தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் கே.சாமுவேல் ராஜ் அவர்களின் பதிவு இது.
காசுக்கு விலை போன காவலர்களால் போன உயிரை மீண்டும் வரவழைக்க முடியுமா?
மகளின் உயிரை விட, அவள் விருப்பப்பட்ட வாழ்வை விட ஜாதிதான் முக்கியமா?
இந்த அநியாய சாதி ஆணவப்படுகொலைக்கு குளித்தலை காவல்துறையே பொறுப்பேற்க வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் இடையவலசை கிராமத்தை சேர்ந்த சாவித்திரியும்,அதே மாவட்டம் தோப்புக்கொல்லை கிராமத்தை சேர்ந்த விவேக் என்கிற இளைஞரும் ஒருவரையொருவர் விரும்பியுள்ளனர்.சாவித்திரியின் வீட்டில் எதிர்ப்பு.
எதற்காக? வேறென்ன வெற்று சாதி கௌரவம் தான்.
சாவித்திரியின் சாதி யாதவர்,
விவேக்கின் சாதி முத்தரையர்
என்னத்த வேறுபாட்டை பார்த்தார்களோ தெரியவில்லை.
அவசரமாக திருமண ஏற்பாடு செய்கிறார்கள் என விவேக்கிற்கு சாவித்திரி போன் செய்ய வேறு வழியின்றி 07.06.2020 அன்று கோயமுத்தூர் சென்று வாழ்க்கையை துவங்க முடிவுசெய்து புறப்பட்டுள்ளனர்.
இடையில் கரூர் மாவட்டம் குளித்தலை சோதனைச் சாவடியில் நிறுத்தி,குளித்தலை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர் போலீசார்.குளித்தலை காவல்துறையினரே சாவித்திரியின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்து வரவழைத்து வலுக்கட்டாயமாக சாவித்திரியை அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதற்கு முன்னால் பெற்றோர்கள் தன்னை அடித்து காயப்படுத்திய கொடுங்காயங்களை காவல் நிலையத்தில் காண்பித்து இவர்களோடு அனுப்பினால் கொலை செய்து விடுவார்கள் என்ற சாவித்திரியின் கூக்குரல் காவலர்களை கரைக்கவில்லை.
அவர்கள் என்ன உடைக்கு மட்டுமா கஞ்சி போடுகிறார்கள்.
இதயத்திற்கும் தானே.இந்த வெட்டி விறைப்பு தான் எல்லாவற்றையும் கெடுத்து நாசமாக்குகிறது.
சாதி மறுப்பு திருமணங்கள் கொடூரமான முறையில் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதையும், சாதி ஆணவப்படுகொலைகள் நடப்பதையும் கூட அலட்சியப்படுத்திவிட்டு,இது தொடர்பாக உச்ச நீதிமன்ற உயர்நீதிமன்ற தீர்ப்புகளையும் அவமதிக்கும் விதமாக குளித்தலை காவல்துறையினர் செயல்பட்டுள்ளனர்.
அவ்வாறு பலவந்தமாக போலீசாரால் அனுப்பி வைக்கப்பட்ட சாவித்திரி இப்போது உயிருடன் இல்லை.11.06.2020 அன்று அவர் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டு விட்டார். பிரேதத்துடன்சாவித்திரியின் அனைத்து பொருட்களையும் எரித்திருப்பார்கள்.
எரித்த இடத்தில் மிஞ்சி இருப்பது சாதி மட்டுமே.குளித்தலை போலிஸ்
சட்டத்தை குழிதோண்டி புதைத்திருக்கிறது.விவேக் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஜனநாயக மாதர் சங்கம் விவேக்கிற்கு ஆறுதல் தெரிவித்து வருகிறது.
சாதி ஆணவப்படுகொலைகள் அதிகரித்து வரக்கூடிய காலத்தில் அதனை தடுப்பதற்காக தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்கிற தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வழக்கில் ( W.P.26991) 13.4.2016 அன்று வழங்கப்பட்டது. இவ்வாறு சாதி மறுப்பு திருமணம் கொண்டவர்களோ ,சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளக் விரும்புகிறார்களோ காவல்துறையை நாடினால் அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தீர்ப்பு உறுதிபடத் தெரிவிக்கிறது.
இதற்காகவே மாவட்டம் தோறும் தனியான சிறப்பு பிரிவுகளையும் ஏற்படுத்த வேண்டும் என்று அந்த தீர்ப்பு தெரிவிக்கிறது.
தீர்ப்பபை தமிழக அரசு செயல்படுத்தவில்லை என்பதால் இது தொடர்பாக 2017ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு (460/ 2017 ) தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.அதன் அடிப்படையில் அன்றைய உள்துறைச் செயலாளர் திரு. அபூர்வ வர்மா உயர்நீதிமன்றத்தில் அளித்த பதில் பின்வருமாறு தெரிவிக்கிறது.
தமிழகத்தினுடைய அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டு விட்டதாகவும்,அனைத்து மாவடங்களிலும் 24 மணி நேரமும் இயங்கும் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
அதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்படக்கூடிய "சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு அலுவலகத்தில்"சிறப்பு பிரிவு செயல்படும் என்றும் அதற்கான தொலைபேசி எண் 04324/ 25589 என்றும் நீதிமன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்திருந்தது.
குளித்தலை காவல்துறை மேற்படி எண்ணிற்கு தொடர்பு கொண்டு அவர்களை ஒப்படைத்திருக்க வேண்டும்.அல்லது நீதிமன்றத்தில் ஒப்படைத்திருக்க வேண்டும். தெரிந்தே சட்டவிரோதமாக செயல்பட்டிருக்கிறது குழித்துறை காவல்துறை. எனவே சாவித்திரியின் படுகொலைக்கு குளித்தலை காவல்துறையே பொறுப்பேற்க வேண்டும். நீதிக்கான வீரியமான போராட்டங்களை முன்னெடுப்போம்!
மிகவும் வேதனை தரும் நிகழ்வு
ReplyDelete