Friday, June 26, 2020

நிதியமைச்சருக்கு ஒரு கடிதம்




எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்பதென்று மத்தியரசு பட்ஜெட்டில் அறிவித்தது. அந்த மிக மோசமான முடிவை அமலாக்குவதற்கான பணியை இந்த மோசமான கொரோனா காலத்திலும் கூட துவக்கியுள்ளது. தேசத்தின் மிகக் கேந்திரமான நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவு “தேஷ் பக்த்” சங்கிகளுக்கு தெரியாது போல. அதனால் அது பற்றி அவர்கள் வாய் திறக்கவில்லை.

ஆனால் எல்லோரும் அப்படி இருந்து விட முடியாதல்லவா! எல்.ஐ.சி நிறுவனத்தில் முதல் நிலை அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள், மூன்றாம் பிரிவு, நான்காம் பிரிவு ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று பிரதான சங்கங்கள் நிதியமைச்சர் நிர்மலா அம்மையாருக்கு 20.06.2020 அன்று எழுதிய கடிதத்தின் தமிழாக்கத்தை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

எங்கள் உறுப்பினர்களுக்காக செய்யப்பட்ட தமிழாக்கம்தான். ஆனாலும் தேசத்தை உண்மையாகவே நேசிக்கிற அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஏராளமான விபரங்கள் இக்கடிதத்தில் உள்ளது.

அவசியம் முழுமையாக படித்திடுவீர்.

மத்தியரசு, எல்.ஐ.சி நிறுவனத்தில் தன் வசமுள்ள பங்குகளை விற்பதற்கான நடவடிக்கைகளை துவக்கியுள்ளது என்று  சில முக்கியமான நாளிதழ்களில் இன்று வெளியாகியுள்ள செய்தி எங்களுக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது. எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்கு விற்பனைக்கு உரிய ஆலோசனைகள் வழங்குவதற்காக, முன் முதலீட்டு  பரிவர்த்தனை ஆலோசகர்களை ( PRE TRANSACTION ADVISORS) ஐ நியமிப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை பெறுவதற்கான அறிவிப்பை நிதித்துறையின் கீழ் செயல்படும் “முதலீடு மற்றும் பொதுச்சொத்து நிர்வாகத்துறை (DEPARTMENT OF INVESTMENT AND PUBLIC ASSET MANAGEMENT) வெளியிட்டுள்ளதாக அறிகிறோம்.

தங்களின் மகத்தான, அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் மூலமாக எல்.ஐ.சி நிறுவனத்தை ஒரு மாபெரும் நிதி நிறுவனமாக கட்டமைத்த எல்.ஐ.சி நிறுவனத்தின் அனைத்து பிரிவு ஊழியர்களும் நியாயமான, தக்க காரணங்களுக்காக அரசு தன் வசமுள்ள எல்.ஐ.சி பங்குகளை விற்கும் முடிவை கடுமையாக எதிர்க்கிறோம். உங்களுக்கு அனுப்பப்பட்ட எங்களின் முந்தைய கடிதங்களில் எல்.ஐ.சி பங்கு விற்பனைக்காக  நீங்கள் குறிப்பிட்டிருந்த காரணங்கள் சரியில்லை என்பதை சுட்டிக் காட்டியிருந்தோம்.

எந்த வித குறுகிய நோக்கமும் எங்களின் எதிர்ப்பிற்குக் காரணம் அல்ல. எங்கள் வாதங்கள் தேசப் பொருளாதாரத்தின், இந்திய சமூகத்தின் நலன்களை காக்கும் அக்கறையுடனானது. எல்.ஐ,.சி நிறுவனத்தின் மிக முக்கியமான அங்கமாக இருக்கிற எங்களது வாதங்கள் மீது அரசு தீவிர பரிசீலனை செய்யும் என்றும்  எங்கள் கருத்துக்களை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும் நம்பினோம். ஆனால் அப்படியொரு முன்முயற்சி உங்கள் தரப்பிலிருந்து வரவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.

இந்தியாவை தொழில்மயமாக்குவதில் எல்.ஐ.சி ஆற்றிய முக்கியமான பங்களிப்பு பற்றியும் தேச நிர்மாணத்திற்கு ஆற்றி வரும் பணிகள் குறித்தும் நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். எங்களின் மகத்தான நிறுவனத்தின் உன்னதமான செயல்பாடு குறித்த விபரங்களை எடுத்துரைத்து உங்களை தொல்லைப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. எல்.ஐ.சி யின் வளர்ச்சி, அதன் விரிவாக்கம், பாலிசிதாரர்கள் எண்ணிக்கை மற்றும் கேட்புரிமப் பட்டுவாடா ஆகியவற்றில் உலகின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமாக உருவெடுத்தது ஆகியவையெல்லாம் எல்.ஐ.சி தானே உருவாக்கிக் கொண்டிருந்த நிதி ஆதாரங்கள் மூலமாக மட்டுமே என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.  எல்.ஐ.சி துவக்கப்பட்ட போது  1956 ல் முதலீடு செய்த ஐந்து கோடி ரூபாய் மூலதனம் மற்றும் சட்டபூர்வ காரணங்களுக்காக அதை நூறு கோடியாக உயர்த்தியது என்பதற்கு மேலாக எல்.ஐ.சி க்கு அரசு வேறெந்த முதலீடும் செய்யவில்லை. இந்த சொற்ப மூல தன அடித்தளத்தைக் கொண்டுதான் இன்று 32 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ள சொத்துக்களை நிர்வகிக்கும் நிலைக்கு வந்துள்ளது. பாலிசிதாரர்களிடமிருந்து  திரட்டப்பட்ட தொகை கொண்டே இந்த விரிவாக்கம் நடந்துள்ளது. எல்.ஐ.சி ஒரு பரஸ்பர நிதி நிறுவனமாவே செயல்பட்டு வந்திருக்கிறது. அரசு தன் பங்குகளை விற்பது என்று முடிவெடுக்கிற போது இந்த முக்கியமான அம்சத்தை புறக்கணித்து ஒதுக்கியுள்ளது.

ஆயுள் காப்பீட்டு வணிகத்தை தேசியமயமாக்கி, 245 தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளை தன் வசம் கொண்டு வந்ததன் நோக்கம் என்பதே மக்களின் சிறு சேமிப்பை திரட்டி பாலிசிதாரர்கள்  சேமிப்புக்கு முழுமையான உத்தரவாதம் அளித்து அவர்களுக்கு உரிய லாபத்தையும் அளிப்பதும் அதே நேரம் அச்சேமிப்பினை கட்டமைப்புத் தேவைகளுக்கான நீண்ட கால முதலீட்டுக்கான மூலதனமாக மாற்றுவதுதான். வியக்கத்தக்க அளவில் எல்.ஐ.சி இந்த நோக்கங்களை நிறைவேற்றியுள்ளது. எல்.ஐ.சி பங்கு விற்பனை என்பது இறுதியில் தனியார்மயத்துக்கு இட்டுச் சென்று இந்த உயரிய நோக்கங்களை சிதைத்து விடும். “மக்கள் பணம் மக்கள் நலனுக்கே” என்ற கோட்பாடு மங்கிப் போய் பங்குதாரர்களுக்கு அதிக லாபம் என்ற நிலைக்கு சென்று விடும். இந்த நிலை தேசத்தின் பொருளாதாரத்திற்கோ அல்லது நாற்பது கோடி பாலிசிதாரர்களின் நலனுக்கோ உகந்தது அல்ல.

எந்த ஒரு தேசத்தின் பொருளாதாரத்திற்கும் மிக முக்கியமான பங்காற்றுவது உள்நாட்டு சேமிப்புதான் என்பது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு உண்மை. உள் நாட்டு சேமிப்பிற்கு மாற்றாக அன்னிய மூலதனம் எந்நாளும் அமைய முடியாது என்று பல உலகப்புகழ் பெற்ற பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். வளர்ச்சிக்காக மிகப் பெரும் நிதியாதாரம் தேவைப்படும் இச்சூழலில் அரசு உள்நாட்டு சேமிப்பின் மீது, அதிலும் குறிப்பாக வீட்டு சேமிப்பின் மீது அதிக கவனமும் கட்டுப்பாடும் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும்.

ஆத்மநிர்பர் பாரத் என்று இந்தியாவின் சுயசார்புத்தன்மைக்காக பிரதமர் குரல் கொடுத்துள்ளார். முதலீடு செய்வதற்கான ஏராளமான உபரியை ஒவ்வொரு வருடமும் ஈட்டுகிற  நூறு சதவிகிதம் அரசின் கட்டுப்பாட்டில் நீடிப்பதுதான் அந்த சுயசார்புப் பார்வை வெற்றிகரமாக அமலாக உதவிகரமாக இருக்கும்.

எனவே எல்.ஐ.சி நிறுவனப்பங்குகளை விற்பதென்பது இந்தியப் பொருளாதாரத்தையும் சாமானிய, எளிய மக்களையும்  வெகுவாக பாதிக்கும் என்பதை மீண்டும் வலியுறுத்த விழைகிறோம். சமூகத்தின் நலிவடைந்த பிரிவினருக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு அளிப்பது என்ற சமுதாய நோக்கத்திற்கு பின்னடைவு நேரிடும். லாபமீட்ட வாய்ப்பில்லா கிராமப்புறப்பகுதிகளில் காப்பீட்டை விரிவு படுத்துவது என்ற இலக்கும் பாதிக்கப்படும். எனவே எல்.ஐ.சி நிறுவனத்தின் பொதுத்துறை தன்மையை சிறிதளவு மாற்றுவது கூட இந்தியப் பொருளாதாரத்தின் நலனுக்கும் இந்திய மக்கட்தொகையில் உள்ள ஏழைகளுக்கும் ஊறு விளைவிக்கும்.

இச்சூழலில் எல்.ஐ.சி பங்கு விற்பனை தொடர்பான ஆலோசனை அளிப்பதற்கு ஆலோசகர்களை நியமிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்து எல்.ஐ.சி பங்கு விற்பனை தொடர்பான முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம். எங்கள் கருத்துக்களை தங்களிடம் நேரில் சொல்வதற்கான வாய்ப்பு அளிக்கப்படுமாயின் மகிழ்ச்சியடைவோம்.

எல்.ஐசி யையும் அதன் வாடிக்கையாளர்களையும் பாதுகாக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறோம்.

நன்றி

இவண் தங்களின் உண்மையான

எஸ்.ராஜ்குமார்                  விவேக் சிங்                     ஸ்ரீகாந்த் மிஷ்ரா
பொதுச்செயலாளர்    செகரட்டரி ஜெனரல்       பொதுச்செயலாளர்

எல்.ஐ.சி முதல் நிலை                தேசிய களப் பணியாளர்    அகில இந்திய
அதிகாரிகள் சங்கங்களின்     கூட்டமைப்பு                   இன்சூரன்ஸ் ஊழியர்
கூட்டமைப்பு                                                                                     சங்கம்     

                                                                             

No comments:

Post a Comment