Monday, May 18, 2020

இந்த இந்தியா நீடிக்கும்



தீக்கதிர் பொறுப்பாசிரியராக செயல்பட்ட தோழர் அ.குமரேசன் அவர்களின் முக நூல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

இதுதான் இந்தியாவின் மாண்பு.
இதுதான் இந்தியாவின் சிறப்பு
இந்த இந்தியா என்றும் நீடிக்கும்,
நாக்பூர் கட்டளையை பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகள் நிறைவேற்ற எத்தனை முயற்சிகள் எடுத்தாலும்
நிச்சயம் இந்தியா அதனை முறியடித்து நீடிக்கும்




நண்பர்கள் இருவரும் குஜராத்தின் சூரத் நகரில் ஒரே அறையில் தங்கி தினசரிக் கூலிக்கு வேலை செய்துவந்தவர்கள். ஒருவர் நூல் தொழிற்சாலைத் தொழிலாளி, இன்னொருவர் விசைத்தறித் தொழிலாளி. ஊரடங்கால் வருமானம் இழந்த அவர்களின் கையிருப்புப் பணம் உணவுக்கே செலவாகிக்கொண்டிருந்தது. ஊரடங்கு இப்போதைக்கு முடியப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்த அவர்கள், விவசாயத் தொழிலாளர்களாகப் பிழைத்துக்கொள்ளலாம் என்று உ.பி. மாநிலம் பாஸ்தி மாவட்டத்தில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு லாரி பிடித்துத் திரும்பிக்கொண்டிருந்தார்கள். லாரியில் வேறு சிலரும் இருந்தார்கள்.

ஒரு நண்பனுக்குத் திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டு, அதிகரித்துக்கொண்டே போனது. லாரிக்காரர்கள் அவனை ம.பி. மாநிலம் ஷிவ்புரி மாவட்டம் கொலாரா நகர நெடுஞ்சாலையில் இறங்கிவிடக் கட்டாயப்படுத்தினார்கள். அவன் இறங்கியபோது, கூடவே நண்பனும் இறங்கிவிட்டான்.

ஆம்புலன்ஸ் வருகிற வரையில் நண்பனின் தலையைத் தனது மடியில் வைத்துக்கொண்டு, அவ்வப்போது முகத்திலும் உடலிலும் தண்ணீர் தெளித்துக்கொண்டிருந்தான். ஷிவ்புரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நண்பனின் உடல் கொதிப்பு இரவில் 105 டிகிரியைத் தொட, சிறிது நேரத்தில் அவன் இறந்துவிட்டான். அவனது இறப்பால் தனிமைப்பட்ட நண்பன், தற்போது மருத்துவமனையின் கொரோனா தனிமைப் பிரிவு கண்காணிப்பில் இருக்கிறான்.

திறந்த லாரியில், 850 கி.மீ. தொலைவு, கடும் வெயிலில் பயணம் செய்ததால் உடலில் ஏற்பட்ட கடுமையான நீரிழப்பு, மூளையில் வெப்பத்தாக்குதல் காரணமாக இந்த மரணம் நிகழ்ந்திருக்கிறது. சாலையில் தண்ணீர் கிடைக்கக்கூடிய இடமாகப் பார்த்து நிறுத்தும்படி கேட்டுக்கொண்டதையும் லாரிக்காரர்கள் ஏற்கவில்லை என்று தெரிவிக்கிறார் தலைமை மருத்துவ அதிகாரி.

“அவன் என் நண்பன். அந்த நிலைமையில் அவனை எப்படி விட்டுவிட்டுப் போக முடியும்? லாரியில் கூட வந்தவர்கள் அவனுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகப் பயந்தார்கள். மருத்துவ உதவி கேட்பதற்குக் கூட மறுத்துவிட்டார்கள்,” என்கிறான் நண்பன். இருவரது உடல்களிலிருந்தும் எடுக்கப்பட்ட மாதிரிகள் கோவிட்-19 பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. (செய்தி: தி ஹிண்டு)

சாவதற்கு முன்பாகவும் நண்பனின் மடி கிடைத்தவனின் பெயர் அம்ரித் ராமச்சந்திரன். நண்பனுக்கு மடி கொடுத்தவனின் பெயர் யாகூப் முஹமது. மனிதம் வாழும் நட்பையும், மதம் தாண்டிய நல்லிணக்கத்தையும் சாகடித்துவிட முடியுமா?

Kumaresan Asak தோழரின் பதிவு படிக்கும் போது கண்ணீர் வந்துவிட்டது....

No comments:

Post a Comment