Thursday, May 21, 2020

நாளை ஏன் கண்டனம் ?

நாளை 22.05.2020 அன்று தேசிய கண்டன தினம் அனுசரிக்க மத்திய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

அதன் அவசியம் என்ன என்பதை விளக்கும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சுற்றறிக்கையின் தமிழாக்கத்தை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.



----------------------------------------------------------------------------------------------------------------------

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்
ஹைதராபாத்

அனைத்து தோழர்களுக்கும்



அன்பார்ந்த தோழர்களே,

22 ம் தேதியன்று மத்திய தொழிற்சங்கங்களின்
நாடு தழுவிய கண்டன இயக்கம்

கோவிட் 19 நோய்த் தொற்று பரவல் இந்தியாவில் மிகப் பெரிய நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. சுகாதார நெருக்கடியாக துவங்கிய பிரச்சினை பொருளாதார, மனிதாபிமான நெருக்கடியாக விரைவிலேயே மாறி விட்டது. ஏழை புலம் பெயர் தொழிலாளர்களும் அமைப்பு சாராத் துறை தொழிலாளர்களும் திட்டமிடப்படாத, திடீர் பொது முடக்கத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களாகி விட்டனர்.வெறும் நான்கு மணி நேர அவகாசத்தில் தொழிற்சாலைகளும் தொழில் நிறுவனங்களும் திடிரென மூடப்பட்டதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தனர். 


இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ஆய்வின் (CENTRE FOR MONITORING INDIAN ECONOMY)  படி 12.2 கோடி தொழிலாளர்கள் ஏற்கனவே வேலை இழந்து விட்டனர். 17, மே அன்று முடிந்த வாரத்தோடு வேலையின்மை விகிதம் எப்போதும் இல்லாத அளவில் 24 % ஆக உயர்ந்துள்ளது என்றும் அம்மையம் கணக்கிட்டுள்ளது. வேலையிழப்பும், வாழ்வாதாரச் சிக்கலும் தீவிரமான பிரச்சினையாக மாறியுள்ள போது பட்டினியாலும் சோர்வாலும் விபத்தாலும் ஏராளமான தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மத்தியில் உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொழிலாளர்கன் பிரச்சினைகளை  சந்திக்கின்றனர் என்பதை ஏற்க பிடிவாதமாக மறுத்து வருகிறது. அவர்களின் துயரத்தைப் போக்க அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக அரசு, தொழிலாளர்கள் போராடி வென்ற உரிமைகள் மீது வெறித்தனமான தாக்குதலை நடத்தி வருகிறது.

மத்தியரசும் சில மாநில அரசுகளும் கொரோனா நெருக்கடியை தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறது. மத்தியரசு ஊழியர்களின் அகவிலைப்படி தாக்குதலோடு இவையெல்லாம் தொடங்கியது. 38 தொழிலாளர் நலச்சட்டங்களில் 35 சட்டங்களை மூன்று வருட காலத்திற்கு முடக்கியும் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக விரிவு படுத்தியும் இரண்டு அவசரச்சட்டங்களை உத்திரப் பிரதேச பாஜக அரசு பிறப்பித்துள்ளது. தொழிற்சாலைச் சட்டம், 1948, குறைந்த பட்ச ஊதியச் சட்டம் 1948, தொழிற்சங்கச் சட்டம் 1926 மற்றுமுள்ள முக்கியமான தொழிலாளர் நலச்சட்டங்கள் ஒரே அடியில் ரத்து செய்யப்பட்டு விட்டன. குறைந்த பட்ச ஊதியம், பாதுகாப்பு,  சுகாதாரம் உள்ளிட்ட  தொழிலாளர்களின்  நலன் காக்கும் இச்சட்டங்கள் ஒரு அரசாணையின் மூலமாக தொழிலாளர்களுக்கு மறுக்கப் படுகிறது. பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஆயிரம் நாட்கள் வரை தொழிலாளர் நலச்சட்டங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குஜராத்தை ஆளும் பாஜக அரசு கூட தொழிலாளர் நலச் சட்டங்களை 1200 நாட்களுக்கு செயலற்றதாக்குவதென முடிவெடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ஒடிஷா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், பீஹார் மற்றும் பஞ்சாப் மாநில அரசுகளும் அன்றாட வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக நிர்வாக ஆணை மூலமாகவே உயர்த்தியுள்ளது.

தொழிலாளர் நலச்சட்டங்களிலிருந்து விலக்கு அளித்ததன் மூலமாக தொழிலாளர்களால், குடி நீர், முதலுதவி பெட்டிகள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை கோர முடியாது.அடிப்படைத் தேவைகளான சுகாதாரமான, காற்றோட்டமான, வெளிச்சமான பணியிடத்தையோ, காண்டீன், ஓய்வறை

வசதிகளையோ அவர்களால் கோரிக்கையாகக் கூட கேட்க இயலாது. பணியிடங்கள் தொடர்ந்து கிருமி நாசினிகள் கொண்டு தொடர்ந்து சுத்தப்படுத்தப்பட வேண்டும், முகமுடிகளும் பாதுகாப்பு உபகரணங்களும் அளிக்கப்பட வேண்டும், சமூக விலகல் அனுசரிக்கப்பட வேண்டும் ஆகியவை கொரோனா வைரஸ் பரவல் தடுப்பதற்கான வழிமுறைகளாக நிறுவ்ஃபப்பட்ட காலகட்டத்தில்தான் இவையெல்லாம் நடக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

கொரோனா பரவல் இந்தியப் பொருளாதாரத்தில் மிகப் பெரிய துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் அவசரகதியிலான ஜி.எஸ்.டி அமலாக்கம் காரணமாக இந்தியப் பொருளாதாரம் ஏற்கனவே தடுமாறிக் கொண்டுதான் இருக்கிறது. இப்போது நெருக்கடி பல மடங்கு பெருகி விட்டது. சாமானிய மக்களும் ஏழைகளும் விளிம்பு நிலை மக்களும் அமைப்பு சாரா தொழிலாளர்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். எனவே பொருளாதாரத்திற்கு புத்துயிர் கொடுக்கவும் தொழிலாளர்களுக்கு ஏதாவது நிவாரணம் அளிக்கவும் அரசு பல ஊக்குவித்தல் திட்டங்களை  கொண்டு வரும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஒட்டு மொத்த உற்பத்தியில் பத்து சதவிகிதம் அளவிற்கு இருபது லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் ஊக்குவிப்பு திட்டங்கள் வரும் என்று பிரதமர் அறிவித்ததும் அந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. ஆனால் அந்த நம்பிக்கை,  நிதியமைச்சர் ஊடகங்களுக்கு அளித்த அறிவிப்புக்கள் அவை எதுவும் ஊக்குவித்தல் திட்டங்கள் அல்ல, வெறும் கடன் விரிவு படுத்தல் என்றாகிப் போனதால் தகர்ந்து போனது. மக்களின் துயர் துடைப்பதற்காக எந்த ஒரு சிறு நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை. அரசு இயந்திரத்தின் பார்வைக்கு அமைப்பு சாரா தொழிலாளர்களும் புலம் பெயர் தொழிலாளர்களும் தென் படவே இல்லை போலும்.

ஊக்குவிப்பு  திட்டம் என்று பெயரில் சொல்லப்பட்ட அது இந்தியப் பொருளாதாரத்தை முற்றிலுமாக தனியார் மயமாக்குகிற வரைபடம்தான். “ஆத்ம நிர்வார் பாரத்” என்று இந்தியாவின் சுய சார்புத்தன்மையின் விழுமங்கள் பற்றி பிரதமர் மணிக்கணக்கில் விவரிக்கிற அதே நேரத்தில் அவரது அரசே தண்ணீர்,  பொருளாதாரத்தின் மிகவும் கேந்திரமான துறைகளில் கூட அன்னிய மூலதனத்திற்கு சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது வினோதமாக உள்ளது. தண்ணீர், வின்வெளி, காடுகள், நதிகள் என எல்லாமே தனியார்மயமாக உள்ளது. பொதுத்துறை பொதுக்காப்பீட்டு நிறுவனங்களில் பங்கு விற்பனை ஏற்கனவே எட்டிப்பார்த்துள்ளது. எல்.ஐ.சி பங்குச்சந்தையில் இணைக்கப்படும் என்று மத்தியரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. அரசின் நோக்கம் என்னவென்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது. எனவே வரும் நாட்களில் ஒரு கடுமையான போராட்டத்திற்கு இன்சூரன்ஸ் ஊழியர்கள் தயாராக இருக்க வேண்டும். இப்போராட்டம் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களின் நான்கு சுவர்களுக்குள் சுருங்கி இருக்க முடியாது. அது விரிவடைந்ததாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருந்திட வேண்டும்.  நிலைமையின் தீவிரம் ஆளும் கட்சிக்கும் விசுவாசமான தொழிற்சங்கமான பி.எம்.எஸ் சங்கத்தைக் கூட தன் எதிர்ப்புக்குரலை தெரிவிக்க வைத்துள்ளது.

அரசின் இந்த தொழிலாளர் விரோத, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை வரும் 22, மே,2020 அன்று அகில இந்திய எதிர்ப்பு தினம் அனுசரிக்கவுள்ளது. அன்றைய தினம் நாடெங்கிலும் தனி மனித விலகல் விதிகளுக்கு உட்பட்டு கூட்டு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எங்கெங்கெல்லாம் வாய்ப்பு உள்ளதோ அந்த மையங்களில் நம் சங்கக் கிளைகள், மத்திய தொழிற்சங்களின் மேடையின் அறைகூவலுக்கு இணங்க, நம் தோழமையின் வெளிப்பாடாக ஆர்ப்பாட்டங்களில் இணையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

.வாழ்த்துக்களுடன்,
தோழமையுள்ள
(ஒப்பம்) ஸ்ரீகாந்த் மிஸ்ரா
பொதுச்செயலாளர்

No comments:

Post a Comment