கொஞ்சம் லேட்டுதான். ஆனாலும் பரவாயில்லை.
ஜெமோவுக்கு விழும் அடிகளின் விபரங்களை சொல்ல வேண்டும் அல்லவா!
ஜெயமோகனின்
ஆணவமான செல்பி மொட்டைக் கடிதத்தைக் கண்டித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள்
சங்கம் வெளியிட்ட கண்டன அறிக்கையை பகிர்ந்து கொண்டிருந்தேன்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற அமைப்பும் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த
அறிக்கை இங்கே
தமிழகத்தின் முன்னோடி இலக்கிய ஆளுமைகளுள் ஒருவரும் கரிசல் மண்ணிலிருந்து உருவான எழுத்தாளருமான பா. செயப்பிரகாசம் குறித்து தன்னுடைய இணையதளத்தில் அவதூறு செய்திருக்கும் ஜெயமோகனுக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கண்டனத்தைப் பதிவு செய்துகொள்கிறது.
“ஒரு முன்னாள் இடதுசாரியின் கடிதம்” என்னும் தலைப்பிலான அந்தக் கடிதம் இடதுசாரிகள் மீதான வன்மத்தை செலுத்துவது என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. இந்தப் பதிவின் ஒரு பகுதி தோழர் பா. செயப்பிரகாசம் அவர்களைத் திட்டமிட்டு குறிவைத்து அவதூறு செய்கிறது.
தனக்கு வந்தக் கடிதத்தை அப்படியே பதிவேற்றம் செய்துள்ளேன் என்று ஜெயமோகன் இந்தக் கடிதத்தை நியாயம் செய்யலாம். ஜெயமோகன் சொல்வது போல் அவருக்கு வந்தக் கடிதமாக அது இருந்தால்கூட அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின் உண்மைத்தன்மையைக் குறித்து ஆராயாமல் அதை அப்படியே பிரசுரிக்கலாமா? ஜெயமோகனின் இந்தப் பதிவேற்றம் என்பது இடதுசாரிகள், முற்போக்காளர்கள் அந்தத் தளத்தில் இயங்கக் கூடிய எழுத்தாளர்கள், கலைஞர்கள்மீது அவர் கொண்டிருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடு என்பதைத்தான் உணர்த்தி நிற்கிறது.
தனிமனித ஆளுமைகள் மீது அவதூறு பரப்பும் ஜெயமோகனின் இத்தகையச் செயலை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வன்மையாகக் கண்டனம் செய்கிறது. ஜெயமோகன் போன்ற அவதூறுபரப்பி குறித்து தோழர் பா. செயப்பிரகாசம் அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் துணை நிற்கும்.
நியாயங்களுடன் எப்போதும் உடன் நிற்போம்
*
சி.சொக்கலிங்கம், மாநிலத் தலைவர்
இரா.காமராசு, மாநிலப் பொதுச்செயலாளர்
ப.பா.ரமணி, மாநிலப் பொருளாளர்
அது
மட்டுமல்ல
எண்ணற்ற
எழுத்தாளர்களும் படைப்பாளிகளும் சமூக செயல்பாட்டாளர்களும் ஊடகவியலாளரும் கூட கண்டன
அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த
அறிக்கையை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.
எழுத்தாளர் பா. செயப்பிரகாசத்திற்கு எதிரான
ஜெயமோகனின் அவதூறுக்கு-
அனைத்து தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்களின் கண்டன அறிக்கை.
*
தமிழின் முதுபெரும் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் மீது தனது இணையப் பக்கத்தில் ஜெயமோகன் செய்துள்ள துல்லியத் தாக்குதல் மிக மோசமானது, உள்நோக்கமுடையது. தமிழின் கலை இலக்கியப் பண்பாட்டுச் சூழலில் காத்திரமான பங்களிப்பு செய்துள்ள அவரை, ஒரு அநாமதேயக் கடிதம் மூலம் அவதூறு செய்யவும், சிறுமைப்படுத்தவும் ஜெயமோகன் மேற்கொண்டுள்ள இழிசெயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
கரிசல் இலக்கியத்தில் வேர்பதித்து எழுத்தைத் தொடங்கினாலும், எல்லைகள் கடந்த சமதர்ம சமுதாயம் நோக்கி கிளை பரப்பியவர் பா. செயப்பிரகாசம். ஏறத்தாழ 135 சிறுகதைகள், பள்ளிக்கூடம், மணல் என்னும் இரு நாவல்கள், மூன்று குறு நாவல்கள், இரு கவிதைத் தொகுப்புகள், பதினான்கு கட்டுரை நூல்கள், இலக்கிய, சமுதாய அரங்குகளில் உரைகள் எனத் தொடர்ந்து இயங்கி வருகிறவர்.
சமீபத்திய அவருடைய மணல் நாவல் வரை அவருடைய எந்த ஒரு எழுத்தும், உரையும் செயல்பாடுகளும் சாதிய உணர்வைத் தூண்டியதாக சின்னனஞ்சிறு கறுப்புப் புள்ளி அடையாளமும் கொண்டதில்லை; ஆனால் சாதிக்கொடுமைகளைச் சாடிய அவருடைய எழுத்துகள் கணக்கற்றவை. அவருடைய பள்ளிக்கூடம், மணல் ஆகிய இருநாவல்களுக்கும் சாதியத்தை எதிர்த்த அடிநாதம்தான் பேசுபொருள்.
பொருளியல், வாழ்வியல் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்தும் சிறுமைகள் பேசும் அவருடைய கதைகளின் ஆற்றலை எந்த ஒரு தேர்ந்த வாசகனும் உணர்ந்து கொள்ளமுடியும். அவர் தனது எழுத்துகளை என்றும் வணிகமாக்கியதில்லை.
1965- இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரில் மாணவப் போராளியாய் முன்னின்று, தமிழகம் முழுமையும் போராட்டத்தை எடுத்துச் சென்றதால், இந்திய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிருந்த பத்து மாணவர் தலைவர்களில் ஒருவர். தமிழ்த் தேசியம், ஈழம், மார்கசீயம், பெரியாரியம், அம்பேத்காரியம் குறித்த எழுத்துகளில் சமரசம் இல்லாப் போராளி. இலக்கியம், களப்போராட்டம் எனத் தொடர்ந்து பல தளங்களிலும் இயங்கி வருபவர். இப்படிப்பட்ட தமிழ் ஆளுமை மீது ஜெயமோகன் கோபப்படுவதும், பழி தூற்றுவதும் நமக்கு ஒன்றும் ஆச்சரியம் அளிக்கவில்லை. தொடர்ந்த தனது பேச்சுகளின் மூலமாக, எழுத்துகளின் மூலமாக சர்ச்சைகளை உருவாக்கி, தமிழ் அறிவுச்சூழலில் தான் ஒரு பேசுபொருளாக இருக்கவேண்டும் என்ற முனைப்பில் தனது பிம்பத்தைக் கட்டமைத்துக் கொண்டு வருகிறவர் ஜெயமோகன்.
தமிழ் அறிவுச்சூழலுக்கு மிகவும் அபாயகரமானது இந்தத் தொற்று நோய், இந்தப் போக்கு என்னும் ஒட்டுவாரொட்டி நோய் தமிழ் இலக்கிய, அறிவுச் சூழலில் கேடு பயப்பதும் கூட. ஜெயமோகனின் சமதர்மச் சிந்தனை எதிர்க்குரல், மார்க்சிய எதிர்ப்பு என்பது நாம் அறிந்த ஒன்று. அதற்கான எதிர்வினையைப் பல்வேறு தளங்களில் மிக அமைதியாக ஆற்றி வருகிறோம். எந்த ஆதாரங்களுமில்லாது, ஒரு அநாமதேயம் எழுதியதாக தனிநபர் மீதான வன்மம், அவதூறு என்பவை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கண்டனம் செய்யப்படவேண்டிய ஒன்று. அது சமூக அக்கறையுள்ள கலை, இலக்கிய, அறிவுச் சூழல், இடதுசாரிச் சிந்தனைகள், இயக்கங்கள், எழுத்துகள், செயற்பாடுகள் அனைத்தின் மீதான அவதூறு என்பதால் ஜெயமோகனுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.
பட்டியல் மிகவும் பெரிதென்பதால் அதனை இங்கே பகிர்ந்து கொள்ள முடியவில்லை.
ஜெயமோகனுக்கு
நெருக்கமாக இருந்த ஒரு பெரியவரும் அவருக்கு ஆலோசனை கொடுத்துள்ளார். அதனை பிறகு பகிர்ந்து
கொள்கிறேன்.
ஆனால்
ஜெயமோகனுக்கு எருமைத் தோல். இதற்கெல்லாம் வெட்கப்படுவாரா, திருந்துவாரா என்பதெல்லாம்
சந்தேகம்தான்.
இன்றைய பதிவில் கண்டன அறிக்கைககளுக்கான அவருடைய பதிலைப் பாருங்கள் தோழர்.
ReplyDeleteஆனால் ஜெயமோகனுக்கு எருமைத் தோல். இதற்கெல்லாம் வெட்கப்படுவாரா, திருந்துவாரா என்பதெல்லாம் சந்தேகம்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.