Sunday, May 3, 2020

கேட்டால் நாட்டுக்கு நல்லது

இன்றைய ஊரடங்கு சூழலில் இந்திய அரசு மேற்கொள்ள வேண்டிய பொருளாதார நடவடிக்கைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரிவான  ஆலோசனைகளை அளித்துள்ளது. தொலை நோக்குப் பார்வையுடன் அமைந்துள்ள இந்த செயல் திட்டத்தை அமலாக்கினால் அது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது.

இந்த அரசிற்கு சுய புத்தி கிடையாது என்பது நாம் அறிந்ததே. சொல் புத்தியையாவது இனி வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எங்கள் சங்கத்தின் முன்னணித் தலைவர்கள் தோழர் எம்.கிரிஜா மற்றும் தோழர் ஆர்.எஸ்.செண்பகம் இந்த ஆவணத்தை மிகக் குறுகிய காலத்தில் அற்புதமாக தமிழாக்கம் செய்துள்ளனர்.

இதனை அவசியம் படிக்கவும். சற்றே நீண்ட பதிவுதான். ஊரடங்கு காலத்தில் அது ஒன்றும் சிரமம் அல்லவே !

அரசு என்ன செய்யப் போகிறது ?




*குடியரசு தலைவருக்கும், பிரதமருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அளித்துள்ள பொருளாதார நடவடிக்கைகள் குறித்த சாலை வரைபடம்*
***********************************

*தற்போதைய சூழலில் தேவைப்படும் பொருளாதார நடவடிக்கைகள்*
**********************************

இந்தியப் பொருளாதாரம் ஏற்கனவே மிக மோசமான மந்தகதியில் சிக்கிக் கொண்டிருந்தது.  தற்போது கோவிட் 19, கொரோனா வைரசின் மகா தொற்றின் காரணமாக உற்பத்தியில், வேலையின்மையில், விவசாய சீர்குலைவில், என்று மிகப் பெரிய வீழ்ச்சியினை சந்தித்து கிட்டத்தட்ட சரிவை நோக்கி சென்றுள்ளது.  இந்த ஊரடங்கு காலகட்டத்தில் நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது.  மக்களின் துன்பம் அளவுக்கதிகமாக வளர்ந்துள்ளது. 

இந்த் சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்கக் கூடிய ஒரு பொருளாதாரத் திட்டத்தினை முன்மொழிகிறது.  இந்த பொருளாதார நெருக்கடியையும், அதனோடு தொடர்புடைய மக்களின் தாங்கொணா துயரையும் சந்திப்பதற்கு, சில உடனடி நடவடிக்கைகளும், இடைக்கால நடவடிக்கைகளும், நீண்ட கால நடவடிக்கைகளும் தேவைப்படுகின்றன.  இந்த மூன்று நடவடிக்கைகளுமே உடனடியாக தற்போது எடுக்கப்பட வேண்டும்.   

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசாங்கத்திடம் நமது பொருளாதாரத்தையும், மக்கள் நலனையும் சரி செய்ய அளித்துள்ள இந்த முன்மொழிவுகளை உடனடியாக உரிய அக்கறையுடன் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. 

இந்த நடவடிக்கைகளை மத்தியில் ஆளும் பாஜக அரசாங்கம் உடனடியாக எடுப்பதற்குத் தேவையான அனைத்து நிர்பந்தங்களையும் அனைத்து மக்களும், அரசியல் கட்சிகளும், மக்கள் இயக்கங்களும் ஒன்றிணைந்து அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி கேட்டுக் கொள்கிறது. 

*உடனடி நடவடிக்கைகள்*

1. நம்முன் உள்ள மிக முக்கியமான பெரிய பிரச்சனை என்னவென்றால், பல லட்சம் உழைப்பாளி மக்கள் இன்று வேலையில்லாமல், எந்த வருமானமும் இல்லாமல், பசியுடன் தனிமைப்படுத்தப்பட்ட கேம்ப்களில் மந்தைகள் போன்று அடைக்கப்பட்டுள்ளனர்.  அரசாங்கம் இப்போது லாக் டவுண் மூலமாக கோவிட் 19 மூலம் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளோம் என்று கூறுவதை நாம் ஏற்றுக் கொண்டாலும், லாக் டவுணின் முடிவில் மறு தொடக்கம் அதிவேகமாக இருக்கும் என்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.  மேலும் லாக் டவுணை நீட்டினாலும் சரி, அல்லது வேறு ஏதேனும் ஒரு வடிவில் மனித இடைவெளியை கடைப்பிடிக்க நிர்பந்தித்தாலும் சரி, இந்த இலட்சக்கணக்கான மக்களின் வாழ்நிலை மிக மோசமாக பாதிக்கப்படும்.  முதன்மை முக்கியத்துவம் அளித்து இந்த இலட்சோப இலட்சம் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் பணம் உடனடியாகக் கொடுக்கப்பட வண்டும்.  

ஏற்கனவே மத்திய அரசாங்கம் அறிவித்த ரூ.1.7 லட்சம் கோடிகள் என்பது மிகக் குறைவான தொகையே ஆகும்.  அதில் பாதிக்கு மேற்பட்டவை ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த திட்டங்களே ஆகும்.  இவை இப்போது மிகக் கடுமையான  பாதிப்பிற்குள்ளாகியுள்ள இந்த தொழிலாளர்களுக்கு எந்த விதத்திலும் பயனளிக்கவில்லை.   

2.  எத்தனை காலத்திற்கு இந்த துன்பம் என்பது நீடிக்கும் என்று யாருக்கும் தெரியாது.  ஆனால், மத்திய அரசாங்கம் முதலில் ஆரம்பகட்ட நடவடிக்கையாக செய்ய வேண்டியது என்னவென்றால், வருமான வரி செலுத்தாத ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ. 7500 வீதம் மூன்று மாதங்களுக்கு அளிக்க வேண்டும.  ஆறு மாதங்களுக்கு ஒவ்வொரு தனி நபருக்கும் ஒரு மாதத்திற்கு 10 கிலோ உணவு தானியம் வீதம் அளிக்க வேண்டும்.  இந்திய உணவு தானிய கழகத்தில் தற்போது இருக்கும் 770 இலட்சம் டன்கள் உணவு தானியத்துடன்,இந்த ராபி பயிர் அறுவடையின் போது பெறப்படும் 400 லட்சம் டன்களையும் சேர்த்து  மொத்தம் 1170 லட்சம் டன்கள் உணவு தானியம் அவசர காலத் தேவைக்காக உள்ளது.  எனவே, விநியோகத்திற்கான உணவு தானியங்கள் ஏராளமாக அரசாங்கத்திடம் கையிருப்பில் உள்ளது.  
இதனை எத்தனால் தயாரிப்பிற்கு பயன்படுத்துவதற்கு பதில துன்பப்படும் இந்நாட்டு மக்களுக்கு விநியோகம் செய்ய பயன்படுத்த வேண்டும்.  எத்தனால் தயாரிப்பை விட பசியில் வாடும் இலட்சக்கணக்கான மக்களுக்கு இலவசமாக உணவளிப்பது என்பது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.  சமைக்கும் வசதியில்லாத மக்களுக்கு சமைத்த உணவுகளை தானியங்களுக்குப் பதிலாக  வழங்க வேண்டும்.  நாடு முழுவதும் உள்ள மதிய உணவு திட்டத்தினை இதற்காக பயன்படுத்த முடியும்.  உணவு தானியங்கள் மட்டுமல்லாமல், அவற்றோடு கொஞ்சம் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் மற்றும் தேவையான மளிகை சாமான்களும் இந்த காலக்ட்டத்தில் அளிக்கப்பட வேண்டும். 

3. பயனாளிகள் பட்டியலில் இருந்து கொஞ்சம் வசதியுள்ளவர்கள் என்ற முறையில் ஒரு 20 சதமான மக்கள் தாங்களாகவே விலகிக் கொள்வர் என்ற அனுமானத்துடன் நாம் மேலே கூறிய உதவிகளை செய்ய மொத்த உள்நாட்டு உற்பத்தில் 3 சதம் அளவிற்கு செலவுகள் ஆகும் எனக் கணக்கிடப்படுகிறது.  ஒரு துணை பட்ஜெட் போடும் போது இதற்காக வரிகளை உயர்த்துவது குறித்து பின்னர் ஆராய்ந்த கொள்ளலாம்.  அப்படிப்பட்ட அவசியத்துடன் துணை பட்ஜெட் போடும்போது செல்வாதாரத்தின் மீது வரி போடுவது என்பது அதிக முக்கியத்துவம் பெறும்.  இதனால் நிதியாதாரத்தையும் உயர்த்திக் கொள்ளலாம்.  அதிகரித்து வரும் செல்வ ஏற்றத்தாழ்வுகளையும் கட்டுப்படுத்த உதவும்.  இதனோடு கூட, மிகப் பெரும் செல்வந்தர்கள் மீது வரி போடப்பட வேண்டும்.  ஆனால், தற்போது, உடனடியாக இந்த ஒட்டுமொத்த செலவினங்களுக்காகவும் ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் வாங்கிக் கொள்ளலாம்.  

இப்படி விற்கப்படாத அவசர கால பயன்பாட்டிற்காக உள்ள உணவு தானியக் கையிருப்பை பயன்படுத்துவதாலோ அல்லது இதுவரை பயன்படுத்தப்படாத நிதியாதாரங்களை பயன்படுத்துவதாலோ தற்போதைய சூழலில் இந்திய பொருளாதாரத்திற்கு எந்தத் தீங்கையும் விளைவித்துவிடாது. 

4.  இப்படி அத்தனையும் மத்திய அரசாங்கத்தால் செய்யப்பட வேண்டும் எனும் அதே நேரத்தில், மாநில அரசாங்கங்களின் மூலமாகத் தான் மேலே குறிப்பிட்ட அத்தனை நிவாரண நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டியுள்ளது.  எனவே, மத்திய அரசாங்கம் மாநிலங்களுக்கு இலவசமாக தேவையான உணவு தானியங்களை மாற்றிவிட வேண்டும்.  தேவைப்படும் பணத்தினை மானியங்களாக அளிக்க வேண்டும்.  மாநில மட்டத்தில் விநியோகம் செய்வது என்பது எளிதாக இருக்கும்.  மாநில அரசுகள் அந்தந்த மாநிலங்களுக்குள் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகள், ஸ்தல மட்ட அரசு சுய நிறுவனங்களை பயன்படுத்தி இந்த விநியோகங்களை முறையாக செய்து கொள்ளலாம். 

5. சில நேரங்களில் மாநில அரசாங்கங்கள் மத்திய அரசின் இந்த பகிர்மானத்தைத் தாண்டி கூடுதலாக செலவு செய்ய நினைக்கலாம்.  மாநிலங்களுக்கு அளிப்பதாக சொல்லியிருந்த ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை  ஆக்ஸட் மாதத்திலிருந்து மத்திய அரசாங்கம் இன்னும்  அளிக்கவில்லை.  இந்தத் தொகை உடனடியாகக் கொடுக்கப்பட வேண்டும்.  மேலும், மாநில அரசாங்கங்களின் கடன் பெறும் வரம்புகளை இரட்டிப்பாக உயர்த்த வேண்டும்.  வெளி மார்க்கெட்டிலிருந்து கடன் பெறுவதை விட மத்திய வங்கியிடம் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்ற அனுமதியையும் அளித்து, அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ற விகிதாச்சாரத்தில் கடன வாங்கிக் கொள்ளும் வரம்புகளை இரட்டிப்பாக்கவும் வேண்டும்.  

வெளி மார்க்கெட்டுகளில் மாநில பத்திரங்களை ஏலம் விடும்போது வட்டி விகிதங்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளது.  இதனால் ஏற்கனவே நிதி சிக்கலில் சிக்கியுள்ள மாநிலங்களின் சுமை மேலும் அதிகரித்துவிடுகிறது.  இதற்கு பதில், மாநிலங்களின் கடன் பத்திரங்களை நடப்பினில் உள்ள ரெப்போ விகிதத்தில் மத்திய ரிசர்வ் வங்கி வாங்கிக் கொள்ளலாம்.  வளர்ந்த நாடுகள் பலவற்றிலும், அமெரிக்க பெடரல் ரிசர்வாலும், ஐரோப்பிய மத்திய வங்கியாலும், இங்கிலாந்தின் மத்திய வங்கியாலும் கூட இப்படித்தான் செய்யப்படுகிறது.  மத்திய அரசாங்கத்தினால் பிரதம மந்திரி பேரிடர் நிவாரண நிதி என்ற பெயரில் இந்த மகா தொற்றினை எதிர்த்துப் போரிடவும், அடிப்படை மருத்துவ சுகாதார வசதிகளை உதாரணமாக வென்ட்டிலேட்டர்கள், முகக் கவசங்கள், பாதுகாப்பு உபகரணங்கள், மற்றும் சோதனை கருவிகள் வாங்குவதற்காக என ஆயிரக்கணக்கான கோடிகள் மத்திய அரசாங்கத்தால் சேகரிக்கப்பட்டுள்ளது.  
அதிலிருந்தும் மாநில அரசாங்கங்களுக்கு மத்திய அரசாங்கம் பகிர்ந்து அளிக்க வேண்டும்.  அதோடு கூட மேலே கூறிய அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். 

6. பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் அளிப்பதோடு, இந்த மகா தொற்றுடன் போராடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசாங்கம் உடனடியாக உத்தரவாதப்படுத்த வேண்டும்.  அதே நேரத்தில் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய அனைத்து உயிர் காப்பு தடுப்பு மருந்துகளும், கருவுற்ற தாய்மார்களுக்கான அனைத்து தடுப்பு மருந்துகளும் தொடர்ந்து அளிப்பதினை உத்திரவாதப்படுத்த வேண்டும்.  பேர்க்கால அடிப்படையில் தட்டுப்பாட்டிற்கு உள்ளாகும் அனைத்து மருந்துகள், இரத்த வைககள் உட்பட அனைத்துத் தேவைகளும் உடனடியாக கவனம் செலுத்தி சரி செய்யப்பட வேண்டும்.    

7. மத்தியில் இருந்து மாநிலங்களுக்கு செய்ய வேண்டிய உதவிகள் ஒரு புறம்.  மறுபுறம் இந்த மகா தொற்றினை நேரடியாக சந்தித்துக் கொண்டிருக்கும் மாநில அரசாங்கங்கள் வெறுமனே பொது சுகாதாரத்தினை மட்டும் நம்பியிருக்க முடியாது.  எனவே, தனியார் மருத்துவ மனைகளை இந்த மகா தொற்று இருக்கும் வரையில் பொது சுகாதார வசதிக்கு அந்த மருத்துவ மனைகள் செயலாற்ற வேண்டும் என்று கட்டளையிடப்பட வேண்டிய அவசியம் உள்ளது.  இப்படித்தான் ஸ்பெயின் செய்யப்பட்டது.  மக்களுக்கு தேவையான சோதனைகளை செய்யவும், இலவசமாக சிகிச்சை அளிக்கவும் தனியார் மருத்துவ மனைகளின் வசதிகள் பயன்படுத்தப்பட வேண்டும்.  

அரசாங்கம் மருத்துவர்களையும் செவிலியர்களையும் மருத்துவமனை சிப்பந்திகளையும் தேவையான அளவில் நியாயமான கட்டணத்தில பய்னபடுத்திக் கொள்ள முடியும்.  ஏற்கனவே உச்ச நீதி மன்றம் தனியார் மருத்துவ மனைகளையும் சோதனை செய்து கொள்வதை இலவசமாக்கியுள்ளது.  அதிலிருந்து பின்வாங்குவது என்பது நிர்வாகத் தரப்பு தலையீட்டினை அவசியமாக்குகிறது.  மத்திய அரசாங்கம் எந்தவிதமான திட்டமிடலும் இல்லாமல் திடீரென்று அறிவித்த லாக் டவுணின் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், எழுந்துள்ள நெருக்கடியினை சமாளிக்க தனியார் மருத்துவமனைகளை பொது சுகாதாரத்திற்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ள கட்டளையிட முடியாது என்பது அரசாங்கத்தின் வர்க்க சார்புத் தன்மையை மிக அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.  இந்த மகா தொற்றினை எதிர்த்துப் போராடத் தேவையான நாட்டின் ஒற்றுமைக்கு பாதகமான செயலாக இது மாறிவிடும். 

8.  மத்திய அரசாங்கம் அதே போல உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் ஒன்றாக எந்தவித வேலையிழப்புகளும் சம்பள வெட்டுகளும் இல்லாமல் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும.  அதே போல மிக அதிக பாதிப்பிற்கு உள்ளாகும் பெண்கள், குறிப்பாக ஆதிவாசிகள், குத்தகைதார மற்-றும் தலித் உழைப்பாளி மக்களை பாதுகாப்பதில சிறப்பு கவனம் எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.  பல நாடுகள் இன்றைக்கு இதற்கான உத்தரவாதத்தை எடுத்துள்ளன.  சில நாடுகள் 80 சத சம்பள விகிதத்தை அரசாங்கமே ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளன.  இவையெல்லாம் மத்திய அரசாங்கத்தால் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும்.   

9.  நாடு முழுவதும் நாம் கூறிய தானிய மற்றும் பண உதவிகளை விநியோகம் செய்வது என்பது பல்வேறு பிரச்சினைகளை நிச்சயம் சந்திக்கும்.  ஏற்கனவே உள்ள பயனாளிகளின் பட்டியல் மட்டும் இதற்கு போதாது.  அதே போல அனைவரையும் சென்றடைய ரேஷன் கடைகள் மட்டும் போதாது.  கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் இந்த பிரச்சினைகள் இன்னும் அதிகமாக இருக்கும்.  எனவே, உணவு தானியங்களை விநியோகம் செய்ய பலதரப்பட்ட அடையாள அட்டைகளை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.  உதாரணத்திற்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கியின் பாஸ் புக், தேசிய ஊரக வேலைவாய்ப்பிற்கான அடையாள அட்டை ஏதேனும் ஒன்றை சரிபார்க்க பயன்படுத்திக் கொள்ளலாம்.  

மேலும், ஒரு வேளை இது மாதிரியான அடையாள அட்டைகள் எதுவும் இல்லாத பட்சத்தில், எம்.எல்.ஏக்கள் அல்லது கிராமப்புற பஞ்சாயத்து தலைவர்கள், அல்லது முனிசிபல் வார்டு கவுன்சிலர்கள் இவர்கள் அடையாளம் காட்டினாலும் அந்த மக்களுக்கு பயனுதவிகள் சென்றடைவதை உத்தரவாதம் செய்யலாம் எனும் அதிகாரமும் வழங்கப்ட வேண்டும.  பல மாநில அரசாங்கங்கள் ஏற்கனவே இது போன்ற புதுப் புது வழிகளை கண்டறிந்து அனைவருக்கும் பண உதவி சென்றடைவதை உத்தரவாதம் செய்துள்ளன. (சில விலக்கு அளவுகோல்களுடன்) .  இது மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும். 

10.  உலகப் பொருளாதாரத்தின் தலைவலியை இந்தியா கணிசமாக எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில் இது போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டியுள்ளது. மேலும் நமது நாடு வாங்கியுள்ள கடனாலும் மிகப் பெரிய நிர்ப்பந்தம் நமது நாட்டிற்கு ஏற்படும்.   இந்த மகா தொற்றுநோய் முதலாளித்துவ உலகமயமாக்கலின் ஆபத்துக்களை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.  நிதி மூலதனம் எப்படி எல்லை தாண்டி அதி விரைவாக பரவுமோ அதே போல வைரசின் எல்லை தாண்டிய பரவல் ஒரு புறம் நிகழ்ந்துள்ளது.  மறு புறம் தேசிய அரசாங்கங்களை இந்த எலலை தாண்டிய நிதி பாய்ச்சல் என்பது பயங்கர அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.  குறிப்பாக இந்திய அரசாங்கம் இதற்கு மிக அதிகமாக பயந்து போயுள்ளது.  நிலையற்ற இந்த நிதி மூலதனத்தின் அடியில் அஞ்சி நடுங்கிக் கொண்டு இந்த மகா தொற்று வேளையிலும் நிதிப்பற்றாக்குறையின் வரம்பு விதி முறைகளை மதியில்லாமல் மதித்துக் கொண்டு, இந்த நாட்டில் இலட்சக்கணக்கான உழைப்பாளி மக்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும்போது அவர்களது துயரினை துடைக்க வேண்டிய செலவினை செய்யாமல் கைகட்டி நின்று கொண்டிருக்கிறது.  

நிதி மூலதனத்தின் கெடுபிடிகளுக்கு அடிபணிந்து இந்திய அரசாங்கம் இந்த மக்களின் துயர் துடைக்கும் நடவடிக்கைகளில் கஞ்சனைப் போன்று செயல்பட்ட பிறகும், மத்திய அரசு ஊழியர்களுக்கான பஞ்சப்படியினை நிறுத்தி வைத்த பிறகும், நிதி மூலதனம் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டு தான் இருக்கிறது.  இதனால் டாலருக்கெதிரான ருபாயின் மதிப்பு இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்குக் குறைந்து போயுள்ளது.  இப்படி நிதி வெளியேறிச் செல்வது என்பது அனைத்து மூன்றாம் உலக நாடுகளிலும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.  இந்தியாவின் நிலை மற்ற நாடுகளை விட பரவாயில்லை.  பிற மூன்றாம் உலக நாடுகளில் அரை டிரில்லியன் டாலர் அளவிற்கு அந்நிய செலாவணி இருப்பு இருப்பதால் இன்னும் மோசமான நிலையில் அந்த நாடுகள் உள்ளன.  தற்போது நாம் மேலே கூறியுள்ள நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்படுமேயானால், இன்னும் அதிகமாக நிதி மூலதன வெளியேற்றம் என்பது இருக்கும்.  அப்போது நாம் அதனை சரி செய்ய இன்னும் இரண்டு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.  

ஒன்று நிதி மூலதன வெளியேற்றத்திற்கு ஒரு சிறிய அளவிலாவது நேரடி கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும்.  அல்லது நமது கையிருப்புகள் இப்படி வெளியேறும் நிதி மூலதனத்திற்கு நிதியளிப்பதில் கரைந்து விடும்.  இரண்டாவது சர்வதேச நிதியத்தின் புதிய Special Drawing Right (SDR) ஐ ஆதரிப்பது.  (Special Drawing Right (SDR)  என்பது 1969ல் IMF -ன் உறுப்பு நாடுகளின் அதிகாரப்பூர்வ ரிசர்வ் தொகையுடன்  the IMF-ன் சர்வதேச இருப்பிலிருந்து கொடுத்து உதவுவதற்கென உருவாக்கப்பட்டது).  அமெரிக்க பெடரல் ரிசர்வ் வாரியத்தின் கடன்கள் உட்பட்ட பிற கடன்கள் போல் அல்லாமல, இந்த  எஸ்.டி.ஆர் கள் பாகுபாடில்லாமல், விருப்பு வெறுப்பில்லாமல், வட்டி இல்லாதவையாக, திருப்பிச் செலுத்த வேண்டாதவையாக, எந்தவொரு “நிபந்தனைகளும்” அல்லது எந்தவொரு கை முறுக்குதலும் இல்லாதவைகளும் ஆகும்.  

*இடைக்கால நடவடிக்கைகள்*

*100 நாள் வேலைத்திட்டம்*

11. ஊரடங்கு நிலை படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகிறபோது, உடனடி நடவடிக்கைகளைத் தொடர்ந்து இடைக்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளில் நான்கு மத்திய அரசால் மேற்கொள்ளப்பட வேண்டும்.  முதலாவது நடவடிக்கை 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பானதாகும்.  பெரும்பாலான மாநிலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவது கிட்டத்தட்ட முழுவதுமாக நிறுத்தப்பட்டு விட்டது.  இத்திட்டத்தின் கீழ் செய்யப்படும் வேலைகள் மீண்டும் துவக்கப்பட வேண்டும்.  இதன் வாயிலாக, அரசு அளித்த உதவித் தொகை செலவழிந்த பின்னர், தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நடவடிக்கை காரணமாக தங்களது கிராமங்களுக்குத் திரும்பிச் சென்று தற்போது எந்தவிதமான வருமானமும் இன்றி இருக்கிற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட  தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைத்திடும்.  வேலைவாய்ப்பை உத்திரவாதம் செய்திடுவதில் நான்கு நடவடிக்கைகள் மிக முக்கியமானவை ஆகும்.  முதலாவதாக, ஏற்கனவே செய்த வேலைகளுக்கு கொடுக்கப்படாமல் குவிந்துள்ள நிலுவைத் தொகை உடனடியாக அளிக்கப்பட வேண்டும். 

 இரண்டாவதாக, இத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பிற்காக ஏற்கனவே பதிவு செய்திருப்பவர்களுக்கு மட்டுமின்றி, நகர்ப்புறங்களிலிருந்து ஊர் திரும்பியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களில் யாரேனும் இத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு கோரினால் அவர்களுக்கும் அது அளிக்கப்பட வேண்டும்.  தற்போதைய விவசாயப் பருவத்தில் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளால் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படும் கூலித் தொழிலாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் நூறு நாள் வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும்.  மூன்றாவதாக, இத்திட்டத்தின் கீழ் 100 நாட்களுக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்பானது, குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் அளிக்கப்படாமல் வயது வந்தவர்கள் ஒவ்வொருக்கும் அளிக்கப்பட வேண்டும்.  மேலும், இத்திட்டம் தொடர்பான சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி, வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட இயலாத நிலையில், வேலையில்லாக் கால உதவித்தொகை அளிக்கப்பட வேண்டும்.  நான்காவதாக, நகர்ப்புற பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும்.  நகர்ப்புற பகுதிகளில் இத்திட்டத்தின் கீழ் சிறு நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்புகளும் – குறிப்பாக அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளை அளிக்கும் நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளும் - இத்திட்டத்தின் கீழ் அளிக்கப்பட வேண்டும்.  இத்தகைய நடவடிக்கை சிறு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் ஒரு விதமான உதவியாக அமைந்திடும்.  ஏனெனில், இதன் வாயிலாக இந்த சிறு நிறுவனங்களில் பணியாற்றிடும் தொழிலாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான கூலியை அரசு அளித்திடும்.  இவ்வாறு இந்நிறுவனங்களுக்கு செயல்படுத்திடத் தேவையான தொழிலாளர்களை அவர்களுக்கு அளிப்பதோடு, அத்தொழிலாளர்களுக்கான கூலியை அந்நிறுவனங்கள் அளிக்க வேண்டியிருக்காது என்பதன் மூலம் இந்நிறுவனங்களின் செயல்பாட்டை படிப்படியாக புதுப்பிப்பது சாத்தியமாகும்.

*சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்*

12. இரண்டாவதாக மேற்கொள்ளப்பட வேண்டிய இடைக்கால நடவடிக்கை என்பது சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் விவசாயத் தொழில் சார்ந்தவை ஆகும்.  இத்தகைய தொழில்களுக்கு நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களை அளிப்பது மட்டும் போதாது.  அவர்களுக்கு கணிசமான கூடுதல் உதவிகளும் தேவையாகும்.  அதிக அளவிலான பிணைப் பாதுகாப்பை கோரிடாது உரிய காலத்தில் கடன் தொகையை வங்கிகள் இவர்களுக்கு அளித்திட வேண்டும்.  இவர்களது கடனுக்கான உத்திரவாதத்தை அரசு அளித்திட வேண்டும்.  அது மட்டுமின்றி, ஏற்கனவே பெறப்பட்டுள்ள கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான கால அளவை மூன்று மாத காலத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கியால் நீட்டிப்பு  செய்யப்பட்டுள்ளது.  இத்தகைய நீட்டிப்பு காலம் 3 மாதங்கள் என்பதிலிருந்து ஒரு வருடமாக உயர்த்தப்பட வேண்டும்.  இத்தகைய நிறுவனங்களில் பெரும்பாலானவற்றின் உற்பத்திக்கான கிராக்கி திடீரென நின்று போயிருப்பது அல்லது செங்குத்தாக வீழ்ச்சியடைந்திருப்பதால், இயல்பு நிலை திரும்பும் வரை தாக்குப்பிடிக்க இந்நிறுவனங்கள் திணருகின்றன.  எனவே, சலுகைக்கான கால அளவு நீட்டிக்கப்பட வேண்டியதற்கும் அவசியம் உள்ளது.  அத்துடன், வட்டித் தொகை முழுவதும் அரசால் மானியமாக அளிக்கப்பட வேண்டும்.  

விவசாயத் தொழிலைப் பொறுத்தவரை, விவசாயிகளின் கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட வேண்டும். மேலும், புதிதாக கடன் தொகை இவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.  இப்புதிய கடன்களுக்கான வட்டியை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்.  அதோடு, கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு உதவிடவும், பால் பொருட்களுக்கான கிராக்கியை புதுப்பித்திடவும் பால் கூட்டுறவு நிறுவனங்களுக்கு ஒரு லிட்டர் பாலுக்கு ஐந்து ரூபாய்கள் மானியமாக அளிக்கப்பட வேண்டும். 
   
*புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மீண்டும் திரும்பி வரச் செய்வது*

13. தங்களது சொந்த கிராமங்களுக்குத் திரும்பிச் சென்றுள்ள புலம்பெயர் தொழிலாளர்களை மீண்டும் பணிக்குத் திரும்ப ஊக்குவிப்பது மூன்றாவது இடைக்கால நடவடிக்கையாகும் (உலகின் வேறெந்த நாடுகளிலும் இல்லாத வகையில், திடீரென இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட ஊரடங்கு நிலை காரணமாக, புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது கிராமங்களுக்குத் திரும்பச் செல்வது தடைபட்டது.  இத்தகைய தொழிலாளர்கள் தங்களது கிராமங்களுக்குத் திரும்பச் செல்ல ரயில் மற்றும் பேருந்து வசதிகள் உடனடியாக ஏற்படுத்தித் தரப்பட வேண்டும்.)  இத்தொழிலாளர்களை மீண்டும் பணிக்குத் திரும்பி வரச் செய்திட கூடுதல் காலம் பிடிக்கும் என்பதோடு, இதனைச் செயல்படுத்துவது என்பது சுலபமான ஒன்றாக இருக்காது.  ஏனெனில், இந்நோய் குறித்த அச்ச உணர்வும், மீண்டும் இத்தகைய ஊரடங்கு நிலை அமல்படுத்தப்படக் கூடும் என்ற அச்ச உணர்வும் இத்தொழிலாளர்கள் ஒவ்வொருவர் மனதிலும் நீண்ட காலத்திற்கு இருந்திடும்.  புலம்பெயர் தொழிலாளர்களின் அச்சங்கள் போக்கப்பட வேண்டும்.  மனம் போன போக்கில் முடிவுகளை எடுத்து, காவல் துறையினரின் தடிகளைக் கொண்டு அவற்றை செயல்படுத்தி வருகிற தற்போதைய அரசிலிருந்து மாறுபட்ட, கருணை மிகுந்த அரசின் தோற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.  வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தம் சென்ற புலம்பெயர் தொழிலாளர்களில் நாடு திரும்ப விரும்புபவர்களுக்கு அதற்கான வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

*அத்தியாவசியப் பொருட்களைக் கிடைக்கச் செய்தல்*

14. அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பெருமளவில் மக்கள் நுகர்ந்திடும் பொருட்கள் ஆகியன நியாயமான விலைகளில் போதுமான அளவில், தொடர்ச்சியாக மக்களுக்குக் கிடைக்கச் செய்வது நான்காவது இடைக்கால நடவடிக்கையாகும்.  ஊரடங்கு நடவடிக்கை செயல்படுத்தப்பட்டதன் காரணமாக பல்வேறு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் மக்களுக்குக் கிடைப்பதற்கான சங்கிலித் தொடர் அறுந்து போயுள்ளது.  மேலும் பல்வேறு விதங்களில் அவற்றின் உற்பத்தியும் முடங்கியுள்ளது.  இவற்றைப் புதுப்பித்திட மத்திய மற்றும் மாநில அரசுகளின் குறிப்பான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவைப்படுகின்றன.  இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளும்போது, உள்ளீட்டு மற்றும் வெளியீட்டு உறவுகளே இதுபோன்ற பொருட்களின் உற்பத்தியை வழிநடத்துகின்றன என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.  எனவே, நாடு முழுவதிலும் சில திட்டமிடல் நடவடிக்கைகள் திறம்பட நிலைநிறுத்தப்பட வேண்டும்.

*கிராமப்புற பொருளாதாரத்தை புதுப்பித்தல்*

15. உள்ளூரில் விளைவிக்கும் பொருட்களைப் பதப்படுத்துதல் போன்ற பல்வேறு துறைகளில் பஞ்சாயத்துகளுக்குச் சொந்தமான கிராம அளவிலான சிறு நிறுவனங்களைத் துவக்குவது ஐந்தாவது இடைக்கால நடவடிக்கையாகும்.  அனைத்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், வாக்குறுதிகள் அளிக்கப்பட்டாலும் கூட, தங்களது கிராமங்களுக்குத் திரும்பியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களில் பலர் தங்களது கிராமங்களிலேயே தங்கவுள்ளனர். 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இவர்களுக்கு வேலை அளிப்பதோடு கூடுதலாக, இதனைத் தாண்டி வேலைவாய்ப்புகள் கண்டறியப்பட வேண்டும்.  விவசாயம் சார்ந்த வர்த்தக நடவடிக்கைகளை ஊக்குவித்திட குளிர்பதன சேமிப்பு கிடங்கு மற்றும் வர்த்தகத்திற்கான கட்டமைப்பு வசதிகள் அளிக்கப்பட வேண்டும்.  இதன் வாயிலாக கிராமப்புற பொருளாதாரத்தை புதுப்பித்திட இயலும்.  மேலும், வேலைவாய்ப்புகளை தீவிரப்படுத்தும் திசைவழியில் வளர்ச்சிப் பாதைக்கு ஓர் மாற்று வாய்ப்புள்ள உந்துதலாகவும் இருக்கும்.  இதற்காக வங்கிக் கடன் அளிக்கப்பட வேண்டும்.  அதோடு தொழில்நுட்ப மற்றும் நிர்வாகப் பணிகளில் நிபுணத்துவம் பெற்றவர்களின் ஆலோசனைகளும் இவர்களுக்குக் கிடைக்கப் பெற வேண்டும்.  இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசுகள் செய்திடலாம்.

*நீண்ட கால நடவடிக்கைகள்**
*அரசு முதலீடுகளை அதிகரித்தல்*

16. தற்போது செயல்படுத்தத் துவங்கப்பட வேண்டிய நீண்ட கால நடவடிக்கைகளைப் பற்றி தற்போது பார்த்திடலாம்.  உள்நாட்டு சந்தையை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார வளர்ச்சிக்கான உத்திகள் மாற்றியமைக்கப்பட வேண்டியது அவசியமாகும்.  எனவே, உள்நாட்டு சந்தையின் வளர்ச்சியை இறுதியில் தீர்மானிப்பதாக உள்ள விவசாயத் துறையின் வளர்ச்சிக்கான உத்திகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.  சமீபகாலம் முழுவதிலும் விவசாயத் துறை புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது.  இருந்தபோதும், பல லட்சக் கணக்கான மக்களுக்கு விவசாயத் தொழிலே இறுதி அடைக்கலமாக உள்ளது என்பதையே ஊரடங்கு நிலை நிரூபித்துள்ளது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு ஈடுகட்டக் கூடிய வகையிலான கொள்முதல் விலைகளை அளிப்பது, இதற்கு முன்னல் நடைமுறையில் இருந்ததைப் போன்று பணப் பயிர்களுக்கும் கொள்முதல் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது, சர்வதேச சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களின் தாக்கத்திலிருந்து உள்நாட்டு விலைகளுக்கு பாதுகாப்பு அளித்திட தீர்வை விதிப்பது, விளைச்சலை அதிகப்படுத்தும் புதிய நடைமுறைகள் குறித்த ஆய்வுகள், குறைவான நீர் பாய்ச்சல் தேவைப்படும் விவசாயப் பொருட்களை அதிகரிக்கச் செய்தல், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக நிலம் வைத்திருப்போரிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தை நிலமில்லாதவர்களுக்கு அளிப்பது, உபயோகிக்கப்படாத நிலங்களில் சாகுபடியை துவக்குவது போன்ற அதிக எண்ணிக்கையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் விவசாயம் புறக்கணிக்கப்படுவதை மாற்றியமைக்க வேண்டும்.  விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் சராசரி விவசாயத்துறை சார்ந்த வருமானத்தை அதிகரிக்கச் செய்வது, வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்து வரும் இந்தியாவின் உழைப்பாளி மக்களை அதன் பிடியிலிருந்து மீட்டெடுப்பதற்கான திறவுகோலாக உள்ளது. 

அது மட்டுமின்றி, சுற்றுச்சூழல் சார்பு மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன் ஆகியன குறித்த தெளிவான பார்வையுடன், விவசாயம் சாராத நடவடிக்கைகளும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.  “பசுமை” உற்பத்தி மற்றும் பராமரிப்பு சேவைகளுக்கு ஒதுக்கிடும் தொகைகளை விரிவுபடுத்துவது ஆகியவற்றிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பது என்பதே இதன் அர்த்தமாகும்.
இந்தியாவின் சுகாதாரத் திட்டத்தில் உள்ள கடுமையான குறைபாடுகளை நோய்த்தொற்றை எதிர்த்த நடவடிக்கை தெளிவாகக் காட்டியுள்ளது. ஒருங்கிணைந்த சுகாதாரத் திட்டத்தை நிறுவிடுவதற்கான உடனடி முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவில் குறைந்தது 3 சதவீதம் என்ற அளவிலாவது மத்திய அரசு செலவு செய்வதன் மூலம் இது செயல்படுத்தப்பட வேண்டும்.   இத்தகைய நடைமுறையை நிறுவுவதில் மத்திய அரசு செலவிடும் தொகைகளோடு மாநில அரசுகளும் கூடுதலாக நிதி ஒதுக்கிட வேண்டும்.  மருந்துப் பொருட்களின் மீதான மத்திய சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் குறைக்கப்பட வேண்டும்.  மேலும், மருந்துப் பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதில் தன்னிறைவை எட்டிட அரசு கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.  கல்வி, குறிப்பாக அனைவருக்கும் பள்ளிக் கல்வியை அளிப்பது என்பதற்கும் கணிசமான தொகை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.  இந்நடவடிக்கையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும்.  கல்விக்கான மத்திய அரசின் ஒதுக்கீடும் உள்நாட்டு உற்பத்தியின் அளவில் குறைந்தது 6 சதவீதம் என்ற அளவிற்கு அதிகரிக்கப்பட வேண்டும்.

*தனிமனித இடைவெளி – சமூக ஒத்துழைப்பு*

*மக்களை பிளவுபடுத்துவதையும், யதேச்சதிகார தாக்குதல்களையும் கைவிடுக*

17. நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள தற்போதைய தருணம், நாம் அனைவரும் ஒன்றுபடுவதற்கான தருணமாகும்.  புதிய தேச ஒற்றுமையை கட்டுவதே இத்தொற்று நோய்க்கான உண்மையான இறுதியான அருமருந்தாகும்.  அரசின் உள்ளார்ந்த ஆதரவுடன் இந்நோய்தொற்றுக்கு மதச்சாயம் பூசுவது, மனித உரிமைகளுக்காகவும், உபா சட்டத்தின் கீழ் நிறைவேற்றப்படும் சிஏஏ போன்ற கொடூரமான சட்டங்களுக்கு எதிராகப் போராடுபவர்களையும் சிறையிலடைப்பது, அரசை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் தாக்குவதன் மூலம் பத்திரிகை சுதந்திரத்தை தாக்குவது என்பன எல்லாம் யதேச்சதிகார நிகழ்ச்சிநிரலின் அங்கமே ஆகும்.  

இவையெல்லாம் தற்போதைய தருணத்தில் அல்லது எந்தவொரு தருணத்திலும் தேவைப்படுகிறவற்றிற்கு நேரெதிரான நடவடிக்கைகளே ஆகும்.  இருந்தபோதும், ஊரடங்கு நிலை என்ற போர்வையில் இவை எல்லாம் மூடி மறைக்கப்படுகின்றன.  இவை எல்லாம் மாற்றப்படவில்லை என்றால், நமது நாடும், நாட்டு மக்களும் இந்நோய்த்தொற்றை எதிர்த்து வலுவாகப் போராட இயலாது.

*தமிழில்: தோழர்கள் ஆர்.எஸ்.செண்பகம், எம்.கிரிஜா.*
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• 
 

1 comment:

  1. தீர்மானம் அரசின் கையில்...

    தங்கள் பதிவு எமது வலைத்திரட்டியில் வெளியாகி உள்ளது.

    நமது வலைத்திரட்டி: வலை ஓலை

    ReplyDelete