நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள
பெற்றோர்களே காரணம் என்று முதலில் சொன்ன பாஜகவின் நச்சுப் பாம்பு கரு.நாகராஜன்
பிற்கு தற்கொலைக்கு சூர்யாதான் காரணம் என்று ஒரே போடு போட்டு விட்டார். இந்த
பினாமி அரசு சூர்யா மீது “தற்கொலைக்கு தூண்டிய வழக்கு” பதிந்தால் கூட ஆச்சர்யப்பட
ஏதுமில்லை.
இத்தகைய சூழலில் தமிழகத்தில் மட்டும் ஏன் நீட்டுக்கு எதிராக
தற்கொலைகள் என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. நீட்டை எதிர்ப்பவர்கள் இழிவு
படுத்தப் படுகின்றனர். நீதிமன்றமும் இத்தகைய செயலுக்கு விதிவிலக்கல்ல.
இந்த நிலையில் பின் வரும் பதிவும் அதற்கான ஒரு பின்னூட்டமும்
பல பொய்களை தோலுரிக்க உதவிகரமாக இருக்கும்
*நாளொரு கேள்வி: 16.09.2020*
இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *ஆர். தர்மலிங்கம்*
#######################
*கேள்வி*
நீட் தேர்வு அச்சத்தால் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது கோழைத்தனம் என்று கடந்து செல்வது சரிதானா?
*ஆர். தர்மலிங்கம்*
நீட் தேர்வு அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது மிகுந்த கவலையளிக்கிறது.*இதுவரை தமிழகத்தில் பெரம்பலூர் அனிதா முதல் மதுரை துர்கா வரை 12 மாணவர்களை இழந்துள்ளோம்.*
தற்கொலை செய்வதும், தற்கொலைக்கு தூண்டுவதும் சட்டப்படி குற்றமாக கருதப்படுகிறது. தற்கொலைகள் குறித்து ஊடகங்களிலும்,சமூக ஊடங்களிலும் விவாதங்கள் நடக்கிறது.
தற்கொலை செய்து கொள்வது கோழைத்தனம் என்றும் மருத்துவர் படிப்புக்கு இடம் கிடைக்காவிட்டால் நர்ஸிங் படிக்கலாமே அதுவும் கிடைக்காவிட்டால் லேப் டெக்னிசியன் ஆகலாமே என்று சிலர் சொல்கிறார்கள். வேறு சிலரோ பெற்றோர்கள் பிள்ளைகள் மீது கொடுக்கும் அழுத்தமே காரணம் என்கிறார்கள். மற்ற சிலரோ பெற்றோர்களே குழந்தைகளை திட்டாதீர்கள் என்று அறிவுரை சொல்கிறார்கள்.
தேசிய கட்சியின் செயலாளர் ஒருவர் காதல் தோல்வியால் கூட தற்கொலை செய்து கொள்கிறார்கள் அதனால் காதலை தடை செய்து விடலாமா? பள்ளி இறுதி தேர்வில் தோல்வியுற்றதால் தற்கொலை செய்து கொள்கிறார்கள் அதனால் பள்ளி இறுதி தேர்வே வேண்டாம் என்று சொல்லி விடலாமா? என *விதண்டாவாதம்* செய்வதையும் பார்க்கிறோம்.
மாணவர்களின் தற்கொலைக்கு அரசின் கல்வி கொள்கையும், நீட் தேர்வுகளை நடத்தியே தீருவோம் என்ற அரசின் பிடிவாதமும், சமூகத்தின் அழுத்தமுமே காரணம் என்பதை உணர மறுப்பது ஏன்?
*தற்கொலை என்பதை கோழைத்தனம் என்று ஒரு வரியில் கடந்து/செல்ல இயலாது.* அதன் உளவியல் முக்கியம். கடுமையான மன உளைச்சல், விரக்தி மனப்பான்மை, இனி எதற்குமே நான் தகுதியில்லை என்ற குற்ற உணர்வும் மாணவர்களை தற்கொலைக்கு தள்ளுகிறது. இந்த நிலைக்கு இளம் மாணவர்கள் வருவதற்கு இந்த சமூகமும், அரசின் கொள்கையும்தான் காரணம் என்பதை உணர வேண்டாமா?
எல்.கே.ஜி யில் சேர்த்த உடனே முதுகில் சுமக்கும் புத்தக மூட்டையோடு அந்த இளம் தளிர்கள் மீது நமது எதிர்பார்ப்பையும் கனவையும் நம்மை அறியாமலேயே சுமையாக ஏற்றி விடுகிறோம். மருத்துவம் சமூகத்தில் ஒரு செல்வாக்கை உருவாக்கும் படிப்பு என்பதால் அதை நோக்கி குழந்தைகளை ஒட வைக்கிறோம். சில வீடுகளில் குழந்தை பிறந்த உடனேயே டாக்டர் பிறந்து விட்டார் என்று சொல்வதை கூட கேட்டிருப்போம்.இதற்கு அந்த குழந்தைகளின் பெற்றோர் மட்டுமே காரணம் என்று சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது.சமூக பார்வையே அப்படித்தான் இருக்கிறது. *வெற்றி பெற்றவர்களின் கதைகளையே சொல்லும் சமூகம் தோல்விகளை எதிர் கொள்ள ஒரு போதும் கற்றுக் கொடுப்பதில்லை.*
கல்வியை, குழந்தைகளின் அறிவை அவர்கள் பெறும் மதிப்பெண் மூலமே தீர்மானிக்கும் போக்கு காலகாலமாக இங்கே இருக்கிறது. மருத்துவ படிப்புக்கோ அல்லது உயர் படிப்புக்கோ தயாராகும் மாணவர்களை ஒரு உயிராக கூட பார்ப்பதில்லை. போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு ரோபோட் மாதிரி பார்க்கிறோம். எந்நேரமும் படிப்புதான்.பள்ளி விட்டால் டியுசன்.டியுசன் முடிந்தால் பயிற்சி மையம் தற்போது ஆன் லைன் டெஸ்ட் என தூங்கும் சில மணிநேரம் தவிர *வாழ்நாள் கனவை துரத்தி கொண்டே மாணவர்கள் ஒட வைக்கப்படுகிறார்கள்.*
மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வு தேவையற்றது என்று சொல்வதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்ல முடியும். நீட் தேர்வை ஆதரிப்பவர்கள் திரும்ப திரும்ப சொல்வது மருத்துவராக தகுதி வேண்டாமா? என்பதுதான். *நீட் தேர்வு வருவதற்கு முன்பு பள்ளி தேர்வில் மதிப்பெண் பெற்று மருத்துவராக பணியாற்றி வரும் எல்லோரும் தகுதியற்றவர்களா?* மருத்துவத்தில் அவர்கள் சாதிக்கவில்லையா? என்ற கேள்விக்கு பதில் இல்லை.
வணிகத்தில் ஒரு பொருளின் மீதான தேவையை, விருப்பத்தை தொடர்ந்து தக்க வைப்பது அவசியம். அதற்காக அதை போல மதிப்பு மிகுந்த பொருள் எங்கேயேயும் இல்லை,கிடைக்காது என்ற எண்ணத்தை உருவாக்கிட வேண்டும். *இன்று கல்வி, அதுவும் மருத்துவ கல்வி மிகப்பெரிய வணிகமாக, தொழிலாக மாறியுள்ளது.* சமூகத்தில் செல்வாக்கு பெற்ற மருத்துவ படிப்பை வியாபாரமாக்கிட அதன் மதிப்பை தக்க வைத்திட நீட் போன்ற போட்டித் தேர்வு பயன்படுகிறது.
மாணவர்களுக்கு பள்ளி இறுதி தேர்வும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வும் குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு மிகப்பெரிய சுமையாக இருக்கிறது என்பதால் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. பள்ளி இறுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான இடம் நிரப்பபட்டது.
தற்போது மத்திய அரசின் கொள்கைப்படி மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம். இதற்காக தனியாக படித்து பயிற்சி பெற வேண்டிய நிலை.
நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் நாடெங்கிலும் துவங்கி *வியாபாரம்* சக்கை போடு போடுகிறது. பல பள்ளிகளில் பள்ளிப்படிப்போடு நீட் பயிற்சி வகுப்பும் நடத்துகிறார்கள். நீட் தேர்வு பயிற்சிக்காக பல லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. *பள்ளி இறுதி தேர்வு தயாராகவே நேரம் இல்லாத போது நீட் தேர்வு மாணவர்களை பயமுறுத்துகிறது.*
ஒரு மாணவர் மூன்று முறை மட்டுமே முயற்சி செய்ய முடியும் என்று இருப்பதால் தேர்வு நெருங்கும் போது மிகுந்த மன உளைச்சலுக்கும் அழுத்தத்திற்கும் ஆளாகிறார்கள்.
தற்கொலை செய்திகள் வரும் போதெல்லாம் அது கோழைத்தனம் என்று கடந்து விடுவதால் ஒரு போதும் தீர்வு காண முடியாது.
*ஒவ்வொரு தற்கொலைக்கு பின்னால் உள்ள சமூக காரணிகளை அதை மாற்ற முயல்வதுமே முறையான அணுகுமுறையாக* இருக்க முடியும்.
*செவ்வானம்*
*தமிழகத்தில் மட்டும் ஏன் தற்கொலைகள்*
தோழர் தர்மலிங்கம் அக்கறையோடு கருத்துக்களை முன் வைத்துள்ளார். பொருத்தமான நேரத்தில் பொருத்தமான பகிர்வு.
தமிழகத்தில் மட்டும் ஏன் தற்கொலைகள் என்று ஒரு கேள்வியை எழுப்புகிறார்கள். இதன் பொருள், இம் மரணங்கள் நீட்டை முன்னிட்டு அல்ல என்ற கருத்தை கொஞ்சமும் மனச் சாட்சி இன்றி உருவாக்க முயல்கிறார்கள்.
எந்த மாநிலத்தில் சாதாரண ஏழை எளிய மக்கள் சமுக நீதியின் பயன்களை கூடுதலாக பெற்றுள்ளார்களோ அங்கு அவை அபாயத்திற்குள்ளாகும் போது ஆத்திரமும், ஆற்றாமையும் ஒரு சேர எழும். ஒடுக்கப்பட்ட சமூகங்கள் சமுகத்தின் பல தளங்களில் உயர்வது மற்ற மாநிலங்களை விட இங்குதானே அதிகம் நிகழ்ந்திருக்கிறது. நுழைவுத் தேர்வு ஒழிக்கப்படுவது, இட ஒதுக்கீட்டிற்கான விழிப்பு எல்லாம் இருக்கிற இடத்தில் இத்தகைய இரு வேறு உணர்வுகளும் எழாமல் எப்படி இருக்கும்! ஆகவே தமிழகத்தில் மட்டும் ஏன் அதிக எதிர்ப்பு, ஏன் தற்கொலைகள் என்ற கேள்வி அர்த்தமற்றது. தவறான அர்த்தம் கொடுக்கும் நோக்கமுள்ளவை.
ஆத்திரம் மிகுபவர்கள் போராட்ட களத்திற்கும், ஆற்றாமை மிகுபவர்கள் விரக்தி முடிவுகளுக்கும் செல்வது நடந்தேறுகிறது. இரண்டின் பின்னாலும் உள்ள நியாயம் முக்கியம். இடதுசாரி, ஜனநாயக, சமுக நீதி, முற்போக்கு இய்க்கங்களுக்கு ஓர் கடமை உள்ளது.
ஆற்றாமைகளை ஆத்திரமாக மாற்றுவதும், கயிறைத் தேடும் அருமை இளைஞர்களை நம்பிக்கை தந்து களத்திற்கு கொண்டு வரவேண்டியதும் அவசியம்.
நல்ல விவாதத்தை துவக்கிய தர்மலிங்கத்திற்கு நன்றி.
-
தோழர் கே.சுவாமிநாதன், துணைத் தலைவர்,
-
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு
No comments:
Post a Comment