Tuesday, June 23, 2020

இப்போது ஜகன்னாதர் மன்னிப்பாரா மை லார்ட்?



"கொரோனா தொற்று பரவல் அதிகமாகி வரும் இக்காலத்தில் பூரி ஜகன்னாதர் தேர் திருவிழாவை நடத்த அனுமதித்தால் எங்களை அந்த ஜகன்னாதரே மன்னிக்க மாட்டார்"

இது இந்த வருட பூரி ஜகன்னாதர் தேர் திருவிழாவை நடத்த தடை செய்து தீர்ப்பளிக்கையில் உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி கூறியது.

மத்திய அரசும் மற்ற சிலரும் மேல் முறையீடு செய்ததில்

நேற்று அந்த தடை நீக்கிக் கொள்ளப்பட்டது. 

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. தனி மனித இடைவெளி கடை பிடிக்கப்பட வேண்டும், ஒரு தேர் புறப்பட்டு ஒரு மணி நேரம் கழித்து தான் இன்னொரு தேர் புறப்பட வேண்டும் 

போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இது போன்ற நிபந்தனைகளோடு எல்லாம் ஜகன்னாதர் தேர் திருவிழாவை நடத்த முடியாது என்று கோயில் நிர்வாகம் சொன்ன காரணத்தால்தான் பிரச்சினை உச்ச நீதி மன்றத்துக்கே சென்றது.

எந்த நிபந்தனைகளையெல்லாம் பின்பற்ற முடியாது என்று கோயில் நிர்வாகம் சொன்னதோ, அதை எல்லாம் நீதிமன்றம் சொல்லி விட்டதால் அமலாக்கிடும் என்ற நம்பிக்கை நீதிமன்றத்திற்கு இருந்தால் அதனை மூட நம்பிக்கை என்றுதான் சொல்ல முடியும்.

தேர்த் திருவிழா என்று நடத்தத் தொடங்கி விட்டால் அங்கே எந்த ஒரு கட்டுப்பாடும் சாத்தியமில்லை என்ற யதார்த்தத்தை கணக்கில் கொள்ளாதது வருத்தமே.

டிசம்பர், ஐந்து, 1992 அன்று ஒரு அமைப்பு இப்படித்தான் உச்ச நீதிமன்றத்துக்கு ஒரு உறுதி மொழி கொடுத்தது என்பதும் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. 

இந்துக்களின் திருவிழா என்றால்தான் இப்படி பேசுவீர்கள் என்று சில நண்பர்கள் கருத்து சொல்லலாம்.

தொற்று பரவல் அதிகரிக்கும் வேளையில் எந்த மதத்தின் திருவிழா அல்லது மத நம்பிக்கை இல்லாதவர்களின் பெரும் திரள் கூடல் என்று எந்த நிகழ்ச்சியுமே இப்போது அவசியமில்லாததுதான்.

ஒடிஷா மாநிலம் கொரோனா பரவல் தொற்றை கட்டுக்குள் வைத்துள்ளது என்று பாராட்டியுள்ளது உச்ச நீதிமன்றம்.

அதற்கான தண்டனையா உங்கள் முடிவு

என்ற கேள்வியோடு

உங்கள் முடிவினால் கட்டுக்குள் இருக்கும் மாநிலத்தில் கொரோனா கட்டற்று பரவினால்

அப்போது மட்டும் 

பூரி ஜகன்னாதர் உங்களை மன்னிப்பாரா மை லார்ட்?

பிகு: 

இரண்டு முறை பூரி ஜகன்னாதர் கோயிலுக்கு போயுள்ளேன். ஒடிஷா பேக்கேஜ் டூரில் அது ஒரு முக்கியமான ஒன்று. சாதாரண நாளில் கூட நெரிசல் மிக அதிகமாக இருக்கும். தனி மனித இடைவெளி என்பதெல்லாம் அங்கே சாத்தியமே கிடையாது. மிக மிக மோசமாக பராமரிக்கப்படுகிற கோவிலும் அதுதான். 


No comments:

Post a Comment