எஸ்.பி.பி யின் மறைவு அளித்த சோகத்தை அவரது பாடல்களை கேட்பதன் மூலம் குறைக்கலாம் என்று முயன்றால் மனதில் சோகமும் பாரமும் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது.
நேற்று நான் சமூக வலைத்தளங்களில் பார்த்த வரை முக நூல் முழுமையாக எஸ்.பி.பி அவர்களுக்கான அஞ்சலியால் நிரம்பியிருந்தது. இதுவரை எதுவுமே எழுதாத ஒரு தோழர் உணர்ச்சிக் கொந்தளிப்போடு இரண்டு அஞ்சலி செய்திகள் எழுதியிருந்ததே அவர் மீது கொண்ட நேசத்திற்கான சான்று.
அநேகமாக ஒவ்வொருவரும் பாடலை, இசையை ரசிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து அவர்கள் எஸ்.பி.பி யோடு இணைந்தே இருக்கிறார்கள். எல்லா சூழல்களுக்கும் அவரது குரல் பொருந்தியிருக்கிறது. எல்லா நடிகர்களுக்கும் பொருந்தியிருக்கிறது. இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் அந்த நடிகர்கள் ஏற்ற கதாபாத்திரத்தின் வயதிற்கு பொருந்தியிருக்கிறது. அந்த பாத்திரத்தின் குணாம்சத்திற்கும் பொருந்தியுள்ளது.
எத்தனையோ மொழிகளில் அவர் பாடியுள்ளார். அத்தனை மொழிகளையும் துல்லியமான உச்சரிப்போடு பாடியுள்ளார். அவரது தாய்மொழி தமிழ் கிடையாது. ஆனால் அவர் தமிழ்ப்பாடல்கள் அவ்வளவு சரியான உச்சரிப்போடு இருக்கும்.
பாடல்கள் மட்டுமல்ல டப்பிங் கலைஞராகக் கூட அவர் இருந்திருக்கிறார். சத்யா படத்து வில்லன் கிட்டி ஞாபகம் இருக்கிறதா? மென்மையான தோற்றம் கொண்ட கொடூரமான ஆள். நிஜமாகவே நல்லவரோ என்று நினைக்கத் தோன்றியதற்கு எஸ்.பி.பி யின் குரல் ஒரு முக்கிய காரணம்.
என் பயணங்களை எப்போதும் அவர் ஆக்கிரமித்துக் கொள்வார். இளையராஜா பாடல்கள், எம்.எஸ்.வி பாடல்கள்,கண்ணதாசன் பாடல்கள், எம்.ஜி.ஆர், சிவாஜி பாடல்கள் என்று எப்படிப்பட்ட தொகுப்புக்கள் கொண்ட எம்.பி 3 சிடி யாக இருப்பினும் அதிலே அவர் இருப்பார். நம் பயணத்தை இனிமையாக்குவார்.
இன்றும் நாளையும் எஸ்.பி.பி க்கான இசை அஞ்சலி நாளாகவே பதிவுகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இந்த பதிவில் அவரை தமிழகம் ஆசையாக அரவணைக்க காரணமாக இருந்த இரு பாடல்கள், அவர் தேசிய விருது பெற்ற பாடல்களை ஆகியவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.
ருத்ர வீணா, சாகர சங்கமம் ஆகியவற்றுக்கு மட்டும் தெலுங்கு பாடல்களுக்கு பதிலாக தமிழ்ப் பாடல்களை பகிர்ந்து கொண்டுள்ளேன்.
"புஞ்சை உண்டு, நஞ்சை உண்டு" பாடல் வரிகள் நேற்றைக்கு நடந்த விவசாயிகள் போராட்டத்திற்கு பொருத்தமாக இருந்தது என்பதும் கூட ருத்ர வீணா விற்கு பதிலாக உன்னால் முடியும் தம்பி பாடலை தேர்வு செய்ததற்கான காரணம்
ஆயிரம் நிலவே வா
என்றும் வாழ்வார் நம்முடன் தன் இனிய பாடல்கள் வழியாக.
ReplyDelete