Monday, August 31, 2020

அவர்கள் சொல்வதும் சொல்லாததும்

 எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை பங்குச்சந்தையில் இணைத்திட வேண்டும் என்று மோடி அரசு முயல்கிறது. அதற்காக அவர்களது கோயபல்ஸ் பாரம்பரியத்தின்படி கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டுள்ளது. அந்த கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தி, பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் வெளியிடுகிற "காப்பீட்டு ஊழியர்" மற்றும் எங்கள் வேலூர் கோட்ட இதழ் "சங்கச்சுடர்" ஆகியவற்றுக்காக எழுதிய கட்டுரையை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

நாளை எல்.ஐ.சி நிறுவனத்தின் உதய தினம். எல்.ஐ.சி நிறுவனத்திடமிருந்து ஒரு சிறு செங்கல்லைக் கூட உருவ அனுமதிக்க மாட்டோம் என்ற எல்.ஐ.சி குடும்பத்தின் உறுதியை மோடி வகையறாக்கள் நாளை உணர்ந்து கொள்வார்கள்.



எல்.ஐ.சி பங்கு விற்பனை – சொல்லப்படுவதும் சொல்லப்படாதவையும்

 நரியின் பார்வை எப்போதும் இரையின் மீதுதான் என்பது போல இந்த கொரோனா துயர காலத்திலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சேவை செய்யும் தன் செயல் திட்டத்தை  மத்தியரசு தொடர்ந்து அரங்கேற்றிக் கொண்டுதான் இருக்கிறது. இந்த வருடம் நிதி நிலை அறிக்கையை சமர்ப்பிக்கும் போது எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்கப் போவதாக நிதியமைச்சர் அறிவித்தார். இப்போது பங்கு விற்பனை செய்வதற்கான ஆலோசனைகளை வழங்கிடுவதற்கான ஆலோசகர்களை நியமிப்பதற்கான விளம்பரத்தை நிதியமைச்சகத்தின் “முதலீடு மற்றும் பொதுச்சொத்து நிர்வாகத்துறை (DEPARTMENT OF INVESTMENT AND PUBLIC ASSET MANAGEMENT) வெளியிட்டுள்ளது. இதன் மூலம் எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கு எதிரான போராட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கு மத்தியரசு சொல்லும் காரணங்கள் என்ன? அவற்றின் உண்மைத்தன்மை என்ன?

 அரசு சொல்வது : எல்.ஐ.சி யின் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மை இருக்கும். பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

 உண்மை : ஏற்கனவே எல்.ஐ.சி யின் செயல்பாடு வெளிப்படைத்தன்மை உடையதுதான். இன்சூரன்ஸ் வளர்ச்சி மற்றும் ஒழுங்காற்று ஆணையத்துக்கு ஒவ்வொரு மாதமும் எல்.ஐ.சி அறிக்கை அளிக்கிறது. மேலும் எல்.ஐ.சி யின் கணக்குகள் நாடாளுமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டது. எல்.ஐ.சி யின் ஒவ்வொரு காலாண்டு செயல்பாடும் பொது வெளியில் முன்வைக்கப்படுகிறது. இதை விட வேறென்ன வெளிப்படைத்தன்மை இருக்க முடியும்.

 அரசு: பங்குச்சந்தைக்கு செல்வதன் மூலம் எல்.ஐ.சி யால் சந்தையிலிருந்து பணத்தை திரட்ட முடியும்.

 உண்மை : ஒவ்வொரு ஆண்டும் மூன்றரை லட்சத்திலிருந்து நான்கு லட்சம் கோடி ரூபாய் வரை நிதியை திரட்டுகிற எல்.ஐ.சி க்கு பங்குச்சந்தையிலிருந்து நிதி திரட்ட வேண்டும் என்ற தேவை என்பதே கிடையாது.

 அரசு: எல்.ஐ.சி பங்குகள் விற்கப்படுவதால் சிறு முதலீட்டாளர்கள் பயன் பெறுவார்கள்

 உண்மை: பங்குச்சந்தையில் சிறு முதலீட்டாளர்களின் அளவு மிகவும் குறைவுதான். இந்திய மக்கட்தொகையில் வெறும் 2.5 % மட்டுமே பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள். ஆனாலும் பங்குச்சந்தையில் பெருமளவு வர்த்தகம் செய்பவர்கள் அன்னிய நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பெறு நிறுவனங்களே. சிறு முதலீட்டாளர்களுக்கு பயன் கிடைக்கும் என்று சொல்வது தவறானது. இந்திய, அன்னிய நிதி நிறுவனங்களுக்கு ஆதாயம் அளிப்பதுதான் அரசின் நோக்கம்.

 அரசு சொல்வது உண்மையில்லை என்கிற போது இம்முடிவிற்கான காரணம் என்ன?

 கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகைகள்  வாரி வழங்கி வருவதால் அரசின் கையிருப்பு நிதி கரைந்து கொண்டு வருகிறது. அந்த பற்றாக்குறையை சமாளிக்கத்தான் ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை கைப்பற்றிக் கொண்டார்கள். இப்போது எல்.ஐ.சி பங்கு விற்பனை மூலம் சமாளிக்கப் பார்க்கிறார்கள். அரசின் செலவுகளுக்காக மட்டுமே இந்த நிதி பயன்படும். மாறாக வளர்ச்சிக்கான முதலீடாக அல்ல.  எப்படிப்பட்ட பஞ்சம் வந்தாலும் கூட நம் விவசாயிகள் விதை நெல்லை உணவுக்காக பயன்படுத்த மாட்டார்கள். அந்த பொறுப்புணர்வு அரசுக்கு இல்லை.

 பாலிசிதாரர்களுக்கு , பொது மக்களுக்கு பாதிப்பு இருக்குமா?

எல்.ஐ.சி யின் உபரி, பாலிசிதாரர்களுக்கான போனஸாக வழங்கப்படுகிறது. மக்கள் பணம் மக்களுக்கே என்ற கோட்பாட்டின் படி எல்.ஐ.சி செயல்படுவது மாற்றப்படும். பாலிசிதாரர் நலனை விட, மக்கள் நலனை விட பங்குதாரர் நலன் என்பது பிரதானமாக கருதப்படும் நிலை வரும். அதன் காரணமாக மத்திய, மாநில அரசுகளின் கட்டமைப்புத் தேவைக்காக செய்யப்படும் முதலீடு பாதிக்கப்பட்டு பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள். உபரியை பகிர்ந்து கொள்ள பங்குதாரர்கள் வருவதால் பாலிசிதாரர்களும் பாதிக்கப் படும் அபாயம் உண்டு. பங்கு விற்பனையை தடுக்க வேண்டிய அவசியத்தை இது உணர்த்துகிறது.  

 எல்.ஐ.சி பங்குகளை விற்க நிதியமைச்சகத்திற்கு உரிமை உண்டல்லவா?

 எல்.ஐ.சி யின் மூலதனம் துவக்கத்தில் வெறும் ஐந்து கோடி மட்டுமே. ஐ.ஆர்.டி,.ஏ சட்டத்தின் அடிப்படையில் எல்.ஐ.சி திருத்த சட்டம் 2011 மூலம் 100 கோடியாக உயர்த்தப்பட்டது. அப்போது நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதம் இந்திய அரசியலில் ஒரு அபூர்வம் என்றே சொல்ல முடியும். எல்.ஐ.சி க்கு கூடுதல் மூலதனம் தேவைப்படுமானால் அது நாடாளுமன்ற அனுமதியோடு அரசின் நிதியிலிருந்துதான் தரப்பட வேண்டும் என்றும் எல்.ஐ.சி யின் பொதுத்துறை தன்மை எக்காலத்திலும் நீர்த்துப் போக அனுமதிக்கப்படக் கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவு இப்போது மீறப்படுகிறது. அது மட்டுமல்ல, எல்.ஐ.சி யிடம் உள்ள நிதி என்பது முழுதும் அரசுக்கு சொந்தமானது அல்ல. ஒவ்வொரு வருடமும் திரட்டப்படுகிற உபரியில் 95 % பாலிசிதாரர்களுக்கும் 5 % அரசுக்கும் அளிக்கப்படுகிறது. எனவே 5 % உடமையாளரான அரசுக்கு எல்.ஐ.சி யின் பங்குகளை விற்பதற்கான எந்த தார்மீக உரிமையும் கிடையாது.

 எல்.ஐ.சி பங்கு விற்பனை என்பது வணிகத்தில் பாதிப்பு ஏற்படுத்துமா?

 நியூ இந்தியா நிறுவனத்தின் பத்து சதவிகித பங்குகள் விற்கப்பட்ட உடன் செய்யப்பட்ட முதல் நடவடிக்கை என்பது நியூ இந்தியா நிறுவனத்தின் அனைத்து அலுவலகப் பலகைகளிலும் விளம்பரங்களிலும் “முழுமையான அரசு நிறுவனம்” என்ற வாசகம் அகற்றப்பட்டது. எல்.ஐ.சி யின் போட்டி நிறுவனங்கள் எல்.ஐ.சி இனியும் அரசு நிறுவனம் கிடையாது என்ற பிரச்சாரத்தை எடுத்துச் செல்ல முயற்சிக்கலாம். ஆனால் எல்.ஐ.சி இது நாள் வரை ஏற்படுத்தியுள்ள நற்பெயர், நம்பிக்கை, தனியார் கம்பெனிகளின் முயற்சி கைகூட அனுமதிக்காது.

 எல்.ஐ.சி க்கு கூடுதல் மூலதனம் தேவைப்படுகிறதா?

 வெறும் ஐந்து கோடி ரூபாய் மூலதனத்தோடு துவக்கப்பட்டு, இப்போது நூறு கோடி ரூபாய் மூலதனம் உள்ள எல்.ஐ.சி நிறுவனம் தற்போது முப்பத்தி இரண்டு லட்சம் கோடி சொத்து மதிப்பு உள்ள நிறுவனமாக பிரம்மாண்டமாக உருவெடுத்துள்ளது. எனவே கூடுதல் மூலதனத் தேவை என்பதே எழவில்லை. இன்னும் சொல்லப்போனால் பிரதமர் முன்வைக்கிற சுய சார்பு இந்தியா (ஆத்ம நிர்பார் பாரத்) என்ற முழக்கத்திற்கு முற்றிலும் முரணானது.

 இதனை தடுக்க இயலுமா?

 1994 ல் மல்ஹோத்ரா குழுவின் முக்கியமான பரிந்துரை எல்.ஐ.சி நிறுவனத்தின் ஐம்பது சதவிகித பங்குகளை  விற்க வேண்டும் என்பதுதான். இடையறாத போராட்டமும் மக்கள் மத்தியிலான பிரச்சார இயக்கமும்தான் இருபத்தி ஆறு ஆண்டுகளாக எல்.ஐ..சி நிறுவனத்தை இது நாள் வரை முழுமையான அரசு நிறுவனமாக தக்க வைத்துள்ளது.

 பட்ஜெட் அறிவிப்பு வந்ததுமே உடனடியாக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், முதல் நிலை அதிகாரிகள் சங்கம், வளர்ச்சி அதிகாரிகள் சங்கம் ஆகிய மூன்று அமைப்புக்களும் இணைந்த கூட்டு அணி  04.02.2020 அன்று ஒரு மணி நேர வேலை நிறுத்தம் மேற்கொள்வதாக அறிவித்தது. இதன் தாக்கத்தால் மற்ற அமைப்புக்களும் வேலை நிறுத்தத்தில்  இணைந்து கொள்ள கடுமையான எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது.

 ஆலோசகர்கள் நியமிப்பது தொடர்பான தகவல் தெரிந்ததுமே கூட்டு அணி சார்பில் நிதியமைச்சருக்கு அம்முடிவை கை விடக் கோரி கடிதம் அனுப்பப்பட்டது. மீண்டும் மக்களிடம் செல்வதும் அவர்களிடம் உண்மைகளை சொல்வதும் அவர்கள் ஆதரவோடு எல்.ஐ.சி யின் பொதுத்துறைத் தன்மையை முழுமையாக பாதுகாப்பது இப்போதும் சாத்தியமே.

 எஸ்.ராமன், வேலூர்

 

 

No comments:

Post a Comment