அவதார புருஷருக்கு
இன்று பிறந்த நாள்.
கொண்டாட்டங்கள் இல்லை,
கோயில்களில் அபிஷேகங்கள் இல்லை,
வேறெங்கும் சிறப்புப்
பிரார்த்தனைகள் இல்லை.
கடவுளாய் தன்னை சொன்னவரில்லை
மனிதனாய் வாழ வழி காட்டியவர் அவர்.
எல்லாம் அவன் செயல் என்று
விதி மீது பழி போட்டு
உபதேசங்களை வாரி வாரி
அள்ளி இறைத்த தத்துவ
வள்ளல்கள் மத்தியில்
ஏன், எதற்கு, எப்படி என
தத்துவ ஆராய்ச்சி செய்தவர்.
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்,
சாதரணமாய் சொல்லி விடவில்லை.
முதலாளித்துவ வெறியின்
கோர முகத்தை வெளிச்சத்தில்
விலக்கிக் காட்டியவர்.
ரத்தம் ஒழுகும் வாயோடு
மூலதனம் உலகெங்கும்
சுற்றி வரும் பேயென்ற
உண்மையை உரைத்தவர்.
இனி இவர் படிக்க
புத்தகங்கள் இல்லை என்று
வெட்கப்பட்டது
லண்டன் நூலகம்.
எதிரியின் கருவிதான்.
வேறு வழியின்றி
சொன்னது
ஆயிரம் ஆண்டுகளின்
அற்புத மனிதர்
இவர்தான் என்று.
நிதி மூலதனம் பேராசைப்பட
உலகப் பொருளாதாரம்
சூறாவளியில், சுழலில்,
சிக்கித் தவிக்க
வேக, வேகமாய்
புரட்டியது இவரது
புத்தகத்தைத்தான்.
போப்பாண்டவர் கூட
உபதேசித்தார்,
இவரின் மூலதனத்தை
படிக்கச்சொல்லி.
அறிவும், உழைப்பும்,
அடித்தட்டு மக்களை
உய்த்திட கொண்ட
வேட்கையும்தானே
மூலதனத்தின்
மூலதனம்
உலகத் தொழிலாளரே,
ஒன்று படுங்கள்,
அடிமை விலங்கை உடைத்தால்
பொன்னுலகம் உங்கள் கைகளில்
என்று பொதுவுடமைத்
தத்துவம் தந்து
சிந்தனைகளை சிவப்பாக்கிய
மார்க்ஸ் அன்றி
வேறு யார் இங்கே
அவதார புருஷர்?
(சிறிய மாறுதலோடு மீள் பதிவு)
காரல் மார்க்ஸ் அவர்களின் நினைவினைப் போற்றுவோம்
ReplyDelete