Monday, September 7, 2020

வசவாளர்களின் கவனத்திற்கு




எங்கள் நிறுவனத்தில் உதவி கோட்ட மேலாளராக பணியாற்றும் திரு சங்கர நாராயணன் அவர்களின் நெகிழ்ச்சியூட்டும் பதிவு.

ஒவ்வொரு எல்.ஐ.சி  ஊழியருக்கும் இது போல பல நெகிழ்ச்சியான அனுபவங்கள் உண்டு. வெறும் ஊதியத்திற்காக மட்டும் வேலை பார்க்காமல் நிறுவனத்தோடு உளப்பூர்வமாக இணைத்துக் கொண்டதால் இது சாத்தியமாகிறது.

ட்விட்டரில் ஒரு வார காலமாக தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை பார்க்கும் முகத்தை மறைத்துக் கொண்டிருந்த ஒரு சீமானின் சிஷ்ய கோடியோடு ஒரே விவாதம். பொதுத்துறை ஊழியர்கள் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள் என்று உளறிக் கொண்டே இருந்தார். அவரது ப்ரொஃபைலைப் பார்த்த பின்புதான் சீமானின் தம்பி என தெரிந்தது. அதற்குப் பிறகு விவாதத்தை முடித்துக் கொண்டேன்.

அந்த தம்பியும் அந்த தம்பி போன்ற வசவாளர்களும் அவசியம் இந்த பதிவை படித்திட வேண்டும். 





காகிதங்களில் தெரிந்த முகங்கள்

பிப்ரவரி 2003. எல்.ஐ.சி நிறுவனத்தின் மதுரை கோட்ட அலுவலக உரிமத் துறையும் அனைத்து கிளைகளின் உரிமப் பிரிவுகளும் மிகவும் பரபரப்போடு இயங்கிக் கொண்டிருந்த காலம் அது. தலைமைப் பண்பிற்கு இலக்கணமாய்த் திகழும் திரு ஜெயராமன் சார் தான் உரிமத்துறையின் மேலாளர். 31.03.03 தேதியில் அந்த நிதியாண்டின் அனைத்து முதிர்வு மற்றும் இறப்பு உரிமங்களுக்கும் பணம் கொடுத்து கொடுபடா உரிமம் எதுவுமில்லை ( claims outstanding NIL ) எங்கிற நிலை அடைவோம் என்ற கோஷம் அனைவருடைய இரத்த ஓட்டத்திலும் கலந்திருந்த அற்புத தருணம் அது. மேலாளர் உரிமம் முதல் முகவர்கள் வரை கோட்டம் முழுவதும் அனைவரும் கால்களில் சக்கரமும் இடுப்பில் இறக்கையும் கட்டி பணம் வழங்க வேண்டிய பாலிசிதாரர்களை தேடி பறந்து கொண்டிருந்த பரவச நாட்கள் அவை.


சிவகங்கை கிளையில் உரிமப் பிரிவில் உதவி நிர்வாக அதிகாரி நான். என்னுடன் அர்ப்பணிப்பு உணர்வும் ஆற்றலும் ஒருங்கே அமையப்பெற்ற திரு செல்வம் சார் (HGA) லேட் திரு இரகுராமன் மற்றும் சகோ பாஸ்கர் ஆகியோர் பணி புரிந்து வந்தனர். 31.01.03 தேதியில் முதிர்வு தேதியிலிருந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில் முழு காலமும் பிரிமியம் செலுத்தப் படாத ( paid up ) 2 பாலிசிகளின் கீழ் முதிர்வு உரிமங்கள் நிலுவையிலிருந்தன. இரண்டு உரிமங்களிலும் பாலிசிதாரர்கள் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை (கண்ணாத்தாள் கோவில் மிகவும் பிரபலம்) அருகிலுள்ள ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டின் கீழும் எல்.ஐ.சி நிறுவனம் தர வேண்டிய பணம் தலா ரூபாய் 8௦௦0/- க்கும் மேல். கோப்புகளை ஆராய்ந்த போது அவை தற்காலிமாகமாக பட்டியலிலிருந்து தள்ளுபடி ( written back ) செய்யப்படுவதற்குரிய எல்லா தகுதிகளையும் பூர்த்தி செய்திருந்தன.


முதிர்வு தேதிக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு பதிவுத் தபாலில் அனுப்பப்பட்டிருந்த தகவல் கடிதமும் டிஸ்சார்ஜ் பாரமும் NO SUCH ADDRESSEE என்ற postal remarks உடன் திரும்பி வந்திருந்தன. முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது நினைவூட்டுக் கடிதங்களும் அவ்வாறே திரும்பி இருந்தன. இறுதி பதிவு தபாலும் கூட திரும்பியிருந்தது. வளர்ச்சி அதிகாரியிடமிருந்து உரிம விசாரணை அறிக்கையும் கூட பெறப் பட்டிருந்தது.


இரு பாலிசிதாரர்களும் ஊரைக் காலி செய்து சென்னை போய் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஒருவருடைய சிறிய ஓட்டு வீடு தற்சமயம் இடிந்து சிதிலமடைந்து கட்டைச் சுவரும் மண்மேடுமாய் காட்சி அளிக்கிறது. இன்னொருவருடைய வீடு இருந்த பழைய வளவு தற்சமயம் உருமாறி ஒரே வீடாக இருக்கிறது. அக்கம்பக்கத்தில் விசாரித்ததிலும் விலாசம் அறிய இயலவில்லை. இவையெல்லாம் முகவர் மூலமாகக் கிடைத்த தகவல்கள்.


உரிமத்தை தள்ளுபடி செய்வதற்கான அலுவலக ஆணைக் குறிப்பு ( office note ) தயாரிக்கப்பட்டு மதுரை கோட்ட அலுவலகத்தின் அனுமதிக்காக பைல்கள் பிப்ரவரி முதல் வாரம் அனுப்பப்பட்டன. பிப்ரவரி இரண்டாம் வாரம் நான் மதுரை கோட்ட அலுவலகம் கென்றிருந்தேன்.


மேலாளர் திரு ஜெயராமன் சார் அவர்களும் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர் சங்க தலைவர் தோழர் சந்திரசேகர பாரதி அவர்களும் என்னிடம் கேட்டார்கள். “ எல்லாம் கரெக்ட் தான். ALL REQUIREMENTS OK… BUT பாலிசிதாரரைத் தேடறதுக்கு நீங்க நேர்ல போய் முயற்சி எடுத்தீங்களா ? ” நான் இல்லையென்று பதில் சொன்னேன். “LOOK MR சங்கரநாராயணன் எனக்கு இந்த ஃபைல் வெறும் காகிதமாய்த் தெரியல, இதுல எனக்கு பாலிசிதாரரோட முகம் தான் தெரியுது. ஏதோ ஒரு அவசரத் தேவைக்கு பணத்துக்காக ஏங்கிக்கிட்டிருக்கிற முகமா அது எனக்குத் தெரியுது. நீங்க ஒரு முறை நேர்ல போய் பார்த்து ஒங்க ரிபோர்ட்டோட எனக்கு RESUBMIT பண்ணுங்க “ என்று இரண்டு ஃபைல்களையும் என்னிடம் திருப்பித் தந்தார்.


மாலை சிவகங்கை திரும்பினேன் மறுநாள் அதிகாலை முதல் பேருந்திலேயே கிளம்பினேன். அந்த கிராமத்திற்கான மெயின் ரோட்டு விலக்கில் இறங்கிய போது காலை 6:30. ( இம்மாதிரியான பல களப் பயணங்களில் நண்பர் லேட் திரு இரகுராமனும் அவரது சொந்தப் பணத்தில் பெட்ரோல் இடப்பட்ட அவரது மோட்டார் சைக்கிளும் அலுவலகத்திற்கும் பாலிசிதாரர்களுக்கும் பயன்பட்டதை இங்கு நன்றியுடன் பதிவு செய்ய விரும்புகிறேன். அன்றைய தேதியில் அவர் வர இயலாத நிலை )


மெயின் ரோட்டு விலக்கில் இருந்து மண் சாலையில் ஒரு கிலோ மீட்டர் நடந்து ஊருக்குள் வந்தேன். விசாரித்ததில்.... நேரில் பார்த்ததில்... முகவர் சொன்ன தகவல்கள் அனைத்தும் உண்மையே. ஆனால் யாருடைய நல்ல நேரமோ அல்லது திரு.ஜெயராமன் சார் மற்றும் தோழர் சந்திரசேகர பாரதி அவர்களின் நல்ல மனசுக்கு கிடைத்த வெற்றியோ எனத் தெரியவில்லை, அன்றைக்குப் பார்த்து அந்த ஊரில் ஒரு கல்யாணம். கல்யாணத்திற்கு சென்னையிலிருந்து உறவினர்கள் வந்திருப்பதாக அறிந்தேன். நல்ல வாய்ப்பு என மகிழ்ந்து கல்யாண பந்தலுக்குள் சென்று சென்னை வாசிகளைச் சந்தித்து விபரம் கேட்டேன். எட்டு நபர்களைச் சந்தித்து விசாரித்து பயனின்றி 9 வது நபரிடம் நமது வெற்றி காத்திருந்தது. ஆம் அவர் இரண்டு பாலிசிதாரர்களுடைய தெளிவான முகவரிகளைத் தந்தார். சந்தோஷ மிகுதியில் என் கண்கள் பனித்தன. முகவரிகளைப் பெறும் போது கைகள் லேசாக நடுங்கின.


நான் ஒரு மூன்றாவது மனிதன் இப்படி பலரிடம் விலாசம் கேட்டுத் திரிந்தது கல்யாண வீட்டிற்கு வந்திருந்த அனைவருடைய கவனத்தையும் ஈர்த்திருந்தது. முதிர்வு உரிமப்பணம் தருவதற்காக எல்.ஐ.சியின் தேடுதல் வேட்கையின் சத்தியத்தை அறிந்த அவர்கள் அனைவருமே எல்.ஐ.சியை அவரவர் மனதில் ஈரப்பதியன் இட்டுக் கொண்டார்கள்.


பின்னர் இரு புதிய விலாசங்களுக்கும் டிஸ்சார்ஜ் பாரம் பதிவுத் தபாலில் அனுப்பப்பட்டு தேவைகள் பெறப்பட்டு காசோலைகள் அனுப்பிவைக்கப்பட்டன. திருமணப் பந்தலில் நமது தேடுதல் முயற்சிகளைத் தெரிந்து கொண்ட பாலிசிதாரர்கள் மிக நீண்ட நன்றி கடிதம் எழுதியிருந்தார்கள். அந்த கடிதங்களில் நான் ருசித்த இனிப்பு சர்க்கரை நோயாளியான எனக்கு ஆரோக்கியத்தையே தந்தது.


( இதைப் படித்த எல்லோருடைய மனதிலும் தோன்றுவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எல்.ஐ.சி நிறுவனம் முழுமையாக அரசு நிறுவனமாக செயல்படுவதனால் தானே இதுவெல்லாம் சாத்தியம்.... இந் நிறுவனம் தனியார் கைகளில் சென்றால் இப்படி எல்லாம் நடக்க முடியுமா ? இப்ப தோணுது எல்.ஐ.சி தனியார் மயம் மக்கள் விரோத நடவடிக்கை. இந்த புரிதல் நமது மத்திய அரசுக்கு வேணுமே... )


No comments:

Post a Comment