Thursday, August 27, 2020

அவங்க எப்பவுமே அப்படித்தான்

 


இந்த பதிவை செழுமைப் படுத்திக் கொடுத்த தென் மண்டல துணைத் தலைவர்  தோழர் கே.சுவாமிநாதன் அவர்களுக்கு நன்றி சொல்லி பகிர்ந்து கொள்கிறேன்.

 *நாளொரு கேள்வி*- *08.07.2020*

 இன்று நம்மோடு வேலூர் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க பொதுச் செயலாளர் தோழர் *எஸ். இராமன்

*************************************

 *கேள்வி*

 இந்திய தொழிலதிபர்களின் "பாம்பே பிளான்" எப்படி விடுதலை இந்தியாவின் பொருளாதாரப் பாதையாக மாறியது?

 

*எஸ். இராமன்*

 திட்டமிடுதல் என்ற கோட்பாடு சோவியத் யூனியனிலிருந்து உருவானது என்பதை முதலில் நாம் மனதில் கொள்ள வேண்டும்

 இந்தியா பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சுதந்திரத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த போது இந்தியாவின் பொருளாதாரப் பாதை எப்படி அமைய வேண்டும் என்று *வேறுபட்ட கருத்தாக்கங்கள்* இருந்தன. அக் கருத்தாக்கங்களுக்கு பின்புலத்தில் அவற்றை முன் வைப்பவர்களின் வர்க்கப் பார்வை சார்ந்தும் அமைந்திருந்தன

 1936 ல் பிரபல பொறியாளர் *எம்.விஸ்வேஸ்வரய்யா* ஒரு திட்டத்தை முன்வைத்தார். அது பொதுவாக ஓர் அமெரிக்க மாடல் பொருளாதாரப் பாதையாக இருந்தது.

 *ஸ்ரீமன் அகர்வால்* என்பவர்காந்தியத் திட்டம்என்ற ஒன்றை முன் வைத்தார். இத் திட்டத்திற்கான முன்னுரையை காந்தியே எழுதி இருந்தார். அதையே விரிவுபடுத்தி ஜெயப்பிரகாஷ் நாராயணனும், ஆசார்யா வினோபா வும் இணைந்துசர்வோதயா திட்டம்என்று முன்வைத்தார்கள். விவசாயத்தை மேம்படுத்துவது, கிராமப்புறத் தொழில்களை வளர்த்தெடுப்பது ஆகியவை சர்வோதயா திட்டத்தின் அடிப்படைகளாக இருந்தன.

 இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான *எம்.என்.ராய்,* “மக்கள் திட்டம்என்ற திட்டத்தை முன் வைத்தார். விவசாய நிலங்கள் தேசியமயமாக்கப்பட வேண்டும், கிராமப்புற மக்களின் கடன் சுமை போக்கப்பட வேண்டும், சாகுபடி செய்யக் கூடிய நிலங்கள் அதிகரிக்கப்பட வேண்டும், தொழில்மயம் பெருக வேண்டும், சாதாரண மக்கள் பயன்படுத்தக் கூடிய பொருட்களின் உற்பத்தியில் கவனம் செலுத்தப்பட வேண்டும். சாலை, ரயில் வசதிகள் பெருக வேண்டும் ஆகியவை மக்கள் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

1944 ல் *ஜே.ஆர்.டி.டாட்டா, ஜி.டி.பிர்லா, பின்னாளில் இந்தியாவின் நிதியமைச்சரான ஜான் மத்தாய், உள்ளிட்ட எட்டு தொழிலதிபர்கள்* பம்பாய் நகரில் கூடி ஒரு திட்டத்தை உருவாக்குகிறார்கள். அதுதான் "பம்பாய் திட்டம்" என்று அழைக்கப்படுகிறது

 பம்பாய் திட்டம் சொல்வது என்ன?

 இந்தியாவின் பொருளாதாரம் விவசாயத்தின் அடிப்படையில் உள்ளது என்பது மாற்றப்பட்டு தொழில்மயத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட வேண்டும்

 அரசின் தலையீடும் கட்டுப்பாடும் இல்லாமல் பொருளாதாரம் வளர முடியாது. ஆனால் அரசு உடமை என்பது கடைசி தெரிவாக இருக்க வேண்டும்

 கனரகத் தொழிற்சாலைகளை துவக்குகிற அளவிற்கு தனியார் முதலாளிகளிடம் மூலதனம் இல்லாததால் அவற்றை அரசே துவக்கிட வேண்டும்

 *அதில் முக்கியமான அம்சமும் இருந்தது. தனியார்கள் அந்த அரசுத் தொழில்களை எடுத்து நடத்துகிற வலுவை பெறுகிற காலம் வரும் போது அவை மீண்டும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது.* (உலகமயம் இந்தியாவில் இந்திய தொழிலதிபர்களால்  90 களில் ஏற்கப்பட்டதற்குமான தொடர்பு வியப்பை தரும். எவ்வளவு தொலை நோக்கோடு தங்கள் நலனுக்கான பாதையை சிந்தித்துள்ளார்கள் என்று.) 

 தேவைப்படும் தொழில் நிறுவனங்களுக்கு அரசே நிதியுதவி செய்திட வேண்டும்.

 அன்னியக் கம்பெனிகளின் போட்டியால் உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்படாமல்  இருப்பதற்கான கட்டுப்பாடுகளை அரசு விதித்திட வேண்டும்

 சுதந்திரச் சந்தையால் இந்திய நிறுவனங்கள் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதால் அரசின் கட்டுப்பாடு மிகவும் அவசியம்.

 விவசாயத்தைப் பொருத்தவரை ஜமீந்தார் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று பம்பாய் திட்டம் சொன்னாலும் நிலச் சீர்திருத்தம் பற்றி வாய் திறக்கவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்

 பதினைந்து ஆண்டுகளுக்குள் தனி நபர் வருமானம் இரட்டிப்பாக வேண்டும் என்று கூட பம்பாய் திட்டம் சொன்னது.

 இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு எந்த பங்கையும் தாங்கள் அளிக்க முதலாளிகள் தயாராக இல்லை என்பதையே பம்பாய் திட்டம் உணர்த்தியது

 இது தனிப்பட்ட எட்டு முதலாளிகளின் யோசனை என்று முதலில் சொல்லப் பட்டாலும் பின்பு இந்திய முதலாளிகள் கூட்டமைப்பு (FICCI) தனது கூட்டத்தில் பம்பாய் திட்டத்தை ஏற்றுக் கொண்டது

 சோஷலிச பாணியில் அரசு அமைப்போம் என்று ஆவடியில் நடந்த மாநாட்டில் காங்கிரஸ் முடிவெடுத்தது.

 பம்பாய் திட்டம், இந்தியப் பொருளாதார வளர்ச்சி அரசின் தலையீடு, கட்டுப்பாடு, நிதியுதவி இதனால் மட்டுமே சாத்தியம் என்பதை வலியுறுத்தியது

 நேருவின் அரசு உருவாக்கிய முதலாவது, இரண்டாவது ஐந்தாண்டு திட்டங்களில் பம்பாய் திட்டத்தின் பல கூறுகள் அடங்கி இருந்தது

 பம்பாய் திட்டத்தை பின்பற்றுகின்றோம் என்று வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் இந்தியாவின் பொருளாதாரப் பாதை பம்பாய் திட்டத்தின் அடிப்படையில்தான் அமைந்திருந்தது

 அரசு பம்பாய் திட்டத்தைத்தான் பின்பற்றுகிறது என்று ஏன் நேரு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை என்ற கேள்விக்கு சமீபத்தில் கிடைத்த பதில் சுவாரஸ்யமானது.

 சஞ்சயா பாரு, மேக்நாத் தேசாய் ஆகியோர் எழுதிய *“மீண்டும் பம்பாய் திட்டத்தின் அவசியம்”* புத்தகத்தில்

 *“முதலாளிகள் உருவாக்கிய பம்பாய் திட்டத்தின் அடிப்படையில் அரசு செயல்படுவதாக ஒப்புக் கொண்டால், தன் முக்கிய அரசியல் எதிரிகளான கம்யூனிஸ்டுகள் கடுமையாக விமர்சிப்பார்கள் என்பதால் நேரு அவ்வாறு சொல்லவில்லை”*

 என்று எழுதப்பட்டுள்ளது.

 சுதந்திரச் சந்தையில் அன்னியக் கம்பெனிகளால் உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்படும், பொருளாதார வளர்ச்சி உருவாக அரசின் தலையீடும் கட்டுப்பாடும் நிதியுதவியும் அவசியம் என்று சொன்ன இந்திய முதலாளிகள் உலகமயப் பின்புலத்தில் தங்கள் நிலையை முழுமையாக மாற்றிக் கொண்டு விட்டனர் என்பது ஒரு முரண் அல்ல

 *அன்னிய மூலதனத்துடன் அவர்களுக்கு தொடர்ந்து இருந்த ஊசலாட்டம், அரசுத் துறையை உருவாக்குவதில் அவர்களுக்கு முதலில் இருந்த நிர்ப்பந்தம் ஆகியனவற்றின் தர்க்க ரீதியான பயணம் எட்டியுள்ள இலக்கே உலக மயத்துடனான கை குலுக்கல்.*

 

*****************

*செவ்வானம்*

நீண்ட நாட்களாக ட்ராப்டிலேயே இருந்த பதிவு இது. காலையில் வேறு சில பணிகள் இருந்ததால் இன்றைக்கு அதற்கு விமோசனம் கிடைத்தது

 

No comments:

Post a Comment