Friday, June 5, 2020

முழங்கிக் கொண்டே இருப்போம் “லால் சலாம் காம்ரேட்”




குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர்களை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள தேசிய புலனாய்வு முகமை, அவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டாக கூறியுள்ளது என்ன தெரியுமா?

அவர்கள் முக நூலில் “லால் சலாம்” என்ற , “காம்ரேட்” என்ற வாசகங்களை பயன்படுத்தியுள்ளார்கள். லெனின் அவர்களின் படத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.

இந்த கொடுமை நிகழ்ந்தது அஸ்ஸாமில். 



செவ்வணக்கம் என்ற வார்த்தையும் தோழர் என்ற வார்த்தையும் உங்களுக்கு சட்ட விரோதமாக தோன்றுகிறது என்றால்

அதை ஆயிரம் முறை அல்ல, அதற்கு மேலும் முழங்கிக் கொண்டே இருப்போம்.

நீங்கள் எழுப்புகிற “ஓம் காளி, ஜெய் காளி, ஜெய் ஸ்ரீராம்”  முழக்கங்கள், பிரிவினையை தூண்டுஇற, வெறியை தூண்டுகிற முழக்கங்கள். அந்த முழக்கத்தை எழுப்பாதவர்களை கொலை செய்கிற உங்களுக்கு எங்களின் முழக்கங்கள் பற்றி என்ன தெரியும்!

நாங்கள் எழுப்பும் “லால் சலாம்: இன்குலாப் ஜிந்தாபாத்” முழக்கங்கள், உழைக்கும் மக்களை ஒன்று படுத்தும் நோக்கமுடையவை, அவர்களை சுரண்டலிலிருந்து விடுதலை செய்யும் நோக்கமுடையவை. சாதாரண மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கமுடையவை.

கைது, சிறைச்சாலை என்று அஞ்சி நடுங்கி மண்டியிட்டு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து, காட்டிக் கொடுக்கிற கோழை சாவர்க்கர், அடல் பிகாரி வாஜ்பாய், தேவரஸ் போன்றவர்களை பின்பற்றும் கேவலமானவர்கள் நீங்கள்.

இளம் வயதில் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட பகத்சிங், பதினான்கு வயதினிலே துப்பாக்கிக் குண்டுகள் துரத்திய போதும் கொடிமரத்தில் ஏறி பிரிட்டிஷாரின் யூனியன் ஜாக் கொடியை அறுத்தெறிந்து இந்திய விடுதலைப் போராட்ட உணர்வின் அடையாளமான மூவர்ணக் கொடியை ஏற்றி  நான்காண்டுகள் சிறையில் வாழ்ந்த தோழர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித், வாரணாசி பல்கலைக் கழகத்தில் படிக்கையிலே பிரிட்டிஷ் காவல்துறை சாலைகளை அடைத்து விட கங்கை நதியிலே நூற்றுகணக்கான மாணவர்களை ஒருங்கிணைத்து, படகுகளில் பயணித்து “சைமன் கமிஷனே திரும்பிப் போ” என்று கறுப்புக் கொடி காண்பித்த தீரர் தோழர் பி.ராமமூர்த்தி ஆகியோரின் வீர மரபிலே வந்தவர்கள் நாங்கள். 

உலகின் முதல் புரட்சியை சாத்தியமாக்கிய தோழர் லெனின்தான் எங்களுக்கு என்றும் ஆதர்ஸம்.

அதனால் மீண்டும் மீண்டும் முழங்குவோம்.

லால் சலாம் காம்ரேட்,
இன் குலாப் ஜிந்தாபாத்,,
செவ்வணக்கம் தோழர்களே,
புரட்சி ஓங்குக



No comments:

Post a Comment