Friday, September 18, 2020

தோழர் சுனில் - முற்றுகையிலிருந்து

 

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இயந்திரமயமாக்கலுக்கு எதிரான போராட்டம் குறித்து புனைவுப் பாத்திரங்களோடு நான் எழுதிய "முற்றுகை" நாவலில் இருந்து தோழர் சுனில் பற்றி எழுதிய இரு பகுதிகள். 

நாவலின் பகுதியாக இருப்பினும் இவை புனைவல்ல, நூறு சதவிகிதம் மெய் சிலிர்க்க வைக்கும் உண்மை




சுனில் பாபுவோ ஒரு பிறவிப்போராளி. பி.யூ.சி படிக்கும் போதே சுதந்திரப் போராட்டத்தில கலந்து கிட்டார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது அவரும் இன்னும் நாலு பேரும் சேர்ந்து தந்திக் கம்பியை அறுக்கும் போது மாட்டிக் கிட்டாங்க. மத்தவங்க எல்லாம் ஜாமீன் வாங்கி வெளியே வந்தாங்க. சுனில்பாபு அப்படி ஜாமீனில் வெளியே வர மறுத்துட்டாரு. பத்து மாசம் ஜெயில் தண்டனையை முழுசா அனுபவிச்சுட்டுத்தான் வெளியே வந்தார். சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான எந்த சலுகையையோ பென்ஷனையோ அவர் வாங்கவே இல்லை. பலனை எதிர்பார்த்து நான் எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை என்று மறுத்து விட்டார். தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த பிறகு அவர் தன்னை சங்கத்தில் முழுமையாக இணைத்துக் கொண்டார். எதையும் வெளிப்படையாக பேசக் கூடியவர். அதனால் அவரை நாக்பூர், கோயம்பத்தூர், அஸ்ஸாமில் திப்ரூகர் என்றெல்லாம் தூக்கி அடித்தார்கள்.

 அவர் எங்கெல்லாம் போனாரோ, அங்கே எல்லாம் சங்கத்தை வலிமையாக கட்டினார். நாக்பூரில சங்கமே அமைக்க முடியலை. அங்க இருந்த கிளை மேலாளர் அவ்வளவு டெரர். அந்த மேலாளர் அறைக்கு போன சுனில் காலில் ஷூ அணிந்திருந்தார் என்பதும் நாற்காலியில் அமர்ந்தார் என்பதும் பெரிய அதிர்ச்சியாக பார்க்கப்பட்டது. மரியாதை இல்லாமல் ஷூ அணிந்து தன் அறைக்கு வந்து நாற்காலியில் அமர்ந்த காரணத்தால் சுனிலை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று அந்த மேலாளர் தலைமை அலுவலகத்திற்கு கடிதம் எழுதினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஆனால் நிர்வாகம் அந்த தவறை செய்யலை. செய்ய விடாம சங்கம் தடுத்தது என்பதுதான் உண்மை.

 அவர் இன்னும் பெரிய இடத்துக்கு நிச்சயம் போவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு என்ற நாகேன் சௌத்ரி, சரோஜ்தா பற்றியும் சொன்னார்.

 


அடுத்த நாள் சந்திப்பில் அமைச்சரின் தொனியில் ஒரு கறார்த்தன்மை இருந்தது. இக்கூட்டத்திலும் சரோஜ்தாவும் சுனில் பாபுவும்தான் கலந்து கொண்டிருந்தார்கள். இலாகோ முற்றுகை தொடங்குவதற்கு சில மாதங்கள் முன்பாகத்தான் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கும் அதன் கோட்ட அமைப்புக்களுக்கும் தொழிற்சங்க அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. எண்பது சதவிகித உறுப்பினர் எண்ணிக்கை இருப்பதை உறுதி செய்து கொண்ட பிறகுதான் அங்கீகாரம் அளித்தார்கள். அதன் மூலம் பெரிய பலன் என்று எதுவும் இல்லாவிட்டாலும் கூட்டுப் பேரத்தில் ஒரே பிரதிநிதி என்று வந்தால் நாளை பேச்சு வார்த்தைகளின் போது உதிரிகளின் இம்சை இருக்காது என்பதுதான் அதில் அடங்கியிருந்த ஒரே நல்ல அம்சம்.

 அங்கீகார விதிகளை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மீறிய காரணத்தால் அங்கீகாரத்தை திரும்பப் பெறுவது தொடர்பாகத்தான் இக்கூட்டம் என்று ஆரம்பத்திலேயே அமைச்சர் தெளிவு படுத்தி விட்டார்.

 அப்படி என்ன நாங்கள் விதிகளை மீறி விட்டோம்?

  என்று சரோஜ்தா கேட்க

 எல்.ஐ.சி நிறுவனம் பற்றி பொது வெளியில் தவறாகப் பேசக் கூடாது என்பது விதி. அதை சரோஜ் சவுத்ரி மீறி விட்டார்

 எங்கே சரோஜ் மீறினார்? என்ன ஆதாரம் இருக்கிறது?

 என்று சுனில் கேட்க

 அசன்சாலில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஊழியர்களின் வேலையை பறிக்க எல்.ஐ.சி முயற்சி செய்கிறது என்று சரோஜ் பேசியுள்ளார். அது அங்கே இருந்து வெளிவரும் ஒரு லோக்கல் நாளிதழில் வெளி வந்துள்ளது

 என்று சொன்ன அமைச்சர் ஒரு பேப்பர் கட்டிங்கை எடுத்துக் காண்பித்தார்.

 நாளிதழ்களில் வெளி வந்த செய்திகள் எல்லாம் உண்மை என்று அமைச்சர் கருதுகிறாரா?

 என்று சுனில் கேட்க

 உண்மை இல்லாமல் செய்தி வெளி வருமா?

 என்று அமைச்சர் உடனடியாக பதில் கொடுத்தார்.

 உங்கள் அரசு ஏராளமான ஊழல் செய்துள்ளது என்று பல நாளிதழ்களில் செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அவையெல்லாமும் உண்மை என்று அமைச்சர் ஒப்புக் கொள்கிறாரா?

 என்று சுனில் வெடிக்க அமைச்சரின் முகம் சிவந்து விட்டது.

 இதெல்லாம் விதண்டாவாதம் என்று கத்தினார்.

 நாங்களும் அதையேதான் சொல்கிறோம். நாளிதழில் வெளி வந்த செய்திக்கு நாங்கள் பொறுப்பில்லை. சரோஜ் அவ்வாறு பேசவில்லை என்பதுதான் உண்மை. நீங்கள் இறுதியாக என்ன சொல்ல விரும்பறீங்க? என்று சுனில் கேட்க

 கல்கத்தா போராட்டத்தை கைவிட வேண்டும். சரோஜ் நிபந்தனையற்ற மன்னிப்பு எழுத்து பூர்வமாக கேட்க வேண்டும். அப்படி செய்தால் அங்கீகாரம் தொடரும். ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையையும் தொடங்குவோம்

 என்று அமைச்சர் சொல்ல

 சுனில் கோபத்தின் உச்சத்திற்கு சென்று விட்டார்.

 யாருக்கு வேண்டும் உங்களின் அங்கீகாரம். அது எங்கள் தோழர்களின் கால் தூசுக்கு சமம். ஊழியர்கள் எங்களுக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளார்கள். கல்கத்தா நகரத்து தொழிலாளர்கள் கொடுத்துள்ளார்கள். போராட்ட உணர்வுள்ள சங்கம் என்று இந்தியா முழுதுமுள்ள சங்கங்கள் மதிக்கிறார்கள். இது போதும் எங்களுக்கு

 என்று சொல்லி வெளி நடப்பு செய்தார்கள்.


2 comments:

  1. இந்த புத்தகம் எங்கே கிடைக்கும்?

    ReplyDelete
    Replies
    1. தமிழகத்தில் உள்ள எல்.ஐ.சி கோட்ட அலுவலகங்களில் சங்கப் பொறுப்பாளர்களிடமும் பாரதி புத்தகாலயத்திலும் கிடைக்கும்

      Delete