கொள்ளையன் அபு ஹூசைனின் குகைக்குள்ளே செல்லும் கடவுச் சொல் அலிபாபாவுக்குக் கிடைத்தது.
ஆனால் மோடி திரட்டியுள்ள நிதி பற்றி தகவல் கூட உங்களுக்குக் கிடைக்காது.
அந்த மர்ம நிதி குறித்து
அந்த மிகப் பெரும் முறைகேடு குறித்து
பி.எம்
கேர்ஸ் – மர்ம நிதி
*நாளொரு கேள்வி: 17.08.2020*
இன்று நம்மோடு,
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர், *எம்.கே.கலைச்செல்வி (சேலம்)*
-----------------------------------------------------
*கேள்வி*
"பி.எம் கேர்ஸ்" நிதி குறித்த வெளிப்படைத் தன்மை வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்படுவதன் காரணங்கள் என்ன?
*எம்.கே.கலைச் செல்வி*
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் "PM Cares Fund "ஐ பற்றி பேசுவதற்கு முன்பாக *ஒரு சின்ன வரலாற்று ஃபிளாஷ் பேக்.*
1947 இந்திய பிரிவினையின் போது நடந்த மத வன்முறையில் லட்சக்கணக்கான மக்கள் புலம் பெயர்ந்தனர். தங்கள் சொந்த பந்தங்களை விட்டு சொத்து சுகங்களை இழந்து காலகாலமாக வாழ்ந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட *அன்றைய பிரதமர் நேரு அவர்கள் 1948 ம் ஆண்டு "பிரதமர் தேசிய நிவாரண நிதி"( Prime Minister National Relief Fund) என்ற அமைப்பை உருவாக்கினார்.* இந்த அமைப்பின் மூலம் மக்களிடம் இருந்து பெறப்பட்ட நன்கொடை கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர் வரும் போதேல்லாம் மக்களிடம் இருந்து நன்கொடையை இந்நிதிக்கு வாங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக அரசு கொடுத்து வருகிறது. பிரதமர் தேசிய நிவாரண நிதி அமைப்பின் தலைவராக பிரதமர் இருந்தார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர், டாடா டிரஸ்ட் தலைவர் ஜாம்ஷெட்டி டாடா, இந்திய வர்த்தக கூட்டமைப்பின் சார்பாக ஒரு பிரதிநிதி ஆகியோர் குழு உறுப்பினர்களாக இருந்தனர். மக்கள் அளிக்கும் நன்கொடைகளுக்கு வருமான வரி சட்டம் பிரிவு 80 G படி 100% வரிவிலக்கு தரப்பட்டது.
பின்னர் 1985 ம் ஆண்டு *திரு. ராஜீவ் காந்தி* அவர்கள் பிரதமராக இருந்த போது அதுவரை செயல்பட்ட பிரதமர் தேசிய நிவாரண நிதி அமைப்பின் குழு மாற்றப்பட்டு அதன் அதிகாரங்கள் அனைத்தும் பிரதமர் அலுவலகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு 2013 ம் ஆண்டு *"நிறுவன சமூக பொறுப்பு சட்டம் "* ( Corporate Social Responsibility Act ) இயற்றப்பட்டது. இந்திய மண்ணில் செயல்படும் நிறுவனங்கள் தங்கள் வருமானத்தில் குறைந்தபட்சம் 2% நிறுவன சமூக பொறுப்பு நிதியாக அளித்திட வேண்டும் எனறு சட்டம் கொண்டுவரப்பட்டது. பிரதமர் நிவாரண நிதிக்கு செலுத்தப்படும் தொகையும் 2% க்கான பங்களிப்பிற்குள் வருமென அறிவிக்கப்பட்டது. *ஆனால் அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள் நேரடியாக செலுத்த முடியாது.*
*பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு நன்கொடை* விவரங்கள், வெளி நாட்டில் இருந்து வந்த தொகைகள் பற்றிய தகவல்கள் எல்லாம் இணைய தளத்திற்கு போனால் பத்து ஆண்டுகளுக்கு (2009-2019) கிடைக்கிறது. வரவு செலவுக் கணக்குகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.2018-19 வரை தணிக்கை செய்யப்பட்டுள்ளது. அதன் வெளிப்படைத்தன்மையில் கேள்விகள் சில எழுந்தாலும் அவற்றுக்கு விடைகள், விளக்கங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருந்தன.
தற்போது பிரதமர் மோடி அவர்கள் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட
மார்ச் 24, 2020 ல் புதியதாக ஒரு அமைப்பை *"PM Cares"* என்ற பெயரில் துவக்கி நன்கொடை வழங்க வேண்டுகோள் விடுத்தார். பி.எம்.கேர்ஸ் அமைப்பிற்கு தலைவராக பிரதமர் இருப்பார். உள்துறை அமைச்சர், பாதுகாப்பு துறை அமைச்சர், பிரதமரால் நியமிக்கப்படும் மூன்று பேர் இந்த அமைப்பின் குழு உறுப்பினர்களாக இருந்து வழிகாட்டுவார்கள். முடிவெடுக்கும் அதிகாரங்கள் அனைத்தும் பிரதமரிடமே இருக்கும். நன்கொடை அளிப்பவர் பெயர்கள், விபரங்கள், யாருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது, எவ்வளவு உதவி என்ற விபரங்களை யாருக்கும் சொல்ல தேவையில்லை. மத்திய தணிக்கை துறையின் வரம்பிற்குள்ளும் பி.எம்.கேர்ஸ் அமைப்பு வராது. *ரயில்வே, எல்.ஐ.சி போன்ற அரசுத் துறை, அரசு நிறுவனங்கள் நிதி வழங்கலாமெனினும், பாராளுமன்றத்திற்கோ சி.ஏ.ஜி. தணிக்கைக்கோ ஆட்படத் தேவையில்லை. தனிப்பட்ட ஆடிட்டர் ஒருவர் நியமிக்கப்பட்டு தணிக்கை செய்வார். தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் "பி.எம் கேர்ஸ்" வராது.*
ஏற்கனவே பிரதமர் தேசிய நிவாரண நிதி இருக்கும் போது எதற்காக புதியதாக பி.எம் கேர்ஸ் என்ற அமைப்பு என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.
இயற்கை பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவிட பிரதமர் நிவாரண நிதி தவிர ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில அளவில் *முதல்வர் நிவாரண நிதி* இருக்கிறது. இயற்கை பேரிடர் காலங்களில் முதல்வர் நிவாரண நிதிக்கு மக்களும் நன்கொடை அளித்து வருகின்றனர். கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்படாத மாநிலங்களே இல்லை. தொற்று நோய் பரவலை தடுத்திட மாநில அரசுகளே முன்நின்று போராடிக் கொண்டிருக்கின்றன.
மருத்துவம், சுகாதாரம், தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை, தொற்றுநோய் பரவல் தடுப்பு என பல முனைகளில் பணியாற்ற வேண்டிய தேவை மாநில அரசுக்கு உள்ளது. மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறை காரணமாக மேற்கண்ட நிவாரண நடவடிக்கைளில் மிகப்பெரிய தொய்வு உள்ளதை அறிவோம்.
பல மாநிலங்கள் போதுமான நிதி இன்றி நிவாரண பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றன. மத்திய அரசின் பாரபட்சமும் எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு கூடுதல் பாதிப்பை உருவாக்கியுள்ளன. இவ்வளவு பேரிடர் இருந்தும் முதல்வர் நிவாரண நிதி பங்களிப்புகளும் சி.எஸ்.ஆர் க்கான தகுதியைப் பெற வேண்டுமென்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியையும் மத்திய அரசு முடக்கி விட்டது.
பெரிய நிறுவனங்களும் நன்கொடைகளை பி.எம்.கேர்ஸ் நிதிக்கே அளிக்கிறார்கள். தொழில்கள், தனியார் நிறுவனங்கள் அதிகம் உள்ள வளர்ச்சி அடைந்த மாநிலங்களான மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் உள்ள பெரிய தொழிலதிபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் கூட பி.எம்.கேர்ஸ் நிதிக்கே நன்கொடை வழங்குகின்றனர். இந்திய அளவில் செயல்படும் அரசு பொதுத்துறை நிறுவனங்களும், ஊழியர்களும் பி.எம்.கேர்ஸ் நிதிக்கே நிதி அளிக்க வற்புறுத்தப்படுகிறார்கள்.
இதுவரை பி.எம்.கேர்ஸ் நிதிக்கு ரூ. 9677.90 கோடி நிதி வந்துள்ளதாக " *"IndiaSpend"* அமைப்பு தெரிவித்துள்ளது.இதில் ரூ 4308 கோடி அரசு ஊழியர்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் கொடுத்த நன்கொடையாகும். *இந்தியன் ரயில்வே* ரூ.151 கோடியும் *எல்.ஐ.சி* ரூ 101 கோடியும் பி.எம்.கேர்ஸ் நிதிக்கு நன்கொடை அளித்துள்ளதை பத்திரிக்கை செய்தி மூலம் தெரிந்து கொண்டோம். இது போல் பல பொதுத்துறை நிறுவனங்களும் நிதி அளித்துள்ளன. தனியார் நிறுவனங்கள் தங்களின் சி.எஸ்.ஆர் நிதியில் 5000 கோடிகள் வரை அதாவது அவர்களுக்கான வரம்பில் மூன்றில் ஒரு பங்கை பி.எம் கேர்ஸ் க்கு தந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் தடைசெய்யப்பட்ட, *டிக்-டாக் செயலி நிறுவனம்* ரூ.30 கோடியை பி.எம்.கேர்ஸ் நிதிக்கு அளித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
நிவாரண நடவடிக்கைக்காக *மாநில அரசுகள் மத்திய அரசிடம் நிதி வேண்டி* தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. *தமிழக முதல்வர் பல முறை நிதி கோரி கடிதம் எழுதியுள்ளார்.* ஆனால் பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து கொரோனோ தொற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கோ, உடனடியாக நிவாரணம் தேவையாக உள்ள மக்களுக்கோ நிதி வழங்கியதாக தெரியவில்லை.
ஆனால் ரூ.3100 கோடிகளை பி.எம் கேர்ஸ் நிதியிலிருந்து கோவிட்- 19 தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைக்காக ஒதுக்குவதாக அறிவித்ததில் ரூ.2000 கோடி "மேட் இன் இந்தியா" தயாரிப்பு மூலம் குஜராத் ராஜ்கோட்டில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு
50000 வெண்டிலேட்டர் வழங்க ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த நிறுவனம் *அகமாதாபாத் மருத்துவமனைக்கு வழங்கிய வெண்டிலேட்டர் தரமானதாக இல்லை* வேறு வெண்டிலேட்டர் வழங்கிட வேண்டும் என மருத்துவமனை கேட்டுள்ளது.
பொது முடக்க காலத்தில் *14 கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.* புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 8 கோடி முதல் 10 கோடி வரை இருப்பார்கள் என அரசு புள்ளி விபரங்கள் கூறுகிறது. சொந்த மாநிலத்திற்கு திரும்பியுள்ள *புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்* வேலையின்றி வருமானம் இல்லாமல் இருக்கிறார்கள்.ஏற்கனவே 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலை இன்மை உச்சத்தை அடைந்துள்ள நிலையில் கொரோனோ பொது முடக்கம் வேலையின்மையை மேலும் பன்மடங்காக்கியுள்ளது.
பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை பாதியாக குறைந்துவிட்ட காரணத்தினால் தொழிலாளர்களின் வேலை இழப்பு அதிகரித்துள்ளது. *வேலை இல்லாமல் வீட்டில் முடங்கி இருக்கும் தொழிலாளர்களுக்கும்* மக்களுக்கும் உரிய நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசின் குறைந்தப்பட்ச கடமை ஆகும். அனைவருக்கும் ஜன்தன் வங்கி கணக்கு துவக்கப்பட்டிருப்பதை பெருமையாக சொல்லும் மோடி அரசு கொரோனா பேரிடர் காலத்தில் துன்பத்தில் இருக்கும் மக்களுக்கு தேவையான பணத்தை *நேரடியாக வங்கி கணக்கில் போட வேண்டாமா?*
பி.எம்.கேர்ஸ் மூலம் நாடு முழுவதிலும் பெறப்பட்ட நிதியை உடனடியாக மக்களுக்கு அளித்திட வேண்டும் என்பதும், வெளிப்படையாக தன்மையோடு நிவாரண நடவடிக்கைகள் அமைந்திட வேண்டும் என்பதும் நன்கொடை அளித்த அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
*செவ்வானம்*
No comments:
Post a Comment