Sunday, September 13, 2020

இத்தோடு நிற்கட்டும் . . .

 இரண்டு நாட்களில் எத்தனை துயரச் செய்திகள்!

மத்தியரசு திணித்த நீட் நேற்று இன்னும் இரண்டு உயிர்களை பலி வாங்கி விட்டது. தேர்வு இன்றைக்கு நடைபெறுகிறது. முடிவுகள் வெளி வந்த பின்பு என்ன ஆகுமோ என்று கவலையாக உள்ளது. சங்கிகளும் மோடி மோகிகளும் இந்த மரணங்களில் மகிழ்பவர்களாக இருக்கிறார்கள் என்பது வெறுப்பை உருவாக்குகிறது. இந்த கேடு கெட்ட ஜென்மங்கள் எல்லாம் உயிரோடு இருக்கும் போது மாணவச் செல்வங்கள் மடிகின்றனரே என்று வருத்தமாக இருக்கிறது.

மேலும் பல துயரச்செய்திகள்.






எங்கள் ஓய்வு பெற்ற மூத்த தோழர் சியாமளம் காஷ்யபன் அவர்களுக்கு நேற்று பிறந்த நாள். அதுவே அவர் வாழ்வின் துயரம் தோய்ந்த நாளாகவும் மாறி விட்டது. அவரது மகன் திரு சத்தியமூர்த்தி, நேற்று கொரோனாவிற்கு பலியாகி விட்டார். சில நாட்கள் முன்பாகத்தான் தோழர் காஷ்யபன், தீயணைப்புத்துறையில் சிறந்த பணியாற்றியதற்காக திரு சத்தியமூர்த்தி குடியரசுத் தலைவர் பதக்கம் வாங்கிய புகைப்படத்தை மீண்டும் பகிர்ந்து கொண்டிருந்தார். கொரோனா காலத்தில் என் மகன் எனக்கு முடி வெட்டி விட்டார் என்றும் இரண்டு மாதங்கள் முன்பாக பெருமையோடு பதிவிட்டிருந்தார். தோழர் காஷ்யபனுக்கு எவ்வாறு ஆறுதல் சொல்வது? என்ன வார்த்தைகள் இருக்கிறது?

திருப்பூர் தொகுதியின்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர் கே.தங்கவேலு இன்று அதிகாலை கொரோனாவால் பாதிக்கப்பட்டு காலமானார். மிகவும் அருமையான தோழர். வேலூர் மாவட்டத்தின் பொறுப்பாளர். உழைக்கும் மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் பேரிழப்பு.



காவியுடைக்கு மரியாதை தேடிக் கொடுத்த அரிதானவர்களின் சுவாமி அக்னிவேஷ் ஒருவர். சமூக நீதிக்காகவும், விளிம்பு நிலை மக்களுக்காகவும், மனித உரிமைக்காகவும் குரல் கொடுத்தவர். அவர் நேற்று முன் தினம் காலமாகியுள்ளார். இவரது மரணத்தை சங்கிகள் கொண்டாடினர் என்பதிலிருந்தே இவரது வாழ்க்கை எவ்வளவு அர்த்தபூர்வமானது என்பதை நாம் உணர முடியும். (தனியாக இது பற்றி எழுத வேண்டும்) 



பத்திரிக்கையாளர் சுதாங்கன் நேற்று காலமாகியுள்ளார். சுவாரஸ்யமான எழுத்து நடைக்கு சொந்தக்காரர். நடிகர் திலகம் பற்றி அவர் விரிவான நூல் ஒன்றை எழுதியுள்ளார் என்பதை அறிந்து "செல்லுலாய்ட் சோழன்" நூலை கடந்த மாதம் ஆன்லைன் மூலமாக வாங்கிப் படித்தேன். அது குறித்து எழுதும் முன்னே அவர் காலமாகி விட்டார்.



அனைவருக்கும் மனமார்ந்த அஞ்சலி. 

போதும் துயரம், தாங்குவதற்கு வலிமையில்லை. 



No comments:

Post a Comment