Friday, September 11, 2020

சங்கிகளுக்குத் தெரியுமா போராட்ட வரலாறு?

 



வழக்கறிஞரும் எழுத்தாளருமான தோழர் இரா.முருகவேள் அவர்களின் முக நூல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 

அவர் குறிப்பிட்டுள்ள 1921 படத்தை முழுமையாக பார்க்காவிட்டாலும் நேற்று ஒரு அரை மணி நேரத்திற்கு மேல் பார்த்தேன். நேரம் ஒதுக்கி முழுமையாக ஒரு நாள் பார்க்க வேண்டும். திரைப்படம் பார்க்காவிட்டாலும் இந்த போராட்டம் பற்றி படித்துள்ளேன்.

 

சுதந்திரப் போராட்டத்திற்கும் சங்கிகளுக்கும் உள்ள தொடர்பு என்பது காட்டிக் கொடுத்த கருங்காலி வேலைதான். அதனால் அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் இழிவு படுத்தவே முயற்சிப்பார்கள். அதிலும் இஸ்லாமியர்கள் என்றால் வெறி பல மடங்கு அதிகமாகி விடும்.

 

இதிலே மம்முட்டிக்கு துணையாக நின்ற சுரேஷ் கோபி இப்போது ஒரு அக்மார்க் சங்கி என்பது ஒரு கொடூரமான முரண்.

 

மலபார் மாப்ளா புரட்சிக்காரர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் இல்லை என்று சங்கிகள் தொடங்கியிருக்கிறார்கள்.    மாப்ளா புரட்சியை அடிப்படையாகக் கொண்டு “1921” என்று ஒரு மலையாளப் படம் வந்து இருக்கிறது

 

அதைக் கட்டாயம் பார்த்துவிடுங்கள். மிக அருமையான படம்சமூக வரலாற்றை சரியாகக் காட்டியிருப்பார்கள்

 

முதல் உலகப் போரில் வட கேரளா முஸ்லீம்கள் பெருமளவில் பிரிட்டிஷ் படைகளில் போரிட்டனர். அவர்கள் நாடு திரும்பிய காலகட்டத்தில் கோவில்கள், பெரும் நிலப்பிரபுக்களாக இருந்த நம்பூதிரிகள் மற்றும் பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறை உச்ச கட்டத்தை எட்டுகிறது

 

இந்த சுரண்டலின் மீதான வெறுப்பே பின்பு மாப்ளா கிளர்ச்சியாக வெடிக்கிறது. பண்ணையடிமைகளாக இருந்து கற்பனைக்கெட்டாத கொடுமைகளுக்கு ஆட்படுத்தப்பட்ட தலித்துகளும் இந்தக் கலகத்தில் மாப்ளா போராளிகளுடன் இணைந்து கொண்டனர். பலர் முஸ்லீம்களாக மாறினர். (இந்தப் புரட்சிக்கு  முன்பே தலித்துகள் முஸ்லீம்களாக மாறுவதை தடுக்க வேண்டும் என்று மலபார் மேனுவலில் வில்லியம் லோகன் எழுதியுள்ளதாக ஒரு நினைவு).

 

இந்த எழுச்சி கொடூரமாக ஒடுக்கப்படுகிறது. ஒரு கூட்ஸ் வண்டியில் 500 போராட்டக்காரர்கள் அடைக்கப்பட்டு கோவை போத்தனூருக்கு அனுப்பப்படுகின்றனர். அவர்களில் 400க்கும் மேற்பட்டவர்கள் மூச்சுத்திணறி மரணமடைந்து இருப்பது போத்தனூரில் கண்டுபிடிக்கப்படுகிறது

 

இதெல்லாம் படத்தில் மிக அற்புதமாகக் காட்டப்பட்டிருக்கும். அதிலும் தலித்துகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளும், அவர்கள் மிக இயல்பாக நிலப்பிரபுக்களுக்கு எதிரான நிலை எடுப்பதையும் காட்டியிருப்பார்கள். வி சசியின் மிகச் சிறந்த படம் இது. இரண்டு அட்டகாசமான மாப்ளா பாடல்களும் உண்டுமம்முட்டி நடித்தபடம்.

 

படத்துக்கு தொடர்பு இல்லாத ஒரு துயரமான நிகழ்ச்சியும் இருக்கிறது

 

கோவை சிறையில் தூக்கிலிடப்பட்ட மாப்ளா போராளிகளின் உடல்கள் ரயில்வே ஷ்டேஷன், அல்லது ஷண்முகா தியேட்டர் அருகே இருந்த இஸ்லாமியர் சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்தனவாம். கல்லறை வழிபாடு கூடாது என்று இஸ்லாமிய அடிப்படை வாதிகள் அந்தக் கல்லறையை இடித்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டேன்

 

இது உண்மையாக இருந்தால் எல்லா அடிப்படைவாதிகளும் ஒன்றுதான். நிலப்பிரபுத்துவக் கொடுமைகளுக்கு எதிராகப் போரிட்ட மாப்ளா போராளிகளுக்கு மத முத்திரை குத்த அனுமதித்த நம்மைப் போன்ற கோவை காகிதப் புலிகள் இன்னும் மோசமானவர்கள்

 

சங்கிகளுக்கு ஒரே ஒரு கேள்வி.

 

இந்துக்களை மாப்ளா புரட்சிக்காரர்கள் கொன்றார்கள் என்கிறார்கள்பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழைத்த நிலப்பிரபுக்கள்தான் அந்த இந்துக்கள். அவர்கள் பல்லாயிரம் தலித்துகளை பண்ணை அடிமைகளாக வைத்து இருந்தனர். குத்தகை விவசாயிகளாக இருந்த மற்ற சாதி இந்துக்களையும் வாட்டி  வதைத்னர்.

 

அப்படியானால் அந்த நிலப்பிரபுக்களால் கொடுமைக்குளான, அவர்களை எதிர்த்துப் போரிட்ட தலித்துகள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்?.

 

 

பிகு 1 : மேலே உள்ள படம் 1921 படக் காட்சி

 

பிகு 2: “கழுதைகளுக்கு தெரியுமா கற்பூர வாசனை” என்றுதான் பதிவிற்கு தலைப்பு வைத்திருந்தேன். கழுதைகளை இழிவு படுத்தக் கூடாது என்பதால் மாற்றி விட்டேன்.

 

 

1 comment:

  1. சிறப்பான திரைப்படம். மம்முட்டி அருமையாய் நடித்திருப்பார்

    ReplyDelete