Thursday, September 24, 2020

இந்தி திணிப்புக்கு ஏன் வங்கி முட்டு?

 


 

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியா இல்லை இந்தி ஓவர்சீஸ் வங்கியா என்று சந்தேகம் வருகிறது.  கங்கை கொண்ட சோழபுர கிளை மேலாளர் விஷால் காம்ப்ளே ஓய்வு பெற்ற மருத்துவருக்கு வீட்டுக் கடன் தர மறுக்கிறார். அவருக்கு இந்தி தெரியாது என்பதுதான் அந்த கடனை விஷால் காம்ப்ளே மறுப்பதற்கான காரணமாக இருந்திருக்கிறது.

 சர்ச்சை வந்ததும்  அவரை திருச்சிக்கு மாற்றி விட்டார்கள். ஐ.ஓ.பி யின் மண்டல நிர்வாகம் ஒரு விளக்கம் கொடுத்துள்ளது.

 கடன் மறுக்கப்பட்டதற்கு அந்த மருத்துவருக்கு இந்தி தெரியாது என்பதல்ல காரணம். எழுபது வயதைக் கடந்தவருக்கு கடன் தர முடியாது என்பதுதான் அந்த விளக்கம்.

 இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. எழுபது வயதாகி விட்டது, அதனால் கடன் தர முடியாது என்று அப்போதே விண்ணப்பத்தை நிராகரிப்பது மிகவும் எளிதான விஷயம். அதை ஏன் காம்ப்ளே செய்யவில்லை?

 விண்ணப்பத்தை பரிசீலனை செய்து கடனை வழங்கும் நேரத்தில்தான் மொழிப் பிரச்சினையே வந்துள்ளது.

 விஷால் காம்ப்ளே தவறு செய்யவில்லையென்றால் அவரை உடனடியாக திருச்சிக்கு மாற்ற வேண்டிய அவசியம் என்ன?

 தமிழ்நாட்டுக் காரர் ஒருவரால் துவங்கப்பட்ட ஒரு வங்கி, தமிழகத் தலைநகர் சென்னையை தலைமையகமாகக் கொண்டுள்ள ஒரு வங்கியிலேயே மொழி வெறி தாண்டவமாடுகிறது என்றால் இந்தியா எங்கே போய்க் கொண்டிருக்கிறது?

 இந்த போக்கை கட்டுப்படுத்த வேண்டிய ஐ.ஓ.பி நிர்வாகம், முட்டு கொடுப்பது முறையல்ல.

 சி.ஐ.எஸ்.எஃப் இன்ஸ்பெக்டர் தொடங்கி இந்த ஐ.ஓ.பி மேலாளர் வரை இந்த குட்டிச்சாத்தான்களுக்கெல்லாம் இவ்வளவு தைரியமும் திமிரும் எங்கிருந்து வருகிறது?

 இந்தி திணிப்பு முயற்சிகள்தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கியது. அநேகமாக இந்திய அளவிலான ஆட்சி மாற்றத்திற்கும் நாளை இந்தி திணிப்பு ஒரு முக்கியக் காரணமாகலாம்.

 அதனால் இப்போதைக்கு இந்தி திணிப்பு நல்லது, மக்கள் மத்தியில் உணர்வூட்டுவதால் . . .

 

1 comment:

  1. Certainly,the more they compel and pressurise,it is very clear they are ready to reap the fruits

    ReplyDelete