Thursday, June 4, 2020

இருளர் மக்கள் இன்னும் இருட்டிலே . . .

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் கே.சாமுவேல் ராஜ் அவர்களின் நேற்றைய முக நூல் பதிவு அதிர்ச்சியை மட்டும் அளிக்கவில்லை. இன்னும் அந்த ஊரில் கொடுமை தொடருதே என்ற துயரத்தையும் அளித்தது.

முதலில் தோழர் சாமுவேல் அவர்களின் பதிவை படியுங்கள்.



ஊராட்சித் தலைவரை சவக்குழி தோண்ட வைப்பதா?

தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்.


திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்தில் உள்ளது அரியாகுஞ்சூர் ஊராட்சி. பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊராட்சி அது.நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அரியாகுஞ்சூர் ஊராட்சித் தலைவராக பழங்குடி இருளர் சமூகத்தை சார்ந்த திரு.முருகேசன் என்பவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


தமிழகத்தில் பஞ்சாத்து ராஜ் சட்டப்படி இட ஒதுக்கீட்டுடன் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.ஆனால் தேர்வு செய்யப்படுகிற பட்டியலின மற்றும் பழங்குடியின ஊராட்சித் தலைவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. பல இடங்களில் பட்டியலின மற்றும் பழங்குடியின ஊராட்சித் தலைவர்கள் மீது மிக கொடூரமான தீண்டாமைக் கொடுமைகள் ஏவிவிடப்படுகின்றன.

ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்படுகிறவர்கள் திருவிழாவிற்கு தப்படிக்க வேண்டும்.ஊர் வேலை செய்ய வேண்டும்.தலைவர் நாற்காலியில் அமரக்கூடாது,தேசியக் கொடி ஏற்றக்கூடாது,கிராமசபைக் கூட்டத்தில்பேசக்கூடாது,    இரு சர்க்கர வாகனத்தில வரக்கூடாது, பெயர் பலகைகளில் தலைவர் பெயரை சிறியதாகவும் துணைத் தலைவர் பெயரை பெரியதாகவும் எழுதி வைப்பது,நிர்வாகத்தில் ஒரு துளிகூட பங்குதர மறுப்பது என்பதாக தீண்டாமைக் கொடுமைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

இக் கொடுமைகளின் உச்சகட்டமாகவே ஊராட்சித் தலைவரை சவக்குழி தோண்ட வைத்து வன்கொடுமை நிகழ்தப்பட்டுள்ளது.இந்திய நிலப்பரப்பில் இத்தகைய கொடுமை எங்குமே நிகழ்தப்பட்டிருக்காது. இக்கொடுமை     தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடுமை நிகழ்ந்த கிராமத்திற்கு உடனடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடியாகச் சென்று வன்கொடுமை செய்தவர்கள் கைது செய்யப்படுவதையும்,அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதையும் உறுதி செய்திட வேண்டும். அரியாகுஞ்சூர் ஊராட்சி நிர்வாகத்தை சட்டப்படி ஜனநாயகப் படுத்த வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் த.செல்லக்கண்ணு, மாநில பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.


குறிப்பு:
நாங்கள் குழி வெட்ட சொல்லவில்லை அவராகத்தான் வெட்டினார் என்று கிராமத்தினர் சொல்வதாக தெரிகிறது.அப்படியே இருந்தாலும் இந்த வாதத்தில் என்ன நியாயம் இருக்க முடியும்.நமது கிராம ஊராட்சி தலைவர் குழி வெட்டுகிறார் என்ற தகவல் தெரிந்தவுடன் இது நமக்கு அவமானம் என அதனைத் தடுத்திருக்க வேண்டாமா?

இப்போது என் நினைவுகளுக்குள் செல்லலாம்.

ஒன்பது வருடங்களுக்கு முன்பாக இதே கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தல் தோல்வி காரணமாக இருளர் இன மக்களின் குடிசைகள் இடித்துத் தள்ளப்பட்டன. 

அப்போதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் தலையிட்டது. எங்கள் சங்கத்தால் முடிந்த சிறு உதவியை செய்தோம். அப்போது எழுதிய பதிவு கீழே இணைப்பிலே


அம்மக்களுக்கு இன்னும் விடிவு காலம் வராமல் அடிமைத்தனம் நீடிப்பது துயரமானது. முன்பு அக்கொடுமையை நிகழ்த்தியது ஏதோ ஜமீன்தார்களோ, பண்ணையார்களோ அல்ல, இவர்களைப் போலவே விவசாயக் கூலி வேலை பார்க்கும் தொழிலாளிகளே. 

வர்க்கமாக இணைய வேண்டியவர்களை இந்த ஜாதி இன்னும் எத்தனை நாள் பிரித்தே வைத்திருக்குமோ?



1 comment:

  1. வாட்ஸாப்பில் அனைத்து பிடிஓக்களையும் சஸ்பெண்ட் செய்துவிடுவேன் என்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பி மிரட்டி விளம்பரம் தேடிக்கொண்ட மாவட்ட ஆட்சியர் என்ன செயது கொண்டிருக்கிறார். அவருக்கு இதெல்லாம் தெரியாதா?

    ReplyDelete