Sunday, September 20, 2020

முறையான வெளியீட்டு விழாவுக்கு முன்பே . . .

 


படித்து முடித்த பின்பு வேறு எதைப் பற்றியும் சிந்திக்க முடியாதபடி மனதில் ஒரு இருக்கத்தைத் தரும் சிறுகதைகளின் அணிவகுப்பு "இருண்ட காலக் கதைகள்"

அறிவிப்பையும் அதிலே பங்கேற்றுள்ள எழுத்தாளர்களின் பெயர்களைப் பார்த்தவுடனேயே :எதிர் வெளியீடு" பொறுப்பாளர்களோடு தொடர்பு கொண்டே, அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்திய மறு நாளே கொரியர் மூலம் கைக்கு வந்து சேர்ந்தது நூல். ஒரே மூச்சாக படித்து முடித்த நூல். 

அட்டையில் உள்ள ரத்தம் பீய்ச்சியடிக்கும் பாதங்களே, கதைகள் எழுதப்பட்ட இருண்ட காலத்தை சொல்லி விடுகிறது. நாம் ஆறு ஆண்டுகளாக சந்தித்து வரும் பல அவலங்களை முகத்தில் அறைந்தால் போல உணர்த்துகிறது. இந்தியாவின் இருண்ட காலம் எது என்று வரலாற்றில் பதிவு செய்கிறது "இருண்ட காலக் கதைகள்"

முறையான வெளியீட்டு விழா இன்று மாலைதான் இணைய வழியில் நடைபெறவுள்ளது. இருப்பினும் தொகுப்பாசிரியர் தோழர் அ.கரீம் அனுமதியோடு நூலில் இடம் பெற்றுள்ள சிறுகதைகளில் சிலவற்றைப் பற்றி மட்டும் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

மாலை நடைபெறவுள்ள நூல் வெளியீட்டு விழாவில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள் என்று நானும் அன்போடு அழைக்கிறேன்.



நீண்ட நாட்களுக்குப் பிறகு தோழர் ச.தமிழ்ச்செல்வன் எழுதியுள்ள "என்ன கதை இது?" கிராமங்களில் கெட்டிப் போயிருக்கிற ஜாதிய வெறியை சொல்லுகிறது. அவர்களின் நீதிக்கு புறம்பாக செயல்பட்டாலும் கிராமத்தை விட்டு வெளியேற்றாமல் தங்களின் அடிமைகளாகவே "வண்ணார் சமுதாய" மக்களை வைத்திருக்க முயல்வதில் அவர்களின் சுய நலம் இளிக்கிறது. அடுத்த தலைமுறையில் நகரத்துக்கு குடி பெயர்ந்தாலும் வேறு விதமான தாக்குதல் அந்த குடும்பத்தை சிதைக்கிறது. எப்படி? கதையை படியுங்கள், புரியும்.

தோழர் ஆதவன் தீட்சண்யாவின் "காமிய தேசத்தில் ஒரு நாள்" அவரது பகடி வடிவத்தில் அதிரடி சட்டங்கள் போட்டு மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றும் ஆட்சியாளர்கள் மீதான அதிரடி தாக்குதல். பகடியும் நையாண்டியுமாக கதையை எடுத்துச் செல்லும் தோழர் ஆதவன், கடைசி வரியில் தான் பதைக்க வைத்து விடுகிறார்.

இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் தேச விரோதிகளாக சித்தரிக்கப்படும் கொடுமையை தோழர் இரா.முருகவேளின் "ஒரு எழுத்தாளரின் ஒப்புதல் வாக்குமூலம்" சித்தரிக்கிறது.

காணாமல் போன மகனையோ, கணவனையோ தேடுவதற்கோ, ஏன் விசாரிப்பதற்கோ கூட உரிமையில்லாத திறந்த வெளிச் சிறைச்சாலை ஆகவேதான் காஷ்மீர் உள்ளது என்பதை 370 பிரிவு நீக்கப்பட்ட இருண்ட காலத்தில் சொல்கிறது தோழர் பாலமுருகனின் "சொர்க்கம் இங்கே துவங்குகிறது"

பெண்கள் அதிக அளவிலும் தன்னெழுச்சியாகவும் கலந்து கொண்டது குடியுரிமைச் சட்டத்திற்கு போராட்டம். மூளைச் சலவை செய்யப்பட்ட ஒருவர் அப்போராட்டத்தில் கலந்து கொண்ட தன் மனைவியை நண்பர்களை எப்படி இழிவு படுத்துகிறான் என்பதை சொல்லும் கதை திருமதி சல்மாவின் "இருண்மை".

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொல்லப்பட்ட நிர்பயாவின் மரணத்திற்கு நியாயம் கிடைக்காமல் தள்ளிப்போகையில் தாயின் மனக்குமுறல் எப்படி இருந்திருக்கும் என்பதை திருமதி அகிலாவின் "மாகாளி" உணர்த்தும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக மத அடிப்படையில் குடியுரிமையை நிர்ணயிக்கிற குடியுரிமைச் சட்டத்தால் அஸ்ஸாமில் துரத்தப்பட்டு வேட்டையாடப் பட்டுக் கொண்டிருக்கிற இஸ்லாமிய மக்களின் துயரத்தை தமிழகச் சூழலில் உணர்ச்சிகரமாக தந்துள்ளார் தோழர் சம்சுதீன் ஹீரா "மயானக்கரை வெளிச்சத்தில்". இந்த ஆட்சி தொடர்ந்தால் இது போன்ற அவலங்கள் தமிழகத்திலும் நிகழும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

"இன்று தஸ்தகீர் வீடு" மூலம் கோவையில் காவல்துறையால் இன்னும் சந்தேகக்கண் கொண்டு வேட்டையாடப் படுகிற இஸ்லாமியர்களின் சோகத்தை உரைக்கிறார் இந்த நூலின் தொகுப்பாசிரியர் தோழர் அ.கரீம்.

அன்றைய துக்ளக் ஆட்சியில் மக்கள் பட்ட அவதிகளை சொல்லி இன்றைய துக்ளக் ஆட்சியை நினைவு படுத்துகிறது தோழர் இளங்கோ கிருஷ்ணனின் "படை" 

ஆணவக் கொலை பற்றியும் தொழிலாளர்களை இயந்திரங்களாக மட்டும் கருதும் முதலாளித்துவம் பற்றியும் பசுவின் பெயரால் நிகழும் கொலைகள் பற்றியும் பழங்குடி மக்கள் அவர்கள் மண்ணிலிருந்து அகற்றப் படுவது குறித்தும் கற்றுக் கொடுத்த ஆசிரியருக்கே மதச் சாயம் பூசுவது குறித்தும் மதக் கலவரங்களின் துவக்கம் பற்றியும் மற்ற கதைகள் கூறுகிறது.

அவசியம் படிக்க வேண்டிய நூல்.

இருண்ட காலத்தை அகற்றிட இருண்ட காலத்தைப் பற்றி உணர்ந்திட இருண்ட காலக் கதைகள் உதவிகரமாக இருக்கும்.

தொகுப்பாசிரியர் தோழர் அ.கரீம் அவர்களும் பதிப்பாளர் எதிர் வெளியீடு தோழர் அனுஷ் அவர்களுக்கும் அன்பும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 



No comments:

Post a Comment