தமிழகத்தில் அருந்ததியருக்காக அளிக்கப்பட்ட உள் ஒதுக்கீடு சட்ட ரீதியானது, செல்லத் தக்கது,
உள் ஒதுக்கீட்டிற்கான உரிமை மாநில அரசுக்கு உண்டு என உச்ச நீதிமன்றம் அளித்த
தீர்ப்பு முக்கியமானது.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சென்னையில் நடத்திய பிரம்மாண்டமான பேரணி, இக்கோரிக்கையின் வெற்றியை வேகப் படுத்தியது என்றால் அது மிகையில்லை. இப்பேரணி நடைபெறும் வேளையில் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் என்.வரதராஜன் அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்ததும், கொள்கை அளவில் கோரிக்கையை ஒப்புக் கொண்டதையும் அதை தோழர் என்.வி பேரணிக்குப் பின்பு நடைபெற்ற கூட்டத்தில் அறிவித்ததும் மனதில் பசுமையாக இருக்கிறது.
ஆம் அப்பேரணியில் வேலூரிலிருந்து மட்டும் எங்கள் சங்கத் தோழர்கள் இருபது பேர் கலந்து கொண்டோம்.
இன்றைக்கு சங்கியாகவே மாறியுள்ள டாக்டர் கிச்சாமி உள் ஒதுக்கீட்டை மிகக் கடுமையாக எதிர்த்தார். இருப்பினும் சட்டம் வந்தது. இப்போது அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போனதும் டாக்டர் கிச்சாமிதான். உள் ஒதுக்கீடு கூடாது என்று சொன்னவர் இப்போது நாங்கள் பட்டியலினமே அல்ல என்ற அளவிற்கு மாறிப்போனதுதான் விஷமூர்த்தி மேஜிக்.
தீர்ப்பின் பின்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் அவர்களின் பதிவை பகிர்ந்து கொள்கிறேன்.
செங்கொடி என்றெதுமே ஒரு ஜீவன் பிறக்குதம்மா!
இன்று அதுவும் மோடி தலைமையிலான ஆட்சி அதிகாரத்திலிருக்கும்போது அருந்ததியருக்கான உள் இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் மகத்தானதொரு தீர்ப்பை அளித்திருக்கிறது. இந்த இடஒதுக்கீட்டிற்கு அரசியல் கட்சி என்கிற முறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முற்றிலும் உரிமை கொண்டாட முடியும். அரசாங்கம் என்கிற முறையில் டாக்டர்.கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசாங்கம் உரிமை கொண்டாட முடியும். இந்தப் போராட்டத்தை அந்தக் காலத்தில் வழிநடத்திய, தலைமை தாங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் தோழர் என்.வரதராஜன் தனித்த பெருமைக்கும் புகழுக்கும் உரியவராவார்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்களாக விளங்கிய தோழர்கள் பி.சம்பத், கே.சாமுவேல்ராஜ் ஆகியோரின் பங்கும் அளப்பரியது.
இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி உச்சநீதிமன்றத்திற்கு சென்றார். உச்சநீதிமன்றம் இந்த இடஒதுக்கீடு செல்லும் என்றும், மாநில அரசு இடஒதுக்கீடு அளித்தது சரிதான் என்றும் தீர்ப்பளித்திருக்கிறது.
இந்தக் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் ஒன்றை அழுத்தமாகவும் தொடர்ச்சியாகவும் பதிவு செய்ய வேண்டும்.
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முகவுரையில் தோழர் ஏங்கெல்ஸ் இப்படி குறிப்பிட்டிருக்கிறார்;
"சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வரும் வர்க்கம் (பாட்டாளி வர்க்கம்) சுரண்டியும், ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) இனி தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டுமானால், சமுதாயம் அனைத்தையும் அதேநேரத்தில் சுரண்டலிலிருந்தும் ஒடுக்குமுறையிலிருந்தும் என்றென்றுக்குமாய் விடுவித்தே ஆக வேண்டும்."-கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (1883-ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்பின் முகவுரை)
ஆம், தொழிலாளி வர்க்கம்தான், தொழிலாளி வர்க்கம் மட்டும்தான் அனைத்துவிதமான சுரண்டல்களிலிருந்தும் ஒடுக்குமுறைகளிலிருந்தும் சமூகம் முழுவதையும் விடுவிப்பதற்கான ஆற்றல் கொண்டது, அதன் கடமையும் அதுதான்.
அருந்ததியர் மக்கள் பட்டியலினத்திற்குள்ளேயே மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாய் இருந்து வருகிறார்கள் என்பது உண்மை. தோழர் என்.வரதராஜன் அவர்களின் வார்த்தைகளில் சொல்வதானால் "அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடி மூட்டை" அவர்கள். அந்தக் கரங்கள் தாங்கள் பிடிக்க வேண்டிய கொடியைக் கூட, எழுப்ப வேண்டிய முழக்கத்தைக் கூட மனதிற்குள் அன்றி வெளிப்படையாகச் சொல்ல தயங்கும் நிலை தற்போதும் இருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தக் கோரிக்கையை முன்னெடுத்து பல மாநாடுகளை நடத்தியது. அந்த மாநாடுகளில் அருந்ததியர் மக்களோடு செங்கொடியை ஏந்திய உழைப்பாளி வர்க்கம் தன்னை முழுமையாக கரைத்துக் கொண்டது. இறுதியாக சென்னையில் நடைபெற்ற பேரணியில் அருந்ததியர் மக்களைக் காட்டிலும் எண்ணிக்கையில் அதிகமாக உரத்த குரல்களில் செங்கொடியேந்திய தொழிலாளி வர்க்கம் நிலப்பிரபுத்துவ சமூகத்தால் தங்களை பிரித்து வைத்திருந்து எல்லாவிதமான தடைகளையும் தாண்டி அருந்ததியர்களுக்கு உள் இடஒதுக்கீடு கொடு என உரத்த குரலில் அந்த இயக்கத்தில் கலந்து கொண்டார்கள்.
இதோ அது சாத்தியமாகி உச்சநீதிமன்றத்தின் அங்கீகாரத்தையும் பெற்று நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. செங்கொடி இயக்கத்தின் பிதாமகர்கள் சொன்னதை தொழிலாளி வர்க்கம் எல்லா காலத்திலும் தங்கள் நினைவில் நிறுத்திக் கொண்டு முன்னேறும்.
ஆம், செங்கொடி இயக்கத்தால் மட்டுமே சமூகம் முழுவதையும் எல்லாவித சுரண்டல்களிலிருந்தும் ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுவிக்க முடியும். அது தொழிலாளி வர்க்கத்தின் கடமையாகும்.
சமூக முழுவதையும் இப்படி விடுவிப்பதன் மூலமாகவே தொழிலாளி வர்க்கம் எல்லா விதமான சுரண்டல்களிலிருந்தும் ஒடுக்குமுறைகளிலிருந்தும் தன்னுடைய விடுதலையை நிரந்தரமாக்கிக் கொள்கிறது.
No comments:
Post a Comment