Thursday, September 17, 2020

பெரியார் 142, படமும் கவிதையும்

 


தந்தை பெரியாரின் 142 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று நான் பார்த்த ஏராளமான பதிவுளில் என்னை ஈர்த்த ஒரு பதிவையும் கவிதையையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

 

ஓவியருமான தோழர் ஸ்ரீரசா அவர்கள் பெரியார் பற்றி படமெடுத்த அனுபவத்தை முக நூலில் பகிர்ந்து கொண்டிருந்தார். அந்த பதிவு கீழே உள்ளது.

 


பெரியார் படமும்  யதார்த்தா ராஜனும்...

--------------------------------

யதார்த்தா ராஜன் என்று ஊர் உலகத்துக்கு அறியத் தெரியும் ஆர்.எஸ்.ராஜன், பல்கலைக் கழகத்தில் சேஷாத்திரி ராஜன்... ஆனால் பல்கலை ஊழியர்கள் பலரும் ராஜனை சாமி என்றுதான் அழைப்பார்கள்... மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் கல்விப் பல்லூடக ஆய்வு மையத்தில் 1987 ஆம் ஆண்டிலிருந்து 2010 வரை கல்விப் படத் தயாரிப்பாளராகப் பணியாற்றியவர்

 

முதன் முதலில் ராஜன் தயாரிப்பாளர், நான் தயாரிப்பு உதவியாளர். ஆனால் நானும் அவ்வப்போது படங்கள் தயாரிக்க அவர் அனுமதித்தார். அதோடு மட்டுமல்லாமல் எனது படங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் முன நின்று செய்வார். அப்போது அவர் எனக்குத் தயாரிப்பு உதவியாளராக மாறிவிடுவார். அத்தகைய பண்பு ராஜனுடையது.

 

நாங்கள் ஆங்கிலத்தில்தான் படம் எடுப்போம். படம் எடுத்து டெல்லி பல்கலைக் கழக மானியக் குழுவிற்கு அனுப்பி விடுவோம். அவர்கள் அதனைப் பார்த்து, திருத்தங்கள் இருந்தால் செய்யச் சொல்லி, ஒளிபரப்புப் பட்டியலில் சேர்த்து ஒளிபரப்புவார்கள்

 

நான் 90 களில் பெரியார் பற்றிய ஒரு படம் செய்தேன். அதற்கு ராஜன் அனைத்து நிலைகளிலும் மிகப் பெரிய உதவிகள் செய்தார்

 

அப்போதெல்லாம் இப்போது போல இணைய வசதிகள இல்லை. படங்களைத் தேடிச் சேகரிக்க வேண்டும். அல்லது வரைந்து உருவாக்க வேண்டும். அல்லது புத்தகங்களில், அல்லது இருக்குமிடங்களில் சென்று படம் பிடித்து காட்சிப் படிமங்களை உருவாக்க வேண்டும்

 

தோழர் வீரமணியின் அனுமதி பெற்று சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் நூலகம் சென்று அங்கே பலவற்றைப் படம் எடுத்தோம். அங்கே உள்ள பெரியார் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பல ஓவியங்கள் எங்களுக்கு மிகவும் கை கொடுத்தன. எல்லாவற்றையும் விட திரு.வீரமணி அவர்கள் மிகச் சிறந்த நேர்காணல் ஒன்றையும் ஆங்கிலத்தில் அளித்தார்கள். படம் ஒளிபரப்பாகமல் முடங்கிவிடக் கூடாது என்ற கூருணர்வில், அவர் வழக்கமான பாணியில் இல்லாமல் பார்ப்பனர் பற்றிய அதிரடியான சொல்லாடல்களைத் தவிர்த்துவிட்டு. பெரியாரின் சிறப்புகளை வெகு அழுத்தமாக நேர்நோக்குப் பார்வையில் முன்னெடுத்து வைத்தார். அகில இந்திய அளவில் ஒளிபரப்பானால் அதற்கான வாய்ப்புகளை நாம் ஏன் அடைக்க வேண்டும் என்று அதற்கான விளக்கத்தையும் அப்புறம் பேசும் போது கூறினார்.

 

பெரியார் பற்றிய உயிர்க் காட்சிப் பதிவுகள் (Live Shots) ஏதும் இருக்கிறதா எனத் தேடினோம். அப்போதுதான் மலையாள ஒளிப்பதிவாளரும், இயக்குநருமாகிய ராமு காரியத் பெரியாருடன் ஒரு நாள் என்ற பெயரில் பெரியாரைப் படம் எடுத்து வைத்திருந்த தகவல் கிடைத்தது. ராஜன் அதனை எங்கிருந்தோ தேடிக் கண்டுபிடித்து அதன் பிரதி ஒன்றை வாங்கிக் கொண்டு வந்து விட்டார். அப்புறம் அதனை டெலிசினி மாற்றி எந்திரத்தின் வழியாகக் கொடுத்து வீடியோவாக மாறறம் செய்ய வேண்டுமே. அது எங்கிருக்கிறது என்று தேடி, ராஜன் தான் அப்போது ஏக்நாத் அவர்கள் வைத்திருந்த கேசட் பிரதி எடுக்கும் நிறுவனத்தில் அந்த எந்திரம் உள்ளதெனக் கண்டுபிடித்து, அங்கே சென்று அதனை மாற்றிக் கொண்டு வந்தோம். அப்புறம் இடஒதுக்கீடு பற்றி ஒரு பேராசிரியர் பேசி எடுத்திருந்த விஎச்எஸ் கேசட் ஒன்று கிடைத்தது. அதில் அண்ணாவும பெரியாரும் ஊர்வலத்தில் செல்லும் ஒரு சிறு துண்டுப்படம் கிடைத்தது.

 

இவையெல்லாம் அந்தப் படத்துக்குப் பெரும் பலமாக அமைந்தன.

 

பெரியார் படத்தின் ஆரம்பக் காட்சியாக எரியும் நெருப்புக் காட்சியை வைக்க எண்ணினோம். அந்தப் பின்னணியில் படத்தின் துவக்க வசனங்கள் ஒலிக்கும். அந்த நெருப்பின் ஊடாக உலகின் பல தத்துவவாதிகளின் படங்கள் டிசால்வ் முறையில் வந்து செல்லும். அப்போதெல்லாம் இப்போது போல இணையத்தில் சுட்டுக் கொள்கிற வசதிகள் இல்லை. ராஜனின் ஆலோசனைப்படி இரண்டு தூக்கு விறகை வாங்கி, இருட்டும் வரை காத்திருந்து, இரவில் அந்த விறகுகளை மொத்தமாக எரிய வைத்து அந்தக் காட்சிகளைப் படம் பிடித்தேன்.

 

அதைவிடக் கொடுமை, அந்தப் படத்தில் ஒரே ஒரு இடத்தில் பிராமின் என்கிற வார்த்தை வரும். அந்த வார்த்தைக்காகப் படத்தைப் பலமுறை திருப்பி அனுப்பி விவரங்கள், விளக்கங்கள், தகவல் ஆதாரங்கள் என்று கேட்டபடியே இருந்தார்கள். நாங்களும் சளைக்காமல் அவற்றை எல்லாம் அளித்தபடியே இருந்தோம். ஆனாலும் அந்தப் படத்தை இதே போன்ற பெரியாரின் நினைவுநாள் ஒன்றில் ஒரே ஒரு நாள் ஒளிபரப்பி விட்டு, அதோடு முடக்கி விட்டார்கள்.

 

அது பழைய "யு மேட்டிக்" கேசட் வடிவில் எடுக்கப்பட்ட படம். இப்போது அதற்கான பிளேயர் கூடக் கிடைக்காது.

 

ஆனால் நாங்கள் டெலி சினி பண்ணி வைத்த பெரியார் உயிர்க்காட்சிப்  படிமங்கள் அங்கிருந்து வேறொரு பயணத்தைத் தொடர்ந்தது. ஒளிபரப்பான எங்கள் படத்திலிருந்து காட்சித் துண்டுகளைச் சுட்டு அப்போது தூர்தரஷனில் ஒளிபரப்பான பெரியார் பற்றிய படத்தில் பயன்படுத்தியிருந்தார்கள்.

 

நிஜநாடக இயக்கத்தின் சார்பில், தமிழகமெங்கும் வலம் வந்த, பேராசிரியர் மு.ராமசுவாமியின் "கலகக் காரர் தோழர் பெரியார்" நாடக ஆக்கத்தில் ராஜனும் நானும் இணைந்து பணியாற்றினோம். அந்த நாடகத்தில் பெரியாரின் உயிர்க்காட்சிகளையும் இறுதியில் பின் திரையில் ஒளிபரப்புவது போல நாடகத்தின் காட்சிகளை வடிவமைதிருந்தோம். அதற்கு ராஜன் மூலம் கிடைத்த ராமு காரியத்தின் பெரியார் பற்றிய காட்சித் துண்டுகளே உதவின.

 

இதன் வழியாகப் பெரியார் பற்றிய உயிரசைவுப் பபடிமங்கள் அந்த நாடகத்தின் வழியாகத் தமிழகம் முழுக்கத் திரும்பத் திரும்ப மேடையேறிப் பரவின.

 

பின்னர் ராமசாமி அந்த நாடகத்தை வீடியோ வடிவிலும் உருவாக்கினார்.

 

இன்றைய பெரியாரின் பிறந்தநாளில் பெரியாரின் பெருஞ்சீடரான அண்ணாவின் பிறந்தநாளில் மறைந்து போன யதார்த்தா ராஜனின் நினைவு இப்படியாகச் சுழன்றது...

 

-ஸ்ரீரசா

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மூன்று முறை சட்ட மன்ற உறுப்பினராக இருந்த தோழர் கே.பாலபாரதி அவர்களின் கவிதை கீழே உள்ளது.

 

 


உங்கள் வீட்டில் உங்கள் மகள்

கல்வி கற்கிறாரா..

உங்கள் மனைவி வேலைக்குப்போகிறாரா..

18 வயதுக்குமேல்தான்  சகோதரிக்கு திருமணம் 

செய்து வைத்தீர்களா...

தந்தையார்  இறந்தபிறகு

தாயின்  உழைப்பிலேதான்

வளர்ந்தீர்களா..

என்ன ஆச்சரியம்?

உங்கள் நாட்டில் பெண் நிதி அமைச்சரும்

உள்ளாரா?

அப்படியானால் பெரியார்

எப்படி  சிலையாக  இருப்பார்?

அவர் என்றென்றும்

உயிரோடுதான் இருப்பார்...

#பெரியார்142

1 comment:

  1. அப்படியானால் பெரியார்

    எப்படி சிலையாக இருப்பார்?

    அவர் என்றென்றும்

    உயிரோடுதான் இருப்பார்...

    உண்மை அருமை
    பெரியார் வாழ்ந்துகொண்டே இருப்பார்

    ReplyDelete