அவரின் நினைவாக
கடந்த ஆண்டு இதே நாளில் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர்
கூட்டமைப்பின் முன்னாள் துணைத்தலைவரும் பொருளாதார விற்பன்னருமான தோழர் ஈ.எம்.ஜோசப்
அவர்கள் மறைந்தார்.
அவரது நினைவைப் போற்றுகிற வகையில் ஒரு வாட்ஸப் குழுவில்
பகிர்ந்து கொள்ளப்பட்ட அவரது கட்டுரையை அவரது நினைவாக பகிர்ந்து கொள்கிறேன்.
செவ்வணக்கம் தோழர்
ஈ.எம்.ஜோசப்
*நாளொரு கேள்வி: 30.06.2020*
**********************************
இன்று தோழர் *இ.எம்.ஜோசப்* முதல் ஆண்டு நினைவு நாள். நம்மோடு
அவர் அன்று பகிர்ந்தவை இன்றும் பொருத்தமானதாக...
________________________________
*இடதுசாரி மாற்றே இருளை போக்கும்*
************************************
*கேள்வி:*
உலகம் முழுக்க மக்களின் அவலங்களை, குமுறல்களை வலதுசாரிகள்
பயன்படுத்திக் கொள்கிறார்களே! உழைப்பாளி மக்களை அவர்களால் திசை திருப்ப முடிவதை
எவ்வாறு எதிர்கொள்வது?
*இ.எம்.ஜோசப்:*
நெருக்கடியும் வேலையின்மையும் நிறைந்த சூழலில்தான் உலகம்
முழுவதும் வலதுசாரித் திருப்பம் நடைபெற்று வருகிறது.
*மூன்று தரப்பாரின்* அணுகுமுறைகள் இதற்கு பங்களிக்கின்றன.
ஒன்று முதலாளித்துவ தாராளமய வாதிகள். இரண்டாவது வலதுசாரிகள். மூன்றாவது இடதுசாரிகள்.
*முதலாளித்துவ தாராளவாதிகள்,* இந்த நெருக்கடி, அது
உருவாக்கியிருக்கும் வேலையின்மை இரண்டும் இருப்பதாகவே ஏற்றுக் கொள்வதில்லை.
*வலதுசாரிகள்,* வேலையின்மை ஏற்படுத்தி இருக்கும்
இன்னல்களையாவது குறைந்த பட்சம் ஏற்றுக் கொள்பவர்களாக இருக்கின்றனர். ஆனால்,
அவர்கள் அந்தக் கேடுகளுக்கு சமூக பொருளாதார அமைப்புதான் காரணம் என்பதை ஏற்பதில்லை.
குடியேறிய வெளி நாட்டினர்தான் காரணம் என்று சொல்லி குடியேற்றத்தினைத் தடுக்க
வேண்டும் என குரல் கொடுக்கின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் மக்கள்
எந்த நாட்டிற்கும் போய் வர முடியும் என்ற நிலையில், சிலர் ஐரோப்பிய ஒன்றியத்தினையே
எதிர்க்கின்றனர்.
*இடதுசாரிகள்,* மக்கள் முன்பு மாற்றுத்திட்டத்தை
வைப்பதில் இடைவெளிகள் உள்ளன.
இச் சூழலை வலதுசாரிகள் பயன்படுத்துகிறார்கள். வெளி நாட்டவர்களை
எதிரிகளாக அவர்கள் முன்னிறுத்துகிறார்கள். உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள
வலதுசாரிகளின் வளர்ச்சி இந்த அடிப்படையிலானதே ஆகும். நவீன தாராளமய தாக்குதலோடு,
இவர்கள் உழைப்பாளி மக்கள் மத்தியில் உருவாக்குகிற பேதங்களும் கூடுதல் சவால்களாக
நம் முன் நிற்கின்றன.
வலதுசாரிகள் நெருக்கடிக்கு தீர்வு தர இயலுமென்ற *பிரமையை உருவாக்குவதில்
வெற்றி பெறுகிறார்கள்.* அமெரிக்காவில் வேலையின்மை குறைந்து விட்டது என்று
முதலாளித்துவ ஆதரவு இதழ்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதினார்கள். எப்படி? புள்ளி
விவரங்களை மட்டும் பார்த்தால் உண்மை போல தோன்றும்.
ஆனால் உண்மையை ஊடுருவி பார்க்க *மூன்று பதங்களைப்* புரிந்து
கொள்ள வேண்டும். ஒன்று உழைப்பாளர் படை, இரண்டு வேலை பங்கேற்பு. மூன்று வேலையின்மை
விகிதம்.
ஒரு நாட்டில், வேலையில் இருப்பவர்கள், உழைக்கும் வயதிலுள்ள
வேலை தேடுவோர் என அனைவரும் சேர்ந்ததே *உழைப்பாளர் படை* (Work Force or
Labour Force) எனப்படும்.
உழைக்கும் வயதில் உள்ள அனைவரையும் உள்ளடக்கிய இந்த
ஒட்டுமொத்த உழைப்பாளர் படையில் இருப்பவரின் மொத்த எண்ணிக்கையே *வேலைப்
பங்கேற்பு* (Work Participation Rate or Labour Force Participation Rate) விகிதம்
எனப்படும்.
மீதியுள்ளோர் எண்ணிக்கை *வேலையின்மை விகிதம்* (Unemployment
Rate) கீழ் வரும்.
பொருளாதார மந்த காலத்தில், வேலையின்மை விகிதம் சாதாரணமாக
அதிகரிக்கும். அதே வேளையில், வேலைதேடும் பலர் விரக்தியின் விளைவாக வேலை தேடும்
முயற்சியிலிருந்து வெளியேறி விடுவார்கள். அமெரிக்காவில் அதுதான் நடக்கிறது. அப்படி
அவர்கள் வெளியேறி
விடுவதால், வேலையற்றோர் என்ற அரசின் அதிகாரப்பூர்வ புள்ளி
விவரங்களுக்குள் அவர்கள் வர மாட்டார்கள். இதன்காரணமாக, ஒரு புறத்தில் வேலைப்
பங்கேற்பு விகிதம் குறைந்தாலும், மறுபுறத்தில் வேலையின்மையும் குறைந்தது போன்றதொரு
*தோற்றப்பிழை* அமெரிக்கா பற்றி உலகப் பார்வைக்கு உருவாக்கப்பட்டது.
இது ஓர் உதாரணம். ஆகவே வலதுசாரிகள் எப்போதுமே நெருக்கடிக்கு
தீர்வு தர இயலாது.
*பற்றி எரியும் மக்கள் பிரச்சனைகளுக்கு இடதுசாரிகள்
மட்டுமே நவீன தாராளவாத முதலாளித்துவத்தினைக் கடந்து சென்று தீர்வு காண முடியும்.
அதுவே நெருக்கடியிலிருந்து மீளவும் வழி வகுக்கும். அந்தப் பாதை இறுதியில்
முதலாளித்துவத்தையும் கடந்து செல்வதாக இருக்கும்.*
இது இந்தியாவிற்கு மட்டும் அல்ல, உலகின் அனைத்து நாடுகளுக்கும்
பொருந்துகின்ற ஒன்று. சுருங்கக் கூறின், நாம் வரலாற்று ரீதியான நிகழ்ச்சிகளின்
இணைவினைப் பார்க்கிறோம். *பொய்யான மற்றும் பிளவுபடுத்தும் உத்திகளின் மூலம்
மக்களை வசப்படுத்துவதில் வெற்றி பெறும் வலதுசாரி சக்திகள், ஒரு குறுகிய
காலத்திற்கு வலுவாகத் தோன்றக் கூடும். ஆனால், வேலையின்மை மற்றும் பிற
அவலங்களிலிருந்து மக்களை அவர்களால் மீட்க முடியாது.* இருக்கும் அமைப்பு நிலைத்தும்
நீடித்தும் இருப்பது போல வரலாற்றில் பல தருணங்கள் இருந்திருக்கின்றன. ஆனால், புதிய
தருணங்கள் வரும் போது இவை அனைத்தும் பழைய நிலையில் நீடிக்க முடியாது. வலதுசாரிகள்
இந்தியாவிலும், வேறு நாடுகளிலும் தேர்தலில் வெற்றி பெற்று நிற்கின்றனர். ஆனால்,
*தேர்தல் வெற்றிகள் அடிப்படை உண்மைகளை மாற்றி அமைத்து விட முடியாது.* அவர்களால்
தீர்வுகளையும் தந்து விட இயலாது.
ஒரு ஜப்பானிய ஹைக்கூ கவிதை : *"Fear knocked the
door; Confidence opened the door. There was none outside"* (பயம் கதவைத்
தட்டியது; நம்பிக்கை கதவைத் திறந்தது. வெளியில் ஆளைக் காணோம்".)
ஆம்! நம்பிக்கைதான் வாழ்க்கை. *Where there is life, there is
hope.*
அந்த நம்பிக்கையே இடதுசாரி மாற்று
*தோழர் இ.எம்.ஜோசப் அவர் மறைவிற்கு சற்று முன் எழுதிய கட்டுரையின் & முக நூல் பதிவின் வரிகள் இவை. நம்பிக்கையை துளிர்க்கச் செய்கிற, இருளை நீக்கி வெளிச்சம் பாய்ச்சுகிற வார்த்தைகள். ஜூலை 3 -தொழிலாளர் கூட்டு இயக்கம், இந்த திசை வழி நோக்கிய பயணம்*
- செவ்வானம்-