Friday, May 1, 2020

சுட்டெரிக்கும் உண்மை



உண்மையின் தரிசனம்
********************************

உழைப்பு முடங்கினால்
உலகம் முடங்கும்
உண்மையின் தரிசனம்

ஒவ்வோர் மனிதனின்
நலமும் வாழ்வுமின்றி
உய்யுமோ உலகம் 

யாரோ தும்மினால் 
அய்யோ என பதறுது 
ஒவ்வொரு மனசும்

மாறுகிறது இலக்கணம்
சந்தையை கடவுள் என்ற
வல்லரசுகளின் லட்சணம்

மூலதனத்தின் குரூரம்
முக கவசம், கையுறை என
மரண பயத்திலும் லாபம்

காணோம் காணோம்...
தனியார் மருத்துவம்..
வருந்தி அழைத்த விளம்பரம்...

சமரசம் உலாவும் இடமாய்
வாழவும் சாகவும்
பொது மருத்துவம்...

எள்ளலுக்கும் ஏச்சுக்கும்
ஆளாச்சு பொதுத் துறை...
அது உலகமய எக்காளம்

விலகு விலகு அரசு விலகு
பன்னாட்டு வண்டி வருது
வாங்கடா வண்டியை தள்ளுங்கடா

லாபங்களுக்கே இடம் 
சவங்களுக்கு இல்லை
சுதந்திர தேவி கண் திரை நனைக்கும் ஈரம்...

சூரியன் மறையா தேசம்
கொத்து கொத்தாய்
வீழ்கிற உயிர்கள் பாடம்

ஐயகோ மீண்டும் நாசமோ
ஐ.எம்.எப் வாசலில்
மூன்றாம் உலக தேசம்

பல நூறு மைல்கள்
பாரத தாய் விரல் பிடித்த
பரிதாப பயணம்

மொழி தெரியா நாம்
உடல் மொழியால் 
உணர்ந்த வீதிப் பாடம்

என்ன பதில் சொல்வோம்
லோகேஷ் அம்மா
உனக்கு என்ன பதில் சொல்வோம்

வீட்டிலேயே இரு என்போரே
இருக்கிறோம்... சொல்லுங்கள்
உயிரோடும் இரு என்று

வடியாத ஒன்று வடிவேலு பாசம்..
இலவச டி.வியில் பசியாற்றும்..
எவ்வளவு பொறுக்கும் எங்கள்
தோள் சாய் செல்வம்..

அரசு கொடுத்த ஆயிரம்
முதல்வர் நிதிக்காம்
கடைசி மனிதனின் கரிசனம்

சூப்பர் ரிச் வரி எனில்
குற்றம்... பாயும் அதிகாரம்
கார்ப்பரேட்டுகள் கபடம்

போங்கடா நீங்களும்
ஒங்க உலகமயமும்
போங்கடா நீங்களும்
ஒங்க தனியார் மயமும்

பொதுவில் வைப்போம் எல்லாம்...
இதுவே இன்றைய பாடம்...
சுகாதாரம் கல்வி வளம்
இன்னும் இன்னும்...

எட்டு மணி நேர வேலை
சிக்காகோ சிந்திய ரத்தம்
குரூரம் இன்றும்... கூடுமாம் நேரம்

வரலாறு அசை போடும் மனம்...
ஏமாறுமோ இனி தினம்...
மாற்றும் உலகை மே நாள் தியாகம்...

ஸ்பைஸ் மரண வரிகள் ரீங்காரம்....
தூக்கில் இடுங்கள் எங்களை...
அது நெருப்பின் மீதான உங்கள் பயணம்...

உங்கள் பின்னால்... முன்னால்
எங்கும் எங்கும் எழும் எழும்
அது பூமித் தாயின் கோபம்

தனித்திருக்கட்டும் உடல்.. 
பிரியாதிருக்கட்டும் உள்ளம்..
கனன்று எழட்டும் களம்..

க.சுவாமிநாதன்
துணைத் தலைவர்,
தென் மண்டல் இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு

No comments:

Post a Comment