Wednesday, May 6, 2020

முதலாளிகள் மாற மாட்டார்கள்



லாபத்திற்காக மூலதனம் எதையும் செய்யும். நூறு சதவிகித லாபம் வருமென்றால் கொலை செய்யவோ, தற்கொலை செய்து கொள்ளவோ கூட தயங்காது என்றார் பேராசான் மார்க்ஸ்.

தூத்துக்குடியில் நாம் பார்த்தது ஒரு உதாரணம்.

இன்று நாளிதழில் பார்த்த ஒரு செய்தி கீழே உள்ளது.



புலம் பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பும் முடிவை கர்னாடக அரசு கை விடுகிறது என்றும் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட புகை வண்டிகளை ரத்து செய்யச் சொல்லி ரயில்வேவிற்கு சொல்லி விட்டார்களாம்.

கட்டுமான நிறுவன முதலாளிகள் யெடியூரப்பாவை சந்தித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புலம் பெயர் தொழிலாளர்களின் நலனை நாங்கள் கவனித்துக் கொள்வோம் என்று மாநில அரசு தேன் சிந்தும் வார்த்தைகளில் சொல்லியுள்ளது.

எப்போது ஊரடங்கு அவசியமோ, அப்போது அதனை தளர்த்தி நிலைமையை மோசமாக்கி இது வரை கடைபிடிக்கப் பட்ட கட்டுப்பாடுகளை கேலிக் கூத்தாக்கிக் கொண்டிருக்கின்றன அரசுகள். 

முதலாளிகளால் லாபம் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவர்கள் அளிக்கும் அழுத்தத்திற்கு அரசுகள் அடி பணிகின்றன.

குறைந்த கூலியில் தொழிலாளர்கள் கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதைக் கூட தடை செய்கிறது முதலாளித்துவம். 

இத்தனை நாள் அவர்களுக்கு ஊதியம் கொடுத்திருந்தால் அவர்கள் ஏன் ஊர் திரும்ப வேண்டும் என்று நினைக்கப் போகிறார்கள்? அதை செய்யாமல் அவதிப்பட வைத்து விட்டு இப்போது ஊர் திரும்புவதற்கும் முட்டுக்கட்டை போடுவது என்ன நியாயம்?

சரி அப்படி தடுத்தார்களே, அந்த தொழிலாளர்களை பராமரிக்க வேண்டிய பொறுப்பையாவது எடுத்துக் கொண்டார்களா? அதை அரசுக்கு தள்ளி விட்டார்கள்.

லாபம் என்றால் தனியாருக்கு, நஷ்டம் என்றால் அரசுக்கு! இதுதானே உலகமயமாக்கல் சிந்தனை! 

இப்போதுதான் மார்க்ஸ் அதிகமாக தேவைப்படுகிறார். 

பிகு : மேலே உள்ள மார்க்ஸ் படத்தை வரைந்தது எங்கள் ஆரணி கிளைச் செயலாளர் தோழர் ஜே.சுரேஷ்

No comments:

Post a Comment