*நாளொரு கேள்வி: 23/09/2020*
####################
கேள்வி: திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிட்டெட் *(DHFL)* இன்று வணிக இதழ்களின் தலைப்பு செய்தியாக மாறியிருப்பது ஏன்?
*க.சுவாமிநாதன்*
பிரதமர் நரேந்திர மோடியால் *"செல்வத்தை உருவாக்குபவர்கள்"*
(Wealth Creators) என்று பாராட்டப்படும் இந்தியத் தொழிலகங்கள் எப்படி மக்களின் *"செல்வத்தை அபகரிப்பவர்கள்"* (Wealth Suckers) ஆக இருக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு உதாரணமாக DHFL மோசடி வெளிவந்துள்ளது.
இந்த கதைக்கு வருவதற்கு முன்பாக அரசின் இன்னொரு கதையாடலை நினைவு படுத்திக் கொள்வோம். *கதையில் நடுவில் கொஞ்சம் நகைச்சுவை இல்லாவிட்டால் படம் சுவாரஸ்யமாக நகராது இல்லையா?* எல்.ஐ.சியின் பங்கு விற்பனைக்கு அரசு சொல்கிற காரணங்களில் ஒன்று பங்குச் சந்தைக்குள் வந்தால் செபி (SEBI) மேற்பார்வையில் "கண்காணிப்பு இன்னும் வலுவடையும்" என்பதே. எல்.ஐ.சிக்கு கூடுதல் கண்காணிப்பு தேவை என்ற முடிவுக்கு வர அரசிடம் என்ன தரவுகள் இருக்கின்றன என்று கேட்டால் பதில் இல்லை. டி.ஹெச்.எப்.எல் கதைக்கு வருவோம். அதற்கு பிறகே இந்த நகைச்சுவைக்கு மனசு விட்டு சிரிக்க முடியும்.
*டி.எச்.எப்.எல் நிறுவனம் "செபி"யின் மூக்குக்கு கீழே இருப்பதுதான்.* அதற்கு மும்பையில் " பாண்ட்ரா கிளை" ஒன்று இருந்தது. அதில் எவ்வளவு கணக்குகள் இருந்தன தெரியுமா? 2.6 லட்சம் கணக்குகள் இருந்தன. இவர்கள் கணக்குகளில் புழங்கியுள்ள பணம் ரூ 11750 கோடிகள். இதில் என்ன பிரச்சினை என்கிறீர்களா? *ஒரு திரைப்படத்தில் வங்கி கடனை வாங்கிய வடிவேலு "கிணறு காணோம்" என்று அதிகாரிகளை அதிர வைப்பார் இல்லையா.* அதே காட்சிதான் இப்போது... அந்த டி.எச்.எப்.எல்லின் பண்ட்ரா கிளையே இல்லையாம். சரி... அதில் இருந்த 2.6 லட்சம் கணக்குகள்? அவையும் போலியாம். *இல்லாத கிணத்துல இறச்ச தண்ணிதான் 11750 கோடிகள்.*
இதுக்கு முன்னாலேயே டி.எச்.எப்.எல் சிக்கலில் இருப்பதும் எல்லோருக்கும் தெரியும். அது தொழிலுக்கு புதுசு இல்லை. *போலிஸ் ஸ்டேசனில் ரெகுலர் குற்றவாளிகள் படங்களை தொங்க விட்டுருப்பாங்கள்ல.* அது போல டி.எச்.எப்.எல் ஏற்கெனவே ரூ 83873 கோடிகள் கடனை அரசு நிதி நிறுவனங்கள், பரஸ்பர நிதியங்கள், சில்லரைப் பத்திரதாரர்கள் ஆகியோருக்கு தர வேண்டுமென்று ரிசர்வ் வங்கி திவால் நடைமுறைகளைத் துவக்கியிருந்தது.இது குறித்த ஆய்வை செய்த தணிக்கையாளர்கள் 10 ஆண்டுகளில் ரூ 17394 கோடி ரூபாய்களை மோசடி செய்திருக்கிறது என்ற முடிவுக்கு வந்தது. இந்த நிறுவனத்தின் துவக்குனர்களான *கபில் வாதவான், தீரஜ் வாதவான், டவுன் ஷிப் டெவலப்பர்ஸ் இந்தியா, வாத்வான் ஹோல்டிங்ஸ், தீரஜ் டவுன்ஷிப் டெவெலப்பர்ஸ், வாதவான் கன்சாலிடேட்டட் ஹோல்டிங்ஸ்* ஆகியன நிதியை சுற்றுக்கு விட்ட நிறுவனங்களில் அடங்கும்.
*70 சதவீத மோசடி நடவடிக்கைகள் இந்த காணாமல் போன கிணற்றில் இருந்து நடந்திருக்கின்றன.* இல்லாத கிளை... இல்லாத வாடிக்கையாளர்கள் மூலம் பணத்தை திசை திருப்பி விட்டுள்ளனர்.
*எப்படி இந்த 2.6 லட்சம் கணக்குகள் கிடைத்தன?* மூன்று மென்பொருள் மேடை நிறுவனங்கள் இந்த நாடகத்திற்கு திரை போட்டவர்கள். மேக்கப் ரூமில் ஒப்பனை போட்டவர்கள். ஏற்கெனவே கடனை வாங்கி கட்டி முடித்தவர்களில் தகவல் தளங்கள் இருக்குமல்லவா? அவற்றில் இருந்து கணக்குகள் திறக்கப்பட்டு கடன்கள் வழங்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கடன் விண்ணப்பங்கள் மட்டும் சி.எம்.டி (Chairman cum MD) மேடைக்கு நேரடியாகப் போய் இ மெயில் ஒப்புதல் தரப்பட்டுள்ளன. மற்ற உண்மையான கடன்கள் எல்லாம் வழக்கமான "கண்ணில் எண்ணெயை விட்டு" பார்த்துப் போகும். சி.எம்.டி கையெழுத்து போட்டவுடன் ஆக்சிஸ் வங்கி, யூனியன் பாங்க் கணக்குகள் வாயிலாக பந்த்ரா வங்கிக் கணக்கிற்கு பட்டுவாடா ஆகியுள்ளது. கடன்களே தரப்படாமல் தந்தது போன்ற பதிவுகள் அரங்கேறியுள்ளன.
*ஒரு கதைக்குள் எவ்வளவு பாத்திரங்கள். வில்லன், வில்லனின் கை பாணங்கள் என...*
*எல்லாம் சரி... செபி என்ன செய்தது! பத்து வருசக் கதையாய் இருக்கே... இன்னும் எத்தனை கிணறுகள் காணாமல் போகுமோ!* இப்படியெல்லாம் நீங்க கேட்கக் கூடாது. செபிக்கு அனுபவம் கொஞ்சமா நஞ்சமா? ஹர்ஷத் மேத்தா, கேதன் பரேக், சத்யம் இராமலிங்கராஜ், நேசனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச், நிரவ் மோடி என்று... ஓடிய பிறகு விசில் பலமாக கேட்கவில்லையா?
*இதோ இப்போது விசில் ஊரையே எழுப்புகிறது.* செபி 12 துவக்குனர் நிறுவனங்களை (Promoters) பத்திரச் சந்தையில் இருந்து தடை செய்துள்ளார்களாம். 21 நாள் நோட்டிஸ்... பதில் வராவிட்டால் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படுமென்ற எச்சரிக்கை. பார்ப்போம் எந்திரன் 2 ல் அடுத்த காட்சி என்னவென்று...
*ஆனால் செபி கண்காணிப்பு இருக்கும் என எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கு காரணம் சொல்லப்படுவது சிரிப்பை வரவழைக்கவில்லையா?*
*****************
*செவ்வானம்*
புதிய தகவல். நன்றி
ReplyDelete