ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி செயல்பட வேண்டும் என்ற புதிய இலக்கணத்தை படைத்து வரும் தோழர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
மணிமேகலையின்
அட்சய பாத்திரமாய்...
மாமதுரையின் அன்னவாசல்
வேறு எந்த ஊருக்கும் இந்த பெயர் இத்தனை சரியாக பொருந்தியிருக்காது. கீழவாசல், மேலவாசல், தெற்குவாசல், வடக்குவாசல் என்ற அன்னை மீனாட்சி மாநகரின் ஐந்தாவது வாசலாக “மாமதுரை அன்னவாசல்”, மே முதல் தேதியிலிருந்து திறந்தே கிடக்கிறது... கொரோனா ஊரடங்கின் பிடியில் சிக்கி பசியோடு காத்திருக்கும் விளிம்பு நிலை மனிதர்களுக்காக... சமைத்து உண்ண முடியாத முதியவர்கள், தனித்துவிடப்பட்டவர்கள், தனித்து வாழும் பெண்கள், நடக்க முடியாத மூதாட்டிகள், மாற்றுத் திறனாளிகள், கைவிடப்பட்ட ஏழைகளுக்காக...!
மதுரை மாநகரிலும், மாவட்டத்தின் இதர பகுதிகளிலுமாக 17 மையங்களில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் முன்முயற்சியில்; மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர், புறநகர் மாவட்டக் குழுக்களின் ஒருங்கிணைப்பில்; அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் மற்றும் சிஐடியு, நடுத்தர வர்க்க சங்கங்கள் என மக்கள் இயக்கங்களின் அர்ப்பணிப்பு மிக்க 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களின் ஓய்வில்லா உழைப்பில்... மாமதுரையின் அன்னவாசல் மாந்தர்க்கு உணவு அளிக்கிறது.
பிரபல திரைக் கலைஞர் சூர்யா வழங்கிய ரூ.5 லட்சம் நன்கொடை, மே 10 முதல் தினந்தோறும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முட்டைகளை வழங்கிக் கொண்டிருக்கும் சுகுணா சிக்கன் நிறுவனம் என்று துவங்கி, அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்பட எண்ணற்ற மனிதநேய உள்ளங்கள் அன்னவாசலில் சங்கமித்திருக்கிறார்கள்.
மாமதுரையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் எத்தகைய பேரிடர் ஏற்பட்ட காலங்களிலும் மக்களோடு மக்களாக, ஏதுமற்ற ஏழைகளின் - எளியவர்களின் - உழைப்பாளி மக்களின் உன்னத தோழனாக களத்தில் நின்று செயலாற்றிய இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எனும் மகத்தான செங்கொடி இயக்கம். இதோ கொரோனா ஊரடங்கு விடுத்திருக்கும் மிகப் பெரும் சவாலையும் செங்கொடி இயக்கத்தின் நாடாளுமன்ற பிரதிநிதியும், சக தோழர்களும் கையில் அன்னமேந்தி எதிர்கொண்டிருக்கிறார்கள்.
மணிமேகலையின் அட்சய பாத்திரமாய்... சு.வெங்கடேசன் எம்.பி.
2020 மே முதல் தேதியில் தொடங்கப்பட்ட “மாமதுரையின் அன்னவாசல்” மே 23 சனிக்கிழமையுடன் ஒரு லட்சம் மதியவுணவுப்பொட்டலங்கள் என்ற எண்ணிக்கையைக் கடந்திருக்கிறது. இந்த எண்ணிக்கையைச் சாதனை அளவாகக் குறிப்பிடவில்லை. ஆனால் இந்த அளவினை அடையும் முயற்சி எளிதில் நடந்துவிடவில்லை.மதுரையில் இயங்கும் ஐ.டி. நிறுவனங்கள் மனமுவந்து வழங்கிய கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதி, திரைக்கலைஞர் சூர்யா, சுகுணா சிக்கன் நிறுவனத்தார் உள்பட எண்ணற்ற இயதங்களின் இணைப்பு இது...இச்செயலில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொருவரும் தங்களின் உழைப்பு மற்றும் பங்களிப்பு மூலமாக மகத்தானதொரு நம்பிக்கையை நிறுவியிருக்கிறார்கள். எளிய மனிதர்களுக்காக நீளும் கைகள் எளிதில் துவண்டுவிடுவதில்லை. அவற்றின் வலிமை குன்றியதுமில்லை. மாமதுரையின் அன்னவாசல் பசித்த வயிறுகளுக்காக அகல திறந்து கொண்டே போகிறது, மணிமேகலையின் அட்சயபாத்திரமாய்...
மாமதுரை அன்னவாசல் திட்டம் குறித்து நித்யா மெஸ் மேற்பார்வையாளர் பிரபு:
எங்களுடைய உணவகத்தில் இருந்து அன்னவாசல் திட்டத்திற்காக தினசரி 1500 பேருக்கு உணவு சமைத்துக் கொடுக்கின்றோம். மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் உணவு பாதுகாப்பு கழக அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வுகள் மேற்கொண்ட பின்பு தான் உணவு தயாரிப்பதற்கான அனுமதி வழங்கினார்கள். தினசரி காலை 4 மணிக்கு உணவு சமைக்கும் பணியினை துவங்கி விடுவோம். 11 மணிக்கு உணவுப் பொட்டலங்கள் போட்டு வைத்துவிடுவோம். உணவு விநியோகிக்கும் தொண்டர்கள் அவற்றை எடுத்து மதுரை நகரில் உள்ள ஆதரவற்றவர்கள் மற்றும் முதியோர், ஏழை குடும்பங்களுக்கு விநியோகம் செய்து விடுவார்கள். தினசரி ஒருவகை உணவு என்ற அடிப்படையில் சாம்பார் சாதம், தக்காளி சாதம், வெஜிடபிள் பிரியாணி, குஸ்கா, லெமன் சாதம் என்று கொடுத்து வருகிறோம், அதோடு தற்போது ஒரு முட்டையும் வழங்கி வருகிறோம். இந்த உணவு தயாரிப்பு முறை என்பதும் கூட உணவு பாதுகாப்பு துறை சார்பில் தேர்வு செய்யப்பட்ட உணவு. தேங்காய் சேர்க்கக்கூடாது. புளியோதரை சாதம் வழங்கக்கூடாது என நிபந்தனைகளை அரசுத் தரப்பில் கூறியுள்ளார்கள். எனவே தினசரி இந்த வகையான உணவுகள் மட்டுமே பொது மக்களுக்கு வழங்குவதற்கு தயாரிக்கப்படுகிறது. மேலும் மதுரை மக்களவை உறுப்பினருக்கு நன்றியையும் நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். தற்போது இந்த உணவு தயாரிப்பதன் மூலம் எங்கள் உணவகத்தில் பணியாற்றும் 15 குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்று உள்ளது என்பது ஒரு பாராட்டுக்குரிய விஷயம். இதுபோன்ற ஒரு நீண்ட ஊரடங்கு காலத்தில் ஏராளமானோர் வேலையின்றி கஷ்டப்படும் நேரத்தில் எங்களுக்கு தற்போது இந்த உணவு தயாரிக்கும் பணி என்பது பெரும் ஆதரவாகவும் மக்களுக்கு உணவு அளிக்கின்றோம் என்ற மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
சிபிஎம் மதுரை அரசரடி பகுதிக்குழு செயலாளர் கு.கணேசன்:
இதற்கு முன் இதுபோன்ற ஊரடங்கு நிலையினை மக்கள் அனுபவித்து இருக்கமாட்டார்கள். அருகில் நின்று பேசுவதற்கு கூட மிகப்பெரும் பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் எங்கள் பகுதியில் தினசரி 300 நபர்களுக்கு உணவு சமைத்து கொடுக்கின்றோம். காலை 9 மணிக்கு சமையல் பணிகள் துவங்கி 11 மணிக்கு பொட்டலங்கள் போடப்பட்டு அதை 35 தோழர்கள் எங்கள் பகுதிக்கு உட்பட்ட கோச்சடை, பெத்தானியாபுரம், அரசரடி, சொக்கலிங்கநகர், சம்மட்டிபுரம், காளவாசல் ஆகிய பகுதிகளில் விநியோகம் செய்கின்றார்கள். இதுபோன்ற ஒரு பெரும் நோய் தொற்றினால் ஏற்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காலத்தில் மதுரையின் மக்களவை உறுப்பினர் ஏற்பாட்டில் ஒரு வேளை உணவை சமூகத்தில் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ள மக்களுக்கு வழங்குவதில் பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.
சிபிஎம் பழங்காநத்தம் பகுதிக்குழு செயலாளர் கா. இளங்கோவன்:
தினசரி 250 நபர்களுக்கு உணவு சமைத்து கொடுக்கின்றோம். கட்சி தோழர்களான மேரியம்மாள், மீனாட்சி ஆகிய இரண்டு தோழர்கள் சமைக்கும் பணியில் ஈடுபடுகின்றார்கள். 15 பேர் கொண்டகுழு இந்த உணவினை தினசரி பழங்காநத்தம் பகுதிக்குழுவிற்கு உட்பட்ட மாடக்குளம், முனியாண்டிபுரம், கோபலிபுரம், தண்டல்காரன்பட்டி, பசுமலை அண்ணாநகர், பைக்காரா, பழங்காநத்தம் ஆகிய பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவர்கள், தனித்து வாழும் பெண்கள், முதியவர்களுக்கு விநியோகிக்கிறது.இப்பகுதியில் உள்ள மக்களும் கேஸ் சிலிண்டர் மற்றும் உணவு சமைப்பதற்கு நிதி, பொருட்கள் கொடுத்து உதவுகின்றார்கள். மக்களிடம் மாமதுரை அன்னவாசல் திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சிபிஎம் மேலப்பொன்னகரம் பகுதிக்குழு செயலாளர் வை.ஸ்டாலின்:
எங்கள் பகுதியில் 10 முதல் 15 வரை உள்ள வார்டு பகுதிகளில் உள்ள முதியவர்கள், தனித்து வாழும் பெண்கள், விதவைகள் என்று தினசரி 200 பேருக்கு மாமதுரை அன்னவாசல் திட்டத்தின் கீழ் 10 பேர் கொண்ட குழு உணவு வழங்கி வருகின்றார்கள். உணவு சமைப்பதில் இருந்து பொட்டலங்கள் கட்டுவது வரை கட்சி குடும்பங்களைச் சேர்ந்த தோழர்கள் பணிகளை செய்து வருகின்றார்கள். சில பகுதிகளில் உள்ள தன்னார்வலர்கள் நேரடியாக இங்கு வந்து வாங்கி மக்களுக்கு வழங்கி வருகின்றார்கள்.
சிபிஎம் முனிச்சாலை பகுதிக்குழு செயலாளர் ஜெ.லெனின்:
எங்கள் பகுதியில் தினசரி 200 பேருக்கு உணவு அளித்து வருகின்றோம். வீட்டில் சமைக்கமுடியாத முதியவர், கட்டுமான வேலை செய்யும் தொழிலாளிகள், டிரைசைக்கிள் ஓட்டும் தொழிலாளி, தனித்து வாழும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் விதவைகள் என்று மிகவும் நலிவடைந்தவர்களுக்கு வழங்கி வருகின்றோம். மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏப்ரல் 29 ஆம் தேதி நாங்கள் மக்களுக்கு சமைத்து கொடுக்க துவங்கினோம். மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மே முதல் தேதியில் இருந்து “மாமதுரை அன்னவாசல்” திட்டம் அறிவித்து தடையின்றி சமைத்து கொடுப்பதற்கு வழி செய்தார். உணவு தினசரி சமைத்து கொடுப்பதை பார்த்து இப்பகுதியில் உள்ள சில பிரமுகர்களும் நிதி மற்றும் பொருள் உதவிகள் செய்கின்றார்கள். 45 தோழர்கள் உணவு பொட்டலங்களை பார்சல் செய்வதில் இருந்து மக்களுக்கு விநியோகம் செய்யும் வரை பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
சிபிஎம் மீனாம்பாள்புரம் பகுதிக்குழு செயலாளர் ஏ.பாலு:
மீனாம்பாள்புரம் பகுதி குழு சார்பில் சக்கரை செட்டியார் படிப்பகத்தில் தினசரி 300 நபர்களுக்கு உணவு சமைக்கப்படுகிறது. இதில் கைத்தறி தொழிலாளிகள், விதவைகள், முதியோர், தனித்து வாழும் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என்று எங்கள் பகுதியில் உள்ள 5, 6 மற்றும் 41 வது வார்டு பகுதிகளில் உள்ள இதுபோன்ற நபர்களுக்கு வழங்கி வருகிறோம் தினசரி வழங்குவது அம்மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பணியில் 16 தோழர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
சிபிஎம் செல்லூர் பகுதி குழு செயலாளர் ஜா. நரசிம்மன்:
அன்னவாசல் திட்டம் என்பது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது தற்போது மீடியாக்கள் மூலம் மதுரை மக்களவை உறுப்பினர் ஒருவேளை உணவு வழங்குவதன் மூலம் ஒரு பேருதவி செய்துள்ளார் என்பது பொதுமக்களிடையே பரவலாக தெரிந்துள்ளது. செல்லூர் பகுதிக்குட்பட்ட விளாங்குடி, அண்ணாநகர் பகுதியில் இருந்து மதிச்சியம் வரை உள்ள பகுதிகளில் வாழும் கைத்தறி தொழிலாளர்கள், சமையல் கலைஞர்கள், நாடக கலைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், தனித்து வாழும் பெண்கள், சமைக்க முடியாத முதியவர்கள் என்று 250 பேருக்கு தினசரி உணவினை வழங்கி வருகிறோம் பாக்கியநாதபுரம் பகுதியிலுள்ள கே. டி. கே. தங்கமணி நகர் பகுதியில் சமையல் பணிகள் நடைபெறுகின்றது. இப்பணியில் 24 பேர் தொண்டர்களாக பணியாற்றி வருகிறார்கள்.
சிபிஎம் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன்:
மதுரை நகரில் விளிம்பு நிலையில் உள்ள பலதரப்பட்ட மக்கள், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் உணவின்றி சிரமப்படுவதை கருத்தில் கொண்டு மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் “மாமதுரை அன்னவாசல்” திட்டம் என்பதை முன்வைத்தார்.அதன்படி தினசரி மதியம் ஒருவேளை உணவு என்பதை மக்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டு “மே முதல்” தேதியன்று உணவு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டது. இத் திட்டத்திற்கு மதுரை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து நிதியை பலரும் அனுப்புவதற்கு முன்வந்த நிலையில் அந்த நிதி மற்றும் உணவு தயாரிப்புக்கான பொருட்களை நிர்வகிப்பதற்கு 10 பேர் கொண்ட குழுவினை ஏற்படுத்தி, அதனை அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள். மதுரை மாநகர் - புறநகர் என்று மொத்தம் 17 இடங்களில் சமையல் பணி நடைபெற்று வருகின்றது. சமைக்கப்படும் இடத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி தோழர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என்று மதியம் 12 மணிக்கு எடுத்து சென்று மக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றார்கள். சமூக அர்ப்பணிப்போடு பல்வேறு பணிகளை மேற்கொண்டுவரும் அதேவேளையில் இப்பணியினையும் மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது.
மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய்:
அன்னவாசல் திட்டத்தில் உணவு தயாரிக்கும் பணிகளில் மாதர் சங்கத் தோழர்கள் உள்பட தன்னார்வலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பங்கேற்கிறார்கள். உணவுப் பொட்டலங்களை விநியோகிக்கும் இளம் தோழர்களின் ஒவ்வொரு நாள் அனுபவமும் கண்களை குளமாக்குகிறது. வறிய நிலையில் இருக்கும் முதியவர்கள், தனித்து வாழும் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் யாரேனும் உணவு தரமாட்டார்களா என ஏங்கி நிற்கும் வேளையில், உணவு அளிக்கும் தோழர்களின் கைகளை பிடித்து கண்ணீர் விடுவதும், நன்றி சொல்வதும், என்றென்றும் மறக்க முடியாத அனுபவங்கள்.
சிபிஎம் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன்:
மதுரை புறநகர் மாவட்டத்தில் குலமங்கலம், நாகமலை புதுக்கோட்டை, சமயநல்லூர், பொதும்பு, எஸ்.ஆலங்குளம், சத்திரப்பட்டி, அழகர்கோவில், மணப்பட்டி, மேலூர், யா.ஒத்தக்கடை, வண்டியூர் ஆகிய 12 பகுதிகளில் தினந்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு மாமதுரை அன்னவாசல் திட்டத்தின் கீழ் உணவளித்து வருகிறோம். இப்பணியில் தன்னலமின்றி அர்ப்பணிப்பு உணர்வுடன் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஈடுபட்டுள்ள அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.
வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா:
கொரோனா ஊரடங்கு காலம் முழுவதிலும் மதுரை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டங்களில் பல்வேறு சமூக பணிகளிலும், அன்னவாசல் திட்டத்திலும் துடிப்புமிக்க களப் பணியாளர்களாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தோழர்களும் பணியாற்றுகின்றனர். அர்ப்பணிப்பின் அடையாளமாக மட்டுமின்றி, உணவு தேவைப்படுகிற எளிய மனிதர்களை தேடி தேடி பட்டியல் எடுத்து, ஒவ்வொரு நாளும் எண்ணிக்கையை அதிகரித்து கொண்டே செல்வதில் இந்த தோழர்களின் பணியும் பங்கும் அலாதியானது.
===- ஜெ.பொன்மாறன்===
நன்றி - தீக்கதிர் 24.05.2020