Sunday, June 28, 2020

காஷ்மீர் பிரச்சினையை புரிந்து கொள்ள . . .


நூல் அறிமுகம்



நூல்                           : தொடரும் காஷ்மீர் யுத்தமும்
                                      இந்துத்துவ அரசியலும்
ஆசிரியர்                : கி.இலக்குவன்
வெளியீடு              : அலைகள் வெளியீட்டகம்,
                                    சென்னை – 600089
விலை                     :  ரூபாய் 140

தஞ்சைக் கோட்டச்சங்கத்தின் முன்னாள் தலைவரும் எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளருமான தோழர் கே.லட்சுமணன் அவர்கள் எழுதிய நூல்.

காஷ்மீர் பிரச்சினையில் நம்பிக்கை கீற்று தெரிகிறது என்ற நம்பிக்கையோடு 2008 ம் ஆண்டு எழுதப்பட்ட இந்த நூல், அரசியல் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின் புலத்தில் புதிய அத்தியாயத்தோடு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.

காஷ்மீர் பிரச்சினை பற்றி முழுமையாக புரிந்து கொள்வதற்கான கையேடு இந்த நூல் என்று சொல்லலாம். வரலாற்றின் இரண்டாயிரம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக பல்வேறு அரசர்களால் படையெடுப்பு நடந்து பல வம்சங்களின் ஆட்சி நடந்த பூமியாகத்தான் காஷ்மீர் இருந்திருக்கிறது. அசோகர் தொடங்கி மங்கோலியர்கள், முகலாயர்கள், சீக்கியர்கள் என பல்வேறு ஆட்சிகள் காஷ்மீரில் நடந்திருக்கிறது.

இந்தியாவுடன் காஷ்மீரினை இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஹரிசிங்கின் டோக்ரா அரசு குடும்பத்தின் வசம் காஷ்மீர் வந்தது வினோதமான கதை. அதை ஒரு அவமானமாக காஷ்மீர் மக்கள் பார்த்தார்கள் என்பது இன்னொரு செய்தி. சீக்கிய அரசன் பிரிட்டாஷாரிடம் தோற்றுப் போக, போரில் ஏற்பட்ட இழப்புக்களுக்கு நஷ்ட ஈடாக 75 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று லாகூர் ஒப்பந்தம் உருவாகிறது. ஜம்முவின் மன்னனாக இருந்த குலாப்சிங் பிரிட்டிஷாருக்கு அந்த பணத்தை கொடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கை விலைக்கு வாங்குகிறார்.

ஹபீஸ் ஜலந்தாரி என்ற கவிஞர்

“காஷ்மீர் எனும் சொர்க்க பூமி, 75 லட்சத்துக்கு விற்கப்பட்டது” என வேதனையை வெளிப்படுத்த

இன்னொருவரோ

“நாம் ஒவ்வொருவரும் தலைக்கு மூன்று ரூபாய் என்ற கணக்கில் டோக்ரா மன்னரால் வாங்கப்பட்டோம்’ என்று புலம்பினார்.

நூலில் துவக்கப்பகுதிகள் காஷ்மீர் மக்கள் பட்ட துயரத்தையும் அவர்கள் அடிமைகளாய நடத்தப்பட்ட அவலத்தையும் காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி துவக்கப்பட்டு அது நடத்திய போராட்டங்களையும், இந்திய விடுதலையின் போது அப்போதிருந்த சமஸ்தானங்கள் எவ்வாறு இந்தியாவோடு இணைக்கப்பட்டது என்பதையும் விவரிக்கின்றன.

பெரும்பான்மை மக்கள் இஸ்லாமியர்களாகவும் அரசர் அரிசிங் இந்துவாகவும் உள்ள காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்று பாகிஸ்தான் மட்டுமல்ல பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் விரும்பினார்கள் என்பதை மவுண்ட்பேட்டன், அரிசிங்கோடு நடத்திய உரையாடலை இந்த நூல் முழுமையாக பதிவு செய்துள்ளது. அரசர் இந்தியாவோடும் இணைய விரும்பவில்லை. தனி நாடாகவே இருக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் பாகிஸ்தானோடு ஒரு பொருளாதார உடன்பாடு ஒன்றை உருவாக்கிக் கொண்டது, அந்த நாட்டிற்கு ஒரு நம்பிக்கை உருவானது. அதே நேரம் தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்தவர்களோ, காஷ்மீர் மக்களுக்கென்று தனித்தன்மை உண்டு, பாகிஸ்தானோடு அது முரண்பட்டது, எனவே பாகிஸ்தானோடு இணைய முடியாது என்ற நிலையை எடுத்தது.

காஷ்மீரை தங்களோடு இணைப்பதற்காக பழங்குடி இன மக்களான பத்தாணியர்களின் படையை பாகிஸ்தான் அனுப்புகிறது. கொள்ளையடிக்கும் வெறியோடு புறப்பட்ட அவர்கள் பல பகுதிகளை கைப்பற்றி ரத்த ஆறை ஓட விடுகிறது.  அரிசிங் அபயம் கேட்க இந்தியா தலையிடுகிறது. மக்களின் விருப்பப்படி இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஷேக் அப்துல்லா

“இந்தியாவுடன் இணைவதற்கு நாங்கள் முடிவு செய்யக் காரணம் எமது லட்சியத் திட்டமும் கொள்கையும் இந்தியா ஏற்றுக் கொண்டுள்ள லட்சியத்திட்டத்திற்கும் கொள்கைகளுக்கும் இசைவானதாக உள்ளன. புதிய காஷ்மீரும் பாகிஸ்தானும் என்றுமே சந்திக்க முடியாது”

இப்படிப் பேசிய ஷேக் அப்துல்லா ஏன் பின்பு தடுமாறினார்? அந்த தடுமாற்றத்தின் பின்னணியில் யார் இருந்தது?

ஐக்கிய நாடுகள் சபையில் என்ன ஆனது?

இந்திய அரசு காஷ்மீர் மாநிலத்துக்கு கொடுத்த சிறப்பு உரிமைகள் என்ன? அவை கொஞ்சம் கொஞ்சமாக எப்படி நீர்த்துப் போனது?

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த சறுக்கல்களும் சொதப்பல்களும் என்ன?

தீவிரவாத இயக்கங்கள் எப்படி தோன்றின?

இந்தியாவுடன் காஷ்மீர் இணைவதையும் சிறப்பு உரிமைகளையும் எதிர்த்தது யார்?

இப்போதைய மத்தியரசின் முடிவு என்ன விளைவுகளை உண்டாக்கும்?

இப்படிப்பட்ட ஏராளமான கேள்விகளுக்கு விடையளிப்பதாக இந்த நூல் அமைந்துள்ளது என்பதுதான் இந்த நூலின் சிறப்பம்சம். நூலாசிரியரின் உழைப்பையும் சொல்கிறது. ஜம்மு, லடாக், காஷ்மீர் ஆகிய பகுதி மக்களின் வாழ்நிலை பற்றியும் விவரிக்கிறது. ஷேக் அப்துல்லா எடுத்த நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளை பிரஜா பரிஷத் என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எப்படி மதச்சாயம் பூசி பிரச்சினைகளை தூண்டியது என்பதை நம்மால் அறிய முடிகிறது.

ஒரு புறத்தில் ஏகாதிபத்திய சக்திகள்  காட்டிய தனி நாடு ஆசையால் தடுமாறிய ஷேக் அப்துல்லா,  உறுதி மொழிகளை மீறியதால் மக்களின் நம்பிக்கையை இழந்த காங்கிரஸ் அரசு செய்த ஜனநாயக விரோத மற்றும் சிறப்பு உரிமைகளை நீர்த்துப் போகச் செய்த நடவடிக்கைகள், கேலிக் கூத்தான தேர்தல்கள், ஒரு கட்டத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் சமரசம் செய்து கொண்ட அரசியல் சந்தர்ப்பவாதம். துவக்கத்தில் இருந்தே இப்பிரச்சினையை மத வாதக் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்த சங் பரிவார அமைப்புக்கள், தீவிரவாத நடவடிக்கைகளை தூண்டி விட்ட பாகிஸ்தான், இரு நாடுகளுக்கும் நடைபெற்ற போர்கள் என்று ஒரு தகவல் களஞ்சியமாகவும் இந்நூல் திகழ்கிறது.

துவக்கத்திலிருந்தே காஷ்மீருக்கான உரிமைகளை எதிர்த்து வருகிற பாஜக, பெரும்பான்மை உள்ளதை பயன்படுத்தி அதை பறித்து விட்டது என்பதை விவரிக்கிற ஆசிரியர், வேறெந்தெந்த மாநிலங்களில் இது போன்ற சிறப்புச் சட்ட உரிமைகள் உள்ளது என்பதை பட்டியலிட்டு அரசின் போலித்தனத்தை அம்பலப்படுத்துகிறார்.

“காஷ்மீர் மக்களின் இதயங்களை இந்தியாவுடனான இணைப்புக்கு ஆதரவாக வென்றெடுப்பதே இன்றைய முக்கிய தேவையாக உள்ள நிலையில் நரேந்திர மோடி அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், அந்த இடைவெளியை என்றுமே இட்டு நிரப்பப்பட இயலாத ஒன்றாக மாற்றி விட்டது.”

தற்போதைய அரசின் நடவடிக்கைகளை விவரிக்கிற நூலாசிரியர்

“காஷ்மீர் இந்தியாவின் பகுதியாக உள்ள சூழல் தொடருமா என்பதற்கு காலம்தான் விடையளிக்கும்”

என்று நூலை நிறைவு செய்கிறார்.

இந்தியாவின் பிற மாநில  மக்கள் காஷ்மீர் மக்களோடு கரம் கோர்த்து நிற்க வேண்டிய அவசியத்தை இந்த நூலை படித்தால் உணர்ந்து கொள்ள முடியும்.



No comments:

Post a Comment