Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Friday, January 16, 2026

அது ஒரு வீர காவியம்



 நேற்றைய பதிவில் இந்திரா காந்தி முன்னிலையில் தோழர் சீத்தாராம் யெச்சூரி ஒரு அறிக்கையை படிக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டிருந்தேன்.

அந்த சம்பவம் என்ன?


தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் வார்த்தைகளிலேயே விவரிக்கிறேன்.


“இந்திரா அவர்கள் தேர்தலில் தோல்வியுற்ற பின்னும் ஜேஎன்யு வேந்தர் பதவியில் தொடர்ந்தார். அவசர நிலைக் காலம் கொண்டு வந்ததாலும் அப்போது நிகழ்ந்த அநீதிகளாலும் அவர் அந்த பதவியில் தொடரக்கூடாது என நாங்கள் கூறினோம். நான்கு பக்க குற்றப்பத்திரிக்கை ஒன்றை எழுதி அனைத்து மாணவர்களும் வெலிங்டன் க்ரெஸெண்டில் இருந்த அவரது வீட்டிற்குச் சென்றோம். அவசர நிலைக்காலத்தின் போது தலை மறைவாக இருந்த மாணவர்களின் கைது வாரண்டுகளை ஜேஎன்யு விடுதியில் உள்ள அவர்களின் அறைக்கதவுகளில் ஒட்டி விட்டுச் செல்வார்கள். நாங்கள் எங்கள் மனுவை அவர் வீட்டுக் கதவில் ஒட்ட நினைத்தோம்.

 நாங்கள் அங்கே சென்ற போது வி.சி.சுக்லா எங்களிடம் என்னவென்று வினவினார். நாங்கள் இந்த மனுவை அவர்களிடம் தர வந்துள்ளோம் என்று சொன்னேன்.அவர் உள்ளே சென்று சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார். ஐந்து பேர் மட்டும் உள்ளே வரலாம் என்றார். நான் முடியாது என்று மறுத்தேன்.  அனைத்து மாணவர்களும்தான் வருவோம் என்று சொன்னேன். அவர் மீண்டும் உள்ளே சென்றார்,  இம்முறை இந்திரா அம்மையாரே கதவுக்கருகில் வந்தார்.  அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். என்ன இதெல்லாம் என்று அவர் கேட்டார். நான் ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் தலைவர், இந்த மனுவை உங்களிடம் அளிக்க வந்துள்ளோம் என்று அவரிடம் சொன்னேன். அங்கே போலீஸ் காவல் எதுவும் இல்லை. நீங்கள் வேந்தர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று சொன்னேன். நீங்கள்  அப்பதவியில் தொடர்வது சரியல்ல என்றேன். அவர் அந்த மனுவை வாசிக்குமாறு என்னிடம் சொன்னார்.  நாங்கள் சற்று தயங்கினோம். ஏனென்றால் அதில் ஏராளமான வசைகள் இருந்தன. நான் படித்தேன். முகத்தில் ஒரு நிரந்தரமான புன்னகையுடன் அவர் அதனை முழுமையாகக் கேட்டார்.



 ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியிலிருந்து இந்திரா காந்தி உடன் விலகி விட்டார். 


நான் முன்பே பகிர்ந்து கொண்டதுதான். ஆனால் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் மெய் சிலிர்க்கும்.

நிஜ வாழ்வின் உண்மையான கதாநாயகன் இவர்தான்.

இந்த சம்பவம் ஒரு வீர காவியம்.

மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய காவியம்.

தோழர் யெச்சூரி போன்ற மிகுந்த ஞானம் கொண்ட தலைவரை இழந்தது இந்தியாவின் துயரம்.



Saturday, January 3, 2026

நோபல் பரிசை ட்ரம்புக்கு மாத்துங்கய்யா

 


புவனேஸ்வரிலிருந்து இன்று அதிகாலைதான் வீடு திரும்பினேன். இன்று பராமரிப்பிற்கான மின் தடை வேறு. மோட்டார் ஓடாத பிரச்சினை வேறு. அதனால் சமூக வலைப்பங்கள் பக்கம் ரொம்பவே தாமதமாகத்தான் வந்தேன்/ 

வலைப்பதிவு எழுத வேண்டிய முக்கியமான மூன்று CONTENT கள் கிடைத்தது. 

திமுகவில் உள்ள சங்கி என்று சந்தேகப்பட வைத்துள்ள சேகர் பாபு பயன்படுத்திய அடாவடி வார்த்தை.

தமிழ்நாடு அரசின் ஓய்வூதியத் திட்டத்தில் முன்னேற்றம்.

வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்.

இதில் கடைசியை முதலில் எழுதுகிறேன்.

ஹூயூகோ சாவேஸ் காலத்திலிருந்தே அமெரிக்க ஏகாதிபத்தியமும் பன்னாட்டு மூலதனமும்  வெறியோடு குறி வைத்துள்ள நாடு வெனிசுலா. சாவேஸிற்கு பிறகு ஆட்சிக்கு வந்த நிக்கோலஸ் மதுரோவை அகற்ற அனைவரும் காலம் காலமாக துடித்துக் கொண்டிருக்கிறார்கள். 

அதற்கான சதிச்செயலில் ஈடுபட்டு வரும் கொரோனா அம்மையாருக்கு அமைதிக்கான நோபல் பரிசை அழிவுக்கான நோபல் பரிசாக அளித்தார்கள். ட்ரம்பிற்கு அதில் வருத்தம் வேறு.

ரஷ்யா-உக்ரைன் போரைத்தவிர மற்ற அனைத்து போர்களையும் நிறுத்தி விட்டேன் என்று கதையளந்து (அது கதை என்று மறுக்கும் துப்பு கூட இல்லாத கோழை மோடி என்பது வேறு)  கொண்டிருக்கும் ட்ரம்ப்  இன்று தன் நாட்டுப் படைகள் மூலம் வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி மதுரோவை கைது செய்து விட்டோம் என்று கொக்கரித்துள்ளார்.

அநேகமாக கணபதி அய்யர் பேக்கரி டீலிங் போல கொரோனா அம்மையாரிடம் நாட்டை கொடுத்து விட்டு அழிவிற்கான நோபல் பரிசை ட்ரம்ப் பெற்றுக் கொள்வார்.

அவர்களுக்கு ஒரு வரலாற்றை மட்டும் நினைவு படுத்த வேண்டும். 

இப்படித்தான் 2002 ம் ஆண்டு குட்டி ஜார்ஜ் புஷ் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த போது கலகம் நடத்தி சாவேஸை பதவியிலிருந்து அகற்றி கைது செய்தார்கள். மக்கள் கிளர்ந்தெழுந்து வீதிக்கு வந்து புரட்சி செய்து மூன்றே நாட்களில் அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினர்.

வரலாறு மீண்டும் திரும்பும். . .



Friday, October 10, 2025

தலையில்லா விஷ்ணு சிலையும் ராஜராஜசோழன் சிலையும்

 


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு கவாய் மீது சனாதன வக்கீல் ராகேஷ் கிஷோர் காலணி வீசியதற்கு காரணம் கஜுராஹோ விஷ்ணு சிலை வழக்கில் அவர் அளித்த தீர்ப்புதான்.

மத்தியப் பிரதேசத்தின் முக்கிய தொல்லியல் தளமான, பல நூற்றாண்டுகள் பழமையான கஜுராஹோவில்  உள்ள ஒரு விஷ்ணுவின் சிலையில் தலை இல்லை. அந்த தலை யாரால் எப்போது துண்டிக்கப்பட்டது என்ற விபரங்கள் எல்லாம் இல்லை. பல நூறு ஆண்டுகளாக தலையில்லாமலே விஷ்ணு அருள் பாலித்து வருகின்றார்.

இந்த சிலையை மாற்றியமைக்க வேண்டும் என்று ஒருவர் வழக்கு தொடுக்கிறார். தொல்லியல் விதிகள் படி அது சாத்தியமில்லை என்று தலைமை நீதிபதி திரு பி.ஆர்.கவாய் வழக்கை தள்ளுபடி செய்கிறார். "என்னுடைய கைகளில் ஏதுமில்லை. நீங்கள்தான் உண்மையான பக்தர் அல்லவா! அதனால் விஷ்ணுவிடமே வேண்டிக் கொள்ளுங்களேன்" என்று குறிப்பிடுகிறார். 

இந்த தீர்ப்பின் மூலம்  திரு கவாய், சனாதன தர்மத்தை இழிவு படுத்தி விட்டார் என்று சங்கிகள் கூச்சலிட்டனர். ஒரு வெறியன் அந்த வெறுப்பை தன் காலணி மூலம் காண்பித்து விட்டான். இந்த செயலுக்கு நீதிபதியின் சமூகப் பின்னணியும் ஒரு காரணம் என்பதை முந்தைய பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேன்.

இந்த பதிவின் நோக்கமே வேறு.

தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட வரலாற்றுத் தளங்களில் எந்த ஒரு சிறு மாறுதலைக் கூட அனுமதிப்பதில்லை. தமிழ்நாட்டில் மட்டுமே இரண்டு உதாரணங்கள் இருக்கிறது என்பதை பதிவு செய்யவே இந்த பதிவு.

எழுபதுகளில் கலைஞர் முதல்வராக இருக்கையில் தஞ்சையில் ராஜராஜ சோழனுக்கு சிலை உருவாக்கி அதனை பெரிய கோவிலுக்குள் அமைக்க விரும்பினார். ஆனால் தொல்லியல் துறையோ பெரிய கோயிலுக்குள் புதிய கட்டுமானம் எதையும் அனுமதிக்க முடியாது என்று மறுத்து விட்டது. கோயிலைக் கட்டிய ராஜராஜனாவது மண்ணாவது என்று பிடிவாதமாக இருந்தது. அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை தலையிடச் சொன்னார். ஆனால் ஒன்றும் கதைக்காகவில்லை. 

கோயிலைக் கட்டும் தொழிலாளர்கள், கோயில் கட்டுமானப் பணி முடிந்து கும்பாபிஷேகமும் முடிந்த பின் எப்படி கருவரைக்கு வெளியே தள்ளப் படுவானோ (முந்தைய காலங்களில் கோயில் மதில்களுக்கு வெளியே) அது போன்றதொரு நிலைதான் ராஜராஜசோழன் சிலைக்கும் ஏற்பட்டது.

தொல்லியல்துறை விதிகள் காரணமாக பெரிய கோயில் மதில்களுக்கு வெளியே சிவகங்கைப் பூங்காவுக்கு முன்பே நின்று கொண்டிருக்கிறார் ராஜராஜசோழன்.

வேலூர் கோட்டைக்குள் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மூலவரான ஜலகண்டேஸ்வரர் லிங்கம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கோட்டைக்கு வெளியே சத்துவாச்சாரி பகுதியில் ஒரு சிறிய பிள்ளையார் கோயிலில் வைக்கப்பட்டிருந்தது. அதனால் அங்கே வழிபாடு நடக்கவில்லை. "சாமி இல்லாத கோயில்" என்ற புகழ் வேலூருக்கு அதனால்தான் வந்தது.

அதே போல் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு முன்பாக சிறிய மசூதி ஒன்றும் இருந்தது. அங்கேயும் வழிபாட்டை பிரிட்டிஷ் ஆட்சி தடை செய்திருந்தது. 

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பே வழிபாடு நடத்த அனுமதி வேண்டும் என்று இந்துக்கள், இஸ்லாமியர்கள் இரு தரப்பும் கேட்டும் கூட பிரிட்டிஷ் தொல்லியல் துறை அனுமதிக்கவில்லை. விடுதலைக்குப் பின்பு இந்திய தொல்லியல்துறையும் அதே நிலையை எடுத்தது. 

1981 ல் அன்றைய வேலூர் மாவட்ட ஆட்சியாளர் கங்கப்பா ஒத்துழைப்போடு சிலர் ஜலகண்டேஸ்வரர் லிங்கத்தை ரகசியமாக நிர்மாணித்தார்கள். அப்போது முதல் அங்கே வழிபாடு தொடங்கியது. பாபர் மசூதியை இடிப்பதற்கான பயிற்சியாக இந்த ரகசிய நடவடிக்கை அமைந்திருந்தது என்று கூட ஒரு கூட்டத்தில் கேட்ட நினைவு இருக்கிறது.

கோயில் போல மசூதியிலும் வழிபாடு அனுமதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. 

2007 ஆ 2008 ஆ என்று நினைவில் இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு பிரம்மாண்டமான தர்ணா போராட்டத்தை வேலூரில் நடத்தியது. மதுரை மக்களவை உறுப்பினராக இருந்த தோழர் பி.மோகன் அதிலே கலந்து கொண்டார். அவர் மக்களவையிலும் இந்த பிரச்சினையை எழுப்பினார். மதுரை எம்.பி க்கு வேலூரில் என்ன வேலை என்று அடுத்த வாரமே வேலூர் சத்துவாச்சாரியில் கூட்டம் போட்டு பேச சென்னையிலிருந்து ராம.கோபாலனை அழைத்திருந்தார்கள்.

மக்களவையில் பிரச்சினை எழுப்பப்பட்டாலும் தீர்வு வரவில்லை. தொல்லியல்துறை தன் நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருந்து விட்டது. 

தலையில்லா விஷ்ணு சிலை விஷயத்திலும் தொல்லியல் துறை மாறாது என்பது அதன் விதிகளில் உள்ளது.  அதனால்தான் தீர்ப்பு அந்த அடிப்படையில் அமைந்தது.

மாற்றத்திற்கு வாய்ப்பில்லாத நெகிழ்வுத்தன்மை இல்லாதது தொல்லியல்துறை விதிகள். சனாதனமும் அதுதான்.

ஆகவே தீர்ப்புக்கு எதிராக இவர்கள் பொங்க வேண்டியது சனாதனத்திற்கு எதிராகத்தான். . . 




Thursday, September 11, 2025

மோடி மாதிரியே அவரு ஆளுங்களும் . . .

 


தன் ஆட்சியின் அனைத்து அலங்கோலங்களுக்கும் நேருவை குறை சொல்லுவது மோடியின் முட்டாள்தனத்திற்கு  உதாரணம்.

இப்போது நேபாளத்தில் நடைபெறும் பிரச்சினைகளுக்கும் காங்கிரஸ்தான் காரணம் என்று சொல்லியுள்ளார் பீகார் துணை முதல்வர்.



மோடியின் ஆதரவாளர்களும் மோடியைப் போலவே வரலாறும் தெரியாத அரசியலும் புரியாத முட்டாள்கள் என்பது இப்பதிவிலிருந்து தெரிகிறது.

இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்பது 1806 ல் வேலூரில் நடைபெற்ற சிப்பாய்கள் புரட்சிதான்.  1857ல் வட இந்தியாவில் நடைபெற்ற சிப்பாய்கள் புரட்சியை முதல் விடுதலைப் போர் என்று சொல்பவர்களும் உண்டு.

முடியாட்சியாக இருந்த போதிலும் கூட 1768 முதலே நேபாளம் தனி நாடாக செயல்பட்டு வருகிறது. 1768 லிருந்தே தனி நாடாக உள்ள அந்த நாட்டை எப்படி ஐயா 1947 ல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி தனி நாடாக மாற்றியிருக்க முடியும்? 


Saturday, December 14, 2024

இந்திய ராணுவத்தை அவமதித்த மோடி

 



மேலே உள்ள படம் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முக்கியமான ஒரு தருணத்தை குறிக்கிறது.

 வங்க தேச விடுதலைக்காக இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த  போரில் இந்தியா வென்றது. இந்தியாவிடம் சரணடைகிறோம் என்று பாகிஸ்தானின் கிழக்கு பகுதி தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அமீர் அப்துல்லா நியோசி, இந்தியாவின் கிழக்கு பகுதி தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜக்ஜீத் சிங் அரோராவிடம் சரணாகதி பத்திரத்தில் எழுதிக் கொடுத்த தருணம் அது.

 சுஜாதா எழுதிய 14 நாட்கள் நாவலில் பத்மா நதிக்கரை ஓரம் நடந்த BATTLE OF PADMA என்று அழைக்கப்படும் போரை ஜே.எஸ்.அரோராவின் கிளாசிக் என்று விரிவாக எழுதியிருப்பார்.

 16.12.1971 அன்று டாக்காவில் இந்த நிகழ்வு நடந்தது.  அந்த நாளைத்தான் இந்தியா வெற்றித் திருநாளாக (VIJAY DIVAS) கொண்டாடி வருகிறது.

 இந்த வரலாற்றுத் தருணம் ஓவியமாக தீட்டப்பட்டு ராணுவத் தலைமையகத்தின் வரவேற்பரையில் வைக்கப்பட்டிருந்தது.

 


இந்திய ராணுவத் தலைமையகத்து வரும் வெளி நாட்டு ராணுவ அதிகாரிகள் பலரும் அந்த புகைப்படத்தின் பின்புலத்தில் புகைப்ப்டம் எடுத்துக் கொள்வது வாடிக்கை.

 


இப்போது அந்த ஓவியத்தை மோடி அரசு நீக்கி விட்டது. அதற்கு பதிலாக வைத்துள்ள புதிய ஓவியம் இது.

 


பாண்டவர்கள் நடத்திய அதர்ம யுத்தத்தின் போது “கடமையைச் செய், பலனை எதிர்பாராதே” என்ற உபதேசக் காட்சி, சாணக்கியர், கருடன், மற்றும் இந்திய ராணுவ ஆயுத உபகரணங்கள் (ஊழல் செய்து வாங்கிய ரபேல் போர் விமானம் நீங்கலாக) உள்ளது. இந்த ஓவியம் வெறும் வண்ணத் தீற்றலாக உள்ளதே தவிர அழகும் இல்லை, பொருளும் இல்லை.

 இந்திய ராணுவத்தின் வெற்றியை நினைவு படுத்தும் ஓவியத்தை அகற்றி இந்துத்துவ ஓவியத்தை வைக்க வேண்டிய அவசியம் என்ன?

 1971 போர் வெற்றி என்றால் அது மோடி மிகவும் வெறுக்கும் ராகுல் காந்தியின் பாட்டியும், மோடி இன்னும் அஞ்சும் ஜவஹர்லால் நேருவின் மகளுமான  இந்திரா காந்தியை நினைவு படுத்தும். வங்க தேசப் போர் முடிந்து மக்களவைக்கு வந்த இந்திரா காந்தியை அவங்க கட்சியோட முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயே “மஹிஷாசுர மர்த்தினி, சக்தியின் வடிவம்” என்றெல்லாம் வேறு பாராட்டித் தொலைத்து விட்டார்.

 தன்னுடைய சாதனை என்று எந்த எழவையாவது சொல்ல வேண்டுமென்றால் அப்படி ஒரு எழவும் கிடையாது. சீனா என்று சொல்லக் கூட 56 இஞ்சாருக்கு காலெல்லாம் தலைநகரம் நாய் சேகர் போல நடுநடுங்கும். அதானி வியாபாரம் செய்வதால் பாகிஸ்தானோடும் எதுவும் செய்ய முடியாது.

 அதனால் சரித்திரத்தை மறைத்து விட்டு ஒரு மொக்கை ஓவியத்தை வைத்துள்ளார்.

 முன்னாள் ராணுவ வீரர்கள், அதிகாரிகள் பலரும் இதனால் கடுப்பாகி கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிகு :  யார் இந்த ஓவியத்தை வரைந்தது? அது நாளை தனி பதிவாக …

Saturday, November 11, 2023

ஓயாத உருட்டுக்கள்.

 மூன்று வருடம் முன்பு எழுதிய பதிவையே மீண்டும் பகிர்கிறேன். ஏனென்றால் ராஜராஜனிடமிருந்து தோழர் ஹோசிமின் வீரத்தை கற்றுக் கொண்டதென்ற கட்டுக்கதை மீண்டும் சுற்றுக்கு வந்துள்ளது. அதனால் அப்போது எழுதிய பதிவை மீண்டும் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் வந்துள்ளது.

 பொய்யை மீண்டும் மீண்டும் பரப்பி அதை உண்மை என நம்ப வைக்கும் முயற்சியை சங்கிகள் கைவிடவே மாட்டார்கள் போல. 

 இதுதான் ஹோசிமின் சமாதியில் ராஜராஜ சோழன் பற்றி எழுதியது என்று ஏன் இன்னும் போட்டோஷாப் செய்யவில்லை என்றுதான் தெரியவில்லை.

 

முன்னே சிவாஜி, இப்போ ராஜராஜன்



கீழே உள்ள செய்தியை  முதலில் படியுங்கள் . . .

20 வருட கடும் போராட்டத்துக்கு பின் வியட்நாம் அமெரிக்காவை வென்றது..(1955-1975)

போர் முடிந்ததும் ஒரு செய்தியாளர் வியட்நாம் அதிபரை பார்த்து கேட்டார்...

இது எப்படி சாத்தியம்..???
ஒரு சிறிய தெற்காசிய நாடு..வல்லரசு அமெரிக்காவை தோற்கடித்தது எப்படி???

அதற்கு அந்த அதிபர் அமெரிக்க போன்ற வல்லரசை தோற்கடிப்பது மிகவும் கடினம்..

ஆனால் ஒரு சரித்திர புகழ்பெற்ற மாவீரனின் வீரமும் தீரமும் செறிந்த கதையை படித்தேன்.....அது எனக்குள் எழுப்பிய கனலால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியது...அவரின் போர் தந்திரங்கள்.. யுக்திகளை எங்கள் போரில் கடைபிடித்தோம்..வெற்றி கிடைத்தது என்றார்...

யாரந்த மாவீரன்... பேரரசன்..என பத்திரிகையாளர் வினவ...

வேறு யாருமில்லை.. 

கிழக்காசியாவை வென்ற ராஜராஜ சோழன் தான்... 

வியட்நாமில் மட்டும் இப்படி ஒரு மாவீரன் அவதரித்திருந்தால் இந்நேரம் உலகம் எங்கள் கைகளில் இருந்திருக்கும்..என்றார்.

சில வருடங்கள் கழித்து அந்த அதிபர் இறந்து போனார்...

அவரது கல்லறையில் அவரது விருப்பப்படி பொறிக்கப்பட்ட வாசகம்...

""ராஜராஜனின் பணிவான பணியாள் இங்கே ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார்...""

இப்பொழுதும் அங்கே சென்றால் அதை நீங்கள் காணலாம்...

சில வருடங்கள் கழித்து வியட்நாம் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வர நேரிட்டது..

நம்மாட்களும் வழக்கம் போல இந்த காந்தி சமாதி..சக்தி ஸ்தல்..செங்கோட்டை... அது இதுனு சுத்தி காட்ட....

அலுத்து போன அமைச்சர்..ராஜராஜன் பிறந்த ஊர், அரண்மனை,சிலை எங்கே உள்ளது என அதிகாரிகளை கேட்க
அவர்கள் ஆச்சரியத்துடன் அது தமிழ் நாடு தஞ்சாவூர்ல இருக்கு என்றனர்...

உடனே தஞ்சாவூர் போக வேண்டும் என  வியட்நாம் அமைச்சர் கூற ...படைதஞ்சாவூருக்கு பறந்தது..

அங்கு சென்று தஞ்சை பெரிய கோவிலில் அவர்கள் சிலைக்கு அஞ்சலி செலுத்திய பிறகு...கையளவு மண்ணை அள்ளி மரியாதையுடனும்...வாஞ்சையுடனும்...தன் பையில் சேமித்து கொண்டார்...

 இதைக்கண்ட பத்திரிகைகள் வழக்கம் போல வினா எழுப்பின...

இந்த மண்..வீரமும்.. வெற்றியும்..நிறைந்த ராஜராஜன் பிறந்து வளர்ந்த மண்..
வியட்நாம் சென்றடைந்ததும் என் தேச மண்ணில் இந்த மண்ணை கலந்து விடுவேன்...

இனி வியட்நாம் மண்ணில் பல்லாயிரம் ராஜராஜ சோழன் பிறக்கட்டும் என்றார் உணர்ச்சி வசப்பட்டவராக..

 இது போன்ற நிகழ்வுகள் நீங்கள் எங்கும் படிக்க நேர்ந்திருக்காது .இப்படி பாடபுத்தகத்தில் படித்து வீரம் மிக்க தலைமுறை ஏற்பட்டுவிட்டால்...

என்னாவது...???

ஆனாலும் மறைக்கப்பட்ட வரலாற்றை நாம் கூறுவோம்.. 
நம் சந்ததிக்கு.... .... 

படித்ததில் பிடித்தது

இது போன்ற செய்தியை இதற்கு முன்பாக படித்தது போன்ற நினைவு இருக்கிறதா?

இந்த செய்தியை படித்துள்ளேன். ஆனால் ராஜ ராஜ சோழனுக்குப் பதிலாக சத்ரபதி சிவாஜியின் கொரில்லா போர் தந்திரம்தான் என் வெற்றிக்கு காரணம் என்றல்லவா படித்திருக்கிறேன் என்றுதானே சொல்கிறீர்கள்!

ஆமாம். மூன்று வருடத்திற்கு முன்பாக இதே கதை சத்ரபதி சிவாஜி பெயரில் உலாவிக் கொண்டிருந்த்து. அதில் எக்ஸ்ட்ரா பிட்டாக அந்த வெளியுறவு அமைச்சர் ஒரு பெண் என்றும் சேர்த்திருந்தார்கள். இதெல்லாம் டுபாக்கூர் செய்தி என்றும் தோழர் ஹோ சி மின் சமாதியில் அப்படி சத்ரபதி சிவாஜி பற்றியெல்லாம் எதுவும் எழுதப்படவில்லை, வியட்னாம் வெளியுறவு அமைச்சராக எந்த காலத்திலும் ஒரு பெண் இருந்ததில்லை என்றும் வியட்னாம் அரசு தெளிவு படுத்தி விட்டது.

இப்போது அதே கதை ராஜ ராஜ சோழனைப் பற்றி உலவத் தொடங்கி உள்ளது. 

ஹோ சி மின் மார்க்ஸையும் லெனினையும் மாவோவையும் படித்துள்ளார் என்று தகவல் இருக்கிறது. சிவாஜி பற்றியோ ராஜராஜன் பற்றியோ அவர் அறிந்திருந்தாரா என்று தெரியாது. தெரியாவிட்டாலும் அது பெரிய விஷயமில்லை. 

எனக்கு ஒரே ஒரு கேள்விதான்.

சத்ரபதி சிவாஜிக்கோ, ராஜ ராஜ சோழனுக்கோ இப்படிப்பட்ட கட்டுக்கதைகள் மூலம் பெருமை சேர்க்க அவர்கள் என்ன மோடியா? 

அவர்கள் ஏற்கனவே வரலாற்று நாயகர்கள்தானே! 

பிகு ; வரலாற்று நாயகர்களை தத்ரூபமாக நம் கண் முன்னே நிறுத்தியவர் நடிகர் திலகம் அல்லவா! அதனால்தான் அந்த கதாபாத்திரங்களாக அவர் தோன்றியதை பயன்படுத்திக் கொண்டேன்.

பிகு 2 

தோழர் ஹோசிமின் உடல் புதைக்கப்படவில்லை, எரிக்கப்படவில்லை. மாறாக தோழர் லெனின் உடல் போல ஹனாய் நகரில் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. 

ஹனாய் நகரத்தில் உள்ள அவர் சிலையும் நினைவகமும் பாதுகாக்கப்பட்டுள்ள அவர் உடலும்  கீழே உள்ள புகைப்படங்களில் ...




Monday, September 11, 2023

மறக்க முடியாத செப்டம்பர் பதினொன்று

 கடந்த 2014 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் எங்கள் வேலூர் கோட்ட இதழான சங்கச்சுடர் நான்கு பக்க வடிவிலிருந்து பதினாறு பக்க புத்தக வடிவிற்கு மாறியது. அதிலே ஒரு பகுதி “பொதுச்செயலாளர் பக்கங்கள்”. அதற்காக அப்போது எழுதியது இன்றும் பொருத்தமாக இருப்பதால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.


வரலாற்றில் செப்டம்பர் பதினொன்று

அன்பார்ந்த தோழர்களே,

புதுப் பொலிவோடு புத்தக வடிவில் வரும் சங்கச்சுடர் மூலமாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். சங்கசுடர் இதழை புத்தக வடிவில் வெளியிடுவது என புதிதாக அமைக்கப்பட்ட ஆசிரியர் குழு முடிவெடுத்த நாள் செப்டம்பர் பதினொன்று. யதேச்சையாக அமைந்தாலும் கூட செப்டம்பர் பதினொன்று மிக முக்கியமான நாளாகவே உலக வரலாற்றில் அமைந்துள்ளது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அஹிம்சை வடிவிலான சத்யாகிரஹ போராட்ட இயக்கத்தை மகாத்மா காந்தி அறிவித்தது 1906  ம் வருடம் செப்டம்பர் 11 அன்றுதான். “பொழுதெல்லாம் என் செல்வம் கொள்ளை போவதோ? நாங்கள் சாவதோ?” என்று கண்டனக்குரல் எழுப்பிய பாரதியின் நினைவுநாளும் இந்த நாள்தான். இந்திய செல்வாதாரங்களை சுரண்டிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைப் பார்த்து பாரதி பாடிய வரிகளை இன்றும் நாம் பயன்படுத்த வேண்டியிருப்பது பெரும் துயரம். பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு இந்தியாவின் செல்வங்களை அடகு வைப்பவர்களாக இந்திய ஆட்சியாளர்கள் மாறுவார்கள் என்பதை முன்பே அறிந்துதான் “நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்” என்றும் பாடினார் போலும். “பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வேன் என நினைத்தாயா?” என்று எந்த சக்திக்கும் அடிபணியாமல் இருப்பதற்கான உறுதியையும் லட்சியத்தையும்  நமக்கு பாரதி அளித்துள்ளார்.

ஊடகங்கள்  செப்டம்பர் பதினொன்று என்றால் ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் மக்களுக்கு நினைவு படுத்திக்கொண்டிருக்கும். அமெரிக்காவின் நியூயார்க் நகரத்து இரட்டை கோபுரமும் பெண்டகன் அலுவலகமும் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட  சம்பவத்தை அவர்கள் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஆப்கானிஸ்தானில் அமைந்த சோஷலிஸ அரசாங்கத்தை வீழ்த்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் கொம்பு சீவி வளர்க்கப்பட்ட  தாலிபன், அல் கொய்தா, ஒசாமா பின் லேடன் ஆகியோர் பின்பு  அதே அமெரிக்காவிற்கு எதிராக திரும்பியதன் விளைவுதான் செப்டம்பர் பதினொன்று சம்பவம். உலகெங்கிலும் பல பேரழிவுத் தாக்குதல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிற, நிகழ்த்தும் இஸ்ரேல் போன்றவர்களுக்கு ஆதரவளிக்கிற அமெரிக்கா தனது மண்ணில் சந்தித்த மிகப் பெரிய அழிவு இது. இரண்டாம் உலகப் போரில் கூட சோவியத் செஞ்சேனைதான் மிகப் பெரிய இழப்பை சந்தித்து பாசிச ஹிட்லரை முறியடித்தது. ஆனால் பியர்ல் ஹார்பர் தாக்குதல் நீங்கலாக அமெரிக்கா பத்திரமாகவே இருந்தது.

இரட்டைக் கோபுர தாக்குதல் என்ற மோசமான நிகழ்வு மட்டும் வரலாற்றில் கறுப்பு தினமாக செப்டம்பர் பதினொன்றை சித்தரிக்கவில்லை. இரட்டை கோபுர தாக்குதலுக்கு முப்பத்தி எட்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இதே நாளில்தான்  அமெரிக்கா நிகழ்த்திய ஒரு பயங்கர அரசியல் படுகொலையும் நடைபெற்றது. சோஷலிச ஆட்சி முறையைக் கொண்டு வந்ததாலும் அமெரிக்க கம்பெனிகள் இயற்கை வளங்களை கொள்ளையடித்ததை தடுத்து நிறுத்தியதாலும் மக்கள் சார்ந்த திட்டங்களை அமலாக்கியதாலும் அமெரிக்காவின் வெறுப்பை சம்பாதித்த சிலி நாட்டு அதிபர் சால்வடார் ஆலண்டே ,சி.ஐ.ஏ அமைப்பின் சதியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அரசியல் படுகொலைகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வாடிக்கை என்பதை பனாமா கால்வாயைக் கைப்பற்ற பனாமா அதிபர் டோரிஜாஸ், இரானின் எண்ணெய் வளத்தை சுரண்ட மொகமது மொசாதக் என்று கடந்த கால கொலைகள் நீளும் என்றால் சதாம் ஹூசேன், முகமது கடாபி என்று அண்மைக் காலப் பட்டியல்கள் சொல்லும். சால்வடார் ஆலண்டே கொல்லப்பட்ட செப்டம்பர் 11 அன்றே இரட்டைக் கோபுரத் தாக்குதல் நிகழ்ந்த்து ஒரு வரலாற்று நகைமுரண்.

பாரதி மட்டும் செப்டம்பர் பதினோராம் நாள் மறையவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களுடைய உரிமைகளுக்காக போராடி வந்த தலைவர் இமானுவேல் சேகரன் வெட்டிக் கொல்லப்பட்ட்தும் செப்டம்பர் 11 அன்றுதான். 1957 ல் முகவை மாவட்ட கலவரங்களுக்காக மாவட்ட ஆட்சியர் நடத்திய அமைதிப் பேச்சுவார்த்தையில் ஆதிக்க சக்திகளுக்கு நிகராக நாற்காலியில் அமர்ந்து பேசினார் என்ற காரணத்திற்காகவே வெட்டப்பட்டார் இமானுவேல் சேகரன். பாரதி நினைவுநாள் கூட்டமொன்றில் பள்ளி மாணவர்களிடம் உரையாற்றி வீட்டுக்கு வரும் வழியில் கொல்லப்பட்டார்.

ஆதிக்க சக்திகளாக வாழ்ந்தவர்களின் நினைவு நாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு செல்கிற பல பெரிய அரசியல் கட்சித் தலைவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக விளங்கிய இமானுவேல் சேகரனின் நினைவுநாளை கண்டுகொள்வதில்லை என்பது மட்டுமல்ல, அங்கே சொல்பவர்களுக்கும் ஏராளமான கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதன் விளைவாகத்தான் 2011 ம் வருடம் செப்டம்பர் 11 அன்று பரமக்குடியில் பிரச்சினை ஏற்பட்டு காவல்துறையின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் ஆறு அப்பாவி உயிர்கள் பலியாகின.

ஆட்சியாளர்களின் செல்லப்பிள்ளையான காவல்துறையை காப்பாற்றும் விதத்தில் அவர்கள் மீது எந்த தவறுமே இல்லை என்று ஒரு பூசணித் தோட்டத்தையே ஒரு பிடிச் சோற்றில் மறைத்து அறிக்கை கொடுத்தது நீதிபதி சம்பத் கமிஷன். அரசுக்கும் நீதிக்கும் மாறாத களங்கமாக செப்டம்பர் 11  பரமகுடி துப்பாக்கிச் சூட்டின் மூலமாய் தமிழக வரலாற்றில்  இடம் பெற்றிருக்கும்.


Thursday, June 1, 2023

ஆதீனங்களின் வரலாறுகள் இவ்வளவுதான் . . .

 



ஜனநாயகப் படுகொலை நிகழ்த்தப்பட்ட இடத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழாவுக்கு தமிழ்நாட்டு ஆதினங்கள் சென்றதிலிருந்து ஆதீனங்கள் பற்றிய பில்ட் அப் அதிகமாகி விட்டது. அதனால் அந்த ஃபர்னிச்சரை கொஞ்சம் உடைத்தால் நன்றாக இருக்குமே என்பதால்தான் இப்பதிவு.

 

மதுரை ஆதீனம்.

 

முக்கியமான நான்கு நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தர் நிறுவியதாக சொல்லப்படுகிறது. பார்வதி இவருக்கு ஞானப்பால் கொடுத்ததாக சொல்லப்படும் புனைவில் தொடங்குகிறது இவரது வரலாறு. சமணர்களை அனல்வாதம், புனல்வாதத்தில் இவர் வென்றார் என்று சொல்லப்படும் வரலாறு முழுக்க முழுக்க அறிவியலுக்கு முரணானது. எண்ணாயிரம் சமணர்களை பாண்டிய மன்னன் மூலம் கழுவேற்ற வைத்ததன் மூலம் உலகில் இனப்படுகொலை செய்த முதல் பயங்கரவாதி, ஹிட்லர், டிமோவுக்கு முன்னோடி.

 

இப்போதுள்ள மதுரை ஆதீனத்துக்கு முந்தைய ஆதீனம் சரியான காமெடி பீஸ். துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு இலங்கைக்குப் போவேன் என்பது முதல் எம்.ஜி.ஆர், ஜெ, சசிகலா ஆகியோருக்கு ஆதரவாக இவர் விடாத அறிக்கைகளே இல்லை. நித்தியிடம் ஐந்து கோடி வாங்கிக் கொண்டு அடுத்த ஆதீனமாக முடி சூட்டியவர்.  இருவரும் சேர்ந்து அடித்த கூத்துக்கள் பல வார இதழ்களில் கவர் ஸ்டோரிகளாகவே வந்தது. கடும் எதிர்ப்பால் நித்திக்கு கொடுத்த பதவி ரத்து செய்யப்பட, சமீபத்தில் அவரும் மண்டையைப் போட இன்றைய ஓசி ப்ளைட் ஆதீனத்திற்கு அடித்தது லாட்டரி.

 

திருவாடுதுறை ஆதினம்.

 

இப்போதுள்ள ஆதீனம் “என்னை மற்றவர்கள் தூக்கும் பல்லக்கில்தான் பட்டிணப்பிரவேசம் வருவேன்” என்று அடம் பிடித்து வாங்கிக் கட்டிக் கொண்டவர்.

 

இவருக்கு முந்தைய சாமியாரை கொலை செய்ய முயற்சி நடந்தது. கொலைக்கு திட்டம் போட்டு பணம் கொடுத்தது வருங்கால ஆதீனமாக பட்டம் கட்டப்பட்ட இளைய தம்பிரான் என்று சொல்லப்பட்டது.  பத்து வருடத்துக்கு மேல் கேஸ் நடந்து கடைசியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையானார்கள். சொத்து பிரச்சினை காரணமாக ஆதீனம் என்னை திட்டம் போட்டு மாட்டி விட்டார் என்பது இளைய தம்பிரான் குற்றச்சாட்டு.

 

இந்த சொத்து பிரச்சினை இப்போதும் நீடிக்கிறது. இப்போதுள்ள ஆதீனம் தனது வாரிசாக பட்டம் கட்டிய கட்டளைத் தம்பிரானுக்கும் பாஜக நகரச் செயலாளருக்கும் “கோயில் குளங்களை தூர் வாரும் போது வெளியேற்றும் மணலை யார் விற்பது” என்பதில் பிரச்சினை. பாஜக நகரச் செயலாளர் என்னை கொலை செய்ய முயற்சித்தார் என்று ஆதீன வாரிசு போலீஸில் புகார் எல்லாம் கொடுத்தார். ஆனால் இறுதியில் வென்றது பாஜக நகரச் செயலாளர்தான். வாரிசின் பதவி பறிக்கப்பட்டு அவர் வீட்டுக்கு அனுப்பப் பட்டார்.

 

இந்த ஆதீனத்தை வைத்துத்தான் ஆரென் ரவியும் ஆடிட்டர் விஷ மூர்த்தியும் செங்கோல் நாடகத்தை அரங்கேற்றினார்கள்.

 

மற்ற ஆதீனங்கள்

 

திருப்பனந்தாள் மடம், தருமபுரம் ஆதீனம், திருப்பறாய்த்துறை ஆதீனம் ஆகியவையும் வாரிசுச் சண்டைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டவைதான்.

 

பேரூர் ஆதீனம் போல சில ஆதீனங்கள் நேரடியாக ஆர்.எஸ்.எஸ் நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள்தான்.

 

காவி அணிந்த நல்ல சாமியார் என்று இது நாள்வரை மதித்திருந்த குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரும் டிமோ வலையில் விழுந்ததுதான் மிகவும் அதிர்ச்சியளித்தது.

 

இந்து அற நிலையத்துறையின் கைகளில் கோயில்கள் இருக்கக்கூடாது என்று சங்கிகள் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 

ஆதீனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் எப்படி உள்ளன?

 

சமீபத்தில் திருவாடாதுறை மற்றும் தருமபுரம் ஆதீனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள வைத்தீஸ்வரன் கோயில், சூரியனார் கோயில், கஞ்சனூர் கோயில், திருக்கொள்ளிக்காடு ஆகிய கோயில்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

 

கொஞ்சம் கூட பராமரிப்பு இல்லாத, வௌவால்களின் வேட்டைக்காடாக, துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிற, பாசி படிந்த தரைகளோடு இருள் படிந்து காணப்படுபவைதான் இக்கோயில்கள். கோயில்கள் மூலம் வரும் பணத்தை கல்லா கட்டுவதுதான் ஆதீனங்களின் பணி.

 

இந்திய வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்த தோழர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு எழுதிய “யார் கைகளில் இந்துக் கோயில்கள்?” நூலில் இந்து அறநிலையத்துறையின் இணை ஆணையாளராக இருந்த திரு ஜெயராமன் ஆதீன ஊழல்கள் பற்றி நிறைய பேசியிருப்பார். அந்த நூலை தேடிப் பிடித்து அந்த பக்கங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

 

சங்கிகள் எதைத் தொட்டாலும் அவை தேவையில்லாத ஆணிகளே, ஆதீனங்கள் உட்பட.

 

 

 

Thursday, May 4, 2023

துரோகிகள் வீழ்த்திய திப்பு

 

முகநூலில் தோழர் ஃபெரோஸ் பாபு அவர்கள் பகிர்ந்து கொண்ட வரலாற்று ஆய்வாளர் செ.திவான் அவர்கள் எழுதிய மிக முக்கியமான கட்டுரை. சற்று நீளம்தான். ஆனாலும் பரவாயில்லை, கொஞ்சம் கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டு முழுமையாக படித்து விடுங்கள்.

 வாழும் நாளில் வெள்ளையர்களால், துரோகிகளால் தாக்கப்பட்டார் திப்பு சுல்தான். அவர் இறந்து இரு நூற்றாண்டுகள் ஆன பின்பும் அந்த வெள்ளையர்களுக்கு காவடி தாக்கியவர்கள், துரோகிகளின் வாரிசுகள் இப்போதும் அவரை தாக்குகிறார்கள்.

 துரோகிகளின் நிறம் மாறாது.  அவர்கள் இன்றும் உலாவிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

 


தீரன் திப்பு சுல்தானின் கடைசிநாளில்...

(மே 4 திப்பு சுல்தான் நினைவு தினம்)

 

காவிரியாற்றின் இரு கிளைகளில் உண்டான தீவு ஸ்ரீரங்கப்பட்டிணம், காவிரியின் மேல் முடிவில் அமைந்திருக்கிறது. ஹைதர் அலீ காலத்தில் இது மைசூர் ராஜ்யத்தின் தலைநகரமாயிற்று. இதனைக் கைப்பற்றிட வெள்ளையர் சூழ்ச்சி, துரோகம் செய்து இறுதியில் மாவீரன் திப்பு சுல்தானை வீழ்த்தினர்.

 

14.02.1799ல் ஜெனரல் ஹாரிஸ் தலைமையில் 21,000 வீரர்களைக் கொண்ட பெரும்படை வேலூரில் அணிவகுத்து அன்று இரவே அப்படை மைசூர் எல்லையை நோக்கிப் புறப்பட்டது.

 

20.02.1799ல் ஆம்பூர் அருகே ஹைதராபாத்திலிருந்து வெல்லெஸ்லியின் தலைமையின் கீழ் வந்த 16,000 வீரர்களும் சேர்ந்து கொண்டனர்.

 

6420 வீரர்களைக் கொண்ட பம்பாய் இராணுவம் ஜெனரல் ஸ்டூவர்ட் தலைமையில் கண்ணுர் அருகே அணிவகுத்து தயாரானது.

 

கர்னல் ரீட் (Colonel Read) கர்னல் பிரவுன் தலைமையிலான ஆங்கிலேய படைகள் திருச்சி ஸ்ரீரங்கத்திலிருந்து அணிவகுத்து 5.03.1799ல் மைசூர் எல்லைக்குள் நுழைந்தன.

 

11.03.1799 வரை பெரியபட்டிணத்திலே இருந்து  திப்புசுல்தான் ஸ்ரீரங்கப்பட்டிணத்திற்கு வந்தார்.

 

மைசூர் படையின் தளபதிகள் ஆங்கிலேயர்களுடன் திருட்டுத் தொடர்பில் இருந்ததால், வெள்ளையரது முன்னேற்றத்தை தடுத்திடவில்லை. (Muhibbul Hasan khan, History of Tippu sulthan, calcutta, 1951)

 

18.03.1799ல் நடந்த போர் பற்றி ஆர்தர் வெல்லெஸ்லி கூறுகின்றார். “முன்னெப்போதும் இல்லாத அளவில் திப்புசுல்தானின் படை மிக அற்புதமாக இருந்தது. திப்புவின் காலாட்படை மிக முன்னேறியிருந்தது. ஆங்கிலேயரின் 33வது படையை திப்புசுல்தானின் படைகள் துவம்சம் செய்தன. திப்பு சுல்தானின் குதிரைப்படை, ஜெனரல் பெயர்ட்டின் ஐரோப்பிய படையை ஓட ஓட விரட்டியடித்தது.

 

வெள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதும் திப்புசுல்தான் படைகள் உடனே போரில் இறங்கியிருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை திப்புவிற்கு துரோகம் இழைக்கப்பட்டது. இதனால் வெள்ளையர் முன்னேறினர். போரில் தோல்வி என்பது சுல்தான் நம்பி களம் இறக்கிய தளபதிகள் செய்த துரோகத்தால் விளைந்தது ஆகும். பூரணய்யாவும் அலீ சயீத் சாகிபும் நடந்து கொண்ட விதம் அருவருக்கத்தக்கது. அவர்கள் அந்த தருணத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்று தங்களது சக்தியைக் காட்டியிருக்க வேண்டும்.

 

கமர்உத்தீன்கான் தனது குதிரைப்படையுடன் ஆங்கிலேயர் மீது போரில் ஈடுபடும்போது தவறு தலாக மைசூர் படை வீரர்கள் மீது தாக்குதல் விழுந்தது. அது அத்தனையையும் சீர்குலைத்துவிட்டது. இப்படிப்பட்ட சூழ்ச்சியில் திப்புசுல்தானின் தோல்வி தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது.

(Husain Ali Khan Kirmani, The History of Hyder Naik, London, 1842. The History of the reign of Tippu Sulthan, London, 1864))

 

போர்க்களக் காட்சிகள் வீரம் செறிந்தவை, துரோகம் மிகுந்தவை.

 

3.05.1799

 

ஸ்ரீரங்கப்பட்டணத்து கோட்டைச் சுவற்றில் முதல் உடைப்பு ஏற்படுத்தப்பட்டது. அன்று இரவு வெள்ளை அதிகாரிகள் அரண்மனை சரிவுகளில் கடந்து சென்று சுவற்றில் ஏற்பட்டிருந்த பிளவையும், கோட்டைத் தாக்குதல் முறையையும் ஆய்வு செய்தனர்.

 

4.05.1799

3,000 ஐரோப்பியர்கள், 2000 சுதேசி வீரர்கள் என ஐயாயிரம் பேர் வெள்ளையர் சார்பில் தாக்குதலைத் தொடுக்க தயாராக இருந்தனர். குறிப்பிட்ட நேரம் வந்தது. துரோகம் வெளிப்பட்டது. மீர் சாதிக் கோட்டையின் பிளவுப் பகுதியில் காவலுக்கு இருந்த தனது (திப்பு சுல்தானின்) படை வீரர்களை சம்பளம் போடப்படுகிறது என்று சாக்குச் சொல்லி அங்கிருந்து அனுப்பிவிட்டான்.

 

ஸ்ரீரங்கப்பட்டிணக் கோட்டையின் வடக்குப்பகுதியில் இரண்டு மதிற் சுவர்கள் இருந்தன. அதேபோல கிழக்கு மேற்குப்பகுதிக்கு எதிரிகளால் நெருங்க முடியாதபடி இரண்டு பெரிய நீண்ட ஆழமான அகழிகள் சுவர்களின் இரு மருங்குகளிலும் இருந்தது. தென் மேற்குப்பகுதியில் ஒரு பெரிய உயர்ந்த சுற்று வட்டமான சுவர் இருந்தது. கோட்டையின் உட்பகுதியிலும் தெற்கு சுற்றுச் சுவர்களின் உச்சியில் அதாவது மேல் தளங்களிலும் மறைந்திருந்து தாக்குவதற்குரிய முறையில் அமைந்து இருந்தது.

 

கோட்டைச் சுவர் 30 முதல் 35 அடி வரை உறுதியாகவும், கனமாகவும் இருந்தது. நீண்ட சதுரமான பாறைகளே உபயோகிக்கப்பட்டிருந்தன. பாறைகளை ஒன்று சேர்க்க பக்கவாட்டுகளில் கிளிஞ்சல்  சுண்ணாம்பும் காறையும் கொண்டு பூசப்பட்டிருந்தது

 

கோட்டைக்கு நான்கு வாயில்கள் நான்கு திசையிலும் இருந்தன

 

இந்தக் கோட்டையில் ஒரு சுவரில்தான் விரிசல் ஏற்படுத்தினர். பூர்ணய்யா, மீர் சாதிக், குலாம் உத்தீன் கான் ஆகிய மூவரும் வெள்ளையருடன் சேர்ந்து துரோகம் செய்தனர்.

 

மீர் சாதிக், திப்புவின் படைத்தளபதியில் ஒருவரான நாதிம் என்பவனை அழைத்து கோட்டைக் காவல் பட்டாளத்திற்கு சம்பளம் பட்டுவாடா செய்யப்படுவதால், சம்பளம் பெற்றுப் போகும்படி அறிவிப்பு செய்தான். உள்கோட்டை காவல் வீரர்கள் நாதிம் கூற்றுப்படி நகருக்குள் சம்பளத்திற்காக காத்துக் கிடக்கும் வேளையில் கும்பினிப் படைகள் கோட்டைக்குள் நுழைய ஆரம்பித்தன.

(Mark Wilks, Historical sketches of the south of india in an attempt to trace the history of Mysore, Volume II, First Edition, 1810).

 

தீரன் திப்பு சுல்தானின் வீரமிக்க விசுவாசம் நிறைந்த தளபதி சயீத் கஃபார் பறங்கியரின் பீரங்கித் தாக்குதலுக்குப் பலியானார். சயீத் கஃபார் வீரமரணம் அடைந்ததும் கோட்டைக்குள் இருந்த துரோகிகள் எதிரிகளுக்கு சமிக்கை காட்டினர்.

 

கோட்டைக்குள் இருந்து வெள்ளை நிறக் கைக்குட்டையை அசைத்து அகழிக்குள் தயாராய்க் காத்து நின்ற கும்பினிப் படைகளுக்கு சமிக்கை செய்யப்பட்டது.

 

(பிரெஞ்சுக்காரர்களும் திப்பு சுல்தானுக்கு துரோகம் செய்தனர். 1798 ஏப்ரல் மாதத்தில் திப்பு சுல்தான் பிரெஞ்சுப் படையினர் 40,000 பேர் தனக்கு உதவிக்கு தேவையென்று கேட்டிருந்தார். ஆனால், பிரெஞ்சுப்படையினர் வெறும் நூறு மட்டுமே திப்புசுல்தானுக்கு உதவிக்கு அனுப்பப்பட்டனர்.

 

திப்புசுல்தான் ரிப்பார்ட் (Ripard) என்ற பிரெஞ்சுத் தளபதியின் உதவியாளரிடம் கப்பல் வாங்கக் கொடுத்த பணத்துடன் அவன் காணாமல் போனதும் துரோகம்தான்.) 

 

திப்பு சுல்தானிடம் பணிபுரிந்த பிரெஞ்சு தேசத்து டியூபெக்கிடம் 4.05.1799 மதியம் 1 மணியளவில் மீர்சாதிக் சமிக்கை செய்தான்.

 

அதன்பின் கும்பினிப்படை தாக்குதலை தொடுத்தது. அன்று மதியம் 1.30 மணியளவில் மீர்சாதிக் வெள்ளைத் துருப்புகளுக்கு சமிக்கை செய்தான்.

 

ஹைதராபாத் நிஜாமுக்கும் திப்பு சுல்தானுக்கும் இடையே என்றுமே நேச உறவு இருந்ததில்லை. மராட்டியப் படைகள் ஸ்ரீரங்கப்பட்டிண உடன்படிக்கைக்குப் பின் திரும்பிச் சென்றபோது எப்படி கொள்ளையிட்டு சென்றனவோ அவ்வாறே நிஜாம் படைகளும் அப்போது எதிரில் அகப்பட்ட பொருளைச் சூறையாடியதுடன் பயிர்களையும் அழித்து நாசம் செய்தன.

 

கர்னூல் ஜில்லா முழுவதையும் நிஜாம் வைத்துக் கொள்ள முயன்றதை திப்பு சுல்தான் ஏற்கவில்லை. இருவருக்கும் இடையே கசப்பு நிலையே இருந்தது. எனவே, நிஜாமும் திப்பு சுல்தானுக்கு எதிராகவே துரோகம் செய்தான்.

 

3.05.1799ல் ஸ்ரீரங்கப்பட்டிணத்து கோட்டைச் சுவரில் வடமேற்கு மூலையில் சுவர் மூச்சுவிட்டு நின்று கொண்டிருந்ததைப் பார்த்த திப்பு சுல்தான் அவைகளைப் பலப்படுத்திட உத்தரவிட்டார். ஆளுநர் மீர் சாதிக் ஒப்புக்கு சில பூச்சுகளை செய்து தனது துரோகத்தை வெளிப்படுத்தினான். ஆங்கிலேயர் குறி பார்த்து பீரங்கி கொண்டு தாக்கவும் சுவரில் பெரிய பாதை விழுந்தது

 

4.5.1799 அன்று திப்பு சுல்தான் சத்திரத்திற்கு வந்தார். உணவை கொண்டு வர சொன்னார். சாப்பிடத் தொடங்க ஆரம்பித்தபோது சையத் கமரின் மரணச் செய்தியும் வந்தது. எழுந்து சென்ற திப்புசுல்தான் தன் எதிரே அரசாங்க ஊழியர்கள் கண்ணில் படாததால் தனது மெய்க்காப்பாளர் ராஜாக்கான் மற்றும் வேலைக்காரர்கள் இருபது பேருடன் சுவர் இடிந்த திசைக்கு ஓடினார். திப்பு அங்கு வருவதற்கு முன்பே வெள்ளையர் அப்பகுதியில் அவர்களது கொடியினை ஏற்றி இருந்தனர். பாதுகாப்பு அரண்களைக் கைப்பற்றவும் முன்னேறினர்.

 

கடும் போர் திப்பு சுல்தான் தரை இறங்கி சாதாரண போர் வீரனைப் போல போர்க்களத்தில் நின்று தனது வீர வாளைச் சுழற்றினார். திப்புவின் துருப்புகள் சிதறியிருந்தன. தனது குதிரையில் ஏறி தண்ணீர் வழிந்தோடிய மதகு அருகில் இருக்கும் சிறு வழியை நோக்கிச் சென்றார்.

 

திப்பு சுல்தான் தப்பிச் செல்ல நினைத்திருந்தால் அது அவருக்கு எளிதான ஒன்றாகவே இருந்திருக்கும். திப்பு சுல்தானுக்கு மிக அருகில் மதகு இருந்தது.

 

கோட்டையில் இடிந்த சுவர்ப் பக்கம் 600 அடி தூரத்தில் உயரமான சுவர் ஒன்று இருந்தது.

 

அந்தச் சுவரில் ஒரு சிறு கதவு. அதன் வழியாகத்தான் வீரர்களுடன் குதிரையை செலுத்திக் கொண்டு வந்தார் திப்பு சுல்தான்.

 

மீர் சாதிக் தந்திரமாக கோட்டைக் கதவின் உட்புறமாக நின்று கொண்டதோடு நில்லாமல் திப்பு சுல்தானும் அவருடன் வந்தவர்களும் போர்க்களம் சென்றபோது கதவைப் பலமாக மூடி தாள் போட்டு விட்டவன். மீர்சாதிக் உடனிருந்த மீர் நாயிம் தளத்தின் மீது ஏறி வேறு யாரும் கதவைத் திறந்து விடாதபடி இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டான்.

 

கதவு மூடப்பட்டதை அறியாத தீரன் திப்பு களத்தில் எதிரில் வந்த ஆங்கிலேயர்களை கொன்று குவித்துக் கொண்டிருந்தார்.

 

திப்புவின் காலில் காயம்பட்டது. குதிரையுடன் கோட்டைக்குள் செல்லலாமே என்றால் அந்தப் பக்கத்து கோட்டைக் கதவு மூடிக் கிடந்தது. மீர் நாயிம் குள்ள நரி போல மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான். கதவைத் திறக்கவில்லை

 

இப்போது தீரன் திப்புவிடம் அவரது மெய்க்காப்பாளர் ராஜாகான், “மன்னரே, தாங்கள் இன்னார் என்று தெரிவித்தால் உடனே கதவைத் திறப்பார்கள்என்று ஆலோசனை சொன்னான். திப்பு சுல்தான் அதற்கு உடன்படவில்லை.

 

வாசல் அருகே வந்த திப்பு சுல்தான் இரண்டாவதாகவும் காயம்பட்டார். வெள்ளையர் படை துப்பாக்கியால் சுட்டும் தீவைத்து அழித்துக் கொண்டே வந்தது. திப்புவின் மீது மூன்றாவது காயம் ஏற்பட்டது. அவரது நெஞ்சின் இடதுபுறம் குண்டுகள் துளைத்தன. உடனிருந்தவர்கள் திப்புவை தூக்கிச் செல்ல முயன்றனர். முடியவில்லை

 

திப்புவின் குதிரையும் கொல்லப்பட்டது. எங்கும் மரணம் அடைந்தவர்களின் சடலங்கள், கூக்குரல்கள். கீழே விழுந்து கிடந்த திப்பு சுல்தானின் இடுப்பில் ஒரு அழகிய விலையுயர்ந்த தங்கப்பட்டை. அதில் உடைவாள் சொருகப்பட்டிருந்தது. மினு மினுக்கும் தங்க கச்சையைக் கண்டதும் கும்பினி சிப்பாய் ஒருவன் திப்புவின் இடுப்பில் இருந்து எடுக்க எத்தனித்தான்.

 

இடது மார்பில் ஒரு குண்டும் மற்றொரு குண்டு நெற்றிப் பொட்டிலும் மூன்றாவது குண்டு வலது காதுக்கு மேலாகப்பாய்ந்து தாடை வரை சென்று தைத்து விழுந்து கிடந்த நிலையிலும் தசை இடுப்புக் கச்சையை எடுக்க குனிந்த ஆங்கிலேய சிப்பாயை தன்னந்தனியாக, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், தன் வீர வாளுக்கு இரையாக்கியவர் தீரன் திப்பு. அப்போது வீரனின் துப்பாக்கி திப்பு மீது குண்டுகளைப் பொழிந்தது. இப்போதும் திப்பு இன்னொரு பிரிட்டீஷ் வீரனை தாக்கிச் சாய்த்தார்

(A. Allan, An account ot the campaign in mysore (1799), calcutta, 1912).

 

ஆங்கிலேயப் படைகள் அரண்மனைக்குள் புகுந்தன. சல்லடை போட்டுத் தேடின. திப்பு சுல்தானின் உடலைக் கண்டு பிடிக்கமுடியவில்லை. போரின் போது காயம்பட்ட திப்பு சுல்தான் கோட்டையின் வடக்கு வாசல் அருகே வீழ்ந்து கிடப்பதை அங்கிருந்து வந்த படைத்தலைவர் சொன்னான்

 

மேஜர் பெயர்டு மற்றும் சில சதிகாரர்கள் திப்பு வீழ்ந்து கிடந்த இடத்திற்கு விரைந்தனர். திப்புவின் பல்லக்கு கண்டுபிடிக்கப்பட்டது. மெய்க்காப்பாளர் ராஜாகான் மரணத் தருவாயில் போராடிக் கொண்டிருந்தார்.

 

மேஜர் பெயர்டுக்கு, ராஜாகான் திப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரத்தழும்புகளுடன் வீழ்ந்து கிடந்த இடத்தை அடையாளம் காட்டினார்

 

சிறந்த வெள்ளை நிறத்தில் ஆன மேற்சட்டை, பூ வண்ணம் கொண்ட தொள தொளவென்ற கால் சட்டை, இடையில் பட்டினாலும் பருத்தியினாலும் ஆன துணியைக் கட்டியிருந்தார் திப்பு. இடுப்பில் பச்சை நிற பெல்ட் அதில் சிவப்பு நிற பை. காயம்பட்டு வீழ்ந்ததால் தலைப்பாகை தலையில் இல்லை. தோளில் ஆபரணம் போன்ற பட்டை அணிந்திருந்தார். கம்பீரமான தோற்றத்தில் அசாதாரணமான வீரராகத் திகழ்ந்தார்.

(செ. திவான், வேலூர் புரட்சியில் வீரமிகு முஸ்லிம்கள், பக்கம் 104)

 

கண் கண்ட சாட்சியான மேஜர் ஆலன், இப்போரில் தான் கண்ட காட்சியை தனது நூலில் எழுதினார்.

 

வாசல் கதவின் வழியாக திப்பு சுல்தானின் உடல் கொண்டு வரப்பட்டபோது அவரது கண்கள் திறந்திருந்தன. அவரது உடல் இளஞ் சூடாக இருந்தது. அப்போது நானும் திரு. வெல்லெஸ்லியும் திப்பு உயிருடன் இல்லை என்பதை நம்ப முடியாமல் இருந்தோம்

 

அவரது நாடித் துடிப்பையும் இதயத் துடிப்பையும் அறிந்த பின்புதான் இந்த சந்தேகம் எங்களை விட்டு அகன்றது. அவர் இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்து கொண்டோம்

 

4.5.1799 இரவு ஸ்ரீரங்கப்பட்டிண நகரில் அத்தனை வீடுகளும் ஆங்கிலேயத் துருப்புகளால் கொள்ளையடிக்கப்பட்டன.

 

அந்த இரவில் எல்லாமே நடந்தது என்கிறான் ஆர்தர் வெல்லெஸ்ஸி. முஸ்லிம்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர். அவர்களின் சொத்துக்கள், வீடுகள் சூறையாடப்பட்டு கொள்ளையிடப்பட்டன.பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாயினர். சயித் சாகிப், கமர் உத்தீன்கான் குடும்பப் பெண்கள் மிகவும் அவலத்திற்கு ஆளாயினர்

 

கும்பினிப் படைகளிடம் அளவுக்கு அதிகமான கொள்ளைப் பொருட்கள் இருந்தன. தங்கம், வெள்ளி கட்டிக் கட்டியாக அவர்களிடம் இருந்தது. ஒரு நகைச் சிமிழ் மட்டும் 4,50,000 மதிப்புள்ளது. (அக்கால மதிப்புப்படி) திப்பு புஜத்தில் சுற்றி அணியும் வைரங்கள் பூட்டிய காப்பு ஒன்றை சிப்பாய் ஒருவன் 1500 பவுண்டுகளுக்கு விற்றான். அதை வாங்கிய கும்பினி மருத்துவர் அதனை 2000 பவுண்டுகளுக்கு விற்றவர்.

 

6.05.1799 ஸ்ரீரங்கப்பட்டிணம் வெல்லெஸ்லியின் பொறுப்பிற்கு அதிகாரப் பூர்வமாக வரும் வரை அங்கு கொள்ளைகளும் கொலைகளும் தொடர்ந்தன.

 

கொள்ளையோ கொள்ளை திப்பு சுல்தானிடமிருந்தும் ஸ்ரீரங்கப்பட்டணத்திலிருந்தும் ஆங்கிலேயர் அன்று அடித்த கொள்ளை மூன்று கோடி. (அப்போதைய மதிப்பு) ஜெனரல் ஹாரிசிற்கு 21,43,530 ரூபாய் கிடைத்தது, மீர் ஆலத்திற்கு ஒரு லட்சம் வராகன் கிடைத்தது

 

4.05.1799 அன்று இரவெல்லாம் கொள்ளை, கொலை, குலைநடுக்கம், குழப்பம் நீடித்தது. கோரம் நிறைந்தது. அன்றிரவு நடந்ததுபோல் என்றுமே எங்குமே கொடுமை நடந்தது கிடையாது என்று வெல்லெஸ்லியே ஒப்புக் கொள்கிறார். (தீரன் திப்பு சுல்தான், பக்கம் 247)

 

மே திங்களின் 4ம் நாள் பகலும் இரவும் மட்டும் இறந்துவிட்ட திப்புவின் வீரர்களின் எண்ணிக்கை, 12 ஆயிரத்திற்கும் மேலிருக்கும். இறந்து கிடந்த உடல்களில் பெண்களின் உடல்களும், பச்சிளம் குழந்தைகளின் உடல்களும் பல ஆயிரம் இருந்தன. (சுஜாவுதீன் சர்க்கார், திப்புவின் அரசியல், பக்கம் 262)

 

1799 மே 4 இந்திய வரலாற்றில் இரத்தம் தோய்ந்த நாள். ஊரெங்கிலும் 12,000 மனித உடல்கள் மண்டிக் கிடைந்தன. அவற்றை அடக்கம் செய்வதே பெரும் பிரயத்திமையாயிற்று. (மாவீரன் திப்பு சுல்தான், ஜி. ஆளவந்தார், பக்கம் 200)

 

05.05.1799 திப்பு சுல்தானின் இறுதி நிகழ்வு முழு இராணுவ மரியாதையுடன் நடந்தது. சந்தூக்கை அந்தரங்கச் சேவகர்கள் நால்வர் தூக்கிச் செல்ல, ஐரோப்பிய படைகள் அணிவகுத்துச் செல்ல ஊர்வலம் நடந்தது

 

திப்பு சுல்தானின் இரண்டாவது மகன் அப்துல் காலிக் குதிரை மீது ஏறி பின்னால் சென்றான். தெருவெல்லாம் மக்கள் வெள்ளம்

 

கண்ணீர் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கஞ்சத்தில் உள்ள கும்பாள் என்ற லால்பாக்கிற்கு தீரனின் உடல் கொண்டு வரப்பட்டது

 

வழியில் ஏழை எளியவர்களுக்கு 5,000 ரூபாய் தானமாக வழங்கப்பட்டது.

 

மண் அழுதது, வான் அழுதது, மழை ஓவொன்று கொட்டியது. இடி, மின்னல் பலமாக ஒலித்தது, ஒளித்தது

 

மின்னலின் கோரம் காவிரியின் வடகரையில் இருந்த பிரிட்டீஷாரின் பம்பாய் சேனையின் பாசறை மீது பாய்ந்தது. கூடாரங்கள் எரிந்தன. லெப்டினென்ட் பார்க்ளே, லெப்டினன்ட் கிராண்ட்  என்ற இரண்டு ஆங்கிலேய அதிகாரிகள் பலியாயினர்.

 

மற்றும் சிலரும் முகாமில் இடி மின்னல் தாக்குதலால் இறந்து போயினர் என்று வில்க்ஸ் தனது நூலில் பக்கம் 751ல் தெரிவித்துள்ளார்

 

தீரன் திப்பு சுல்தானின் உடல் அடக்கம் ஆகும் வேளையிலும் பல ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர்

 

நாட்டின் விடுதலைக்காக திப்பு தன் உயிரைத் தியாகம் செய்தார். பேராசை கொண்ட பிரித்தானியருக்கு எதிராகப் போரிட்டார். திப்பு உயிர் வீழ்ந்தபோதுஇனி இந்தியா எமதேஎன்று வெள்ளையர்கள் எக்காளமிட்டனர்.

 

மைசூர் போரில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் பிரிட்டீஷாரால் பாராட்டப்பட்டனர். பிரிட்டீஷ் பாராளுமன்றம் வெல்லெஸ்லிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.

 

திப்பு சுல்தானின் ஆட்சிப் பகுதி நான்கு வகையாக பிரிக்கப்பட்டது. மைசூர் அதைச் சுற்றியுள்ள சில பகுதிகளை மைசூர் அரசாக விட்டுவிட்டு, ஸ்ரீரங்கப்பட்டிணம் உள்ளிட்ட மீதிப்பகுதியை பிரிட்டீஷார் தாங்களே வைத்துக் கொண்டனர்

 

குர்ரம், கொண்டா, கூட்டி, சித்தன துர்க்கம் முதல் கோலார் வரை உள்ள பகுதிகள் நிஜாமின் பங்காகச் சென்றது. குர்ரம் குண்டா கமருதீன் கானுக்கு கொடுக்கப்பட்டது.

 

இவன் கும்பினிப் படையை பின்தொடர்ந்து சென்று அவர்களுக்கு வரும் தபால் தொடர்புகளைத் துண்டிக்கவும், பண்டக உதவி வருவதை தடுத்தி நிறுத்திடவும் வேண்டியவன். தீரன் திப்புவின் குதிரைப்படையின் பெரும் பகுதி இவன் பொறுப்பில்தான் இருந்தது. இந்த துரோகியும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. பறங்கியருக்கு பக்கபலமாக இருந்து படுபாதகம் புரிந்தான் அந்தத் துரோகி. மைசூரின் புதிய அரசின் திவானாக பூர்ணய்யா நியமிக்கப்பட்டார்

 

துரோகிகள் வாழ்ந்ததாக வரலாறு இல்லை

 

இரு நூறு ஆண்டுகள் ஆட்டு மந்தையாக வாழ்வதை விட இரண்டு நாள் சீறும் புலியாய் வாழ்வதே சாலச் சிறந்ததுஎன்று சூளுரைத்த பரிசுத்தப் பெருவீரன் தியாகச் சுடர் திப்பு சுல்தான்.

 

வணிகக் கொடிப்பிடித்து வஞ்சக வலை விரித்து உளமார்ந்த திருநாட்டை வளைத்துக் கொண்ட வெள்ளை ஏகாதிபத்தியத்தை வீழ்த்திவிட்டு வந்தான். சிம்மாசனத்தில் அமர வேண்டுமெனச் சபதமெடுத்து மண்ணின் மானம் காத்து, தன் மானம் காக்க இறுதி மூச்சு உள்ளவரை போராடிய இந்தியாவின் பெரு வீரன் இமலாயப் புகழ் திப்பு சுல்தானின் இறுதி நாளைக் கொஞ்சம் சொன்னேன். இதயத்தில் கொஞ்சம் நீங்களும் நினைத்துப் போற்றுங்களேன்.

 

வரலாற்று ஆய்வாளர் செ. திவான்

புதிய விடியல், மே 1-15, 2023