கேரள மாநில இடது முன்னணி அரசு இன்று ஐந்தாவது ஆண்டில் பெருமையோடு அடியெடுத்து வைக்கிறது.
குறைந்தபட்ச அதிகாரங்களுடன் அதிகபட்ச சாதனைகள் புரிந்து வரும் மக்கள் நல அரசை நடத்திவரும் கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் அவர்களுக்கும் அவரது சகாக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நேற்று அவரது பிறந்த நாள். அதற்கும் வாழ்த்துக்கள், ஒரு நாள் தாமதமாக . . .
சிறந்த சுகாதாரம், பொதுக் கல்வி, நல்லாட்சி… தலைநிமிர்ந்து ஐந்தாவது ஆண்டில் எல்டிஎப் அரசு
திருவனந்தபுரம்:
கொள்ளைநோயை எதிர்கொள்வதில் பல முன்மாதிரிகளைப் படைத்து கேரளம் உலகின் மத்தியில் இடம் பிடித்துள்ள நிலையில் எல்டிஎப் அரசு தனது நான்கு ஆண்டுகளை திங்களன்று நிறைவு செய்கிறது. அளித்த வாக்குறுதிகளில் நிறைவேற்றாத திட்டம் ஒன்றுகூட இல்லை என்பதுதான் ஐந்தாம் ஆண்டில் காலடி வைக்கும் அரசின் தனிச்சிறப்பு. கோவிட் பின்னணியில் ஆண்டுவிழா வேண்டாம் என முடிவு செய்துள்ள போதிலும் எடுத்துக்கூற வேண்டிய நீண்ட சாதனைப் பட்டியல் அரசிடம் உள்ளது.
முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் 2016 மே 25 இல் அதிகாரத்திற்கு வந்த அரசு புதிய கேரளத்திற்கு அடித்தளமிட்டது. பெருவெள்ளமும் நிபாவும் துயரங்களும் பின்னடைவை ஏற்படுத்திய போதிலும் மறுவாழ்வுக்கான உத்வேகத்துடன் அவற்றை எதிர்கொண்டது எல்டிஎப் அரசு. பெருவெள்ளத்தில் மூழ்கிய கேரளத்தை மீட்டெடுக்கும் மகத்தான பணியைமேற்கொண்டது. இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் திறன்மிக்க புதிய கேரளம் படைப்பதை லட்சியமாக கொண்டது. அதற்கான செயல் திட்டத்தில் கவனம் செலுத்தும்போது கோவிட் சூழ்ந்து கொண்டது.
வகுப்புவாத மோதலற்ற கேரளம்
நாட்டின் முதலாவது கோவிட் தொற்று ஏற்பட்ட மாநிலம் கேரளம். சவால்கள் மிக கடுமையானது என்றாலும் கோவிட்டை எதிர்கொள்ளும் கேரள ‘மாதிரி’ உலகின் மிகப்பெரிய செய்தி. பாதுகாப்பான சட்டம் ஒழுங்கு, சிறந்த சுகாதாரம், பொதுக் கல்வி, மிகக் குறைந்த ஊழல், நல்லாட்சி .... என அனைத்து தளங்களிலும் கேரளம் முன்னேறிய நான்கு வருடங்கள் கடந்து சென்றுள்ளன. இந்த நான்கு ஆண்டுகளில் வகுப்புவாத மோதலுக்கு கேரளம் இடமளிக்கவில்லை. வளர்ச்சியிலும், மக்கள் நலனிலும் தீவிரமான- கற்பனைக்கு எட்டாத செயல்முறைகளை கேரளம் கடைப்பிடித்தது. 600 தேர்தல் வாக்குறுதிகளில் மிகச்சிலவற்றையே நிறைவேற்ற வேண்டியதாக உள்ளது. நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகள் குறித்து 2019 மே மாதத்தில் ஒரு முன்னேற்ற அறிக்கை (புராக்ரஸ் ரிப்போர்ட்) வெளியிடப்பட்டது. அதன்படி சொன்னதை விட செய்தது அதிகம்என்கிற நிறைவுடன் நான்காம் ஆண்டில் காலடிவைத்தது அரசு. சிறு தொழில் முதல் தேசியநெடுஞ்சாலை வரை கேரளம் இதுவரைகண்டிராத வளர்ச்சியை சாத்தியமாக்கி யுள்ளது.
முதலிடத்தில்...
நிதி ஆயோக்கின் சுகாதார அட்டவணை யில், தொழில் வளர்ச்சியில், பள்ளிக் கல்வி மேம்பாட்டு பட்டியலில் கேரளம் முதலிடத்தில் உள்ளது. கோவிட்டுக்கு பிந்தைய காலத்தின்மறுவாழ்வுக்கான போர்முகத்தை திறந்துஐந்தாம் வருடத்துக்குள் அரசு நுழைகிறது. அரசு நம்முன் உள்ளது என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தி, ‘உணவில் தன்னிறைவு பெற்ற’ புதிய கேரளத்தை அடைவதற்கான பாதையில் எல்டிஎப் அரசின் பயணம் தொடர்கிறது.
நம்பிக்கை அளிக்கும் எல்டிஎப் அரசு
2016 கேரள சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 91 இடங்களை கைப்பற்றியது இடது ஜனநாயக முன்னணி. கேரள வரலாற்றில் அதிக எண்ணிக்கையில் நடந்த 8 இடைத்தேர்தல்களுக்கு பிறகு 93 வரை எல்டிஎப் உறுப்பினர் பலம் அதிகரித்தது. தற்போது 2 இடங்கள் காலியாக உள்ள நிலையிலும் 91 உறுப்பினர்கள் எல்டிஎப் வசம் உள்ளனர்.யுடிஎப் கூட்டணியில் காங்கிரஸ், கேரள காங்கிரஸ், முஸ்லீம்லீக் என முக்கிய கட்சிகள் கோஷ்டி மோதல்களில் மூழ்கி உள்ளன. முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மீதான சோலார் ஊழல் வழக்கு, அமைச்சர்கள் மீதான பாலாரிவட்டம் மேம்பாலம் ஊழல், நில அபகரிப்பு போன்றவை மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் நாட்டிலேயே ஊழல் குறைந்த, ஆட்சித்திறன் மிக்க எல்டிஎப் அரசின் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
நன்றி - தீக்கதிர் 25.05.2020
No comments:
Post a Comment