Monday, September 14, 2020

BAN NEET - டாக்டர் சொல்கிறார்

மதுரையில் மன நல மருத்துவராக இருக்கிற டாக்டர் கார்த்திகேயன் அவர்களின் முக நூல் பதிவு. 

நீட்டிற்கு முட்டு கொடுக்கும் முட்டாள்கள் அவசியம் படிக்க வேண்டும்.  



ஒரு மீள் பதிவு

NEET எப்படிப்பட்ட மருத்துவர்கள் உருவாகுவதை தடுக்கும் என்பதை பற்றி...

எனது அம்மா தமிழ் மீடியத்தில் படித்தவர்.

எனது அம்மா மற்றும் நான்கு சகோதரிகளும் மூன்று சகோதரர்களும் உள்ள குடும்பத்தில் ஒரு காவல்துறை ஹெட் கான்ஸ்டபிளை தந்தையாகவும் சில விவசாய நிலங்களையும் சில வீடுகளையும் கொண்டு குடும்பத்தை சமாளித்து அனைவரையும் சொற்ப வருமானத்திலும் படிக்க வைத்த

ஒரு தாயின்
" ஏட்டையா மகள் ".

முதல் முயற்சியில் மருத்துவ மாணவியாகுவதற்கான அத்தனை தகுதியும் மதிப்பெண்களும் இருந்தும்     அப்போதைய நேர்முக தேர்வுமுறையின் அநீதியால்    மெடிக்கல் சீட் மறுக்கப்பட்டவர்.

தாத்தா கலை கல்லூரியில் படிக்கச்சொன்னதை எதிர்த்து பல நாள் உண்ணாவிரதங்கள் வீட்டில் இருந்து அடம்பிடித்து போராடி    தாயின் வீட்டு பொருளாதாரத்தை நிர்வகிக்கும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து   வீட்டில் இருக்கும் பசுமாடுகளை சொசைட்டியில் கொண்டு விட்டு என ஒரு வருடம் கழிந்து விட   அடுத்த முயற்சியில் மதுரை மருத்துவ கல்லூரியில் பயின்றவர்.

புதிய மருத்துவ புத்தகங்கள் வாங்குவதற்கு கடினமாக   தனது அண்ணனின் முயற்சியால் அவரது மூத்த மாணவர்களிடம் பழைய புத்தகங்களை பெற்று  அவரது பேட்ச்சில் ஒரு தடவை கூட பரிட்சையில் தோல்வி பெறாத வெகு சிலர்களில் ஒருவராக  ஃபர்ஸ்ட் க்ளாசில் வெற்றி பெற்றவர். 

( அப்போது மருத்துவ மாணவர்களில் பத்து சதவிகிதத்தினரே அப்படி மருத்துவ படிப்பில் சாதித்த காலம் அது )

இப்போதைய இராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்த   முதல் பெண் மருத்துவர்.
அதே மாவட்டத்தில் கீழக்கரை,இராமநாதபுரம்,இராமேஸ்வரம் என்ற பிற்படுத்தப்பட்ட இடங்களிலேயே   முப்பது வருடங்கள் சேவை செய்தவர்.
தான் பிறந்த இராமேசுவரம்   அரசு மருத்துவமனையிலேயே தலைமை மருத்துவராய் பணிபுரிந்த பாக்கியத்தை உடையவர்.  கீழக்கரையில் பல்லாண்டுகள் ஒற்றை மகப்பேறு மருத்துவராய் இருந்து அரசு மருத்துவமனையிலும்  தனிப்பட்ட மருத்துவத்திலும் மிகக்குறைந்த ஊதியமும் பெற்று அந்த ஊர் மக்களின் மனதில் நிலைத்து நிற்பவர்.

தம் இரு பிள்ளைகளும் பிறந்த அதே இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில்  துணை இயக்குநர் ( மருத்துவம் ) மற்றும்  இணை இயக்குநர் என்று மாவட்ட மருத்துவ துறையின் முதன்மை அலுவலராக திறம்பட செயல்பட்டு  மாவட்ட கலெக்ட்டர்கள்,சக மருத்துவர்கள்,மருத்துவ துறை ஊழியர்கள்,அனைத்து கட்சி அரசியல்வாதிகள் மற்றும்  அதை விட முக்கியமாக பொதுமக்களின் அன்பும் பெற்ற நிர்வாகியாகவும் இருந்தவர்.

நான் மதுரை மருத்துவ கல்லூரியில் ஆசிரியராய் இருந்த காலத்தில் நடந்த சம்பவம் இது. 

கீழக்கரை பகுதியில் இருந்து வந்த   இராஜேஸ்வரி என்ற என் அம்மாவின் பெயருடைய  அந்த மருத்துவ மாணவியை சந்தித்தேன்.  அவளிடம் , ஏதோ ஒரு ஆர்வத்தில் அவள் பெயர்  அம்மாவின் பெயராய் இருப்பதால்
" ஏம்பா! உனக்கு இந்த பேர் வைச்சாங்க "
என்று கேட்ட போது  அவர் " எங்கள் ஊர்ல இதே பேர்ல ஒரு டாக்டர்     இருந்தங்க, சார். அம்மாவுக்கு ரொம்ப கஷ்டமான டெலிவரியாம். என்னையும் என் அம்மா உயிரையும் காப்பாத்துனது அவங்க தானாம் சார்.  அதுனால தான் இந்த பேர் வைச்சாங்க " என்றார்.

ஆம்,அந்த மருத்துவர் என் அம்மாவே தான்.

இந்த மாதிரி உண்மை கதைகள் இனிமேல்
கண்டிப்பாக கேட்கமுடியாமல் போய்விடும்.

இது மாதிரி மருத்துவர்களை
இனிமேல் உங்கள் வாழ்வில் பார்க்கவே முடியாது.
அதற்கு காரணம் NEET ஆகவே இருக்கும்.

ஆகவே #Ban_NEET என்பதே
தமிழர் நமது எதிர்காலத்திற்கு சிறந்த வழி.

No comments:

Post a Comment