Friday, September 25, 2020

எலிகளுக்கு இனி நல்ல வேட்டை

 

மோடி, அந்தச் சட்டம் அத்தியாவசியமானதுதான் . . .



  அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் நீக்கப்பட்டால் அது கார்ப்பரேட் எலிகளுக்குத்தான் சாதகமாக அமையும் என்பதை சொல்லும் முக்கியமான கட்டுரையை அவசியம் படியுங்கள். பதுக்கலுக்கு சட்ட பூர்வ உரிமை அளிக்கிறார் மோடி. 

இந்து நாளிதழில் திரு சுரேந்திரா முன் எப்போதே வரைந்த கேலிச் சித்திரம் இந்த கார்ப்பரேட் எலிகளில் கொள்ளையை உணர்ந்து கொள்ள உதவும். 

*நாளொரு கேள்வி: 24.09.2020*

  இன்று நம்மோடு பொருளாதார நிபுணர் *டாக்டர் வெங்கடேஷ் ஆத்ரேயா*

####################

 *கேள்வி:* மத்திய அரசின் விவசாயம் சார்ந்த திருத்த சட்டங்கள் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளன. அதில் ஒன்று, அத்தியாவசிய பொருள்கள் சட்டம்.  1950, 60-களில் இந்தச் சட்டம் உருவாக்கப்பட்ட போது இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறாமல் இருந்தது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற இந்தச் சூழலில், சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டியது அவசியம்தானே?

 *வெங்கடேஷ் ஆத்ரேயா*

 அத்தியாவசிய பொருள்கள் சட்டம் என்பது மிக *முக்கியமான பண்டங்களை தனியார் பெரு வியாபாரிகள், நிறுவனங்கள் பதுக்கிவைப்பதைத் தடுக்கவே உருவாக்கப்பட்டது.* இது போர்க்காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம். தற்போதைய சூழலுக்கு இது தேவையில்லை என்று பலர் கூறுகின்றனர். இதிலிருந்து நான் மாறுபடுகிறேன்.

 காரணம், இந்தியா போன்ற நாடுகளில் *கிராக்கிக்கும், உற்பத்திக்கும் இடையே மெல்லிய இடைவெளிதான் உள்ளது என்பதால்  சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் விலைவாசியில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.* அதேபோல், நுகர்வோர் என்கிறபோது அதில் விவசாயிகளும் அடங்குவார்கள். விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருள்களைச் சந்தையில் விற்று, தனது தேவைக்கேற்ப பின்னர் நுகர்வு செய்கின்றனர். எனவே, இந்த விலைவாசியின் தாக்கம் அவர்களையும் பாதிக்கும். ஆகவே பதுக்கலுக்கு வழி வகுப்பது இந்திய உணவுப் பொருள் சந்தையில் ஏற்படுத்துகிற பாதிப்பு எல்லா ஏழை எளியோரையும்- விவசாயிகளையும் உள்ளிட்டு- பாதிக்கும்

 *இச் சட்டங்களை திருத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் விவசாயிகளிடமிருந்து வருவதில்லை. தனியார் பன்னாட்டுப் பெருநிறுவனங்கள் சார்பில்தான் இதுபோன்ற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.* தற்போது இந்தியா உணவுத் தன்னிறைவு பெற்று சுமார் 7 கோடி டன் தானியம் எஃப்.சி..இல் அதாவது இந்திய உணவுக் கழகத்தில், உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்குக் காரணம், மக்களின் வாழ்வாதாரத்துக்கு ஏற்றவாறு எளிய மக்களுக்கு பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்தவே அரசு உணவு தானியங்களைக் கொள்முதல் செய்யும் முறையை உருவாக்கியதே ஆகும். *ஆனால் உணவுக் கழக கிட்டங்கிகளில் தானியங்கள் நிரம்பி வழிவதால் உணவு தன்னிறைவை எட்டி விட்டோமென்ற முடிவுக்கு வரலாமா?*

 2008, 2010ஆம் ஆண்டுகளில் நகர்ப்புற, கிராமப்புற உணவுப் பாதுகாப்பின்மை குறித்த ஆய்வு ஒன்றை நடத்தி அது தொடர்பாக இரு புத்தகங்கள் எழுதி .நா. சபையின் WSP திட்டத்தின்கீழ் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது நாங்கள் உணர்ந்த விஷயம் என்னவென்றால், இந்த *இலக்குசார் பொது விநியோகமுறை* என்பது ஏழை மக்களின் வாங்கும் திறனைக் கணக்கில் கொள்ளாமல் நிலையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. *உதாரணமாக ஆந்திராவை* அரிசி உற்பத்தியில் உபரி மாநிலமாகக் கூறுவோம். அதற்காக ஆந்திரப் பிரதேசத்தில் அனைவரும் உணவில் தன்னிறைவு பெற்றுவிட்டதாகப் பொருள் அல்ல. எனவே, கிடங்கில் உணவு தானியம் குவிந்துள்ளது மக்களுக்கான பொது விநியோகம் முறையாகச் சென்று சேரவில்லை என்பதைக் குறிக்குமே தவிர உணவு உற்பத்தியில் முழுமையாகத் தன்னிறைவு பெற்றதாகக் கருதிவிடக் கூடாது

 மேலும், *வேளாண்மை என்பது பருவநிலை சார்ந்து இயங்கக்கூடியது* என்பதால் இதில் உள்ள நிலையற்றத் தன்மையை நாம் மறந்துவிடக் கூடாது. பருவநிலை மாற்றம் காலத்தில் ஒரு டிகிரி வெப்பம் அதிகரிப்பதாலும் உற்பத்தியில் குறைவு ஏற்படும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். *உணவு போன்ற அத்தியாவசிய விஷயத்தில் தன்னிறைவு பெற்றுவிட்டோம் என்று கருதும் அலட்சியப் போக்கு ஆபத்தானது.* எனவே, அத்தியாவசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை காலாவதியானது எனப் புறக்கணிப்பது முறையல்ல.

 *****************

*செவ்வானம்*

 

No comments:

Post a Comment