Saturday, May 2, 2020

லட்டு செய்பவர்களுக்கு கல்தா உண்டா?



தொழிலாளர் தினமான மே தினத்தன்று திருப்பதியில் ஒரு மிகப் பெரிய கொடுமை நிகழ்ந்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் கோயிலுக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ள காரணத்தால் சுகாதாரம் மற்றும் பராமரிப்பிற்காக செய்யப்பட்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டது. அதனால் காலம் காலமாக பணியாற்றிக் கொண்டிருந்த 1400 தொழிலாளர்கள் பணி இழந்து நிற்கின்றனர். ( ஒப்பந்தங்கள் கை மாறினாலும் ஊழியர்கள் தொடர்வார்கள், தற்காலிக ஊழியர்களாக). ஒப்பந்ததாரர் என்று யாரும் இல்லாத காரணமாக அந்த ஊழியர்கள் நடுத்தெருவுக்கு வந்து விட்டார்கள். நேற்று தர்ணா போராட்டமும் நடத்தியுள்ளனர்.

பக்தர்கள் வராத காலத்தில் துப்புறவுப் பணியாளர்களுக்கு எதற்கு ஊதியம் தர வேண்டும் என்ற முதலாளித்துவ சிந்தனையின் வெளிப்பாடுதான் இது!

பக்தர்கள் வராததால் லட்டு பிரசாத விற்பனையும் கிடையாது.  அதனால் லட்டு தயாரிப்பவர்களையும் பணி நீக்கம் செய்து விட்டார்களா?

ஏராளமான பட்டாச்சார்யார்கள் இருப்பார்களே, அவர்களை என்ன செய்தார்கள்? பணி நீக்கமா?

இல்லையே!

என்ன காரணம்?

அவர்கள் நிரந்தர ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் பணியில் தொடர்வதற்கான சட்ட பூர்வமான உரிமை உள்ளது. அது சரியும் கூட. 

அந்த உரிமை துப்புறவுப் பணியாளர்களுக்கும் அளிக்கப்பட்டு அவர்களையும் நிரந்தர ஊழியர்களாக  மாற்ற வேண்டும். 


அதற்கும் முன்பாக பறிக்கப்பட்ட தற்காலிக வேலையையாவது உடனடியாக வழங்க வேண்டும்.

இதை செய்வதற்கு பணமில்லாத கோயில் அல்ல திருப்பதி கோயில். தன்னுடைய பக்தர்களுக்கு தூய்மையான சூழலை உருவாக்கித் தருபவர்களுக்கு வெங்கடாசலபதியின் அருள் கிடைக்குமா?



No comments:

Post a Comment