Sunday, May 31, 2020

இறுதி மரியாதையை மறுத்த கொரோனா


நேற்று கிடைத்த ஒரு செய்தி மிகவும் வருத்தமாக இருந்தது.

எனது பிரியத்துக்குரிய வி.வி.ஆர் சார் காலமானார் என்பதுதான். 

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள சர் சிவசாமி ஐயர் மேல் நிலைப்பள்ளியில் 1978 லிருந்து 1982 வரை ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் போது இரண்டாண்டுகள் வகுப்பாசிரியையாக இருந்த திருமதி மஞ்சுபாஷினி டீச்சர் அவர்களின் கணவர் திரு வி.வெங்கட் ராமன் சார். 

"நினைவில் நிற்கும் ஆசிரியர்கள் - நல்லவர்களும் மற்றவர்களும்" என்று சில வருடங்கள் முன்பாக எழுதிய பதிவில் அவர்களைப் பற்றி 

அர்ப்பணிப்பு உணர்வும் ஆர்வமும் அதிகமாக இருந்த காலம் அது. வகுப்பு ஆசிரியையாக இருந்த மஞ்சுபாஷினி டீச்சர், அவரது கணவர் வி.வி,ஆர் சார் எல்லாம் நல்ல உற்சாகத்தோடு சொல்லிக் கொடுப்பார்கள். தவறு செய்யும் மாணவர்களை அன்போடு திருத்துவார்கள். 

எழுதியிருந்தேன்.

அந்த பள்ளி ஆசிரியர்கள் பெரும்பாலும் ஒரே குடும்பத்தினர் போலவே பழகுவார்கள். என் அக்காவும் அதே பள்ளி ஆசிரியர் என்பதால் என்னிடம் பாசத்தை பொழிந்தவர்கள். 

அப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பின்னாளில் செயலாற்றி ஓய்வு பெற்ற வி.வி.ஆர் சார்,  ஆங்கிலம் மற்றும் இயற்பியல் எடுப்பவர். பள்ளியில் இயற்பியல் எடுத்தவர் கொஞ்சம் சிக்கல் செய்ததால், விடுதி மாணவர்களுக்கு மட்டுமாக எடுத்த தனிப் பயிற்சியில் அவர் என்னையும் சேர்த்துக் கொண்டார்.  

நான் எல்.ஐ.சி யில் பணியில் சேர்ந்ததும் மிகவும் மகிழ்ந்தவர் அவர். நான் தொழிற்சங்கம் மற்றும் இடதுசாரி சித்தாந்தம் என்று என் பாதையை தேர்ந்தெடுத்த போது குடும்பத்திலேயே நிறைய விமர்சனங்கள் வந்தாலும் என் கருத்துக்களை ஆமோதித்தவர் வி.வி.ஆர் சார். என்னுடைய திருமணத்திற்கு இருவரும் தம்பதி சமேதராக வந்து வாழ்த்தினார்கள். 

என் அக்காவிற்கு ஒரு மூத்த சகோதரர் போல வழிகாட்டியவர் வி.வி.ஆர் சார். 

அவர் நேற்று திருச்சியில் காலமாகி விட்டார். 

திருச்சி வரை சென்று இறுதி மரியாதை செய்வதற்கான சூழலை கொரோனா தடுத்து விட்டது. அவகாசமும் இல்லாமல் போய் விட்டது. 

அவரது நினைவும் எப்போதும் புன்னகைத்த முகமும் உற்சாகமும் மனதை வாட்டுகிறது. 

என் இதயபூர்வமான அஞ்சலி வி.வி.ஆர் சார் . . .

1 comment: