரும், மார்க்சிய அறிஞருமான எஸ்.வி.ராஜதுரை அவர்களை மார்க்சிஸ்ட் மாத இதழ் சார்பாக என். குணசேகரன் , மார்க்சிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்டச் செயலாளர் பத்ரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கனகராஜ் ஆகியோர் சந்தித்து உரையாடினர்.

அந்த உரையாடலின் சுருக்கம் :

மார்க்சிஸ்ட் : கடந்த சட்ட மன்ற தேர்தலில் இரண்டு திராவிட கட்சிகளும் எழுபது சதவீதம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளதால் திராவிட கருத்தியல் மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக பலர் எழுதி வருகின்றனர். இது சரியான கருத்தா?

எஸ்.வி.ஆர்: இப்படி எழுதி வருவதே தவறானது. கருத்தியல் என்ற சொல்லுக்கு பதிலாக நான் கருத்து நிலை என்ற சொல்லை பயன்படுத்துகின்றேன். கருத்தியல் என்பது ஒரு கருத்தைப் பற்றிய ஆய்வு. எனவே ideology என்ற வார்த்தையை கருத்து நிலை என்ற சொற்றொடர் கொண்டே நாம் பயன்படுத்த வேண்டும்.

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் திராவிட இயக்க கருத்து நிலைக்கும் தற்போது என்ன தொடர்பு? இவர்களின் நிகழ்ச்சி நிரலே வேறு. கவர்ச்சி திட்டங்கள், நவதாராளமய கொள்கைகளுக்கான ஆதரவு, அந்நிய மூலதன ஆதரவு (இதில் நீயா? நானா? எனற போட்டி கூட இவர்களுக்குள் உண்டு) ஆகியவைதான் இவர்களது இன்றைய செயல்பாடு.

இந்த நாட்டிலுள்ள முதலாளி வர்க்கத்தை, பன்னாட்டு மூலதனத்தை வளர்ப்பதுதான், இந்த இரண்டு கட்சிகளின் கருத்து நிலை. தற்போதைய நிலையில் திராவிட கருத்து நிலைக்கும் இவர்களுக்கும் தொடர்பு கிடையாது. திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் சேர்ந்து 70 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளை வாங்கியிருக்கிறார்கள் என்றால், அது அந்த கட்சிகளுடைய வெற்றியே தவிர, திராவிட கருத்து நிலைக்கும் இதற்கும் தொடர்பு கிடையாது.

மார்க்சிஸ்ட்: இரண்டு கட்சிகளின் வெற்றி காரணமாக தமிழகத்தில் மாற்று அரசியலுக்கான சாத்தியப்பாடு குறைந்துள்ளதாகவும் பேசப்படுகிறது…

எஸ்.வி.ஆர்: நாளைக்கே சோசலிசம் வந்து அதனுடைய கனிகளை சுவைக்க வேண்டும் என்று எந்த கம்யூனிஸ்டும் போராடுவது இல்லை. எப்போதும் எதிர்காலத்தை நினைத்தே போராடுகின்றனர்; கனவு காண்கின்றனர்; மரணத்தை கூட எதிர்கொள்கின்றனர். எனவே ஒரு தேர்தல் முடிவுகளை மட்டும் வைத்துக் கொண்டு மாற்று அரசியலுக்கான ஆதரவு மக்களிடம் இல்லை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.

எந்த கொள்கையும் இல்லாதவர்களை நாம் தவிர்க்க வேண்டும். அவர்கள் நமக்கு தேவையற்ற சுமையாகி விடுவார்கள். ஏகாதிபத்திய எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு கொண்ட குறைந்த பட்ச செயல்திட்டம் அவசியம். இத்தகைய குறைந்த பட்ச செயல்திட்டத்தை உறுதியாகப் பற்றி நிற்கின்றவர்களைக் கொண்டுதான் அணி அமைக்க வேண்டும். கம்யூனிஸ்டுகளுக்கு என்று சமூகத்தில், மக்கள் மத்தியில் இருக்கின்ற நன்மதிப்பை குறைப்பதாக நமது அணி அமைந்து விட கூடாது. அவ்வாறானவர்களை தவிர்த்து விட வேண்டும்.

மார்க்சிஸ்ட்: சாதியத்தை எதிர்கொள்வது பற்றி……

எஸ். வி. ஆர். : இந்தியாவிலுள்ள தேர்தல் முறையும் சாதி அமைப்பும் பின்னி பிணைந்துள்ளது. தேர்தல் முறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க, அளிக்க சாதி வலுப்பட்டே வருகிறது.1967-ல் திமுக வெற்றி பெற்ற போது, காங்கிரஸ் எதிர்ப்பு அலை இருந்தது. 1965-லிருந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் தாக்கம் இருந்தது, பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்த காலத்தில் கடுமையான உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு இருந்தது. ரேசன் முறையில்தான் எல்லா உணவுப் பொருட்களும் கிடைத்தன. அரிசியும் புழுத்த அரிசியாக இருந்தது. எனவே காங்கிரஸ் எதிர்ப்பு அலை, இந்தி எதிர்ப்பு போராட்ட தாக்கம், தமிழ் தேசிய உணர்வு, உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் திமுகவிற்கே உரிய கவர்ச்சிகரமான அரசியல் என இவையெல்லாம் சேர்ந்து திமுக வெற்றி பெற காரணிகளாக அமைந்தன.

1971-ல் 5 ஆண்டு முடிவதற்கு முன்பே சட்டசபையை கலைத்து விட்டு கருணாநிதி தலைமையில் திமுக தேர்தலை சந்தித்தது; பெரும் வெற்றி பெற்றது. அதுவரைக்கும் கொள்கை சார்ந்து தேர்தலை சந்திக்கும் போக்கு இருந்தது. அதற்கு பிறகு, சாதி முன்னுக்கு வந்தது. சாதி சார்ந்து வாக்கு வங்கியை வளர்த்த பெருமை அதிமுகவிற்கு உண்டு. குறிப்பாக முக்குலத்தவர் வாக்கு வங்கி உருவானது.

தென் மாவட்டங்களில் முக்குலத்தவர், மேற்கு மாவட்டங்களில் கொங்கு வேளாளர் என சாதிகளுக்கு முக்கியத்துவம் அளித்தனர். வன்னியர்களை பொறுத்த வரை அவர்கள் எல்லா கட்சிகளிலும் இருந்தனர். காங்கிரஸ், திமுக. அதிமுக , பாமக என இந்த அனைத்து கட்சிகளுக்கும், வன்னியர் மக்களிடம் அடித்தளம் இருக்கிறது. நாடார்கள் திமுக, அதிமுக, இரண்டிலும் சரிபாதி இருந்தனர். ஆதிக்க சாதியினரை குறி வைத்து இயங்குவது என்பதுதான் திராவிட கட்சிகளின் கருத்து நிலை.

சாதி எதிர்ப்பு போராட்டமும், பாசிச எதிர்ப்பு போராட்டமும் ஒன்றுக்கொன்று இணைந்தது. எப்படி இங்கு ஏகாதிபத்தியத்தால் சுரண்ட முடிகிறது? ஏகாதிபத்திய எதிர்ப்புணவு ஏன் இங்கு பரவலாக இல்லை? அம்பேத்கர் அடிக்கடி சொல்வார். “இந்திய மக்களிடம் ஒரு சகோதரத்துவ உணர்வே இல்லை” என்று. எல்லா சாதியை சார்ந்த மக்களும் உலக மயமாக்கலால் பாதிக்கப்படுகின்றனர். கல்வி, மருத்துவம், போக்குவரத்து இவை தனியார் மயப்படுத்தப்பட்டு உள்ளதால், உயர் நடுத்தர வர்க்க மக்களைத் தவிர அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஆனால் நமக்கு ஏன் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு வரவில்லை?

எல்லோரையும் விட மிக மோசமாக பாதிக்கப்படுவது தலித் மக்கள்தான். தனியார் மயம் தலைதூக்கி உள்ளதால் கடந்த 15 வருடங்களாக இட ஒதுக்கீடும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. மத்திய அரசுத் துறையிலும், மாநில அரசுத் துறையிலும் தலித் மக்களுக்கான பழைய பின்னடைவு இடங்கள் கூட பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது. இப்படி கடுமையாக பாதிக்கப்பட்டும், அவர்களிடம் ஏன் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு வரவில்லை? அவர்களை ஏன் வர்க்கமாக நம்மால் திரட்ட இயலவில்லை? கிராமப்புறம் மட்டுமல்ல; எங்கு சென்றாலும், நமது ஒவ்வொரு நாள் நடவடிக்கையையும் சாதி பாதிக்கிறது. உதாரணமாக, துப்புரவு தொழிலாளர்களால் தயாரிக்கப்பட்டது என ஒரு அப்பள உறையின் மீது போட்டு விற்பனை செய்தால், விற்பனை ஆகுமா? வாங்குவார்களா?

வர்க்கப் போராட்டம் என்பது என்ன? ஒடுக்கப்பட்ட சாதியினரையும் உள்ளடக்கியது தானே வர்க்கப் போராட்டம்? தலித் மக்கள், இந்தியாவில் அடித்தட்டு வர்க்கமாக இருப்பவர்கள்; அன்றிலிருந்து இன்று வரை விவசாய கூலிகளாக, முறைசாரா தொழிலாளர்களாக இருந்து வருகின்றனர்.

1952, 57, 62 தேர்தல்களில் வேட்பாளர் தேர்வில் சாதி பெரிய பங்கினை ஆற்றவில்லை. 1952 தேர்தலில் கவுண்டர்கள் அதிகமிருந்த ஈரோடு சட்டமன்ற தொகுதியில், எண்ணிக்கை அளவில் மிகச்சிறிய மக்கள்தொகை சாதியை சேர்ந்த கே.டி ராஜு என்ற தோழரை கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆக்கியது. அவர் வெற்றி பெற்றார். அப்போது கருத்துநிலை சார்ந்து மக்கள் முடிவு எடுத்தனர். ஆனால், இப்போது அப்படி இல்லை. அதுவும் இன்றைய தேர்தல் முறையே (தொகுதியில் அதிக வாக்கு வாங்குபவரே வெற்றி பெறுபவர் என்ற முறை) சாதியை வலுப்படுத்துவதாக உள்ளது. விகிதாச்சார தேர்தல் முறை வேண்டும் என நாம் தீவிரமாக இயங்க வேண்டியுள்ளது.

மார்க்சிஸ்ட்: விகிதாச்சார தேர்தல் முறையின் அவசியம் குறித்த பல விபரங்களை திரட்டி ஆவணம் ஒன்றை தயார் செய்யும் வேலை நடந்து வருகின்றது.

எஸ்.வி.ஆர்: அது நல்ல முயற்சி . நான் பலஆண்டுகளாக அந்த முயற்சியில் உள்ளேன். இடதுசாரி கட்சி தலைவர்கள் அனைவரிடமும் வலியுறுத்தி உள்ளேன்.
மார்க்சிஸ்ட்: சாதி, சாதிய அமைப்பு என்பது முக்கிய பிரச்சனை. மறுபுறம் மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளும் தீவிரமடைந்து வருகின்றன. வெகுஜன அமைப்புகள் மூலம் இவையிரண்டையுமே எதிர்த்து போராடி வருகின்றோம். இன்றைய சூழலில் சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்த போராட்டதையும் வர்க்கப் போராட்டத்தினையும் நடத்தி,மக்களைத் திரட்டுவது அவசியமாகிறது.

மார்க்சிஸ்ட்: பெரியார் சாதிப்பிரச்சனையை எதிர்கொண்டது பற்றி….

எஸ்.வி.ஆர் : 1948-ல் திராவிடர் கழக மாநாடு தூத்துக்குடியில் நடக்கிறது. ஒன்றரை லட்சம் பேர் கூடியிருக்கிறார்கள். மாநாட்டிற்கு திராவிடர் கழக தொண்டர்கள் குடும்பத்தோடு வர வேண்டும் என பெரியார் அறைகூவல் விடுத்திருந்தார். அப்போது இருந்த சூழலில் அவ்வளவு பெரிய கூட்டத்தை திராவிடர் கழகத்தால் எப்படி திரட்ட முடிந்தது? சடங்குகள் அற்ற, ஆடம்பரமற்ற திருமணங்களை நடத்திட கருத்து நிலை சார்ந்து திராவிடர் கழகத்தினரை சம்மதிக்க வைக்க அவரால் முடிந்தது.

1967-ல் குன்னூரில் திராவிடர் கழக செயலாளர் இல்லத்திருமண விழா, சாதி மறுப்பு திருமணமாக நடைபெற்றது. அதில் பெரியார் கலந்து கொண்டார். ஏராளமானோர் அத்திருமண விழாவில் கலந்து கொண்டனர். நானும் அத்திருமண விழாவில் கலந்து கொண்டேன். அவ்விழாவில் “எதற்கு இவ்வளவு செலவு செய்து திருமணத்தை நடத்துகின்றீர்கள். இது சரியல்ல” என மேடையிலேயே பெரியார் கடிந்து கொண்டார். அன்றாட வாழ்வில்,கொள்கையை பின்பற்றுகின்ற விதத்தில், திராவிடர் கழக குடும்பங்களையே அவர் மாற்றினார். மாநாடு பொது நிகழ்ச்சிகளுக்கு குடும்பமாக வரவேண்டும் என்று வலியுறுத்தினார். குடும்பத்தை ஜனநாயகப்படுத்தும் விதமாக அவரது இயக்கம் இருந்தது.

இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். நமது தோழர்கள் முன் மாதிரியாக வாழ்க்கையில் இருக்க வேண்டும். நுட்பமாக, மறைமுகமாக சாதியை திருமண பத்திரிக்கைகளில் குறிப்பிடும் பழக்கம் உள்ளது. அன்றாட வாழ்வில் சாதி உணர்வு நீடித்து வருகின்றது. இதை நாம் உரிய அளவில் கணக்கில் கொள்ள வேண்டும்.

மார்க்சிஸ்ட் : பெரியார், அம்பேத்கர் சாதி எதிர்ப்பு நிலை பற்றி…

எஸ்.வி.ஆர்.: பெரியார், சோவியத் ரஷ்யாவால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். அவர் கம்யூனிஸ்ட் கருத்து நிலையை முற்றிலும் புரிந்து கொண்டவரோ அல்லது அதை விளக்கக் கூடியவரோ அல்ல. அவர் சமதர்மத்தை புரிந்து கொண்டது வர்ண தர்மத்திற்கு அது எதிரானது என்ற அர்த்தத்தில். வர்ணத்திற்கு ஒரு நீதி, சாதிக்கு ஒரு நீதி என்ற வர்ண தர்மத்திற்கு எதிராக எல்லோருக்கும் ஒரே நீதி என்று சமதர்மத்தை அவர் பார்க்கிறார். சமூக, பண்பாட்டு, சமதர்மத்தின் நீட்சியாகத்தான், பொருளாதார சமதர்மத்தை அவர் பார்க்கிறார்.

ஒரு கற்பனைவாத சோசலிஸ்ட் ஆகத்தான் அவர் பெரும்பாலும் இருந்தார். அவர் விஞ்ஞானபூர்வ சோசலிஸ்ட் ஆக இருந்ததே இல்லை. எனவே, இல்லாத ஒன்றை சொல்லி, பின்னாளில் அவர் கைவிட்டு விட்டார் என்று சொல்வது தவறு.

1929- லிருந்தே சோவியத் யூனியன் பற்றி அவர் எழுதி வருகிறார். சோவியத்தை அவர் நேசித்ததற்கு காரணம் அங்கு சாதிய பேதம் இல்லை, பெண்ணடிமைத்தனத்தை ஒழிக்க முயற்சி எடுக்கப்பட்டது, மூட நம்பிக்கைகள் இல்லை என்பதாலேயே ஆகும். சோவியத் யூனியன் பற்றி தொடர்ந்து அவர்களது பத்திரிக்கைகளில் எழுதி வந்தனர். போல்ஷ்விக்குகள் நீடித்து ஆள முடியுமா? என்று அமெரிக்க மார்க்சிஸ்ட்டான ஸ்காட்னியருக்கும், பெட்ரண்ட் ரஸலுக்கு நடந்து வந்த விவாதத்தை மொழிபெயர்த்து வெளியிட்டார். இரண்டாம் உலகப்போரின் போது கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த நிலைபாடான பாசிசம் முறியடிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே பெரியாரும் எடுக்கிறார். ‘பாசிச எதிர்ப்பு மாநாட்டை’ அவர் நடத்துகிறார். அப்போரின் போது, சோவியத் படைகள் ஒவ்வொரு நிலையிலும் பெற்ற வெற்றிகள் பற்றி குடியரசுவிலும், விடுதலையிலும் தொடர்ச்சியாக தலையங்கம் எழுதப்பட்டு வந்தது. தோழர் ஸ்டாலின் இறந்த போது வெகு சிறப்பான அஞ்சலிக் கட்டுரையை எழுதுகின்றார். சோவியத் யூனியனுக்கும், சீனாவிற்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட போது, சோவியத் பக்கம்தான் அவர்கள் நின்றார்கள். சோவியத் யூனியன் மீது பெரிய ஈர்ப்பு இருந்தது. ஆனால் அவருக்கு மாற்று பொருளாதார பாதை எல்லாம் இருக்கவில்லை.

ஜஸ்டிஸ் கட்சி, அதற்குப்பின் பெரியாரால் தலைமை தாங்கப்பட்ட நீதிக்கட்சி, அதைத்தான் அவர் திராவிடக்கழகமாக மாற்றினார். இவற்றுக்கிடையே தன்மை சார்ந்த வேறுபாடு இருக்கிறது. நீதிக்கட்சியில் பழைமைவாதிகளும் இருந்தார்கள். அதே நேரத்தில் சாதி மறுப்பாளர்களும், பகுத்தறிவாளர்களும் அதில் இருந்தனர். நீதிக்கட்சி என்பது ஒரே தன்மையுடைய கட்சி அல்ல.

1936-லேயே ஜஸ்டிஸ் கட்சி தேய்ந்து விட்டது. 1937, 38 ஆண்டுகளில் நடந்த நகராட்சி தேர்தல்களில் அது ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை. 1937-ல் இந்திய அரசு சட்டப்படி நடந்த மாகாண தேர்தலில் 15 பேர் வரைதான் வெற்றி பெற்றனர். அந்தக் கட்சி செல்வாக்கு இழந்து போனது. அந்த சமயத்தில்தான் இந்தி எதிர்ப்பு போராட்டம் நிறைவு பெற்றிருந்தது. அந்தக் கட்சிக்கு தலைவர்களே இல்லாத சமயத்தில்தான் பெரியாரை தலைமை தாங்க அழைக்கின்றனர். 1939-ல் பெரியாரும் அதை ஒத்துக்கொள்கின்றார்.
அதன் பிறகு நடந்த போராட்டங்களால் அவர் சிறைக்கு சென்று விடுகிறார். 1942- ல் சிறையிலிருந்து வெளியே வந்தபின் கட்சியின் பெயரை “திராவிடர் கழகம்” என மாற்றுகிறார். நீதிக்கட்சிக்கு இருந்த பிராமண எதிர்ப்பு அரசியல் பாரம்பரியத்தின் காரணமாக அந்த கட்சியை பெரியார் எடுத்துக் கொள்கிறார்.

தியாகராய செட்டியார், டி.எம். நாயர் போன்றவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜஸ்டிஸ் கட்சிக்கு வந்தவர்கள். தேசியவாதிகள். உள்நாட்டு தொழில்கள், கைவினை பொருட்கள் ஆகியவற்றின் முன்னேற்றத்திற்காக ஆங்கிலேயரிடம் சண்டை போட்டார்கள். இட ஒதுக்கீடு என்ற விஷயத்திற்காக போராடினார்களே தவிர, அவர்கள் பகுத்தறிவு வாதிகள் இல்லை. ஆனால் ஜஸ்டிஸ் கட்சியில் பகுத்தறிவு வாதிகளும் இருந்தனர். இந்நிலையில்தான் அக்கட்சி உடைந்தது. பழைய ஐஸ்டிஸ் கட்சி என்ற ஒன்று அப்படியே இருந்து வந்தது. 1939-ல் டாக்டர் அம்பேத்கர் சென்னை வருகின்றார். அவருக்கு பழைய நீதிக்கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன் காலையில் பெரியாரை, டாக்டர் அம்பேத்கர் சந்தித்து பேசுகிறார். மாலையில் வரவேற்பில் பழைய நீதிக்கட்சியினரை அம்பேத்கர் விமர்சித்து பேசுகின்றார். “கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு என்ற அளவிலேயே உங்கள் செயல்பாடு உள்ளது. ஆனால் அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை நீங்கள் எடுப்பது கிடையாது. நியாயமாக பார்த்தால் நீங்கள் ஈ.வே ராமசாமி அவர்கள் பக்கம் தான் நிற்க வேண்டும்” என்று அவர்கள் போட்ட கூட்டத்திலேயே அவர்களை விமர்சனம் செய்து பேசுகிறார்.

நீதிக்கட்சியிலிருந்த பகுத்தறிவு வாதிகளும் சாதாரண மக்களும்தான் பெரியாருடன் வருகின்றனர். அவர்கள் பொருளாதார விஷயங்களை கையில் எடுக்கவில்லை. பொருளாதார திட்டம் எல்லாம் அவர்களுக்கு கிடையாதுதான். சாதி இருக்கின்ற வரை எந்தவித அடிப்படை மாற்றமும் வராது என்று அவர்கள் கருதினர். அம்பேத்கர், புலே, பெரியார் ஆகியோரை பொறுத்தவரை அவர்கள் இந்திய சமூகத்தில் பொது உரிமையே இல்லை என்று கருதினர். பொதுவுடைமையா? பொது உரிமையா? என்று வரும் போது, பொது உரிமையே முக்கியம் என்ற நிலைப்பாட்டை எடுத்தனர்.

மார்க்சிஸ்ட் : பெரியாரின் பகுத்தறிவு வாதம் அன்று மூட நம்பிக்கைகள் மண்டிக் கிடந்த தமிழகத்தில் ஒரு அறிவியல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. எனினும் அவரது பெயரால் இயங்கும் இயக்கங்களாலேயே அது கைவிடப்பட்ட நிலை ஏற்பட்டுள்ளது. மற்றொன்று தமிழகத்தின் அதிகரித்து வரும் ஆன்மீகப் பிடிப்பு. இந்நிலையில் இனி நாத்திகவாதம் மற்றும் பகுத்தறிவு வாதத்தின் எதிர்காலம் என்ன?

எஸ்.வி.ஆர் : 1928-29-களில் எவ்வளவு பிற்போக்காக மக்கள் இருந்திருப்பார்கள்? அப்போதே பெரியார் மக்களை திரட்டியிருக்கிறார். எனவே இப்போதும் நம்மால் செய்ய முடியும். பகுத்தறிவு மூட நம்பிக்கை எதிர்ப்பு போன்றவற்றிக்காக செயல்படுவதற்கு பெரியார் காலத்தை விட அதிக தேவை தற்போது உள்ளது. நவீன சாமியார்களுக்கு எதிரான போராட்டம்; சாதிக்கு எதிரான போராட்டம்; பகுத்தறிவு கருத்துக்கள்; விஞ்ஞான கருத்துக்களை பரப்புவதற்கான போராட்டம் ஆகியவற்றை நடத்தவேண்டி உள்ளது. நவீன தொழில் நுட்பங்களை உள் வாங்கிக் கொண்ட இளைஞர்கள் கூட மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கிறார்கள். அவர்களுக்கு கற்பிக்கப்படும் கல்வி அத்தகையதாக இருக்கிறது.

நாங்கள் படித்த காலத்தில், தேசம் விடுதலைப் பெற்ற நேரம். அப்போது கல்வியிலும் மக்கள் பொது புத்தியிலும் கூட மூட நம்பிக்கைகளுக்கு எதிரான விஷயங்கள் குறைந்த அளவுவாவது பதிந்திருந்தது. கம்யூனிசம் குறித்து பகுத்தறிவு குறித்த ஆர்வம் மக்களிடம் இருந்தது. இந்த தலைமுறையில் அது இல்லை. அமைப்பு ரீதியாக திட்டமிட்டே இவை ஒழித்துக் கட்டப்பட்டன. திமுகவும், அதிமுகவும் எந்த மாதிரியன பாடப்புத்தகங்களை தயாரித்து வழங்கியிருக்கிறார்கள்?

அறிவியல் பாடங்களையும் சமூக அறிவியல் பாடங்களையும் பிரித்து விட்டார்கள். தொழில்நுட்ப பாடங்களையும் சமூக அறிவியலையும் பிரித்து விட்டார்கள். ஒரு மருத்துவ மாணவனுக்கு, பொறியியல் மாணவனுக்கு, படிக்கிற மாணவனுக்கு சமூக அறிவியலும், மொழியியலும் மிக முக்கியமானது. ஆனால் அதை இவர்கள் திட்டமிட்டே பிரித்தார்கள். அறிவுக் கூர்மையோடு மாணவர்களை வளர்க்க வேண்டிய நேரத்தில் பழங்கால இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவற்றைத்தான் இவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அதைத்தான் கற்பித்தார்கள். நவீனத்துவத்தை கல்வியில், வாழ்வில் கொண்டு வரவே இல்லை. முதலாளித்துவவாதிகள் நகரங்களில் சாலைகள் அமைப்பது, நவீன தொழிற்சாலைகள், மேம்பாலங்கள் கட்டுவதைத் தான் நவீனம் என்று சொல்கிறார்கள். ஜனநாயகபூர்வமான கலாச்சாரம் கொண்ட சமூகத்தை உருவாக்குவதைத் தான் நாம் நவீனம் என்று குறிப்பிடுகின்றோம். திமுகவும், அதிமுகவும் அவர்கள் பாணியில் நவீனத்துவத்தை கொண்டு வந்ததாக சொன்னாலும் அடிப்படையில் பழமைவாதிகளாகவே உள்ளனர்.

இரண்டு கட்சிகளின் ஆட்சி காலத்தில் அறிவியலை பரப்புவதற்கு என்று எளிய அறிவியல் புத்தகங்களை நிறைய கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் திமுக, அதிமுக செய்யவில்லை. பிற்போக்குத் தனமான கட்சிகள் ஆதிக்கம் செலுத்துகின்ற மகாராஷ்டிராவில் கூட ஏராளமான அறிவியல் பரப்பும் புத்தகங்கள் வெளி வந்து கொண்டு இருக்கின்றன. தபோல்கர் அங்குதானே இருந்தார். ஏன் நம்மால் பெரியார் பிறந்த மண்ணில் தபோல்கரை போல ஒருவரை உருவாக்க முடியவில்லை? பெரியாருக்கும், திமுகவிற்கும் அடிப்படையிலேயே வேறுபாடு உள்ளது. பெரியார் மனிதனுடைய “சுயமரியாதை” என்பதை முன்னுக்கு வைத்தார். திமுக, தமிழருடைய மானம், கற்பு என்பவற்றை முன்னுக்கு வைத்தது. இரண்டுமே சம்பந்தமில்லாதவை. கற்பு என்கிற மதிப்பீட்டுக்கு எதிரானவர் பெரியார். கற்பை தூக்கிப்பிடித்தவர்கள் திமுகவினர். பகுத்தறிவு அறிவியல் கருத்துக்களை இன்றைய இளைஞர்களிடம் பரப்ப நாம் மிகப் பெரிய அளவில் செயல்பட வேண்டியுள்ளது. அறிவொளி இயக்கம் போன்று இதற்கு ஒரு இயக்கத்தை நாம் விரிவான அளவில் நடத்த வேண்டும்.

நேர்காணலின் இரண்டாம் பகுதி - நாளை